மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 19 மே, 2021

மனசு பேசுகிறது : அழுத்தம் கொடுக்கும் கொரோனா

கொரோனா குறித்து எழத வேண்டாம் என்றே தோன்றியது... இரண்டு நாட்களாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்துப் பின் தொடர் மரணச் செய்திகளால் மனம் எதிலும் ஒட்டாமல் போய்விட்டது. இத்தகைய சூழலில் என்ன எழுதுவது என்ற எண்ணம்தான் மனம் முழுவதும் நிறைந்து நிற்கிறது. 

இந்த நாடு, நம் நாடு என்ற ஒப்பீட்டுப் பார்வை வேண்டாமே எனத் தோன்றினாலும் இங்கிருக்கும் நாம் இவர்கள் போடும் அபராதத்தொகையை மனதில் நினைத்து , இவர்கள் சொல்லும் சட்டதிட்டங்களை மதித்து அதன்படி நடந்து கொள்கிறோம். இங்கு சொல்லும் எல்லாமே நம் நல்லதுக்குத்தான் என அடித்துப் பேசுகிறோம். அரசை மெச்சுகிறோம்.

மாஸ்க் சரிவரப் போடாதவனுக்கு 3000 திர்ஹாம் அபராதம்... அவன் வாங்கும் சம்பளமோ 1500 திர்ஹாம்.... பாவம் எப்படி இந்த அபராதத் தொகையை அடைப்பான் என வருந்தினால் இப்படியெல்லாம் சட்டம் போட்டால்தான் கொரானாவை ஒழிக்க முடியும் என வாய் கிழியப் பேசுகிறோம் ஆனால் நம் ஊரில் லாக்டவுன் என்றதும் அதெப்படி முடியும்... வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் போலீஸ் அபராதம் வாங்கினால் இதெல்லாம் அராஜகம் என்றும் இங்கிருந்து குரல் கொடுக்கும் நண்பர்களைப் பார்க்கும் போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை... இவர்களுக்கெல்லாம் இருக்கும் நாட்டின் மீதிருக்கும் நம்பிக்கையில் பாதி கூட பிறந்த நாட்டின் மீது இருப்பதில்லை... நான் பலரிடம் பின்ன எதுக்கு இந்தியா போறே எனக் கோபமாய்க் கூட கேட்டிருக்கிறேன். இவர்களைப் பொறுத்தவரை நம்ம ஊருக்குச் சட்ட திட்டம் தேவையில்லை அதை மதிக்கவும் தேவையில்லை... இவர்கள் எண்ணமெல்லாம் காங்கிரஸ் வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்பதாகவும், பிரதமரைத் திட்டுகிறோம் எனப் பிறந்த நாட்டைத் திட்டுவதாகவும்தான் இருக்கிறது.

ஊரில் இருந்து வரும் செய்திகளைக் கேட்கும் போது மனம் ஒரு நிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படுத்தால் உறக்கம் வருவதில்லை... நினைவு ஊரில் இருப்பவர்களைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. இப்படியான வாழ்க்கையில் தொலைத்தது ஏராளம் என்றாலும் இந்தச் சூழலில் குடும்பத்துடன் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. பார்த்து இருங்கள் என்று அடிக்கடி போன் செய்து சொல்லிக் கொண்டே இருந்தாலும் மனம் பதறிக் கொண்டுதான் இருக்கிறது.இதுவும் கடந்து போகும் என்ற எண்ணமே விடியலில் மெல்ல எழுப்பி இம் மண்ணின் வீதிகளில் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

எத்தனை மரணங்கள்... உறவுகளில், நண்பர்களில், முகநூல் வட்டத்தில் எனத் தினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்படியான ஒரு சூழலை இதுவரை எதிர் கொண்டதில்லை, இனியும் எதிர்கொள்ளக் கூடாது என்பதே பிரார்த்தனை என்றாலும் இனி இப்படியான சூழலைக் காண நாம் உயிருடன் இருப்போமா என்பதே மில்லியன் கேள்வி ஆகிவிட்டது. பெரும்பாலும் மாரடைப்பால் இறந்தார் என்பதுதான் இப்போதைய பேச்சாக இருக்கிறது. 

எங்கள் உறவில் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தனியே ஒரு தோட்டத்தை மேற்பார்வை செய்து கொண்டிருந்தவருக்கு கொரோனா தாக்கம்... அதன் விளைவாக மரணம். இன்னொரு உறவில் தன் அண்ணனின் மரணம் நிகழ்ந்த ஒரு வாரத்தில் தங்கை கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு ஆக்ஸிசன் இல்லை, படுக்கை வசதி இல்லை என வெளியில் போட்டு வைத்திருந்து, பின் சமூக சேவகரின் உதவியுடன் மீண்டும் காரைக்குடி கொண்டு சென்று காப்பாற்றி விடலாம் என மருத்துவர் கொடுத்த நம்பிக்கை மறுநாள் காலையில் மரித்துப் போகிறது. இதைப் போல் இன்னும் இன்னுமாய் நிறைய மரணச் செய்திகள்... மனம் அழுந்திக் கிடக்கிறது.

இன்னொரு பக்கம் முகநூல் பக்கமே போகக்கூடாதென இருந்தாலும் கை அதற்குள் இழுத்துச் செல்ல, காணும் பதிவெல்லால் இறப்புச் செய்திகள்... ஆழ்ந்த இரங்கல்கள் என எத்தனை பேருக்கு எழுதுவது..? சின்ன வயது முதல் முதியவர்கள் வரை எத்தனை இழப்புகள்..? இப்படி மக்களைக் கொத்துக் கொத்தாக கொண்டு போகத்தான் கொரோனா வந்ததோ..?

நம் ஊரில் ஆளும் அரசு சரியில்லை... சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுங்கட்சிகளைப் பார்த்து எதிர்கட்சிகள் சொல்லிக் கொண்டு அரசியல் விளையாட்டுத்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றன... இன்று கெஜ்ரிவால் வேற சிங்கப்பூர் வைரஸ் என இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்குத் தாவிச் சொல்லியிருப்பார் போல, அவனுக பதிலடி கொடுத்துட்டானுங்க... உடனே நம்ம அரசாங்கம் அது இந்தியாவில் குரல் அல்ல... இங்கு அரசியல் பண்ணும் அரசியல்வியாதியின் தனித்த குரல் என விளக்கம் கொடுத்திருக்கிறது. 

இந்த ஊரில் எல்லாம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசும், அரசு சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என மக்களும் இணைந்து செயல்பட.. நம்ம ஊரில் அரசு சொல்வதை எதிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டி நிற்பதும், அவர்கள் செய்வதை எல்லாம் மக்களின் முன்னே தவறானதாகக் காட்டி ஜெயிப்பதுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது... மக்களின் பாதுகாப்பு குறித்து அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை... அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ வேண்டும் எவன் செத்தால் என்ன... நம்மைப் பொறுத்தவரை தலைவரே சொல்லிட்டாரு... பின்ன என்ன எனச் சாவை நோக்கிப் போகிறோம்... இல்லைன்னா கொரோனாதேவிகளை உருவாக்கி ஊர்வலம் போவோம்... நாம் எப்போது சிந்திப்பது..? எப்போது திருந்துவது...?

இன்று ஒரு சகோதரர் தன் தந்தைக்கு சாதாரண ஜலதோஷம் பிடித்திருப்பதாகவும் அதற்காக அவரைக் கடிந்து கொண்டதாகவும் சொல்லி, அப்படிக் கடிந்து கொண்டதும் இப்ப என்ன கம்மாயிலதான் குளிச்சேன்... அதெல்லாம் சரியாயிரும் எனக் கோபப்பட்டதுடன் அவருடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறாராம்... இன்னும் வருத்தமாய் சில விஷயங்களைச் சொன்னார்.. பெரியவர்கள் கேட்காமல் அடம் பிடித்தால் எப்படி.. தினம் தினம் ஊரில் என்னாகுமோ என்ற அதிகாலை ஐந்து மணிக்கெலாம் எழுந்து கவலையுடன் வேலைக்கும் போய், அவன் சொல்லும் எல்லாத்தையும் சாப்பிட்டோமோ இல்லையோ செய்து முடித்து, அறைக்குத் திரும்பி, ஊருக்குப் பேசி, சமையல் பண்ணிச் சாப்பிட்டுப் பனிரெண்டு மணிக்குப் படுத்து ஊரில் இருக்கும் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், உறவுகள் நினைவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கிடக்கும் உள்ளங்களின் உளைச்சலை ஊரில் யாரும் அறிவதில்லை.

எழுத்தாளர் முத்துலட்சுமி ராகவனை அறிந்திருப்பீர்கள்... இவரெல்லாம் எழுத்து மிஷின் என்று சொல்லலாம்... தமிழகத்தில் வரும் பல குடும்ப நாவல்களில் தொடர்ந்து எழுதி, இல்லத்தரசிகளை இழுத்து வைத்திருந்தவர்... லஷ்மி, இந்துமதி, ரமணிச் சந்திரனைப் போல் குடும்ப உறவுகளை மையப்படுத்தி பெரும்பாலும் ஒரே மாதிரியான கருவாக இருந்தாலும் எழுதித் தள்ளிக் கொண்டே இருப்பார்... இவரின் நாவல்கள் விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது... கொரோனோ கொண்டு சென்றோரில் இவரும் ஒருவர்... நேற்று இவரின் மரணம் குறித்து எழுத்தாளர் லதா சரவணனின் பதிவு பார்த்ததும் என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டது. இவரெல்லாம் இப்படி இறப்பார் என்று யாருக்குத் தெரியும்... இதேபோல் சினிமாத்துறையில் தொடரும் இழப்புகள்... கடவுளே இது இத்தோடு போகட்டும்... இனியும் தொடர வேண்டாம்.

கி.ராவின் மரணம் தமிழ் இலக்கியத்துக்கு மிகப்பெரிய இழப்பு... இந்தக் கொரோனாக் காலம் மட்டும் இல்லை என்றால் தமிழகமே அவரின் சொந்த ஊரில்தான் இருந்திருக்கும்... இப்படியான ஒரு நேரத்தில் அவருக்கான வழியனுப்பல் அமைந்தது துரதிஷ்டமே என்றாலும் அரசு உரிய மரியாதையைக் கொடுத்ததில் ஆத்ம திருப்தி.

அரசைப் பிடிக்கிறதோ இல்லையோ, அவர்கள் சொல்வதைக் கேட்டு கொரோனா பிடிக்காமல் உங்கள் உயிரைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்... எகத்தாளமாய் அவன் சொல்றான் இவன் சொல்றான்னு இறங்கி விளையாடாதீர்கள்... உங்களின் இழப்புக்குப் பின் அரசியல்வாதி குடும்பத்தைப் பார்க்க வரமாட்டான்... அப்பா, அம்மாவை இழந்த சிறுகுழந்தைகளைப் பற்றிய செய்திகளெல்லாம் மனதை அறுக்கிறது... அப்படியான வாழ்வை நம்பி இருப்போருக்கு கொடுத்து விடாதீர்கள்... கட்டுப்பாடுகளை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். கொரோனா கட்டுக்குள் வரும்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரப்போகும் இரு வாரங்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்கிறார்கள்... குழப்பமும் அச்சமும் அதிகரிக்கிறது...

ஸ்ரீராம். சொன்னது…

இப்போதைய சூழ்நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை குமார்.    மனசு ரொம்ப வலிக்கிறது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இப்போதைய சூழல் மிகமிக மன உளைச்சலைத் தரும் சூழல் குமார். என்ன சொல்ல என்று தெரியவில்லை. எல்லோரும் பாதுகாப்போடு இருப்பது நல்லது.

துளசிதரன்

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் பார்க்கும் மக்கள் இங்கே அதிகம் தான் குமார். உங்களுடைய ஆதங்கம் மிகச் சரி. நானும் தலைநகர் தில்லியிலும் தற்போது தமிழகத்திலும் இருக்கும் நிலையைப் பார்த்து வருகிறேன். இரண்டு இடங்களிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறது. கண்ணுக்குத் தெரியாத எதிரியான தீநுண்மியிடம் போராடுவதற்கான தைரியத்தை, கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளான அரசியல்வியாதிகள் நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். நம் மக்களுக்கும் எவ்வளவு சொன்னாலும் புரியவில்லை. என்னை ஒன்றும் செய்யாது இந்தத் தீநுண்மி என அசட்டு தைரியத்தில் அலைகிறார்கள்.

எனக்குத் தெரிந்த பல நண்பர்களை, சக உழைப்பாளிகளை, உறவினர்களை இழந்து கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு நாளும், தில்லியிலிருந்து வரும் தகவல்கள் மன வேதனையை அதிகரிக்கச் செய்கிறது. அதிலும் வயது வித்தியாசம் இல்லாமல் இறப்பு - 30 வயது இளைஞர் - பணியில் சேர்ந்து 6 வருடங்கள் தான் ஆகிறது, மனைவி, இரண்டு வயது குழந்தையை விட்டு இறந்து விட்டார். இனி அவர்களது எதிர்காலம்? ஆனால் இன்னமும், தீநுண்மி எங்களை ஒன்றும் செய்யாது எனச் சுற்றி வரும் சிலரை பார்க்கும்போது கோபம் தான் வருகிறது.