மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 நவம்பர், 2021

நூல் விமர்சனம் : ஸ்னேஹி எனும் நாய்

 ஸ்னேஹி எனும் நாய்...

சகோதரர் கவிஞர் சிவமணி அவர்களைச் சிறுகதை ஆசிரியராக மாற்றியிருக்கும் சிறுகதை தொகுப்பு.
மொத்தம் பத்துக் கதைகள்... ஒவ்வொரு கதைக்கும் அவர் எடுத்திருக்கும் களம் வித்தியாசமானதாய் இருப்பதில் அவரின் நேர்த்தியும் எல்லாரையும் போல் சாதரணமாய் ஒரு கதையை எழுதக் கூடாது என்ற எண்ணமும் நன்றாகத் தெரிகிறது.


இதில் இருக்கும் கதைகளில் பெரும்பாலானவை எழுத்தாளர் வாழ்வில் நிகழ்ந்தவை, பார்த்தவை, கேட்டவை என்பதாகத்தான் வாசிக்கும் போது நமக்குத் தெரிகிறது. அப்படியானவையாகத்தான் இருக்கும் என்பதைக் கதைகள் சொல்கின்றன.
'இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும், நம் மனச் சுவர்களில் உயிர்ப்பாகவும் உன்னதமாகவும் அழுத்தமான ஓவியங்களைத் தீட்டுகின்றன. சிவமணி உருவாக்கும் பஞ்சவர்ணம் உள்ளிட்ட பாத்திரப் படைப்புகள், நம்மோடு வாழத் தொடங்கி விடுவதுதான் அவரது ஆளுமை மிக்க வெற்றியாகும்' எனத் தனது வாழ்த்துரையில் நக்கீரன் இணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
'பல்வேறு கதைகளில் உறவுச் சிக்கல்களும் அதன் முடிச்சுக்களை அவிழ்ப்பதுமெனக் கதைகள் இருக்கின்றன. இதைக் கதாயாசிரியரே தீர்மானிக்கிறார் என்கிற கேள்விகள் எழாமலில்லை. பல கதாபாத்திரங்களின் குரல் கதாசிரியரின் குரலாக இருக்கிறது. அதே சமயம் உறவுச் சிக்கல்களை மிகக் கவனமாக கையாள முயற்சிக்கிறார்' எனத் தனது அணிந்துரையில் இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியரும் கவிஞருமான வதிலை பிரபா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
'ஒரு கரு எடுத்து, அந்தக் கருவோடு என்னைப் பொருத்திப் பார்க்க, அந்தக் கருவாய் மாறி எழுதிடும் சுகம். எழுதிக் கரைந்திடும் சுகம் வயது ஆக ஆக லயிக்கத்தான் செய்கிறது. என் எழுத்துக்களின் தரம் இந்தக் காலத்திற்கு ஏற்றார்போல இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னும் மெருகேற்றிக் கொள்ள பொன்னான வாய்ப்பாக இருக்கும் எனக் கருதி வெளியிடுகிறேன்' என இந்நூலில் ஆசிரியர் சிவமணி தனது என்னுரையில் தெரிவித்துள்ளார்.
இதில் இருக்கும் கதைகள் எல்லாம் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கின்றன. முதல் கதையான எது சிறப்பு ஆட்டிசம் பாதித்த குழந்தையைப் பற்றிப் பேசுகிறது. தன் மகன் மதிப்பெண் எடுக்கவில்லை என வருத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு, என் மகனால் நாங்கள் இழந்தது என்ன பெற்றது என்ன என்பதை ஆட்டிசம் பாதித்த மகனின் தந்தை சொல்வதாய் இருக்கிறது. இந்தத் தொகுப்பில் எது சிறப்பு என்றால் இக்கதையே சிறப்பு என்பதை வாசித்ததும் சொல்லிவிடலாம். இது எல்லார் மனசுக்கும் பிடித்த கதையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஸ்னேஹி என்னும் இரண்டாவது கதை வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாயைப் பற்றிப் பேசுகிறது. ஸ்னெஹி என்றதும் பெண்பாலைக் குறிக்கிறது எனப் பார்த்தால் சக்தி / முத்து என இருபாலருக்கும் வைப்பது போல் இங்கே ஆண் நாய்க்கு வைத்திருக்கிறார். தன் எஜமானர்கள் மீதான பாசம், அதை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல எடுக்கும் முயற்சிகள் எனக் கதை சொன்ன விதம் அருமை. எங்க வீட்டில் ராஜா என்றொரு நாய் வளர்த்தோம். ஆட்களை விரட்டிக் கடிக்கிறது என மாட்டுக்கு காலுக்கு இடையில் கட்டை கட்டி விடுவதைப் போல் - தொன்றிக்கட்டை- கட்டிவிட, அதைத் தூக்கிக் கொண்டு விரட்டி ஓடிக் கடிக்க ஆரம்பித்த காரணத்தால் அதன் வாழ்வு முடிவுக்கு வர, நாய் வளர்ப்பதையே விட்டுவிட்டோம். இப்ப என் மகன் விவசாயம், கோழி, நாய் என நாங்கள் கல்லூரிக் காலத்தில் விட்டுவிட்டு வெளியில் வந்தவற்றை மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கிரான். இப்போது அவன் வளர்க்கும் தோனி என்ன சொன்னாலும் கேட்கும், பள்ளியிலிருந்து அவன் வந்ததும் ஸ்னேஹி எப்படி தன் எஜமானர்களை சுற்றுகிறதோ அப்படிச் சுற்றும், அவன் குளிப்பாட்டினால் பேசாமல் நிற்கும், மற்றவர்கள் என்றால் ஆட்டம் போடும். ஸ்னேஹி எங்கள் வீட்டு நாய்களை ஞாபகத்தில் நிறைத்து வைத்தது எனலாம்.
உயில் என்னும் சிறுகதை அமெரிக்காவில் சாவுச் செலவுக்கான இன்சூரன்ஸ் என்னும் திட்டம் இருப்பதை வைத்து வாழ்க்கை மீதான, சாவின் மீதான பயத்தை கதையாய் விரிக்கிறது. இறுதியில் கனவுதான் என்றாலும் எல்லாருக்குமே இந்தப் பயம் இருக்கத்தான் செய்யும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
ராமன்னம் என்னும் கதை ராம் மற்றும் அன்னம் பற்றிப் பேசுகிறது. இதில் அதிகம் ராம்சார் என்பவரைப் பற்றிப் பேசுவதாலோ என்னவோ எல்லா இடத்திலும் ராம்சாரே நிறைந்திருக்கிறார். இந்த ராம்சாரே கதையின் வேகத்தைக் குறைப்பவராகவும் இருப்பதே இக்கதை நம்முள் அழுத்தத்தைக் கொடுக்கத் தவறுவதன் காரணமாகவும் இருக்கிறது. ராம்சாரை அதிகம் பிடிக்காமல் இருந்திருந்தால் நம்மை அது இறுக்கிப் பிடித்திருக்கும்.
வாக்கு என்னும் கதை தற்போது குடியிருக்கும் வீட்டுக்கார அம்மாவுக்கும் தனக்குமான பிரச்சினை பற்றியும் வீடு தேடுவதைப் பற்றியும் அப்பாவைப் போல் தானும் இருக்கணும் என நினைக்கும் மகனைப் பற்றியும் தன் வாக்குத்தான் இப்படி ஆக்கியிருக்குமோ என்ற வருத்தத்தையும் பதிவு செய்கிறது.
கிண்டில் என்னும் கதை வாசிப்பைப் பற்றிப் பேசுகிறது, புத்தகத்தை தேடி அலையும் ஒருவனின் வாழ்க்கை கதை என்று சொல்லலாம். தாளில் வாசிக்கும் எழுத்துக்களை கிண்டில் என்னும் கருவியின் மூலம் வாசிக்கும் போது அதன் சுவாசம் கிடைப்பதில்லை என்பதைப் பேசுகிறது இக்கதை.
பஞ்சவர்ணம் என்னும் கதை அவள் தன் வாழ்வில் பட்ட கஷ்டங்களைப் பேசுகிறது. அவளின் விருப்பத்துக்கு எதிரான வாழ்க்கை அமைந்த பின் அதைத் தனக்கான வாழ்க்கையாக மாற்ற முயற்சித்து தோற்றுப் போவதிலும் மகனை இழப்பதிலும் அவளின் வாழ்க்கையில் வர்ணமே இல்லாமல் போனதைச் சொல்லும் கதை இது.
தாயுமானவர் என்னும் கதை அப்பாவின் இறப்புக்குப் பின் வாழ்க்கையை எப்படி நகர்த்துவது எனத் தவித்து நிற்கும் குடும்பத்தை, தன் பொறுப்பில் எடுக்கும் பெரியப்பா அதற்காக குடும்பத்தினரிடம் படும் அவஸ்தையையும் அப்படியிருந்தும் அவர்களை விடாமல் பாதுகாக்கும் குணமும் பேசப்பட்டு, தான் தாயானதும் தங்களை நடுத்தெருவில் நின்றுவிடாமல் காத்த பெரியப்பாவிடம் முதலில் சொல்ல வேண்டும் என நினைப்பதும் பேசப்படுகிறது.
ராசி - இந்த ராசியற்றவன்/ள் என்பதைக் கிராமங்களில் அதிகமாகப் பார்க்க முடியும். இது பல குடும்பங்களில் உறவுகளில் பேசப்படும் கதைதான். அப்படித்தான் நல்லதே செய்தாலும் ராசி கெட்டவளாகி நிற்கிறாள் இக்கதையின் நாயகி வசந்தி.
பத்தாவது கதையாக ஆயில்யம் - ஆயில்யத்தில் பிறந்தவளுக்கு திருமண தடை இருப்பதையும் அதற்காக அம்மாவும் அப்பாவும் தீர்வை நோக்கி ஓடுவதையும் பேசும் கதை.
மேலே சொன்னதைப் போல் பத்துக் கதைகளும் வித்தியாசமாய்... நல்ல முயற்சி... சிறப்பு... வாழ்த்துகள்.
மொத்தத்தில் சிறப்பான புத்தகம் என்றாலும் இதிலிருக்கும் குறைகளாகச் சிலவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
எழுத்துப்பிழை என்பது முழுவதுமாக சரி பண்ண முடியாதுதான் என்றாலும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்.
வரிகளில் ஒரு வார்த்தை ரெண்டு மூன்று இடங்களில் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.
சில கதைகளில் பெயர்கள் - குறிப்பாக ராமன்னத்தின் ராம் சார்- அடிக்கடி வருவது கதையோட்டத்தை அணை போட்டுத் தடுக்கிறது.
கதைகளை இரண்டு மூன்று முறை வாசித்து இன்னும் திருத்தியிருந்தால், பெரிய பெரிய பாராக்களைத் தவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் ஸ்னெஹி மிகச் சிறப்பான தொகுப்பு.
சகோதரர் சிவமணியை சிறுகதை ஆசிரியராக உயர்த்திருக்கும் தொகுப்புத்தான் இந்த 'ஸ்னெஹி என்னும் நாய்'
இன்னும் சிறப்பான சிறுகதைகளை சிவமணி எழுதுவார் என்னும் எண்ணத்தைக் கொடுக்கும் தொகுப்பாக இது அமைந்திருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் சிவமணி.
வாழ்த்துகள்.
---------------------------------------------
ஸ்னேஹி எனும் நாய்
சிறுகதை தொகுப்பு
சிவமணி
ஓவியா பதிப்பகம்
விலை. ரூ. 150.
மின்னஞ்சல் : svmn25@gmail.com
---------------------------------------------
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு நூல் விமர்சனம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படிப்படியாக... அருமையான பார்வை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல அறிமுகம்.

கீதா