மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 21 ஜூலை, 2021

சினிமா விமர்சனம் : வெள்ளையானை

மீண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ஓடிடு' என்றுதான் தோன்றியது என்றாலும் விவசாயம், விவசாயி என்ற ஈர்ப்பின் காரணமாக பார்க்கலாம் என்று தோன்றியது.


ஊருக்கு உபதேசம் செய்யும் செயலை சமீபத்திய படங்களில் சமுத்திரகனி கொஞ்சம் கூடுதலாகவே செய்ய ஆரம்பித்திருப்பதை அறிந்ததாலேயே இந்தாளு நடிச்ச படத்தைப் பார்க்கணுமான்னு தோணுச்சு என்பதே உண்மை. இவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் வந்து செய்யும் அலும்பை ஏர்போர்ட்டோட விட்டுட்டுப் போயி ஊருக்குள்ள உத்தமன்னு அரசியல் பேசுற வகையறா என்பது நமக்குத் தெரியாதா என்ன.

வெள்ளையானை...

விவசாயத்தை நம்பியிருக்கும் மக்களுக்கு கடன் தருகிறோம் என்ற பெயரில் வங்கி அவர்களின் வாழ்வில் வாக்கரிசி அள்ளிப் போடுவதுதான் கதை. 

நம்ம பக்கமெல்லாம் வானம் பார்த்த பூமிதான்... பருவத்தில் மழை பெய்து கண்மாய் நிறைந்தால் மட்டுமே ஏர் பூட்டுவார்கள். எங்க ஊரில் மழை ஆரம்பிக்கும் போது நாற்றுப்பாவி, நல்ல மழை பெய்து கண்மாய் நிறைந்திருக்கும் போது நடவு செய்வார்கள். கண்மாயில் இரண்டு மேடான பகுதிகள் இருக்கும் அதற்கு முறையே சின்னமுட்டு, பெரிய முட்டு என்ற பெயர்.  பெரிய முட்டைத் தண்ணீர் மூடினால் அந்த வருடம் நீர் இறைக்காமல் விவசாயம் செய்ய முடியும் என்பது வழிவழியாய் பின்பற்றும் முறை. இப்போது எங்கள் ஊரில் விவசாயம்ன்னா என்னன்னு கேக்குற மாதிரி ஆயிருச்சு.

இங்கே வெள்ளையானையில் மழையை நம்பியும் காவிரியை நம்பியும் விவசாயம் செய்யும் மனிதர்களை, பசுமையாய் இருக்கும் ஊரை உங்களுக்கு விவசாயக் கடன் தருகிறோம் என்று சொல்லி, வேண்டாமென இருப்பவர்களின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, வங்கிக்கடன் வாங்க வைக்க, வானம் பார்த்த பூமியில் மழை பொய்த்துப் போக, காவிரியும் வறண்டு கிடக்க, கடனை அடைக்காததால் விமானம் ஏறி ஓடிப்போய் வெளிநாட்டில் வாழ முடியாத சூழலில் வங்கி அதிகாரிகளின் அச்சுறுதலில் ஒருவனை இழக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்ள, விவசாயமில்லாத ஊரில் இருக்கும் குடும்பத்தைக் காப்பாற்ற வெளியில் வேலைக்குச் செல்கிறார்கள்.

விவசாயம், கடன் பிரச்சினை, இரசாயண உரங்களால் பாதிப்பு, அரசியல்வாதிகளின் கண்ணாமூச்சி ஆட்டம், நெல்லுக்கு தங்களுக்குள்ளாக ஒரு விலை நிர்ணயம் பண்ணிக் கொண்டு அலைக்கழிக்கும் நெல் வியாபாரிகள், அவர்களுக்குத் துணை போகும் அரசு நெல் கொள்முதல் நிலையம் என படம் விவசாயியின் விரிவோடிய வாழ்க்கையை முதல் பாதியில் காட்டி, விவசாயம், விளைநிலம் எனக் கிடந்தால் பிச்சைதான் எடுக்கணும் என்பதை இரண்டாம் பாதியில்  காட்டியிருக்கிறது.

பிச்சை எடுப்பது மிகைப்படுத்தப்பட்டது என்றாலும் இதுதான் நிலமை என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சமுத்திரகனி அடக்கியே வாசித்திருப்பது கொஞ்சம் ஆறுதல். அவரின் மனைவியாக வரும் நாயகி ஆத்மிகாவுக்கு காதல் காட்சிகளுடன் வேலை முடிந்து விட்டது என்று இயக்குநர் நினைத்து விட்டார் போலும். சில காட்சிகளில் ஊரே நிற்கும் போது இவர்மட்டும் காணாமல்தான் இருக்கிறார்.

நாங்க சேத்துல கை வச்சாத்தான் நீங்க சோத்துல கை வைக்க முடியும்ன்னு ஆண்டாண்டு காலமாய் சொல்லும் அரதப்பழசான வசனம் சினிமாவுக்குத்தான் பொருந்துமே தவிர வாழ்க்கைக்கு இல்லை... விளைஞ்சா ஏதோ நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு, திருவிழா திருமணங்கள்ன்னு சந்தோஷமா இருப்போம்... மழை பெய்யாமா விளைச்சல் பொய்த்துப்போனால் அடுத்த வேளை சோற்றுக்கே நாங்க சிங்கிதான் அடிக்கணும் என்பதுதான் விவசாயியின் நிலமை. இங்கே இந்த மக்களுக்காக பரிதாபப்படவோ, குரல் கொடுக்கவோ யாருமேயில்லை என்பதுதான் உண்மை.

இவர்கள் யானைகள் இவர்களின் பலத்தை அறியாமல் இருக்கும்வரை அடுத்தவன் மிளகாய் அரைக்கத்தான் செய்வான். பலத்தை உணர்ந்தால் இவர்களுக்கான தேவையை இவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று கலெக்டர் சொல்வார். அதை இவர்கள் கடைசி வரை செய்யாமல் வாழ்க்கையை நகர்த்த ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

வெள்ளையானையைப் பார்க்கலாம்... ஆனா இன்னைக்கு யார் சார் விவசாயம் பண்ணுறா... விதைச்சவன் கணக்குப் பார்த்தா உலக்குக் கூட மிஞ்சாதுன்னு எங்கூருப் பக்கமெல்லாம் விவசாயத்தை நிப்பாட்டி இருபது வருசத்துக்கு மேல ஆயிருச்சு... வீர வசனங்கள் எல்லாமே சினிமாவுக்கு மட்டும்தான் வாழ்க்கைக்கு அல்ல என்பதை மீண்டும் இங்கே சொல்லத் தோன்றுகிறது.

-'பரிவை'  சே.குமார். 

2 எண்ணங்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளை விரிவாக காட்டிய படம்!

உரம் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், உர விற்பனையாளர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள்!

ஆனால்,
தீர்வுதான் என்ன?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... உண்மை நிலவரம் வேறு...