மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 19 ஏப்ரல், 2023

நிகழ்வுகள் : அதீப் நடத்திய 'ரைஸ்' குழும இப்தார்

நேற்று மாலையை இனிமையான மாலையாக்கியது அதீப் குழுமம் ஏற்பாடு செய்திருந்த 'ரைஸ்' அமைப்பின் இப்தார் நிகழ்வு.

இந்த வருட நோன்பில் வாரம் ஒரு இப்தார் நிகழ்வுக்குச் செல்லும் வாய்ப்பு சகோதரர் பிரதோஷ் பாஷாவினால் எங்களுக்குக் கிடைத்தது. அதுவும் பெரிய மனிதர்கள் கூடும் அவையில் நாங்களும் கலந்து கொண்டதெல்லாம் பாஷாவினால் மட்டும் எங்களுக்குக் கிடைத்தது எனலாம். நிறைய அறிமுகங்கள், நிறைவான பேச்சு என இந்த ரமதான் நாட்கள் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது, அதற்குக் காரணமான பாஷாவுக்கு நன்றி. சிலரின் உயரங்களை - வளர்ச்சியை - அருகில் இருந்து பார்க்கும் போதுதான் தெரிந்து கொள்ள முடியும். பாஷாவின் உயரம் மேலே மேலே போய்க் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.


நேற்று சீக்கிரமே போய்விட்டோம். துபையிலிருந்து பாலாஜி அண்ணனும் ஜெசிலா மேடமும் வந்திருந்தார்கள். இப்தார் சிறப்பு நிகழ்வுகள் நடந்தன. பலர் பேசினார்கள். மேடையில் சிலர் கௌரவிக்கப்பட்டார்கள். ரைஸ் என்றால் என்ன என விளக்கமளித்தார்கள். அந்த அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் பாஸ்போர்ட் பிரச்சினையால் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை என வருத்தம் தெரிவித்துப் பேசி அனுப்பிய காணொளி காண்பிக்கப்பட்டது. அதில் இஸ்லாத் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் பெருமையாகப் பேசினார். என்னை எனது சமூகத்து மக்கள் நிறைய ஏமாற்றியிருக்கிறார்கள், தமிழ் தமிழ் என்று கொண்டாடும் என் தமிழர்களும் ஏமாற்றியிருக்கிறார்கள் ஆனால் ஒரு முஸ்லீம் சகோதரர்கள் கூட என்னை ஏமாற்றவில்லை என்றபோது கைதட்டல் எழுந்தது. அவரும் ரைஸ் அமைப்பு குறித்துப் பேசினார்.
நோன்பு திறப்பு முடிந்தபின் இப்தார் விருந்து மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் அனைவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு, அவ்வப்போது போட்டோ எடுத்துக் கொண்டும் இருந்தோம். ஒரு நண்பர் வந்து எங்களை போட்டோ எடுத்துக் கொண்டார். மற்றொருவரோ அதென்ன நீங்க மட்டும் எடுக்குறது..? நானும் வருவேன் என வம்படியாக, எங்கள் குழுவைப் பற்றித் தெரியாமலேயே வண்டியில் ஏறினார்.
பாலாஜி அண்ணனுக்கும் ஜெஸிலா மேடத்துக்கும் அதீப் குழும நிறுவனத்தின் அன்சாரி அவர்கள் பேனாவைப் பரிசாக வழங்கினார். என்னதான் இருந்தாலும் பெரிய மனுசன்னா ஒரு கூட்டம் சுத்தத்தானே செய்யும், நான் சத்த உக்கார்றேன்யா எனப் போய் உக்கார்ந்த பாலாஜி அண்ணனை உட்கார விடாமல் ஆளாளுக்குப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். சிலர் உங்களைப் போட்டோ எடுக்கணும் எனச் சொல்ல முடியாமல் எல்லோரையும் எடுக்கிறேன் என மொத்தமாய் எடுத்துக் கொண்டார்கள். ஒருவரோ எங்கள் பின்னாலயே சுற்றிக் கொண்டிருந்தார். இறுதியில் அண்ணனிடம் கொஞ்சமாய் மாட்டிக் கொண்டார். ஆஹா நீங்க பேசுறதுலயே நம்மூரு தெரியுதே என எதற்காச் சொல்கிறார் என்று தெரியாமலேயே பேசிக் கொண்டே போனார்.


போட்டோ என்பது விருப்பப்பட்டு, அதுவும் குறிப்பாக நாம் எடுக்க நினைக்கும் நபரின் விருப்பத்தின் பேரில்தான் எடுக்க வேண்டுமே தவிர மொபைல்ல கேமாரா இருக்குங்கிறதுக்காக உங்களை ஒரு போட்டோ என போய் நிற்கக் கூடாது என்பதைச் சிலர் உணர்வதேயில்லை. நானெல்லாம் பாலாஜி அண்ணனுக்கிட்டக் கூட தனியாப் போட்டோ எடுப்போம்ண்ணே என இதுவரை கேட்டதில்லை. அப்படியிருக்க போட்டோ, போட்டோ என சுற்றுவதெல்லாம்...?
எப்பவும் போல் எங்களை எல்லாம் அழகாக போட்டோ எடுத்தார் சுபான் அண்ணன். பிரபாவதியும் சில போட்டோக்கள் எடுத்தார்.
பிரபாவதியும் தமிழ் மீது பற்றுக் கொண்ட மதுரையைச் சேர்ந்த டாக்டர் செந்தில் ராஜசேகரும் மதுரை மீனாட்சி பற்றியும் பெண் வழிச் சமூகம் பற்றியும் அது எங்கிருந்து வந்தது என்பது பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு மருத்துவர் புத்தகம் வெளியிடும் விசயமாக அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
டாக்டர் செந்தில் அவர்கள் பாலாஜி அண்ணனிடம் இருந்து 'சிறப்பு' என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டதையும் ஒருவருடன் உரையாடும் போது 'மிக்க சிறப்பு' என்று சொன்னதையும் இப்போதெல்லாம் 'சிறப்பு' என்ற வார்த்தையை பயன்படுத்துவதையும் சொன்னார். எப்பவும் கம்பெடுக்கும் டீச்சர் மிக்க சிறப்புன்னு சொல்லக்கூடாது மிகச் சிறப்புன்னுதான் சொல்லணும்ன்னு சொன்னப்போ, கொஞ்சம் அழுத்தமாச் சொல்ல மிக்க போட்டுக்கிட்டேன் என்றார் டாக்டர். அவரின் தமிழ் பற்றும் எங்களுடன் சரளமாய் பழகும் பாங்கும் பார்த்து வியப்பாக இருந்தது.
துபையில் இருந்து ரபீக் சுலைமான் அவர்கள் வந்திருந்தார்கள்.


கிளம்பிய போது சில விஷயங்கள் விவாதங்களாக மாறிப் போய் அது 'லெமன் டீ' குடிக்கும் வரை சூடு ஆராமல் இருந்தது என்றாலும் 'வீடு போய்விட்டோம்' எனப் பாலாவும் இராஜாவும் தனித்தனியே செய்தி அனுப்பிய பின் எப்போதும் போல் ஒரு மகிழ்வான நாளாக இருந்தது.
இத்தனை வருடமாக அபுதாபியில் இருந்தாலும் பல இடங்களுக்குப் போகும் வாய்ப்பு அமைந்ததில்லை, அதில் ஒரு இடம்தான் Abu Dhabi Country Club, நல்லதொரு இடம். நிகழ்வு நடந்த சில்வர் பால் ரூம் (Silver Club) அத்தனை அழகாய் இருந்தது.
-பரிவை சே.குமார்.

0 எண்ணங்கள்: