மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 23 மார்ச், 2021

மனசின் பக்கம் : கல்கோனா இணைய இதழ் ஒரு பார்வை

'கல்கோனா' இதழை கருணாகரன் அண்ணன் மின்னஞ்சலில் அனுப்பிக் கொடுப்பார். வாசித்து விட்டு எதுவும்  எழுதுவதில்லை... இந்த இதழ் வாசித்தபின் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பவரின் இதழைப் படித்தது குறித்துப் பகிர்ந்து கொள்ளுவதுதான் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் அவர் அனுப்புவதற்கு நாம் செய்யும் மரியாதை எனத் தோன்றியது.


ஆரம்பம் முதலே 'கல்கோனா' இதழ் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. மிக அதிகமான செய்திகளைச் சேர்ப்பதில்லை... நறுக்குத் தெரித்தாற்போல் நாலைந்து கட்டுரைகள் அதுவும் தொடராய் வரும் கட்டுரைகளே அதிகம்... எழுபத்தெட்டுப் பக்கத்துக்குள் ஏகத்துக்கும் செய்திகளை நிரப்பி வைக்காமல் அழகான படைப்புக்களைக் கொடுப்பது கல்கோனாவின் சிறப்பு.

தனுஜா ஜெயராமன் அவர்கள் கல்கோனாவின் ஆஸ்தான எழுத்தாளர் என்று சொல்லலாம்... தொடர்ச்சியாய் ஏதாவது ஒன்று எழுதி வருகிறார். முகநூலில் நகைச்சுவையில் போட்டுத் தாக்கும் இவர், இந்த இதழில் 'பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவா..?' என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.. செல்வி சங்கர், சிரிப்பானந்தா, லலிதா போன்றோரிடம் இது குறித்துக் கேட்டுத் தன் கட்டுரையை எழுதியிருக்கிறார்... சிறப்பான கட்டுரை... பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்தான்... ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் அதிர்ந்து சிரிக்காதே என அடக்கி வைக்கப்படுவதே அவர்கள் தங்களின் சிரிப்பை அடக்கி வாழ வைத்துவிடுகிறது. நாலு பெண்கள் கூடுமிடத்தில் நின்று பாருங்கள்... அவர்களின் நகைச்சுவையையும் சிரிப்பையும்... உண்மையில் அருமையான கட்டுரை.

ஆன்டனி ரோஸலின் அவர்கள் தன்னுடைய 'வர்லாம் வர்லாம் வா' தொடரில் 'மாதவிடாய்' என்னும் குறும்படத்தை எடுத்த இயக்குநர் கீதா இளங்கோவனிடம் மாதவிடாய் படமெடுத்தது குறித்து... அதைத் தமிழகம் எங்கும் கொண்டு சென்றது குறித்து... அது மாணவர்களிடம் ஏற்படுத்திய அலை குறித்து மிக விரிவாகக் கேட்டுப் பகிர்ந்திருக்கிறார். ஒரு கல்லூரி மாணவன் இதையெல்லாம் எங்க அம்மாவோ, அக்காவோ என்னிடம் சொன்னதில்லை எனக் குற்ற உணர்வுடன் பேசியது, உயரதிகாரியான ஒரு பெண் அலுவலகத்தில் முக்கிய விவாதத்தில் இருந்தபோது ஏற்பட்ட மாதவிலக்கிற்கு நாப்கின் கைவசம் இல்லாததால் எழுந்து போனால் கறை வெளியில் தெரிந்து விடுமோ என நினைத்து, பயந்து ஒருமணி நேரத்துக்கு மேல் தன் இருக்கையை விட்டு எழாமல் அமர்ந்திருந்தது என நிறைய விஷயங்களை நிறைவாகச் சொல்லியிருக்கிறார் கீதா. நிறைவான கட்டுரை.

கமலி ஆனந்தின் சிரிப்பு என்னும் கவிதை... இவரின் கட்டுரைகளை முகநூலில் தொடர்ந்து வாசிப்பவன் என்பதால் இவரின் எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும்... எந்த ஒரு விசயத்தையும் மிக விரிவாக, அப்படியே அந்த எழுத்துக்குள் நம்மை ஈர்த்துக் கொள்ளும் விதமாக எழுதுவதில் கில்லாடி இவர்... அப்படிப்பட்டவரின் கவிதையும் மிகச் சிறப்பு.

வழக்கறிஞர் பூமதி என்.கருணாநிதி அவர்களின் 'கொங்கே முழங்கு' என்னும் தொடரில் 'பொம்பொறப்பு' என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். சும்மாவே வட்டார வழக்கு கதைகள், கட்டுரைகள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம்... இவர் எழுதும் வட்டார வழக்கு வாசிங்கும் போதே ரசிக்க வைத்து ஈர்த்துக் கொள்கிறது. கொங்குப் பேச்சு வழக்கில் சரளமான எழுத்து நடை... ரசித்து வாசிக்க வைக்கும் தொடர்... பல விஷயங்களைப் பேசுகிறார்... சிறப்பு.

கருணாகரன் அவர்கள் எழுதியிருக்கும் இந்தியாவின் 'தாலி' பன்கள்.... கணவனின் இறப்புக்குப் பின்னர் நிகழ்த்தப்படும் பெண்ணை விதவையாக்கும் சடங்கை பற்றியடது...  ஆரம்பம் முதல் சினிமாவில் வரும் காட்சிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லி சாடியிருக்கிறார்... உண்மைதானே... தாலியும் மெட்டியும்தானே கணவனால் வருவது... பூ, பொட்டு, உடைகள் எல்லாம் பிறந்தது முதல் அந்தப் பெண் பயன்படுத்துவதுதானே... இந்தக் கேடு கெட்ட சடங்கை எப்போது விட்டொழிப்பார்கள்... கிராமங்களில் இந்த மாற்றும் இன்னும் வரவில்லை என்றாலும் நகரங்களில் இப்போது சிலர் மாறியிருக்கிறார்கள்... மாற்றம் நல்லதே என்றாலும் இந்தச் சமூகத்தின் பார்வை வேறு விதமாகத்தானே இருக்கும்... இருந்து விட்டுப் போகட்டுமே... இன்று சில பெண்கள் போடும் விதை விருட்சமாக காலம் வரலாமலா போய்விடும்... இந்த நிகழ்வு முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் செயல்தான் என்பதை ஆணியடித்தாற்போல் சொல்லியிருக்கிறார். மிகவும் அவசியமான கட்டுரை இது.

ஷாஜகான் ஷேக் முஹமது அவர்கள் எழுதும் 'திரையும் இசையும்' தொடரில் மறக்க முடியாத மருதகாசி என கவிஞர் மருதகாசி குறித்து எழுதியிருக்கிறார். நமக்கு வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்களைக் கூட கண்ணதாசன் எழுதியதாய் காலம் காட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்... அப்படி காட்டும் பாடல்களில் மருதகாசியின் பாடலும் இருக்கு என்பதையும்... எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அவர் எழுதிய பாடல்கள்... அவர் பாடல்களின் வரிகள், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு மீண்டும் ஊருக்குப் போய் விவசாயம் பார்த்தது... பின்னர் மீண்டும் வந்தது, உடுமலை நாராயணகவி அவருக்கு உதவியது என விரிவாகப் பேசியிருக்கிறார். முதல்வன் படத்தில் வைரமுத்து எழுதிய 'உப்புக்கருவாடு' பாடலின் கதையையும் மருதகாசி எழுதிய 'வாராய் நீ வாராய்' பாடலின் கதையையும் இடைவேளைக்கு முன் பாடல் வைக்கலாமா என்பதற்காகச் சொல்லியிருக்கிறார். சிறப்பான கட்டுரை.

பகுத்தறிவு அண்ணாத்துரை அவர்கள் எழுதும் 80 கிட்ஸில் 'பரிட்சைக்கு நேரமாச்சு' என்ற தலைப்பில் பள்ளிக்கூடத்தில் நாம் எப்படி இருந்தோம்... மார்க் போட்ட சிலேட்டை எப்படிப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்த்தோம்... நல்ல மார்க் வாங்கியபோது ஆசிரியை கலர் சாக்பீஸால் கன்னத்தில் இழுக்கும் போது எப்படிச் சிறகடித்தோம்... நல்ல மார்க் வாங்கிவன் எப்படி வீட்டுக்குப் போவான்... முட்டை வாங்கியவன் எப்படி வீட்டுக்குப் போவான் என நம்மை ஆரம்பப் பள்ளிக் கூடத்துக் காலத்துக்கு கொண்டு சென்று விட்டார். சிறப்பு.

பால கணேஷ் அண்ணாவின் 'சிகரம் தொட்ட சினிமாக்கள்' தொடரில் எம்.ஜி.ஆரின் 'தாய் சொல்லைத் தட்டாதே' பற்றி, எம்.ஜி.ஆருக்கும் தேவருக்குமான உறவு... அந்த உறவில் வந்த பிரிவு... அதன் பின் தேவரின் தொடர் தோல்வி, எம்.ஜி.ஆருக்கு காலில் விபத்து, மீண்டும் இருவரும் இணைதல் என விரிவாகப் பேசியிருக்கிறார். இங்கே பாலகணேஷ்... முகநூலில் கணேஷ்பாலா... அண்ணன் வலைப்பூவில் எழுதிய போதிலிருந்து அவரின் எழுத்தை தொடர்ந்து வாசிப்பதால், அவர் எதை எழுதினாலும் அதில் சிரிப்புக்குத்தான் முதலிடம் இருக்கும் என்பதால் நகைச்சுவை இல்லாமல் இப்படி ஒரு கட்டுரையை அவர் எழுதுவதைப் பார்த்து  இவர் எப்படி ரெண்டு வார்த்தை கூட சிரிக்க வைக்காமல் எழுதியிருக்கிறார் என்ற ஆச்சர்யமே அவரின் கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. நாம் அறியாத பல செய்திகளை இந்தத் தொடரில் தந்து கொண்டிருக்கிறார்... அறிந்து கொள்ள வேண்டிய தகவலைத் தாங்கி வரும் தொடர்... அருமை.

நந்து சுந்து அவர்களின் 'தொந்திவர்மன் உலா' சிரித்திரத் தொடர்...  நகைச்சுவைக்குப் பஞ்சம் வைக்காதவர் ஒரு சிரித்திரத் தொடர் எழுதினால் எப்படியிருக்கும்... ஆரம்பம் முதல் இறுதிவரை நகையும் சுவையும்தான்... நாட்டுப் பேரு அதிரசபுரி, இளவரசி பேரு சிரியாமணி என அடித்து ஆடியிருக்கிறார்... சிரிக்க ஒரு கதை...

வழக்கம்போல் நகைச்சுவைகளும் அதற்கான படங்களும் அருமை.

இது மார்ச்-8, பெண்கள் தினத்துக்காக மலர்ந்த இதழ் என்பதால் பெண்கள் பற்றிய கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

சினிமா சம்பந்தமான இரண்டு கட்டுரைகள் தொடராய் வருவதால்... அதுவே அதிக பக்கங்களை எடுத்துக் கொண்டதாய் தோன்றுகிறது. இரண்டு வேறு வேறு செய்திகளைப் பற்றிப் பேசினாலும் சினிமா என்னும் களத்துக்குள்தானே நிற்கின்றன.  மற்றபடி ஒவ்வொரு மாதமும் இதழ் மெருகேறிக் கொண்டே இருக்கிறது.

வாழ்த்துகள் கல்கோனா இதழ் குழு & கருணாகரன் அண்ணா...

******

மரப்பாலம் , கறுப்பர் நகரம் போன்ற சிறப்பான நாவல்களை எழுதியவரும் வர இருக்கும் 'சட்டைக்காரி' நாவலின் ஆசிரியரும் ஒவ்வொரு கதையிலும் தனது வாழ்விடமான வடசென்னையின் வரலாற்றைச் சொல்லி வருபவருமான அன்பின் அண்ணன் கரன்கார்க்கி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள் குமார்.

கல்கோனா - எனக்கும் சில இதழ்கள் வரை வந்து கொண்டிருந்தது - வேறு நண்பரிடமிருந்து.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை குமார்...

பெண்கள் முன்னேற்றம் மிகவும் முக்கியம்... இன்னமும் மேம்பட வேண்டும்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எனது வாழ்த்துகளும்

ஸ்ரீராம். சொன்னது…

சிறப்பு.