மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 மார்ச், 2021

மனசு பேசுகிறது : அகவை 77-ல் ஐயா

 ன்று ஐயாவுக்கு அகவை 77...

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாய் அவரின் பிள்ளைகளில் ஒருவனாய் வாழும் வாய்ப்பு... தமிழ்த்துறையில் பயின்ற நண்பனின் மூலமாகவே ஐயாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. 


'நீங்களும் தம்பி கூட வீட்டுக்கு வாங்கய்யா' என்ற வார்த்தைதான் முதல் சந்திப்பில் அவரிடம் இருந்து வந்தது. அந்த வாரத்தில் அவர்கள் இருந்த தேவி பவனத்துக்குள் சென்ற போது தோளோடு அணைத்துக் கொண்டு 'வாங்க தம்பி' என்றார்.  அதன்பின் கூட்டிச் சென்ற நண்பனைவிட நான் அந்த வீட்டின் கூடுதல் பாசத்தைப் பருகியவனாகிப் போனேன்.

எதிர்சேவை புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுத்த போது முதல் நாள் எப்படி என்னைத் தோளோடு அணைத்தாரோ அதே போன்றதொரு அணைப்பு... அங்கிருந்த நண்பர்களிடம் அறிமுகம் செய்யும் போது என் பிள்ளை என்றொரு பெருமிதம்... புத்தகத்தை விரித்துப் பார்த்து சமர்ப்பணம் உங்க ஐயாவுக்குப் போட்டியிருக்கலாம் என்றார் சிரிக்காமல். அதில் நான் போட்டிருந்தது அவர் பெயர்தான்... உடனிருந்தவர்களிடம்  அதைக் காண்பித்து 'குமார் நல்ல எழுத்தாளனாய் வரவேண்டியது... அவரோட சூழல் தடுத்துவிட்டது' என்றார்.

ஐயா வீட்டில் மாலை நேரம், விடுமுறை தினம் என எல்லா நாளும் எங்களின் பெருங்கூட்டம் கூடிக் கும்மாளமிடும்... விடுமுறை தினங்களில் அங்குதான் சாப்பாடெல்லாம்... புத்தக வாசிப்பை... எழுத்தின் மீதான ஆர்வத்தை... எங்களுக்குள் செலுத்தியது ஐயாதான்... வீடெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களில் எதையும் எடுத்துப் படிக்கலாம்... ஐயாவும் சில புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். மாலை நேரங்களில் எங்களுடன் அமர்ந்து நிறையப் பேசுவார்...  நாங்கள் கிறுக்கியதை வாசித்து அழகாய் திருத்திக் கொடுப்பார்.  

அவர் எனக்குக் கொடுத்த ஊக்கமே இன்னும் தொடர்ந்து எழுத வைக்கிறது. அசோக் அண்ணன் எழுதியிருப்பது போல, கல்லூரியில் பலருக்கு கட்டணங்கள் செலுத்தியவர் அவர்... பலரை எழுத்தாளர்களாக்கியவர் அவர்... சைக்கிளை உருட்டிக் கொண்டு எங்களுடன் பேசியபடி வந்து நாராயணவிலாஸில் காபி, வடை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தவர் அவர்... அவரைப் பற்றிய கதைகளை நாராயணவிலாஸூம் கண்ணா பேப்பர் ஸ்டோரும் லேனா அய்யாவின் பேனாக்கடையும் நிறையவே சொல்லும்.

ஐயா பெரும்பாலும் பேனாவை யாருக்கும் கொடுக்கமாட்டார்... அவர் மை ஊற்றி எழுதும் பெரிய அளவிலான பேனாவை எனக்குக் கொடுத்தார். அது என்னிடம் இப்போதும் பத்திரமாக இருக்கிறது. எங்கள் வீடு குடிபோன போது அம்மா வந்து செல்ல, ஐயா வரவில்லை... வேலையாக இருப்பார் என்று நினைத்திருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் சென்ற நிலையில் தனது சைக்கிளில் வந்து இறங்கினார் சில புத்தகங்களுடன்.

அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகில் நானும் என் மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ரெண்டு நாளா உங்கம்மா ஒரே நச்சரிப்பு... குமார் வீட்டுக்குப் பொயிட்டு வாங்கன்னு... அம்மாவுக்கு தம்பி மேல ரொம்பப் பாசம் என்றார் என் மனைவியிடம். அது உண்மைதான்... இப்போதும் அதே நேசம் அம்மாவிடம்... இந்தமுறை பிறந்ததின வாழ்த்து முதல் வாரத்தில் மகளிடமிருந்து... முதல் நாள் மனைவியிடமிருந்து... அதே நாள் இரவில் அம்மா, ஐயா, மேகலாவிடமிருந்து கிடைத்தது... மிகவும் மகிழ்வான தருணம் அது.

காபி குடித்தபடி எங்களிடம் பேசிக் கொண்டிருந்தவர், நித்யாவிடம் நான் நிறையப் பேருக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதி மேடையில வாசிச்சிருக்கேன். ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சது உங்களுக்கு வாசிச்ச வாழ்த்துப்பாதான் என்றவர் எங்கள் திருமணத்தில் அவர் வாழ்த்துப்பா வாசித்ததற்குப் பின்னே நிகழ்ந்த நிகழ்வுகளைச் சொன்னார்.  வாசித்து முடித்து கீழே இறங்கினால் இலக்கிய மேகம் சீனிவாசன் வந்து என் காலைத் தொட்டு வணங்கி ஐயா வாழ்த்துப்பா ரொம்ப அருமையா இருக்கு... எல்லாருக்கும் எழுதினதைவிட குமாருக்கு எழுதியது ரொம்பச் சிறப்பா இருக்கு... குமார் மட்டும் ரொம்ப ஸ்பெஷலா? என்று கேட்டார். அதற்கு என் பிள்ளைகள் இருவருமே அருமையான பிள்ளைகள்... அதுதான் பாடலும் அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னேன் என்றார். இன்னும் அந்த வாழ்த்துப்பா பேப்பரை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொன்னார். இதைவிட எங்களுக்கு வேறென்ன சந்தோஷம் வேண்டும். எதிர்சேவையுடன் சென்ற போது அந்த வாழ்த்துப்பா நிகழ்வை கே.எம்.எஸ். ஐயாவின் மகன் மணி அண்ணனிடமும் பகிர்ந்து கொண்டார். 

நீண்ட நேரம் எங்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் போது  ஸ்ருதியிடம் என் பேத்திக்கு புத்தகங்கள் என பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட சில புத்தகங்களைக் கொடுக்க, விஷால் எனக்கு என்றதும் தன் சோல்னாப் பைக்குள் இருந்து ஒரு பால்பாயிண்ட் பேனாவை எடுத்துக் கொடுத்தார். எனக்குப் பின் ஐயாவின் பேனா வாங்கிக் கொள்ளும் பாக்கியம் என் மகனுக்கும் கிடைத்தது. 

இந்த முறை ஐயா வீட்டுக்குச் சென்ற போது பேரனுக்கும் தாத்தாவுக்கும் சின்னதாய் ஒரு போட்டி... அவருடன் உரிமையுடன் சண்டை போடும் அளவுக்கு வந்துவிட்டான்... அவரும் ஒரு தாத்தாவாய் மகிழ்ந்து விளையாடினார்.

படிக்கும் போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஐயா வீடுதான் என்பதால், சைக்கிளை எடுக்கும் போதே 'எங்க போகப்போறான்... அவுக ஐயா வீட்டுக்குப் பொயிட்டு வருவான்' என்று வீட்டில் சொல்வார்கள். அந்த உறவு... குடும்ப உறவாய் மகன், மருமகள், பேரன் பேத்தி எனத் தொடர்வதும் மகிழ்வே.

உள்நாக்குப் பிரச்சினைக்காக ஐயாதான் காரைக்குடி ஹோமியோபதி மருத்துவமனைக்கு வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை என்னை அழைத்துச் செல்வார். அப்போது காபி, டீ சாப்பிடக்கூடாது என்றதால் இன்று வரை காபி சாப்பிடக்கூடாதுல்ல குமார் என்றபடி சூடான பாலை என் முன்னே நீட்டுவார் அம்மா.

என் முதல் புத்தகத்துக்கு அவரிடம் வாழ்த்துரையாவது வாங்கிட வேண்டுமென நினைத்து முடியாத நிலையில் அவருக்கு மிகவும் பிடித்த கதையான 'வேரும் விழுதுகளுக்கும்' அணிந்துரையே கிடைத்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றுதான் நினைக்கிறேன்.

இன்று காலை வாழ்த்துச் சொல்வதற்காக அல்லாமல் ஆசி வாங்குவதற்காப் பேசும் போது நல விசாரிப்புகள், எப்போது வருவீர்கள் என்ற கேள்விக்குப் பின் தொலைதூர வாழ்த்துக்கு நன்றி என்றார். நன்றியெல்லாம் வேண்டாம் உங்க ஆசி மட்டும் போதும் என்றதும் அது எப்போதும் உண்டுல்ல என்றார். ஆம்... எனக்கு எப்போதும் அந்த வீட்டில் இருந்து ஆசி கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது... அது போதும் எனக்கு.

பேச்சின் ஊடே பக்கத்துலதான் இருக்காகன்னாலும் நான் நித்யாவையும் பிள்ளைகளையும் பார்த்து ரொம்ப நாளாச்சு... உங்கம்மா பாத்தேன்னு சொல்வாங்க என்றார். விஷாலையே அதிகம் விசாரித்தார். 

அடுத்து என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி அவரிடமிருந்து வந்ததில் மகிழ்ச்சி... எதுவும் எழுதலை என்று சொன்னதும் எழுதுங்க என்றார். 

எனது முதல் கவிதையை தாமரைக்கு அனுப்பி, அது பிரசுரமான புத்தகத்தைக் கல்லூரிக்குக் கொண்டு எங்க பேராசிரியர்களிடம்  குமார் எழுதிய கவிதை எனக் காண்பித்து மகிழ்ந்தவர், அதன் பின் தொடர்ந்து எழுதுங்கள் என வற்புறுத்தியவரும் அவரே. 

ஐயா வீடு இருக்கும் மின்வாரியச் சாலையிலேயே நாங்களும் இருப்பதால் ஊருக்குப் போகும் போது ஐயாவைச் சந்திப்பதும் வீட்டுக்குச் செல்வதும் அடிக்கடி நிகழும்.. அதுவும் ஒரு மகிழ்வே.

தமிழய்யாவாய்... பேராசிரியராய்... பேராசானாய்... ஐயாவாய்... எனக்குள் நிறைத்து அப்பாவாகிப் போன எனது பேராசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் ஆசி என்றும் எப்போதும் எங்கள் குடும்பத்துக்கு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்.

நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஐயா.

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வணங்குகிறோம்.  வாழ்த்துகிறோம்.  இது போன்ற உறவுகள் தெய்வம் தந்த வரம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்பான ஐயாவிற்கு வாழ்த்துகள் பல...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஐயாவிற்கு என் அன்பு வணக்கங்கள்