மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 மார்ச், 2021

மனசு பேசுகிறது : எழுத்தால் இணைந்த உறவு

ழுத்தாளர் கரன்கார்க்கி....
வடசென்னையின் முந்தைய தலைமுறை மனிதர்களின் வாழ்க்கையை எழுதும் ஒரு சிறந்த எழுத்தாளர்.


எதிர்முனையில் பேசுபவர் யாராக இருந்தாலும் பேசும் போது நேசத்துடன் பேசும் மனிதர் என்பதை முகமறியாத என்னுடன் பேசும் போது உணர்ந்திருக்கிறேன்.
எழுத்துதான் எங்களுக்குள் ஒரு நட்புப் பாலத்தைப் போட்டது என்று சொல்ல வேண்டும். இரா.முருகவேள் அவர்களின் 'முகிலினி'யுடன் கரன்கார்க்கியின் 'மரப்பாலம்' நாவலையும் கொடுத்த நெருடா, இரண்டும் ரொம்ப நல்லா இருக்கும் படிங்க என்று சொன்னார்.
மரப்பாலம் வாசித்த பின்னர் இவ்வளவு அருமையாக ஒரு போரையும் அதன் பின்னணியையும் எழுத முடியுமா என வியந்து போனேன். அது குறித்து காற்றுவெளி மின்னிதழில் எழுதியதை முகநூலில் பகிர்ந்தபோது 'நல்லா எழுதியிருக்கீங்க... நன்றி' என்று சொல்லியிருந்தார்... அத்துடன் முடிந்தது... அதன்பின் தொடர்பு எல்லாம் இல்லை. இதில் தொடர என்ன இருக்கிறது...? நாம் வாசித்த புத்தகம் குறித்து எழுதும் போது எப்போதேனும் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் வந்து நன்றி சொல்லிச் செல்வது நிகழும்... அப்படி ஒரு நிகழ்வாகவே அதை நினைத்து நானும் மறந்து போனேன்.
மீண்டும் நெருடாவின் மூலமாக கரன் கார்க்கியின் 'கறுப்பர் நகரம்' கைக்கு வந்து சேர்ந்தது. மரப்பாலத்தில் இரண்டாம் உலகப்போரின் போது தாய்லாந்தின் சயாம் முதல் பர்மா வரை பாலம் கட்ட மக்களை வதைத்ததை வைத்து எழுதியிருந்ததைப் போல், சிறையில் இருந்து வரும் ஒரு கிழவனின் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தை வைத்து கறுப்பர் நகரத்தை எழுதியிருந்தார். அதில் அந்தக் கிழவனின் காதல் வாழ்க்கையை மிக அழகாக எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தை வாசித்தபின் அது குறித்து புத்தகம் பேசுதுவில் எழுதியபோது மிகச் சிறப்பு எனக் கருத்திட்டவர் அதன் பின் என்னுடன் முகநூல் அரட்டையில் நீண்ட நேரம் கறுப்பர் நகரம் குறித்து உரையாடினார்.
இந்த இரண்டு கட்டுரைகளும்தான் அவரை நித்யாகுமாருடன் பேச வேண்டும் என நினைக்க வைத்தது போலும்... அதன் பின்பு நம்பரை அனுப்பினார்... போன் செய்து பேசியபோது என்னமோ நீண்ட நாள் பழகியவரைப் போல் மிக நெருக்கமாகப் பேசினார். முதல் முறை பேசியதே மிக நீண்டதொரு உரையாடலாய் அமைந்தது... ஒரு எழுத்தாளன் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் நமக்கு மிக நெருக்கமானவரைப் போல பேசினார். இதே போன்றதொரு பேச்சை திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் எங்கள் அமீரக எழுத்தாளர்கள் வாசிப்பாளர்கள் குழுமத்தின் ஜூம் வழிக் கலந்தாய்வில் பேசியபின் அது குறித்து எழுதியிருந்தபோது அவர் பேச அழைக்க, அவருடன் பேசியபோது அனுபவித்திருக்கிறேன்.
அதன் பின்னான நாட்களில் எப்போதாவது கரன்கார்க்கி அண்ணாவுடன் முகநூல் உள்பெட்டி வழி சின்னச் சின்ன உரையாடல்களுடன் முடித்துக் கொள்வோம். ஒருநாள் நித்யா உங்ககிட்ட பேசணும் என்றார். அன்றே அழைத்தபோது என்னோட அடுத்த நாவலை எழுதி முடிச்சிட்டேன்... முதல்ல நீங்க படிங்க... படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க... என் புத்தகங்கள் குறித்து உங்களோட விமர்சனப் பார்வை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால்தான் ஒரு வாசகனாய் நீங்கள் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன் என்றவர், வாசிக்க முடியுமா என்றும் கேட்டார்.
கரும்பு தின்னக் கூலியா... ஒரு பெரிய எழுத்தாளர் தான் எழுதிய கதையைச் சூடு ஆறுமுன் நம் முன்னே பரிமாறும் போது அதை ருசிக்கக் கசக்குமா என்ன... அச்சுக்குப் போகுமுன் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு என் நண்பர்கள் மூலமாக நிறையவே கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதாலும், எழுதியவர் வாசித்த பின் நான் என்னும் போது எப்போது யார் கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கி மிகுந்த ஆவலுடன் வாசிப்பேன் என்பதாலும் அனுப்புங்கண்ணா என்று சொன்னேன். மறுநிமிடமே என் மின்னஞ்சலுக்கு சட்டைக்காரியை அனுப்பி வைத்தார். எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 350 பக்கங்களில் அவர் எழுதி, திருத்தாத மொத்தக் கதையும் வந்திருந்தது.
வாசிக்க ஆரம்பிக்கும் போது இடையிடையே போனில் அது குறித்தான சின்னச் சின்ன உரையாடல்கள்... இயேசுவும் லிண்டாவும் என்னை இழுத்துக் கொள்ள, அவர்களுடன் பயணித்து விரைவாக வாசித்து முடித்ததேன். அதன்பின் அது குறித்து அவருடன் நிறைய, நிறைவாய் ஒரு நீண்டதொரு உரையாடல் நிகழ்ந்தது.
நாட்கள் கடந்த நிலையில் ஒருநாள் நான் எழுதியிருந்த ஒரு கட்டுரையை வாசித்து விட்டு உடனே கூப்பிட்டுப் பாராட்டியதுடன் இன்னும் நிறைய எழுதுங்க... அங்கிருக்கும் பலநாட்டு மக்களின் வாழ்க்கையை எழுதுங்க... நிறையப் படிங்க என்றார். இப்படியாகத்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. ஒரு எழுதாளனுக்கும் வாசகனுக்குமான நட்பாய்த்தான் அது இருந்தது. எப்போது அழைத்தாலும் 'நித்யா' என்றபடிதான் ஆரம்பிப்பார்.
சட்டைக்காரி கொடுத்த நெருக்கத்தின் பின் எப்போதேனும் பேசுவோம்... எதிர்சேவைக்கு விருது கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்தார்... இன்னும் எழுதுங்க... நிறைய எழுதுங்க... அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கையை எழுதுங்க என்று மீண்டும் சொன்னார்.
திடீரென ஒரு நாள் அழைத்து சட்டைக்காரி நாவல் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நீலம் பதிப்பக வெளியீடாக வருது நித்யா... அதுக்கு முன்னாடி அதைப்பற்றி எழுதணும்... நீங்கதான் வாசிச்சிருக்கீங்க... அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுங்க என்றார்... சரிண்ணா எழுதலாம் என்று சொல்லிவிட்டேன். கிட்டத்தட்ட ஆறு மாசம் முன்னாடி வாசிச்சது என்பதால் மீண்டும் ஒரு முறை சட்டைக்காரியின் முக்கியமான பக்கங்களை மட்டும் மறுவாசிப்புச் செய்தேன்.... மறுநாளே கூப்பிட்டு ஆஹா ஓகோவெல்லாம் வேண்டாம் நித்யா... என்ன தப்பிருந்தாலும் தயங்காமச் சொல்லுங்க... அதுதான் வேண்டும் என்றார். தப்புச் சொல்லும் அளவுக்கு அதில் எதுவும் இல்லை.... முந்தைய தலைமுறை வாழ்க்கையை தன் கதாபாத்திரங்களின் மூலம் வாழ வைத்திருந்தார். நாம் பார்க்காத சென்னையை கண்முன்னே காட்டியிருந்தார். எனக்குள் அந்தக் கதை என்ன ஏற்படுத்தியதோ அதையே எழுதினேன்.
எழுதி முடித்து அவருக்கு அனுப்பியபோது மிகவும் மகிழ்ந்தார்... நாவலை உள்வாங்கிச் சிறப்பா எழுதியிருக்கீங்க என்றார். முகநூலில் பகிர வேண்டாம் என நினைத்துச் சகோதரர் சிவமணியிடன் கேட்டதும் தங்களில் தமிழ்டாக்ஸ் இணையதளத்தில் பகிரலாம் என்றார். அங்கு பகிர்ந்தோம்... அது குறித்து அவருடன் மீண்டும் ஒரு உரையாடலுக்குப் போனபோதுதான் எழுத்தாளன் வாசகன் என்ற எல்லை எங்களுக்குள் உடைந்து ஒரு சகோதர நேசம் உண்டானது. இப்போதெல்லாம் போனை எடுத்ததும் நித்யா ரொம்ப மகிழ்ச்சி என்று குதூகலமாய்த்தான் ஆரம்பிக்கிறார்.
வேரும் விழுதுகளும் நாவல் வெளியான விபரங்களை நான் பகிர்ந்தபோது அவரும் தன் பக்கத்தில் இரண்டு மூன்று முறை எழுதினார்... பகிர்ந்தார்... எனக்கு மகிழ்வாய் இருந்தது. ஒரு பிரபல எழுத்தாளர் என்னைப் போல் ஒரு சாதாரணமானவனின் நாவலைத் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அவசியமே இல்லை... அவரின் எழுத்து என்னை ஈர்த்ததால் அது குறித்து எழுதினேன். அதன் காரணமாகவே அவர் என்னுடன் பேசினார்... என்னை எழுதச் சொன்னார்... அவரின் நாவல் பிரிண்டுக்குப் போகும் முன் என் கைக்குக் கொடுத்தார்... புத்தகம் வெளிவரும் முன்னரே அதற்கு விமர்சனமும் எழுத வைத்தார். அவரைக் கொண்டாடும் என்னை, என் புத்தகங்களைக் அவரும் கொண்டாடினார்.... நெகிழ்ந்து போனேன்.
நேற்று பேசும் போது யூசுப் அண்ணன் கூட கேட்டார்.... கரன்கார்க்கி உங்க கூட ரொம்ப நெருக்கமாயிட்டார் போல... உங்க புத்தகத்தைப் பற்றியெல்லாம் எழுதியிருந்தார் என்றார். உண்மைதான்... முகம் பார்க்காவிட்டாலும் நாங்கள் அகம் பார்த்து நெருங்கி விட்டோம் என்பதை அவரிடம் சொன்னபோது ரொம்ப மகிழ்ச்சி நித்யா, நட்பைத் தொடருங்கள் என்றார்.
நேற்று அண்ணனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லப் பேசியபோது 'தம்பி' என்றார். நீ என் தம்பிய்யா... அம்புட்டுத்தான்... நீ நல்லாயிரு... நிறைய எழுது... நிறைய வாசி... விருதுக்கு வாழ்த்துக்கள்... அடுத்து சிறப்பான ஒரு நாவல் எழுது... அதுக்கு நான்தான் முன்னுரை எழுதுவேன்... என்னால் முடிந்தளவுக்கு உன் எழுத்தைக் கொண்டு போய்ச் சேர்ப்பேன். நிறைய எழுது... அங்க உள்ள வாழ்க்கையை எழுது... தன் பிள்ளை பெரியாளா வரணும்ன்னு அம்மாதான் நினைப்பா... என்னை அப்படி நினைச்சிக்கோ என்றெல்லாம் சொல்லி, அவருக்கு வாழ்த்துச் சொல்லப் போன எனக்கு வாழ்த்துச் சொல்லி, ஊருக்கு வரும்போது நாம சந்திக்கிறோம் என்றார்.
பரிவை... குமார்... இதெல்லாம் வேண்டாம்... எனக்கு நீ எப்பவும் நித்யாதான் தம்பி... அப்படியே கூப்பிடுறேன்... இந்த அண்ணனோட உறவு எப்பவும் உன்னுடன் தொடரும்... நித்யாவோட மனைவி (அவங்கதான் நித்யா) குழந்தைகளை ரொம்பக் கேட்டேன்னு சொல்லு... ஊருக்கு வந்ததும் போன் பண்ணு... நானே நேரில் வாரேன் என்றெல்லாம் நிறைய மன நிறைவாய்ப் பேசினார்.
எழுத்து மட்டுமே எனக்கு இப்படியான உறவுகளைக் கொடுத்திருக்கிறது. அது இங்கும் ஊரிலும் நிறையவே கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. உண்மையில் அவருடன் பேசிய அந்தப் பதினைந்து நிமிடம் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். ஒரு எழுத்தாளனாக இல்லாமல் சகோதரனாகவே அவர் பேசியது இரட்டிப்பு மகிழ்ச்சி.
அண்ணா... நீங்க இன்னும் நிறையக் கதைகளில் வடசென்னை மக்களை வாழ வைக்க வேண்டும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...! நட்பின் சிறப்பு...

ஸ்ரீராம். சொன்னது…

நட்புகள் தொடரட்டும்.  வாழ்த்துகள் குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நட்பு இனிமையானது. தொடரட்டும் நட்புப் பாலங்கள். வாழ்த்துகள் குமார்.