மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 17 மே, 2021

மனசு பேசுகிறது: கொரோனாவின் கோரப்பிடிக்குள்

 கொரோனா...

தொலை தூரத்தில் சீனாவில் ஒரு வைரஸ் வந்திருக்கிறதாம்... ஆட்கள் எல்லாம் சாகிறார்களாம் என்பதாய்த்தான் 2020-ன் தொடக்கம் இருந்தது. பக்கத்து வீட்டுப் பையன் அங்கே டாக்டருக்குப் படிக்கிறான் என்பதால் அவனை எப்படி ஊருக்கு கொண்டு வருவது என்ற அவனின் பெற்றோரின் புலம்பலின் போது தெரியவில்லை அதன் வீரியம் கட்டு விரியனாய் கட்டவிழ்ந்து போகும் என்பது.


ஒவ்வொரு நாடாகப் பரவி வந்து முதல் அலை இந்தியாவிற்குள் நுழைந்த போது கூட இத்தனை உயிர்களைக் காவு கொள்ளும் என்று நினைக்கவில்லை. இந்தியர்கள் மசாலா அதிகம் சாப்பிடுவார்கள் அவர்களுக்கெல்லாம் அதிகம் வராது என இங்கு அலுவலக நண்பர்கள் சொல்லும் போது அப்படித்தான் தெரிந்தது. அமெரிக்காவெல்லாம் அடித்து ஆடிக் கொண்டிருக்கும் போதும் இந்தியாவில் கொரோனா வெறியாட்டம் ஆடவில்லை... சரி இத்துடன் தொலைந்து விடும் என்ற எதிர்ப்பார்ப்பின் போதுதான் இரண்டாம் அலையின் ஆட்டம் ஆரம்பமானது.

இதுவும் கடந்து போய்விடும் என்ற எண்ணமே மக்களை ரொம்ப அசால்டாக இருக்க வைத்தது. முறையான வழிமுறைகளைப் பின்பற்றாமல், மாஸ்க் என்பது எதற்கு போடச் சொல்கிறார்கள் என்பதை பற்றி எதுவுமே அறியாமல் கொரோனாவா... அதை இங்க வரச்சொல்லு பார்ப்போம் என உதார் விட ஆரம்பித்தார்கள். இன்று கதறும் அரசியல்வாதிகள் எல்லாம் பிரியாணியையும் ஐநூறையும் கொடுத்து ஆட்களை அள்ளி வந்து கூட்டம் காட்டி தேர்தல் பரப்புரை செய்யும் போதும் அவன் காசுக்காக நம் வாழ்வை விலை பேசுகிறான் என்பதை யாருமே உணரவில்லை. தேர்தல் கூட்டங்கள்தான் தமிழகத்தில் கொரோனாவை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது என்றால் மிகையாகாது.

முதல் அலையில் கேரளாவில் நிறைய மறைக்கப்பட்டது... தமிழகத்தில் நல்ல முயற்சிகளை மேற்கொண்டாலும்... இன்றைய முதல்வர் செய்வதையேதான் அவர்களும் செய்தார்கள் என்றாலும் அன்று கம்பு சுத்தினோம்... இன்றோ அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவரேன்னு ஆரத்தி எடுக்கிறோம்... அரசின் செயல்பாடு என்பது வேண்டுமானால் இருவருக்கும் இடையில் மாற்றத்தைக் காட்டலாம்... மற்றபடி கொரோனாவை ஒழிப்பதில் தீவிரம் காட்டியதில் இருவருமே சரிசமமாகத்தான் இருந்தார்கள். டாஸ்மார்கை அடை என்று கொடி பிடித்தவர்கள் இத்தனை மணி நேரம் மட்டும் திறந்திருக்கும் என்கிறார்கள். அவர்கள் காட்டிய கடுமையை இவர்கள் காட்டவில்லை என்பதாலேயே கூட்டம் கூட்டமாய்க் கூடிக் களிக்கிறார்கள்.

வடக்கேதான் சாவு... தெற்கே இல்லை என்ற எண்ணம் நமக்குள் அதிகமாகவே இருந்தது. ஏதோ ஒரு நாட்டில் சாகும் போது அங்கதான் சாகிறார்கள்... அவர்கள்தானே கொண்டு வந்தார்கள் என்றோம்... இந்தியாவுக்குள் சாவு எட்டிப் பார்த்தபோது செய்தியாய்க் கடந்தோம்... சென்னை, மதுரை என வந்தபோது ஆழ்ந்த இரங்கல்கள் என்றோம்... நண்பர்களைத் தாக்கியபோது பதறினோம்... ஊருக்குள் வந்து... உறவுகளைக் காவு கொள்ளும் போது கலங்கித் தவிக்கிறோம்.

தினமும் காலையில் முகநூல் முகத்தில் விழித்தால் வெறும் மரணச் செய்திகள்தான்... எத்தனை எத்தனை மரணங்கள்... கடந்த மூன்று நாட்களுக்குள் உறவில் கிட்டத்தட்ட ஏழெட்டு மரணங்கள்... சில மரணங்கள் வாங்க ஆளின்றி மருத்துவமனையே எரிக்கவோ புதைக்கவோ செய்கிறது. ஆக்சிஸன் கிடைக்கவில்லை, பெட் கிடைக்கவில்லை என்ற குரல்கள் எங்கோ கேட்டு இப்போது அருகிலும் கேட்க ஆரம்பித்துவிட்டன. 

ஊரில் நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இங்கிருந்து கொண்டு அவர்களுடன் பேசி, பார்த்து இருங்கள்... பாதுகாப்பாய் இருங்கள் எனச் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனசு ஏனோ ஒரு நிலையில் இல்லை... சின்ன வயதில் பலர் உயிரிழப்பதைப் பார்க்கும் போது ஊசி போடாதீங்க மத்திய அரசு ஏமாத்துதுன்னு சொல்லிச் சொல்லியே நம்மை நாமே இழந்து கொண்டிருக்கிறோமோ எனத் தோன்றுகிறது. அரசியலுக்காக பேசுபவர்களின் பேச்சை நம்பி உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்... இன்றிருப்பவர் நாளை இல்லை என்ற நிலையில்தான் விடிகிறது.

இங்கெல்லாம் கிட்டத்தட்ட 90% பேருக்கு ஊசி போட்டு விட்டார்கள்... பாதிப்பு எதுவும் இல்லை... ஊசி போட்டதற்கான சில மாற்றங்கள் மட்டுமே உடலளவில் இருக்கிறது... அதுவும் ஒரு வாரத்துக்குள் சரியாகி விடுகிறது.

கொரோனாவை வெல்ல சரக்கடித்தால் போதும் என்று பேசுபவர்களையும், மாஸ்க் இடாமல்... இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும், எங்கள் தளத்தில் இருக்கும் ஆந்திர நண்பர் ஒருவர், காலை ஆறு மணிக்கு எங்கள் தளத்தில் இருந்து லிப்ட் வழியாக தரைத்தளம் போனபோது கட்டிட முகப்பில் நின்று கொண்டிருந்த காவல்துறையைச் சேர்ந்த அரபி, நீ மாஸ்க் ஒழுங்காப் போடலை என்று சொல்லி அபராதம் விதித்திருக்கிறார்... இவர் நான் போட்டிருந்தேன் என்று வாதிட்டபோது சரியாகப் போடவில்லை எனச் சொல்லி 3000 திர்ஹாம் அபராதம் விதித்திருக்கிறார். இவ்வளவுக்கும் அவருக்குச் சம்பளம் 3000 கிடைக்க வாய்ப்பில்லை.

இந்த அபராதத் தொகையை ஒரு மாதத்திற்குள் கட்டத் தவறினால் 100 திர்ஹாம் கூடுதல் கட்ட வேண்டும் என்றும் அதன் பின் கட்டத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் பத்து திர்ஹாம் கூடுதலாகக் கட்ட வேண்டும் என்றும் சொல்லிச் சென்றிருக்கிறார். இங்கு இதுதான் நிலமை... இதை நம்ம ஊரில் செய்ய முடியாது... மாஸ்க்கைப் போடு என்றால் போடுவோமுல்ல உன் வேலையைப் பாரு எனச் சொல்லிச் சிரிக்கிறோம்... இன்னைக்கு எவனோ ஒருவன் ஆக்சிஜனுக்காகத் தவிக்கிறான் என்று கடந்து போகிறோம்... நாளை அந்த இடத்தில் நாமிருக்க மாட்டோம் என்பது என்ன நிச்சயம்...?

முடிந்தளவு நமக்கு நாமே பாதுகாப்பாய் இருந்து கொரோனாவை விரட்டுவோம்... இல்லையேல் அது நம்மில் பெரும்பகுதியை உண்டு ஆட்டம் போட்டுத்தான் போகும்...

பார்த்து இருப்போம்... நம் வாழ்வைக் காத்து இருப்போம்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

முறையான பதிவு.. மூர்க்கர்களும் முரடர்களும் சொல் புத்தி கேட்டாவது சொந்தப் புத்தியில் உணர்ந்தாவது திருந்தினால் நல்லது..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலரின் இழப்புகள் மனதை ரணமாக்குகின்றன...

மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர், இன்று காலை தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி...

ஸ்ரீராம். சொன்னது…

உண்மை.  நிலவரம் ரொம்பவே கலவரமாக இருக்கிறது.  எங்கள் உறவு நட்பு வட்டத்திலும் ஏகப்பட்ட இழப்புகள்.  இன்றைய செய்தி, பேஸ்புக் நண்பர் அஷ்வின் ஜி மறைந்து விட்டார் என்று...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

இங்கே மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்றெல்லாம் சொன்னால், நம்மை ஏளனம் செய்கிறார்கள், பைத்தியம் என்று சொன்னாலும் சொல்லலாம்! - எனக்கெல்லாம் வராது என்ற அசட்டு தைரியம் வேறு. பரவல் குறித்து சொன்னாலும் பலருக்கும் ஏற்க மனதில்லை. இந்த தீநுண்மிக்கு நான் பலரை இழந்திருக்கிறேன். அலுவலகத்திலும், நட்பு வட்டத்திலும், உறவினர் வட்டத்திலும். ஒவ்வொன்றும் எனக்கு செய்தியாக வரும்போது மனது வேதனை அடைவது உண்மை. ஆனால் இன்னமும் பலருக்கு புரியவே இல்லை என்பது வேதனை.