மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 6 நவம்பர், 2021

வேரும் விழுதுகளும் : 'கிராமத்துக்குள் சென்ற உணர்வு' - எழுத்தாளர் நௌஷாத்கான்

தோ ஒன்று நம்மை ஆக்கிரமித்து இருக்கும் போது அதிலிருந்து மீள முடியாமல் இருக்கும் நிலையில் எப்போதேனும் ஏதோ ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அப்படித்தான் நேற்றைய இரவைச் சகோதரர நௌஷாத்தின் 'வேரும் விழுதுகளும்' விமர்சனம் கொடுத்தது.

நேற்றைய காலையின் மகிழ்வை இரவில் சில விஷயங்கள் எடுத்துக் கொண்டு இந்த வாழ்க்கை மீதான கோபத்தை, வருத்தத்தை என்னுள்ளே இறங்கிய வேளையில்தான் இப்படியொரு விமர்சனம்.

வட்டார வழக்கு மற்றவர்களுக்குப் புரியாமல் போகக் கூடும் என்பதை பால்கரசு உள்ளிட்ட பலர் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் என் எழுத்து அந்த வழக்குக்குள்தான் சுற்றும் என்பதால் அதிலிருந்து வெளிவந்து போலிப்பிம்பம் காட்ட என்னால் முடியாது என்பதால் இப்படித்தான் தொடரும் அடுத்த நாவலும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். சில வார்த்தைகள் வேண்டுமானாலும் புதிதாக இருக்கலாம். அதற்காகப் பொது மொழியில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதே என் எண்ணம்.

அதேபோல் சித்ராவின் மனமாற்றம் என்பது கதையின் போக்கில் நல்லவளாக்க வேண்டும் என்பதால் நிகழ்ந்தது அல்ல. அது ஒரு மரணத்தின் பின்னான மாற்றம். சில மரணங்களுக்குப் பின்னே நிகழ்ந்த மாற்றங்களைக் கண்கூடாகப் பார்த்ததன் விளைவுதான் சித்ராவின் மாற்றமாய்... அவளைப் பொறுத்தவரை வில்லியா வரவில்லை, சொத்து ஆசையில்தான் அவளின் பேச்சு அப்படியாய் இருக்கிறது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

நௌஷாத் ஆழ்ந்து வாசித்து எழுதியிருக்கிறார்.  வாழ்த்துகளும் நன்றியும் தம்பி.

-----


வேரும் -விழுதுகளும் நாவல் (எனது வாசிப்பனுபவம் )
வேரும் விழுதுகளின் கதை என்று பார்த்தால் ஒரு கிராமத்தில் வாழும் மனிதர்களின் உறவு முறை ,பழக்கவழக்கம் ,சொத்து பிரச்சனை ,விபத்து ,இறப்பு என நதி போல எந்த வித பாசாங்கும் இன்றி சொல்ல வந்த வாழ்வியலின் அழகான பெரிய தத்துவத்தை போகிற போக்கில் வட்டார வழக்கோடு எளிமையாய் சொல்லி சென்றிருக்கிறது .
இந்த நாவலை படித்து முடிக்கும் தருவாயில் ஒரு கிராமத்திற்கு சென்ற உணர்வை நிச்சயமாக நீங்கள் உணர்வீர்கள் .
கந்தசாமி ,கண்ணதாசன் காளியம்மாள் போன்ற மனிதர்கள் எல்லாம் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்களா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இது போன்ற மனிதர்கள் இன்னும் நிறைய பேர் இருந்தால் இந்த பூமியே சொர்க்கமாக இருக்குமென்று கூட தோன்றியது .
ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாய் அறிமுகப்படுத்தி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர்கள் தரப்பில் உள்ள நியாயத்தையும் பேசி ,பொது தரப்பில் உள்ள நியாயத்தையும் பேசி அற்புதமான கிளைக்கதைகளால் பேரழகு பெறுகிறது வேரும் விழுதுகளும் !!
விட்டு கொடுத்தால் மட்டுமே எந்த உறவுமே நீடிக்கும் என்பதை கண்ணதாசன் கதாப்பாத்திரம் நம் கண்முன்னே காட்டுகிறது .கண்ணதாசனின் சித்தப்பா பசங்க அவங்க சகோதரி கணவனை ஏதோ ஒரு விஷயத்திற்க்காக அடித்திருப்பார்கள் அந்த காரணத்தால் அவர்கள் வீட்டு மருமகன் பல வருடங்களாக அந்த குடும்பத்தில் பேச்சு வார்த்தை இல்லாமல் இருப்பார் .தன் சித்தப்பா குடும்பத்தில் அவர்கள் வீட்டு மருமகன் மீண்டும் சேர வேண்டும் என்பதற்க்காக ரமேஷ் காலில் கண்ணதாசன் விழும் காட்சிகள் ,காளியம்மாள் இறக்கும் தருணம் ,கந்தசாமி தன் மனைவியை இழந்தும் ,இரண வேதனையோடு நினைத்து புலம்பும் தருணங்களில் எல்லாம் என்னையும் அறியாமல் கண் கலங்கி விட்டேன் .இவன் என்னடா புத்தகத்தை படித்து விட்டு காட்சிகள் என்று புலம்புறான்னு நீங்க கேள்வி கேட்குறது எனக்கும் புரியுது இந்த நாவலை படிக்கும் போது சில இடங்களில் வரும் சில சம்பவங்கள் எல்லாம் காட்சிகளாக விரிவடைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது .
கந்தசாமி ,காளியம்மாள் இடையேயான அந்த கணவன் ,மனைவி பாசம் ,அக்கறை ,நேசமெல்லாம் வயது கடந்தும் இன்றைய பாஸ்ட்புட் காலத்தில் எத்தனை கணவன் ,மனைவியிடையே இருக்குமென சில கேள்விகளை எழுப்பினாலும் எழுத்தாளர் பரிவை சே .குமார் படைத்த இந்த கதாப்பாத்திர வடிவமைப்பு அழகான கவிதையின் பக்கங்கள் .
கண்ணதாசனை போல் வீட்டிற்கு ஒரு கண்ணதாசன் இருந்தால் போதும் இந்த கூட்டுக்குடும்பம் என்கிற தேன்கூடு ஒருபோதும் கலையாது ,அழியாது .
மணி ,சித்ரா ,மகா ,குமரேசன் ,அபி ,சுந்தரி ,அழகப்பன் ,கண்மணி ,ரமேஷ் ,கற்பகம் என நிறைய கதாப்பாத்திரங்கள் நாவலில் வந்தாலும் எந்த கதாப்பாத்திரமும் கதையை சீர்குலைக்காமல் கதையை ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்ற விதம் அருமை .
கொஞ்சம் சுயநலம் கொண்ட பெரிய மருமகளாக சித்ரா கதாப்பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருந்தது .அந்த கதாப்பாத்திரத்தின் மீது படிக்கும் போதே நிறைய வெறுப்பும் இருந்தது கதையை முடிக்க வேண்டும் என்பதற்க்காக கடைசியில் திருந்துவது போல அமைத்தது கொஞ்சம் ஏமாற்றம் தான் .
நாவலில் சில இடங்களில் கிராமத்தில் பேசும் சில பழமொழிகளும் இடம் பெற்றிருந்தது சிறப்பு .கிராமத்தில் பொத்தாம் பொதுவாய் பேசும் வார்த்தைகளை வெளிப்படையாய் உண்மையாய் எழுதியது ஆசிரியரின் நேர்மையை பறைசாற்றுகிறது .
இந்த நாவலின் பலமும் ,பலவீனமும் இதில் பயன்படுத்தியிருக்கிற வட்டார மொழி நடை தான் .இவ்வளவு சிறப்பான நாவலை எல்லோரும் புரிந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இந்த நாவலின் உயிரே அந்த மொழிநடை தான் .
கூட்டு குடும்பத்தின் அவசியத்தை ,குடும்ப உறவுகளின் உன்னதத்தை கந்தசாமி என்னும் ஆலமரம் மூலம் அழகாய் எடுத்து சொல்லி இருக்கிறது .கந்தசாமியோடு இந்த வேரும் விழுதுகளும் பட்டு போக போவதில்லை கண்ணதாசனின் வழியாக இன்னும் அதிக விருட்சமாய் வளரும் .

நூல் குறிப்பு: நூலாசிரியர் : பரிவை சே .குமார் பதிப்பு ஆண்டு : பிப்ரவரி 2021 வெளியீடு : கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் எண் -3 நேரு தெரு, மணிமேடு , தண்டலம் , பெரியப்பனிச்சேரி சென்னை -600 122 அலைபேசி : 9840967484
-நௌஷாத் கான் .லி -

நல்லதொரு விமர்சனத்துக்கு நன்றி நௌஷாத்.
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்: