மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 3 ஜூலை, 2021

நூல் அறிமுகம் : செம்மீன்


றுத்தம்மா,
பரீக்குட்டி,
செம்பன்குஞ்சு,
சக்கி,
பழனி,

இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.

மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய, சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல். இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள்.

'செம்மீன்... மீனவர் சமூகத்துக்கதை. செம்பன்குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை; கடற்கரைக் கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை; தனது செயல் ஒரு தியாகம் என்பதை உணராத தியாகி பரீக்குட்டியின் கதை; ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக் கதை; ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை; மேலைக்கடல் அன்னையின் செல்லக் குழந்தைகளது நித்தியக் கதை'

என்ற வரிகளைப் புத்தகத்தின் பின் அட்டையில் காணலாம்.  இதுதான் மொத்த நாவலின் கதை. வாசிக்கும் போது நாமும் அந்தக் கடற்கரையில் மீன், கருவாடு வாசத்துடன் கறுத்தம்மாவின் பின்னால் பயணித்துக் கொண்டிருப்பதை உணரலாம்.

செம்பன்குஞ்சுவின் வாழ்வின் ஏற்ற இறக்கதையும்... ஏற்றத்துக்கு முன் அவன் எப்படி இருந்தான்... ஏற்றத்துக்குப் பின் எப்படி மாறினான்... இறக்கத்தைச் சந்தித்தபோது அவனின் கதி என்ன ஆனது என்பதுதான் நாவலின் முக்கிய சாரம்சம் என்றாலும் கறுத்தம்மாவே செம்பன்குஞ்சு, சக்கி, பரீக்குட்டி, பழனி என எல்லாப் பக்கமும் சுழன்றடிக்கும் கதாபாத்திரமாய் நின்றாலும் மற்றவர்களே இங்கு அதிகம் கவனம் ஈர்க்கிறார்கள் என்பதே உண்மை.

வேற்று மதக்காரனான பரீக்குட்டியுடன் சிறுவயது முதலான நட்பு பருவ வயதில் காதலாக மாறினாலும் கறுத்தம்மா மனசுக்குள் அது ஏற்க்கப்படாது, தான் ஒரு மரக்காத்தியாகத்தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது அதன் காரணமாகவே காதலையும் தொட்டும் தொடாமல்தான் வைத்திருக்கிறாள்.

பரீக்குட்டியைப் பொறுத்தவரை கறுத்தம்மா மீதான காதல் வெற்றி பெறாது என்பது தெரிந்தாலும் அவளுக்காகவே அவளின் குடும்பத்துக்கு உதவியை செய்து கொண்டே இருக்கிறான். அந்த உதவி தனக்கு பிற்காலத்தில் பயன்தரும் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. தன் நிலை இழந்து, தொழில் இழந்து அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறான் என்ற நிலைக்கு அவனை வாழ்க்கை தள்ளி விடுகிறது. அதற்குக் காரணம் கறுத்தம்மாவாகிப் போகிறாள்.

செம்பன்குஞ்சு மகளின் திருமணத்தைவிட தனக்காக ஒரு தோணியும் வலையும் வேண்டும் என்பதுதான் பிரதானமாக இருக்கிறது. அதற்கு சக்கியும் துணை நிற்கிறாள். மரக்கானாகப் புகழ் பெற்ற கண்டங்கோரனின் தோணியை வாங்கி வந்து ஊரில் இருந்த எதிர்ப்புக்களை விலக்கி, ஓட்ட ஆரம்பிக்கிறான். கண்டக்கோரனைப் போல் மனைவியுடன் வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கிறான். ஒரு தோணி இரண்டாகும் போது பணத்தை அவனை ஆட்கொள்கிறது. அதுவே அவனை மனிதனில் இருந்து வேட்கை மிகுந்த மிருகமாக்குறது. தன் வாழ்க்கையை தானே அழித்துக் கொள்கிறான்.

சக்கியைப் பொறுத்தவரை குடும்பத்தை, தன் மகளை என எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கோடு கவனிக்கிறாள். பரீக்குட்டி பணம் கொடுத்து உதவுவதற்குக் காரணம் என்ன என்பதை உணர்ந்தே இருக்கிறாள். கறுத்தம்மாவின் விருப்பப்படி திருப்பிக் கொடுக்கவும் நினைக்கிறாள். செம்பன்குஞ்சு ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவள் தவித்துத் திரிகிறாள். மகளுக்கு யாருமற்ற ஒருவனைப் பார்த்து முடித்தபின் மனசுக்குள் ஒரு வேதனை... அதுவே அவளை மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது. மரணத்துக்கு முன் பரீக்குட்டியை நீ அவளுக்கு அண்ணன் என்கிறாள்.  செம்பன்குஞ்சுவை வேறொரு திருமணம் பண்ணிக் கொள்ளச் சொல்கிறாள்.

பழனிக்கு யாருமில்லை... அவன் தனியாள்... உழைப்பாளி... பரீக்குட்டியிடம் இருந்து கறுத்தம்மாவைப் பிரித்து தங்கள் சமூகத்துக்கு கறுத்தம்மாவால் வர இருக்கும் கருப்பை நீக்க, சக்கி பிடிக்கும் மாப்பிள்ளை... செம்பங்குஞ்சு லாவகமாக இவனை மடக்கிப் போட, திருமணத்துடன் ஒட்டு மொத்த உறவும் அத்துப் போக, கறுத்தம்மா - பரீக்குட்டி காதலை வைத்து அவளைக் கொடுமைப்படுத்தவும் பின் அவளை மனசுக்குள் ஏற்றுக் கொள்ளவும் செய்கிறான்.

செம்பன்குஞ்சு மனைவியின் இறப்புக்குப் பின் கண்டங்கோரனைப் போல் வாழ நினைத்தவன் அவனின் இறப்புக்குப் பின் அவனின் மனைவி பாப்பிக்குஞ்சுவை கூட்டி வந்து வாழ்கிறான். அந்த வாழ்க்கையும் அவனுக்கு மகிழ்வைக் கொடுக்கவில்லை. 

கறுத்தம்மா தப்பானவள் என்ற எண்ணத்தை அவள் பிறந்த கடலோரத்திலும் வாழ்க்கைப்பட்டுப் போன கடலோரத்திலும் இருக்கும் மக்கள் ஆரம்பம் முதலே மனசுக்குள் நினைத்துப் பேசி வருகிறார்கள். பரீக்குட்டி, செம்பன்குஞ்சு, பழனி, சக்கி என எல்லாருடைய வாழ்க்கையும் இவளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

படிக்க ஆரம்பித்தது முதல் நாவல் பரபரவென இழுத்துக் கொள்கிறது. கறுத்தமாவால் கடலன்னைக்குக் களங்கம் என்பதை சொல்லும் போது இதென்ன மூடத்தனமான நம்பிக்கை என்ற எண்ணமே எழுந்தாலும் தகழி அது உண்மைதான்... அவளால் அழிவுதான்... அவள் காதலித்தது ஏற்புடையதல்ல... அதனால் எல்லாருக்குமே பிரச்சினைதான் என்று சொல்லும் விதமாக முடிவை அமைத்திருப்பதும் சற்றே நெருடலாய் இருந்தது.

பரீக்குட்டி மற்றும் கறுத்தம்மாவின் காதலை தொட்டும் தொடாமலும் இருப்பதைப் போல் இருந்தாலும் பரீக்குட்டி தன் செயல்களால் உயர்ந்து நிற்கிறான்... மனசுக்குள்ளும் கறுத்தம்மாவை முந்தி ஏறி அமர்ந்து கொள்கிறான்.

செம்மீன் - வாசிக்க வேண்டிய நாவல்.

செம்மீன்
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில் சுந்தரராமசாமி
சாகித்ய அகாதெமி பதிப்பு
விலை : 240

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அவசியம் வாங்கிப் படிப்பேன்
அருமை
நன்றிநண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மூடத்தனமான நம்பிக்கை அறிய, வாசிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது...

ஸ்ரீராம். சொன்னது…

பெயர்கள் கொஞ்சம் குழப்புகின்றன..  இதுதானே திரைப்படமாகவும் வந்தது?

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஜெயக்குமார் ஐயா, தனபாலன் அண்ணா, ஸ்ரீராம் அண்ணா - தங்கள் தொடர் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி.

@ஸ்ரீராம் அண்ணா, ஆமாம் அண்ணா - ஷீலா நடித்தது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கதை. வாசித்திருக்கிறேன். மீண்டும் வாசிக்க வேண்டும்.