மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

மனசு பேசுகிறது : சில கதைகள்

2022 கொடுத்த அடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாலும் மனசு என்னவோ இன்னமும் சோர்வாய்த்தான் இருக்கிறது. முன்பெல்லாம் தினமும் ஏதாவது எழுது எனச் சொன்ன மனசு இப்பல்லாம் என்னத்த எழுதி... எதாச்சும் படம் பார்க்கலாம், ஐபிஎல் மேட்ச் பார்க்கலாம், இல்லேன்னா கெடந்து தூங்கலாம் என்று சொல்ல ஆரம்பித்து அதையே செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது.

அப்பா, அம்மாவின் உடல்நிலையும் மனதை ரொம்பவே வருத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. வேலையும் கூட அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. மூன்று பேர் பார்க்க வேண்டிய வேலையை நான் ஒருவன் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிக நேரம் பார்க்க வேண்டும் என்ற ஆணை வந்தபோது அதுக்குப் பணம் கொடுப்பியா எனக் கேட்டதும் - இத்தனை வருடத்தில் ஒரு திர்ஹாம் கூட கொடுத்ததில்லை - நமக்கு ப்ராஜெக்ட் வேணும், இன்னொரு ஆள் போட்டா இந்த வேலை சீக்கிரம் முடிஞ்சிரும் அப்புறம் நீ ரெண்டு மூனு மாசம் வீட்டுல இருக்கணும். உன்னோட குடும்பச் சூழல் தெரியும் அதனால்தான் சொல்றேன் கம்பெனிக்காகவும் உனக்காகவும் பாரு என்றான். நாம் எப்பவும் போல சரியெனத் தலையாட்டிருவோம் என்ற நம்பிக்கையில் மிரட்டலாய்.

எனக்கு வேலை நேரத்துக்கு அப்புறம் பார்க்கும் வேலைக்குப் பணம் கொடுத்தா பார்ப்பேன். எனக்கு எதுவும் செய்யாத கம்பெனிக்கு, வேலை இல்லைன்னதும் 10 மாதம் வீட்டில் இருக்க வைத்த கம்பெனிக்கு, சென்ற வருடம் எல்லாருக்கும் சம்பள உயர்வு கொடுத்து விடுப்பில் இருந்த எனக்கும் இன்னொரு மலையாளிக்கு மட்டும் கொடுக்காத கம்பெனிக்கு, எனக்குக் கிடைக்கிற சம்பளத்தைவிட அதிகமாகத்தான் வேலை பார்க்கிறேன். என்னோட வேலையில ஏதாச்சும் குறையிருந்தாச் சொல்லு, ஒண்ணு செய்யி இன்னொரு ஆள் போடுறேன்னு சொன்னியல்ல அதை உடனே செய்யி என்றதும் அவன் ஒன்றும் பேசவில்லை, நான் அங்கு நிற்கவும் இல்லை. முன்னெல்லாம் வேலையை முடிக்கணுமே என இரவு பத்து, பதினோரு மணி வரை வேலை பார்த்து டாக்ஸிக்குக் கூட பணம் கொடுத்ததில்லை. இப்பல்லாம் வேணான்னா சொல்லிடு போயிடுறேன் என்ற மனநிலைதான்.

சரி அது கிடக்கட்டும் கழுதை... எழுதுவதற்கு மனசு நல்லாயிருக்கணும் அப்பத்தான் அந்த எழுத்து கூட சுகமாய் வந்து விழும். இப்ப அப்படியான மனநிலை இல்லை என்றாலும் சில நிகழ்வுகளுக்கு அழைக்கும் நட்புக்கள், எப்படியும் இவன் எழுதுவான் என நம்புவதைப் பொய்யாக்கக் கூடாதெனச் சில நிகழ்வுகள் குறித்து எழுதினேன். அதிலும் பாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய பட்டிமன்றம் குறித்து எழுத ஆசை என்றாலும் ஏனோ எழுதவில்லை. அந்தக் குழுவின் இராமகிருஷ்ணன் சார் போன் பண்ணி விழாவுக்குப் போனீங்களா..? எப்ப எழுதுவீங்க..? உங்க எழுத்துக்காக காத்திருக்கிறேன் - அவர் விழாவின் போது ஊரில் இருந்தார் - என்று சொன்னபோது உடல்நலமின்மையால் எழுத முடியவில்லை என்றதும் சரி உடம்பைப் பார்த்துக்கங்க என்று சொன்னார். அப்போது அதைக் கடந்து வந்து விட்டேன். இப்போது எழுதியிருக்கலாமோ என்று நினைக்கிறேன். நம் எழுத்தின் மீதான நம்பிக்கைதானே ஒரு மனிதரை எப்ப எழுதுவீங்க எனக் கேட்க வைக்கிறது.

அடுத்த வருடத்துக்கு நாவலைத் தயார் செய்யுங்கள் என்று பரிவை படைப்புகள் வந்தபோதே தசரதன் சொல்லியிருந்தாலும் இதுவரை அதுக்கான முயற்சியே எடுக்கவில்லை. மே மாத இறுதி நாளுக்குள் யாவரும் போட்டிக்கு நாவல் அனுப்பனும் எழுதி முடிச்சிட்டீங்களா அண்ணே என்ற சகோதரனின் கேள்விக்கும் பதிலில்லை. இப்படியாக நகரும் நாட்களில் எனக்கு இப்படி வேணும் எனச் சொல்லி கதைகள் வாங்கிய அண்ணனும் இருக்கிறார், அவருக்காக நிலையில்லாத மனதை ஒருமுகப்படுத்தி எப்படியோ எழுதி முடித்தேன். சிலது சாதாரணமாய் இருந்தாலும் பாதிக்கு மேல் வீராப்பு, இணை, சாமியாடியைப் போல் வந்திருப்பதில் மகிழ்ச்சி. குறிப்பாக அவருக்குப் பிடித்துப் போனதில் பெரும் மகிழ்ச்சி.

இப்பக் கதைக்கு வருவோம். 

'பனைமரம்' சிறுகதைக்குப் பின் யாவரும் இணைய இதழுக்கு எதுவும் அனுப்பவில்லை. இரண்டாண்டுக்குப் பின் மார்ச் - ஏப்ரல் இதழுக்குப் படைப்பு அனுப்பலாம் என முகநூலில் பகிர்ந்திருந்ததைப் பார்த்து அனுப்பிய 'சுமைதாங்கி' - நான் வைத்த பெயர் - 'துணை' - அவர்கள் மாற்றிய பெயர் - இந்தப் பெயரைவிட கதையின் கனத்தை சுமைதாங்கிதான் சரியாகச் சுமக்கும் என்பதை வாசித்தால் உணர்வீர்கள்.  கதையில் இருந்து கொஞ்சமாய்...

.....‘மழக் காலங்கிறதால பசும்புல்லத் தின்னுட்டு மாடு பூராம் கழிய ஆரம்பிச்சிருச்சு. கசாலயெல்லாம் தொறுத்தொறுன்னு கிடக்கு பாக்கச் சகிக்கல. மாடுக மேலெல்லாம் எருவும் மூத்தரமுமா கலரே மாறிப்போயி கெடக்குக. இந்த சரவணப்பயல மாட்டக் குளிப்பாட்டுடான்னா அசய மாட்டேங்கிறான். நாமதான் குளிப்பாட்டணும் போல. என்ன அந்த சனியங்கள இழுத்துக் கொண்டு போய் சேக்கிறதுதான் கஷ்டம். ஒண்ணு காட்டுக்கு இழுத்தா ஒண்ணு மேட்டுக்கு இழுக்கும். இன்னும் சொல்லப் போனா பில்லப்பசுவ தண்ணிக்குள்ள இறக்க போராடணும். தனி மூக்கனயில போட்டு தரத்தரன்னு இழுத்துக்கிட்டுப் போனாலும் தண்ணிக்கிட்ட போனோடனே தேருக்குக் கட்ட போட்டமாரி நின்னுக்கும். இல்லன்னா நம்மள இழுத்துப் போட்டுட்டு மாக்காலி எடுத்து ஒரே ஓட்டம்… அப்புறம் அந்தக் கயிர பீ பிருக்கெல்லாம் இழுத்துக்கிட்டு திரிஞ்சிட்டு சாந்தரம்தான் வரும். கயரத் தொடவே அருவெறுப்பா வரும்.’....

வாசிக்க : சுமை (சுமைதாங்கி)  



கல்கி இணைய இதழில் பலர் எழுதுவதைப் பார்த்து நாமளும் கல் எறிவோம் எனச் சில மாதங்களுக்கு முன் 'குடிகாரன்' என்னும் சிறுகதையைத் தட்டிவிட்டுட்டு இங்கெல்லாம் நமக்கு வேலை இருக்காதென விட்டுவிட்டேன். அன்பின் அண்ணன் ஆர்.வி.சரவணன் உங்கள் கதை கல்கியில் வந்திருக்கு எனத் தனிச் செய்தி அனுப்பினார். நான் அனுப்பிய கதையை 'குமுறல்' என்ற தலைப்பில் மங்கையர் மலரில் வெளியிட்டிருந்தார்கள். குடிகாரனைவிட குமுறலே சிறப்பான தலைப்பாய் இருக்கும் என்பதை வாசித்தால் உணர்வீர்கள். குமுறலுக்கு இங்கிருக்கும் பல நண்பர்கள் வாழ்த்தினார்கள். மகிழ்வாக இருந்தது. கதையில் இருந்து கொஞ்சமாய்...

....'வீட்டுல பொம்பளங்க சரியா இருக்கமாட்டாளுங்க... அதுதான் ஆம்பளங்க குடிச்சிட்டு தெருவுல கிடக்கானுக...' ஏதோ தத்துவத்தைப் பேசியது போல ஒரு பெருசு சத்தமாய்ப் பேச, இன்னொரு பெருசு அதை அமோதிப்பது போல ஆமாம் போட்டது. சாரதாவுக்கு சுள்ளென்று வந்தது....

வாசிக்க : குமுறல் 


அப்புறம் படைப்புல ஹைனூன்பீவி சிறுகதைப் போட்டி, அதுல நம்ம கதையான 'தனுஷ்கோடி' இருக்கு. வாசிச்சு உங்க கருத்தை - பதிவு செய்திருந்தால் மட்டும் - அங்கயும் சொன்னீங்கன்னா மகிழ்ச்சியா இருக்கும். வெற்றி, தோல்வி என்பது பெரிதல்ல வரும் கருத்துக்கள்தான் அடுத்த கதையை எப்படி எழுதுவது என்பதைச் சொல்லும். அக்கதையில் இருந்து கொஞ்சமாய்...

....தண்ணீர் குடித்துவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு அந்தக் கோவிலைப் பார்த்தான். சிதிலமடைந்த கோவில் ஏதோ ஒரு இறைவியையோ இறைவனையோ தன்னுள் வைத்திருந்திருக்கும், அந்தச் சிலை எங்கே போயிருக்கும்..? கடலோடு போயிருக்குமா..? களவு போயிருக்குமா..? அப்படி என்ன சாமி இருந்திருக்கக் கூடும். ஒருவேளை கடலம்மா கோவிலாகவோ கருப்பன் கோவிலாகவோ இருந்திருக்கக் கூடுமோ என்று நினைத்துக் கொண்டவன் அலையோடு ஆடி வரும் படகைப் பார்க்க, அலையோடு ஆடிய அவள் தெரிந்தாள். கண்ணை நீர் சூழ படகு மங்கலாய் ஆடியது...

வாசிக்க : தனுஷ்கோடி 

முதல் இரண்டு கதையும் 2020க்கு முன்னால எழுதியது. தனுஷ்கோடி சமீபத்தில் எழுதியது.

உங்க கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்.

நன்றி.

-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

துணியை விட சுமைதாங்கி பொருத்தம்தான்.  ஆனால தையும்விட பொருத்தமான தலைப்பு வைக்கலாம் என்று மனசு சொல்கிறது.  சட்டென தோன்றவில்லை.  ஏனெனில் உண்மையான காதல் நிறைவேறா விட்டாலும் சுமை என்று சொல்ல முடியாது.

குடிகாரனைவிட குமுறல் ஓகே.  டாஸ்மாக் என்று கூட வைத்திருக்கலாம்.

தனுஷ்கோடி சோக நினைவுகளைத்தாங்கி நிற்கும் நாயகனால் மனம் கணைத்துப் போகிறது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் நல்லதாக மாறும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சூழ்நிலை இயல்பு நிலைக்கு வரும். உங்கள் எழுத்துப்பணி தொய்வின்றி தொடர வாழ்த்துகள்.