மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 19 ஏப்ரல், 2023

நிகழ்வுகள் : அமீரகத் தமிழகத்தின் தமிழ்புத்தாண்டு விழா

 'அமீரகத் தமிழகம்' அமைப்பின் தமிழ் புத்தாண்டு விழா-

சென்ற வெள்ளி (14/0/2023) அன்று அபுதாபி ஷாபியாவில் இருக்கும் 'சைனிங் ஸ்டார்' பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அந்த அமைப்பின் நண்பர் சதீஷ்குமார் அவர்களின் அழைப்பின் பேரில் நாங்கள் - நான், பால்கரசு, இராஜாராம், பிரதோஷ் பாஷா - சென்றிருந்தோம். இவ்விழாவின் சிறப்புப் பேச்சாளர்களாக துபையில் இருந்து ஜெசிலா மேடமும் பாலாஜி அண்ணனும் வந்திருந்தார்கள்.
இப்தார் நிகழ்வுக்குப் பின் மேடை சிறப்புப் பேச்சாளர்கள் வசம் ஆனது. இருவருக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.
'தமிழும் நாமும்' என்ற தலைப்பில் பேசிய ஜெசிலா மேடம், ஒழுக்கத்தையும் அன்பையும் சொல்லும் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை அவருக்கே உரித்தான பாணியில் பேசினார். மேலும் இன்று நாம் சுத்தத் தமிழில் பேசுகிறோமா என்ற கேள்வியை எழுப்பி 'Rise எடுத்துக்க', 'Wife வேலைக்குப் பொயிட்டா' எனச் சாதாரணமாக ஆங்கிலக் கலப்போடு நாம் பேசுவதைப் பற்றிச் சொல்லி, நாம் இப்போது உண்மையிலேயே தமிழ்தான் பேசுகிறோமா..? என்ற கேள்வியை முன்வைத்துப் பார்வையாளர்களின் பதிலை எதிர்பார்த்துச் 'சொல்லுங்கள்' என்று சிறிது காத்திருப்புக்குப் பின் நான் தமிழ்லதானே பேசுறேன் என்றபடி மீண்டும் உரையைத் தொடர்ந்தார்.
மேலும் அவர் தாமரை மலர்வது சூரியனாலா..? இல்லை அது முளைத்துக் கிடக்கும் தண்ணீராலா..? என்ற ஒரு சிந்தனைக் கதையைச் சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார்.
விழா அமைப்பாளர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கும் போதே பத்து நிமிடங்கள் எனச் சொல்லியிருந்தார்கள் போலும், அதனால் சரியாகப் பத்து நிமிடத்தில் முடித்துக் கொண்டார் என்றாலும் மிகச் சிறப்பான பேச்சு.


அடுத்து மேடையேறிய பாலாஜி அண்ணன் 'தமிழின் தொன்மை' குறித்துப் பேச ஆரம்பிக்கும் போதே 'எல்லாரும் நல்லாயிருக்கீங்களா..?' என்று எப்பவும் கேட்பது போல் ஆரம்பித்தார். இந்தியாவின் தொன்மையான நகரத்தில் இருந்து வந்தவன் என்பதால் இந்தத் தலைப்பில் பேசலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என ஆரம்பித்தவர், சங்க கால அல் அங்காடிகள் குறித்தும், கீழடி பற்றியும் சொன்னவர், நான் இங்கே பேசும் செய்திகள் சிலருக்கேனும் புதிதாக இருந்தால் நான் சரியாக உங்களிடம் தகவலைக் கொண்டு சேர்த்திருக்கிறேன் என்று மகிழ்வேன் என்றார்.
மேலும் தமிழின் அழகு, இனிமை, எளிமை குறித்துப் பேசியதுடன் உலகில் பலரின் தாய்மொழிகளுக்கு எல்லாம் தாயாய் விளங்குவது நம் தமிழே என்றார். தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குப் போன சில வார்த்தைகளைச் சொன்னார். 'கல் தோன்றி மண் தோன்ற வாளோடு முன் தோன்றிய முத்தகுடி' என்ற பாடலை விரிவாக விளக்கினர். முதல், கடை, இடைச் சங்களைப் பற்றியும் அந்தச் சங்களில் இருந்த முக்கியமான கவிஞர்களைப் பற்றியும் பேசினார். எவை எவை செம்மொழிகள் என்பதைச் சொன்னதுடன் இதில் உயிர்ப்புடன் பேசப்படுவது தமிழும் சின்னமும்தான் என்று சொன்னார். சங்க காலப் பெண் புலவர்கள் பற்றிச் சொன்னார். அலுவலக மொழியாக தமிழ் எந்தெந்த நாட்டில் இருக்கிறது என்றும் சொல்லி, மிக விரிவாகப் பேசினார்.
எப்பவும் சிரிப்பாகப் பேசும் பாலாஜி அண்ணன் சீரியஸாக தமிழ் வகுப்பெடுக்கும் ஆசிரியராய் மாறிப் பேசியது வித்தியாசமாக இருந்தது. இடையில் ஔவையாரைச் சொல்லும் போது கே.பி.சுந்தராம்பாள் என்றதும், நான் பேசியதுக்கு பத்து பேராச்சும் கேட்டுக் கை தட்டுனீங்களே அது போதும் என்றதும் மட்டுமே அவர் தமிழ் வாத்தியாரில் இருந்து விடுபட்ட கணங்கள் என்று சொல்லலாம்.
இருவருமே மிகச் சிறப்பாகப் பேசினார்கள். என்ன சப்தம்தான் கேட்கவிடவில்லை. பார்வையாளர்களில் முக்கால்வாசிப் பேர் இப்தாருக்கு கொடுத்த பிரியாணி பார்சல் மட்டும் போதும், உங்க தமிழ் எங்களுக்கு வேண்டாம் என்பதாய் முக்கியமான விவாதங்களில் இருந்தார்கள். விழாக்குழுவினர் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாதுதான் என்றாலும் பெற்றோர்களே பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் எப்படித் தங்கள் குழந்தைகளை ஓரிடத்தில் அமர வைப்பார்கள். இனியேனும் விழாக்களுக்குச் சென்றால் குழந்தைகளை தங்களுடன் அமர வைத்துக் கொள்வதுடன் முக்கிய விவாதமெனில் அரங்கை விட்டு வெளியில் போய் பேசம் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
இப்தாரின் போது எங்களையும் அழைத்து அமர்ந்து சாப்பிட வைத்தார் பிரதோஷ் பாஷா.
அவர்கள் இருவரும் துபை செல்ல வேண்டும் என்பதாலும் மற்றொரு வேலை இருந்ததாலும் நாங்கள் போட்டிகளுக்கான பரிசளிப்புக்கு இருக்கவில்லை. பூர்ணிகா பரிசு வாங்கிய போட்டோக்களை சிவசங்கரியும் வசந்தும் பகிர்ந்திருந்தார்கள்,
வாழ்த்துகள்.

சரி டீ குடிக்கலாமாய்யா எனப் பாலாஜி அண்ணன் கேட்டதும் 'அண்ணே ப்ரஷ் மில்க்தான்' எனப் பிரதோஷ் பாஷா சொல்ல, அடேய் எனக்கொரு டீ வாங்கித் தாங்கடான்னுதானேடா சொன்னேன் என்றார் பாலாஜி அண்ணம் அதன்பின் டீக்கடை நோக்கிப் பயணப்பட்டு முதல் கடையைப் பார்த்ததும் இந்தக் கடை வேண்டாம். நாங்க கிளம்புறோம் எனப் பாலாஜி அண்ணன் சொல்ல, நாம வேற கடைக்குப் போகலாம் எனக் கிளம்பி. அந்தப் போக்குவரத்து நெரிசலில் பயணப்பட்டும் ஒரு மலையாளி கடைக்குப் போய் அமர இடம் ஒதுக்கிக் கொடுக்கச் சொல்லி அமர்ந்தோம்.
ஆரம்பத்தில் அன்பாய் பேசியவர்கள் கொஞ்ச நேரத்திலேயே அந்த மண்ணுக்குரிய ரெக்கட்டையை விரிக்க, செப்பையை ஒடிக்க இருந்த ராஜாராமை அடக்கிக் கொண்டு வந்ததும் எப்போதும் நிகழ்வதுதான்.
பாலாஜி அண்ணனுடன் சின்னதாய் ஒரு வேலை அதையும் அந்த டீக்கடையிலேயே முடித்துக் கொண்டோம். நல்ல பேனா ஒண்ணு வச்சிருக்கார்.
விழாவில் பிரேமாவதி, சிவசங்கரி, வசந்த், திலீப், சுபான் அண்ணா என நட்புக்களைச் சந்தித்தது மனநிறைவைக் கொடுத்தது.
இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்த 'அமீரகத் தமிழகம்' அமைப்புக்கும் அதன் தலைவர் டாக்டர். ரவிச்சந்திரன் மற்றும் நண்பர் சதீஷ் குமாருக்கும்
வாழ்த்துகள்
.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அபுதாபியில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி டாக்டர். பாலாஜி இராமசாமி, டாக்டர். அலி அல் ஓபைத்லி , டாக்டர். மரியா கோம்ஸ், திரு. நடராஜன், திரு. சாகுல் ஹமீது மற்றும் டாக்டர். அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


குழந்தைகள் அதிகம் இருந்ததால் பேசுவதைக் கேட்க முடியாத சப்தம் அரங்கு முழுவதும் என்பதால் சிறப்பு விருந்தினர்களின் பேச்சுக்களை கேட்பதில் சிரமம் இருந்தது என்றாலும் உடல் தானம் செய்வதில் உலகிற்கே தமிழர்கள்தான் முன்னோடி என்று உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் மரியா அவர்கள் சற்றே சத்தமாகப் பேசியதைக் கேட்க முடிந்தது. உண்மையிலேயே பெருமையாக இருந்தது.
நண்பர் சதீஷ் குமார் வரவேற்புரை வழங்க, நிகழ்ச்சியை ஸ்ரீரோகிணி மற்றும் ஸ்ரீதேவி சிவானந்தம் இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
மிகச் சிறப்பானதொரு நிகழ்வு, அழைப்புக்கு நன்றி சதீஷ்.
எப்பவும் போல் என்னைக் கொண்டு வந்து விட்ட போது எங்கள் கட்டிடத்தின் அருகில் இருக்கும் மலையாளி கடையில் தமிழர் போடும் லெமன் டீயைச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் இருவரும் கிளம்ப, நான் அறை வந்து சேர்ந்தேன்.
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படிப்படியாக நிகழ்வை விவரித்தது அருமை...