மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

மனசு பேசுகிறது : உலக புத்தக தினம் சில நினைவுகள்

லக புத்தக தினம்-

சின்ன வயது முதல் புத்தக வாசிப்பில் ஈடுபாடு இருக்கத்தான் செய்தது. வீட்டில் அம்மாவுக்காக ராணி வாங்குவார்கள் என்பதால் எங்கள் எல்லாருக்குமே வாசிப்பு என்பது ராணியில் இருந்துதான் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை யார் கடைக்குப் பால் வாங்கப் போனாலும் திரும்பி வரும்போது ராணியோடுதான் வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. சில வேளைகளில் ஏதாவதொரு காரணத்தால் வாங்காமல் வந்துவிட்டாலும் கூட, எப்பவும் வாங்கும் கருணாநிதி அண்ணன் கடையில் ஒரு ராணியை எடுத்து வைத்திருப்பார்கள்.

பள்ளியில் படிக்கும் போது குமுதம், ஆனந்த விகடன், ராணி முத்து, க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், காமிக்ஸ் புத்தகங்கள் என எல்லாம் வாசிக்கக் கிடைத்தன. எங்கள் வீட்டில் ராணி தவிர வேறு புத்தகங்கள் வாங்குவதில்லை. எங்க சின்னம்மா வீட்டிலோ ராணி தவிர்த்து மற்ற புத்தகங்கள் எல்லாத்தையும் வாங்கிக் குவிப்பார்கள். ரெண்டு ஊருக்கும் இடையில் ஒரு கண்மாய்... எங்கள் ஊர் வயல்கள் வழி பயணித்து, கண்மாயைக் கடந்து கொஞ்சத் தூரம் பயணித்தால் சின்னம்மா ஊர். எனவே அடிக்கடி பண்டமாற்று முறையில் இங்கிருந்து சில வாரத்து ராணிகளுடன் போய் அங்கிருந்து அகப்பட்டதை எல்லாம் அள்ளிக் கொண்டு வருவதுண்டு. சில வேளைகளில் சின்னம்மா மகன் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போவதும் உண்டு.

விடுமுறை தினத்தில் ஆளுக்கொரு புத்தகத்துடன் ஒவ்வொரு பக்கமாய் படுத்துக் கொண்டு வாசிப்பதுண்டு. அப்பல்லாம் எப்பப் பாரு கதைப்புத்தகம்தான்... வேற வேல இல்லையா என அம்மா கத்தினாலும் வாசிப்பதை மட்டும் விடுவதில்லை. மாடு மேய்க்கப் போகும் விடுமுறை நாட்களில் கூட கையில் ஒரு க்ரைம் நாவலோ, பாக்கெட் நாவலோ இருக்கும். அப்படித்தான் வாசிப்பு எனக்குள் புகுந்தது.

பனிரெண்டாவது படிக்கும் வரை இப்படி ராணியுடன் பண்டமாற்றில் 25% புத்தகம் கொடுத்து 100% புத்தகங்களைக் கொள்ளை கொண்டு வந்து வாசிப்பதில்தான் கழிந்தது. அப்போதெல்லாம் கதை, கவிதைன்னு எந்தப் பக்கமும் போனதில்லை. கல்லூரி போனபின் நூலகத்துக்கு என இரண்டு அட்டைகள் கொடுத்திருக்க, எப்போதாவது அதைப் பயன்படுத்தி வைரமுத்து கவிதைகள், சின்னச் சின்ன கதைப் புத்தகங்கள் என வாசிக்க ஆரம்பித்தேன்.

பெரும்பாலும் பாட சம்பந்தமான புத்தகங்கள் எடுக்க வேண்டி இருக்கும் அந்த நூலகத்தில் தன்னார்வலர்களாக எனது நண்பர்கள் ராகவன், சுபஸ்ரீ போன்றோர் இருந்ததால் அவர்கள் தங்கள் பெயரில் கதைப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதுண்டு. இவர்களை வைத்தே நூலகர் கோமதி நாயகம் சாரை நட்பாக்கி, மதிய உணவு இடைவேளையில் நூலகத்துக்குப் போனா, உள்ள வா... எந்தப் புத்தகம் வேணுமோ எடுத்துப் படி என்பார். அப்போதுதான் நாங்கள் நண்பர்கள் ஆறு பேர் இணைந்து 'மனசு' என்ற கையெழுத்துப் பிரதியை ஆரம்பித்து மிகச் சிறப்பாக, பேராசிரியர்களின் ஆதரவுடன் நடத்திக் கொண்டிருந்தோம்.  

எனது பேராசான் பழனி ஐயாவுடன் நெருக்கமாகி, அவர் வீட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது எங்கள் கல்லூரியில் இருக்கும் நூலகத்தை விட மிகப்பெரிய நூலகத்துக்குள் நுழைந்திருக்கிறோம் என்பது. ஐயாவைப் பொறுத்தவரை நல்ல நல்ல புத்தகங்களைக் கொடுத்து 'தம்பி இதை வாசிங்க' என்பார். அப்படித்தான் சுஜாதா, ரஷ்ய நாவல்கள் எல்லாம் வாசிக்கக் கிடைத்தன. நல்ல புத்தகங்களை அடிக்கடி 'தம்பி எஸ்.குமாருக்கு' என எழுதிக் கையெழுத்திட்டு ஐயா எனக்குக் கொடுப்பதுண்டு. எப்பவும் சொல்வது போல் நான் கல்லூரியில் படிக்கும் போது என்னைப் போல் பலர் ஐயா வீட்டிற்கு தினம் போய் வந்தாலும் நாங்கள் ஒரு நாலு பேர் ரொம்ப நெருக்கம். பெரும்பாலான விடுமுறை நாட்களை ஐயா வீட்டில்தான் கழிப்போம்... ஏதாவது வாசிப்போம்... விவாதிப்போம்... இல்லை என்றால் ஐயா கதைகள் சொல்லக் கேட்டுக் கொண்டிருப்போம். அங்கயே சாப்பாடு, காபின்னு எல்லாமே எங்களுக்குக் கிடைத்துவிடும் கூடவே ஐயா சொல்லும் கதைகளும் செய்திகளும் எங்கள் மனதை நிறைக்கும். அந்த நால்வரில் நான் செல்லப்பிள்ளை எனலாம், ஐயாவைச் சுற்றிக் கிடக்கும் புத்தகத்தில் எதை வேண்டுமானாலும் எடுத்துச் சென்று படிக்கலாம். வாசித்து ரொம்ப நல்லாயிருக்குய்யா என்றால் நீங்களே வச்சிக்கங்க என்ற பதில் வரும். என்னை வாசிக்க வைத்ததுடன் எழுத வைத்ததும் அவர்தான். முதல் கதை எழுதியது கல்லூரி இரண்டாம் ஆண்டில்... முதல் கவிதை தாமரையில் வெளியானதும் அதே ஆண்டில்தான்.

அதன்பின் வாசிப்பின் மீது கொஞ்சமல்ல ரொம்பவே காதல் என்று சொல்லலாம். அமீரகம் வந்தபின் இணையத்தில் தேடி நிறைய வாசிக்க முடிந்தது. இப்போது நிறைய புத்தகங்கள் வாசிக்கக் கிடைப்பதால் தினமும் பத்துப் பக்கமாவது வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. 

வாசிப்பு கொடுத்த இன்னொரு மகிழ்வு என்னவென்றால் பெரும்பாலான நண்பர்களின் எழுத்தை புத்தகமாக்கும் முன்போ,  இதழ்களுக்கு அல்லது இணையத்துக்கு அனுப்பு முன்னரோ வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதால் நிறையவே வாசிக்க முடிகிறது.

இந்த வாசிப்பும் அதன் தொடர்ச்சியுமாய் கடந்த நான்கு வருடமாய் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் மூலமாக எதிர்சேவை (சிறுகதைகள்), வேரும் விழுதுகளும் (நாவல்), திருவிழா (நாவல்), பரிவை படைப்புகள் (சிறுகதைகள்) புத்தகங்கள் கொண்டு வந்ததுடன் இன்னும் தொடர்ந்து எழுதலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

வாசிப்பை நேசிப்போம்... வாசிப்பு நம்மைச் செதுக்கும்.

-பரிவை சே.குமார். 

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாசிப்பு தொடரட்டும் குமார்...