மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 10. ராஜூவை குறி வைக்கும் போட்டியாளர்கள்

'என்ன பிக்பாஸ் எழுதலையா..?' என்ற கேள்விகள் என்னை நோக்கிச் சிலரிடமிருந்து வந்தது. கிட்டத்தட்ட பத்து நாட்களாக எழுதவில்லை எனபதற்கான காரணம் பிக்பாஸில் விறுவிறுப்பு இல்லை என்பதைவிட கொஞ்சம் பிரச்சினைகளில் சிக்கி இருந்ததால் எழுதும் மனநிலை இல்லாமலேயே இருந்தது.

சென்ற வாரத்தில் அப்படி ஒன்றும் பிரமாதமாக நிகழ்ந்து விடவில்லை. நிரூப்புக்கு இருக்கும் காயின் பவரை வைத்துப் படுக்கை அறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் உரிமையை பிக்பாஸ் கொடுத்திருந்தார். அவரின் ஆட்டம் பலரை ஆட வைத்தது என்பதே உண்மை. இசைவாணி செய்யத் தவறியதை எல்லாம் இவர் செய்தார் எனலாம். இவருக்கு உதவியாய் அக்சரா இருந்தார்.

அந்த வாரத்தின் தலைவர் போட்டியில் ராஜூம் சிபியும் மோதி, சிபி வெற்றி பெற கள்ளத்தோணியில் பயணித்ததைப் போல காயினை வைத்து அந்தப் பதவியை வருண் பிடுங்கிக் கொள்ள, தலைவர் பதிவியில் வருண் தொடர யார் தவறு செய்தாலும் அவர் உக்கி (தோப்புக்கரணம்) போட வேண்டும் என்று பிக்கி சொல்லியிருந்தார். வருணும் சிறப்பாகவே செய்தார் எனலாம்.

டாஸ்க்குன்னு பெரிதாக எதுவும் இல்லை, பாட்டுப் போட்டு ஆடச் சொன்னார்கள். அம்புட்டுத்தான்.

வார இறுதியில் கமலின் பிறந்தநாள் என்பதால் வார இறுதியில் சிறப்பாக இருக்கும் என்பதைப் பொய்ப்பிக்கும் விதமாக எதுவும் சிறப்பாக நிகழவில்லை என்பதே உண்மை. 

சுருதி வெளியேற்றப்பட்டார்... போகும் போது எதாவது செய்யணும் தன்னிடம் தாமரைக்காக சண்டை போட்ட ராஜூவை கோர்த்து விடுவோமென எதையோ சொல்லிவிட்டுச் செல்ல, அதை வீட்டிலிருக்கும் மற்றவர்கள் பிடித்துக் கொண்டதில் நிகழ்ந்த நல்லது எதுவென்றால் இதுவரை வெளியேற்றப் பட்டியலில் வராதவரை இந்த வாரத்தில் எல்லாருமே சொன்னதுதான். ராஜூவை நிரூபிக்க இது ஒரு சான்று ஏனென்றால் மக்கள் மத்தியில் ராஜூ மிகவும் உயர்ந்தே இருக்கிறார் என்பதை இன்று கமல் சொல்வார் என்பதால் இது அங்கிருப்பவர்களுக்கு எப்படியான மனஅலையைக் கொடுக்கும் என்பதைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கும் கிட்டும் அல்லவா..?

இந்த வாரத்துக்கான தலைவர் போட்டியிலும் அபிநய் வென்றதை காயினை வைத்து இசைவாணி பெற்றுக் கொண்டார். எல்லாரையும் வைத்துச் செய்யப் போகிறேன் என்றவரை நீ தலைவியாக இருக்க வேண்டும் என்றால் எல்லாருக்கும் அவர்கள் கேட்கும் போது சாப்பாடு கொடுக்க வேண்டும் என பிக்கி சொல்லியிருந்தார். இப்படிக் குறுக்கு வழியில் தலைவர் பதவிக்கு வருபவர்களை வைத்து செய்கிறார் பிக்கி என்பதை யாரும் உணரவில்லை.

பாவ்னிக்கு லிவிங் ஏரியா - வாழும் பகுதி சரிதானே - முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கொடுத்தார் பிக்கி. சும்மாவே சுக்ரதிசை நடக்கிற மாதிரி ஆட்டம் போடும், இப்ப இது வேற கொடுக்கவும் சனி திசையையும் கூட கூட்டிக்கிட்டு ஆட்டம் காட்ட ஆரம்பிச்சிருச்சு. இவருக்கு உதவியாய் தாமரை தேர்வு செய்யப்பட்டார். இதுவும் அவரை வைத்துச் செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே தெரிந்தது. அது வியாழன் இரவில் வெடிக்கவும் செய்தது.

இந்த வார பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை - இதில் மற்றவர்களுக்காக விளையாட வேண்டும். மிகப்பெரிய சண்டைகள் எல்லாம் வந்தன. பேச்சுக்களில் பீப் அதிகம் போடப்பட்டன. பாவ்னியின் சட்டதிட்டங்களை எல்லாம் நிரூப் பொடிப்பொடி ஆக்கிக் கொண்டிருந்தார். பார்க்கிறவர்களுக்கு இவர் ஏன் இப்படிச் செய்கிறார் எனத் தோன்றினாலும் பாவ்னி சிலரின் பேச்சைக் கேட்டு - குறிப்பாக அபிநய் மற்றும் வருண் - ஆட்டம் போட்டதை நாம் காண முடிந்ததால் அவர் செய்தது சரியே எனத் தோன்றியது.

அவார்ட் கொடுக்கும் நிகழ்வெல்லாம் நடத்தினார்கள். ராஜூவை வைத்துச் செய்வதென பலர் முடிவு செய்திருப்பது கண்கூடாகத் தெரிந்தது. பாவம் மக்கள் பார்வையில் ராஜூ சிம்மாசனத்தில் இருப்பதை இவர்கள் அறியவில்லை, இந்த அறியாப் பதர்களுக்காக ராஜூ தன்னை மாற்றிக் கொள்ளத் தேவையும் இல்லை.

அபிநய் பெண்களை ஏற்றி விட்டு வேடிக்கை பார்ப்பதையும் அண்ணாச்சி அடுத்தவரை மனம் நோகச் செய்து நகைச்சுவையாய் பேசியதாய் நடிப்பதையும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாவ்னியைப் பொறுத்தவரை தன் கைப்பொம்மையாக இருந்த சுருதி வெளியேறியதால் வேறொரு கைப்பொம்மையை கைப்பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். வேறொரு ஆள் மீது ஏறிப் பயணிப்பதில் இவர் கில்லாடி.

இசைவாணிதான் இந்த வீட்டின் வெசவாணி, செய்வதை எல்லாம் செய்து விட்டு உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா அண்ணா என்று சொல்லும் போது நமக்கே நாலு அறை விடணும் போலத் தோன்றும். இதைச் சொன்னாக்கூட திருப்பி அடின்னு ஒரு கூட்டம் கத்திக்கிட்டு வந்துடும் என்றாலும் அண்ணாச்சியுடனான மோதலாகட்டும் ராஜூவை நீ பிடிங்குற ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணி என்பதாகட்டும், பசியோடு இருப்பவரை இது டாஸ்க் நேரம் நான் வந்துதான் சாப்பாடு தருவேன் எனக் காத்திருக்க வைத்திருந்தலாகட்டும் எல்லா விதத்திலும் இசைவாணி வெசவாணிதான்.

அக்சராவுக்கும் வருணுக்கும் நல்லதொரு நட்பு இருக்கிறது. ஆண்- பெண் நட்பில் என்ன தவறு வந்து விடப்போகிறது..? அக்சரா எது பேசினாலும் வருணையும் வருண் என்ன செய்தாலும் அக்சராவையும் காட்டும்படியான எடிட்டிங் எதற்காக...? இப்படி ஏன் செய்கிறார்கள்..?  என்று யோசித்தால் டிஆர்பிக்காக எதையும் செய்பவர்கள்தானே தமிழ் மீடியாக்கள் என்ற எண்ணம் எழுந்து யோசனைக்கு தீவைத்து விடுகிறது. 

பட்ஜெட் டாஸ்க்கில் நிரூப்பின் வெற்றிக்கு இந்த வார பட்ஜெட் மொத்தமும் உனக்கே என்ற போது எப்படியும் என்னயத் திங்க விட மாட்டனுங்க, அதுவும் அபிநய் மேற்பார்வையாளனாக இருக்க வேண்டும் என்ற கட்டளையின் கீழ் தான் இவற்றை வாங்குவதை விரும்பாத நிரூப், சற்றே அதிகமாக பொருட்களை எடுத்ததால் இந்த வார பட்ஜெட் பொருட்கள் சுவாகா.

தாமரைக்கான தண்டனையாக வீடு முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் எனப் பாவனி சொன்னபோது அதை எதிர்த்தது ராஜூ மட்டும்தான். அதானால் ராஜூ கெட்டவன் என்பது பாவ்னியின் எண்ணம், தனக்காக ஒருவன் பேசுகிறான் என்றாலும் என்றோ ஒருநாள் அவன் செய்த தப்புக்காக அவன் கெட்டவன் எனத் தாமரை முத்திரை குத்தியதுதான் எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்பதாய் இருந்தது.

மூவர் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ராஜூவும் அண்ணாச்சியும் இந்த வாரத்தின் மோசமான போட்டியாளர்களாய் தேர்ந்தெடுக்கப்பட - ராஜூ சிறந்த பொழுது போக்கு கலைஞர் என்ற விருதை அன்றுதான் பெற்றார் என்பதுதான் வேடிக்கை - வெளியில் உட்கார வைத்து எப்படி விளையாண்டால் வெல்வாய் எனச் சொல்லி குளிர்ந்த நீரை அவர்கள் தலையில் ஊற்ற வேண்டும் எனபதே தண்டனை.

ஆளாளுக்கு ஒன்று ஒன்றைச் சொன்னார்கள் என்றாலும் இது ராஜூவின் விளையாட்டுக்கு கிடைத்த தண்டனை இல்லை ஒவ்வொருவரின் மனசுக்குள்ளும் ராஜூ மட்டும் எப்படி இப்படியிருக்கலாம் என்றிருந்த எண்ணத்தின் வெளிப்பாடே காரணம்.

'டேய் அண்ணா உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா...' என்று சொல்லி நீலிக் கண்ணீர் வடித்து இசை... ச்சை... வெசவாணி போட்ட நடிப்பில் ஆயிரம் கமல் தெரிந்தார்கள். தம்பி மன்னிச்சுக்க என்ற தாமரைக்கு என்னைச் செருப்பால் அடிச்சிரு என்ற ராஜூவின் வார்த்தையிம் வலி தெரிந்தது. ராஜூவை மோசமான ஆட்டக்காரன் எனச் சொல்லியவர்களில் இவர்கள் இருவரும் உண்டு என்னும் போது ஏன் இந்த நடிப்பு..?

மற்றவர்களைப் போலில்லாமல் ஐக்கி பெரி மட்டும் நீ உன்னோட பாதையில் சரியாத்தான் போறே... சிறந்த பொழுது போக்கு கலைஞன் எப்போதும் மோசமான ஆட்டக்காரன் ஆகமுடியாது. இந்தத் தண்ணி உனக்கானது அல்ல, உன்னைச் சொன்னவர்களுக்காக என்று சொல்லி ஊற்றினார். ஹாட்ஸ் ஆப் ஐக்கி. மதுமிதா மிகுந்த வருத்ததோடு ஊற்றினார் என்றாலும் அவரும் ராஜூவைச் சொன்னவர்தான்.

மொத்தத்தில் உங்க சண்டையைவிட மிக்ஸர் சாப்பிட நல்லாயிருக்கு என்றா ராஜூவின் வரிகள் உண்மையிலும் உண்மை.

இன்று கமலின் வருகை... நாப்பது நாட்கள் முடிந்த நிலையில் நிகழ்ச்சியும் மொக்கை... கமலும் மொக்கைதான். 

-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்னமும் உண்மைகள் வெளிவரும்...