மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 3 மே, 2021

எனது பார்வையில் 'எதிர்சேவை' - கவிஞர் சிவமணி

கோதரர் கவிஞர் / எழுத்தாளர் / மகாகவி இணை ஆசிரியர் திரு. சிவமணி அவர்கள் எதிர்சேவையை வாசித்துவிட்டு என்னைப் போனில் அழைத்தது கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் இந்த வருடத்தில் மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்கள் தங்களின் விழாக்களை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலையில், தல்லாகுளத்தில் லெட்சோப லெட்சம் மக்கள் கூடியிருந்து 'கோவிந்தா' கோஷம் விண்ணைப்பிளக்க நடக்க வேண்டிய எதிர்சேவை நிகழ்வு அழகர் கோவிலுக்குள் நிகழ்ந்த அன்று என்பது எதிர்பாராமல் நிகழ்ந்ததுதான் என்றாலும் மகிழ்வான ஒன்று.

பலரைக் கவர்ந்த கதைகளில் சிலவற்றை விடுத்து, அவரைக் கவந்ததாய் சொன்ன கதைகளில் அவர் சிலாகித்தது மனத்தேடலைத்தான்... அது ஒரு முற்றுப் பெறாத காதல்... வாழ்க்கை இருவருக்குமான வாழ்வை மாற்றி எழுதிய பின் ஒரு சந்திப்பு... அதன் போக்கில் நிகழும் மன வேதனையுடனான பேச்சுக்கள்... எதிர்பாராத முடிவு என என்னையும் கவர்ந்த கதை அது. அதுதான் எனக்கு ரொம்பப் பிடித்தது என சிவமணிதான் இதுவரை எழுதியவர்களில் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நன்றி சிவமணி.

சிவமணியின் வரிகள் கீழே....


ரு சாதாரண நிலையில் இருந்து பல தடைகளை தாண்டி முயற்சி பூ தொடுத்து மாலையாக்கி இருக்கும் நூல் தான் "எதிர்சேவை". பன்னிரண்டு கதைகளின் கதம்பம். எழுதுவது ஒரு வரம் அல்ல. அது எல்லாராலும் இயலும் என்று சொல்லி இருப்பதை நானும் ஒப்பு கொள்கிறேன்.
ஆசிரியர் வரிகளை கற்பனைகளால் நிரப்பாமல் எதார்த்ததால் நிரப்பி இருக்கிறார். எதார்த்த நடையில் எழுத்துக்களை பின்னி கதைக்கு தேவையான முடிவுகளை தந்து இருப்பதாகவே உணர்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒரு அழகிய வாழ்வியல். அதில் பொதிந்து இருக்கும் உணர்வுகளை சுவைக்க வேண்டும் என்றால், நிறுத்தி படித்தால் போதும், ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளை இறக்கி வைத்து இருக்கிறார்.
காதல் உணர்வுகளாகட்டும், சமூக உணர்வுகளாகட்டும், இல்லை உறவுகளுக்குள் நடக்கும் பிணைப்புகளாகட்டும் ஒரு நீதிபதியாக நடுநிலையாக நின்று எழுதி இருப்பது இந்த எழுத்தாளனை உயர்த்தி பிடித்து இருக்கிறது. இனியும் உயர்த்தி பிடிக்கப் போகிறது. நாம் நடைமுறையில் பார்த்த நிகழ்வுகள் போலவே எல்லா கதைகளும் உள்ளன. எல்லா கதைகளை பற்றி சொல்லாமல் ஒரு சில கதைகளை படித்த பிறகு கிடைத்த உணர்வுகளை பகிர்கிறேன்.
தீபாவளிக் கனவு:
*************************
இந்த தீபாவளி கனவு போல பல கனவுகளை நம் இளமை பருவம் தந்திருக்கும். அந்த வறுமையில் இருக்கும் ஏக்கம், அந்த எதிர்ப்பார்ப்பை, தன் உறவுகளோடு இருக்க முடியாத வேதனை அனைத்தும் எல்லாம் கூடி வர வேளையில் எதிர்பாராத இடர்பாடுகள் அந்த கனவுகளை சுக்குநூறாக்கும் போது கிடைக்கும் வலி அதை கடப்பவர்களுக்கே புரியும். அப்படி தான் இந்த சுந்தரியும். வயதுக்கு வந்த உடனே வீட்டு வேலைக்கு செல்பவளின் மனநிலையை இயல்பாக சொல்லி இருக்கிறார்.
எதிர்சேவை :
******************
நடுத்தர வர்க்கத்து தந்தை, தாய், மகன், மகள். அந்த பக்கம் வசதி படைத்த மாமா, அத்தை, அத்தை மகள், மகன். அந்த பையனுக்கு அத்தை மகள் மீது நாட்டம். ஆனால் மாமா செய்திடும் ஒப்பீடு, சிறிய தலைகுனிவு, அவமானம். சகோதரன் என்பதால் விட்டு தரும் தங்கை. உறவுகளை இறுக்கி பிடித்து நடத்தும் குடும்பம், பிள்ளைகளை நம்பும் அப்பா, அம்மா, உறவுக்குள் காதல் இப்படி தான் பிறக்கும், எப்படி புரிதல் வரும் என, அழகாய் கதை நகர்ந்து, அழகர் எதிர்சேவையை காதலோடு பிணைத்து எழுதியது மனதிற்கு இதமாக இருந்தது.
மனத்தேடல் :
*******************
காதல், அதிலும் முதல் காதலை யார் தான் எளிதில் மறப்பார்கள். அப்படி ஒரு காதலை சுமந்து திரியும் நாயகன். அதே உணர்வோடு திரியும் காதலி. அந்த வலி நித்தமும் இருந்தும் சிரித்து பேசி, பிள்ளைகள் பெறுவது தான் வாழ்க்கை என்பதையும், இன்று தப்பு என்பது, நாளைய சரி என்பதும் புரிய வைக்கிறது. உண்மை காதல் இருந்தால் அந்த நினைவுகள் சுகத்தையே தரும் என்பதை உணர்த்திட்ட கதை. காலத்தின் ஓட்டத்தோடு நகரும் இந்த வாழ்வு எந்த மாற்றத்தையும் சரி செய்து விடாது என்பதை ஆணித்தனமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
அப்பாவின் நாற்காலி :
********************************
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அடையாளத்தை ஏற்படுத்தி வாழ்வது அத்தனை எளிது அல்ல. காரணம் அதற்கு தைரியம் வேண்டும். எது எடுத்தாலும் அப்பா. அப்பா தட்டு, அப்பா துண்டு, அப்பா படுக்கை, அப்பா நாற்காலி என்று நீள்கிறது. அந்த அப்பா இருக்கும் போது அடித்து கொண்ட பிள்ளைகள், அந்த ஜீவன் இல்லாத போது அந்த வெறுமையை உணரும் பிள்ளைகளின் உணர்வை அப்படியே காட்சிகளாக வைத்து இருக்கிறார் ஆசிரியர் .

ஆகச் சிறந்த கதைகளை சுமந்து திரியும் இந்த எதிர்சேவை படிப்பவர்களின் உள்ளத்தில் நின்று சிறிது நேரம் அலசி பார்க்கும். இன்னும் இன்னும் ஆகச் சிறந்த படைப்புகளோடு வீறு நடைப்போட்டிட வாழ்த்துகள்.

எதிர்சேவை
சிறுகதை தொகுப்பு
'பரிவை' சே. குமார்
கலக்கல் ட்ரீம்ஸ்
சென்னை.
விலை: ரூ100
*************************
சிவமணி
வத்தலக்குண்டு

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

ஸ்ரீராம். சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துகள் குமார்.