மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 மார்ச், 2021

வேரும் விழுதுகளும் : 'வாழ்ந்தேன்' - நந்தா

வேரும் விழுதுகளுக்குமான அடுத்த விமர்சனம் என் எழுத்தை நேசிக்கும் நந்தா அண்ணனிடம் இருந்து வந்திருக்கிறது. எதிர்சேவையைக் கொண்டாடியவருபவர்களில் இவரும் ஒருவர். எதிர்சேவைக்குத் தேனித் தமிழ்நாடு முற்போக்கு கலையிலக்கிய மேடையில் கிடைத்த விருதை, நேரில் சென்று பெற்றுக் கொண்டவரும் இவர்தான். எப்போதும் என் எழுத்தின் வளர்ச்சியில் மகிழ்பவர் என்பதால் அவரின் உள்ளார்ந்த விமர்சனப் பார்வை எனக்கு மிகவும் முக்கியமானது.

விமர்சனத்தின் இறுதியில் அவர் கேட்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலை அவரின் பதிவில் கொடுத்தேன். அதை இங்கும் பகிர்ந்திருக்கிறேன்.

நன்றி நந்தா அண்ணா.


ன்புள்ள நித்ய குமார்,

நலம் தானே
உங்களின் "வேரும் விழுதுகளும்" நாவல் படித்தேன். படித்தேன் என்பதை விடஅதில் வாழ்ந்தேன் என்று சொல்வது தான் பொருத்தம்.
பல இடங்களில் நாவலாசிரியர் நமக்கேத் தெரியாமல் நம்முடன் இருந்து நம் வாழ்வில் நடந்ததைக் கதையாக்கி உள்ளாரே என ஐயம் ஏற்படுகிறது.
பொருளாதார மயமாகிப் போன உலகில் உறவுகளும் படிப்படியாக வணிகமயமாகிப் போனதை அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை, கந்தசாமி ஐயா & காளியம்மாள் முதிய தம்பதிகளின், பிள்ளைப் பாசம், பேரக் குழந்தைகள் மீதுதான பாசம்.. அவர்களின் தனிமை, தன் காலம் முடிவதற்குள் அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டிய சொத்துகள்... இதன் மீதான மெல்லிய ஆற்றாமை கதை முழுக்க வந்தாலும்... காளியம்மாள் அவர்களின் எதிர்பாரா மரணத்திற்குப் பிறகு, மெல்லிய சோகம் பெருஞ்சோகமாக மாறி, எங்க அப்பா இறந்த பிறகு, அம்மாவை யார் பார்த்துக் கொள்வது என்ற பேச்சு வார்த்தை வந்த போது, நான் யாரையும் தொல்லைப்படுத்த விரும்பவில்லை... நான் தனியாவே இருந்துட்டுப் போறேன் என்று எங்க அம்மா சொன்ன நிலையில்... எங்கள் வீட்டில் வந்து மையம் கொண்டது கதை.
கதையை படித்து முடித்ததும் காசு, பணம் சொத்து என அண்ணன் தம்பிகளுக்குள் பிணக்குகள் இருந்தாலும், குடும்ப நலன் என்னும் நில வரும் போது எல்லாரும் ஒன்றாய் நிற்கிறார்கள்...
ஒவ்வொரு வீட்டிலும் குதர்க்கமாக பேசும் பெண்கள் உள்ளனர்...
கண்ணதாசன் போன்ற ரத்த சம்மந்தமில்லா உறவுகள்... நம்மை நம்பிக்கையுடன் வாழ உதவுகிறார்கள் என்றெல்லாம் உணர்ந்தேன்.
சிறு சிறு பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்....
1. ஆரம்பம் முதல் இறுதி வரை... கலந்துரையாடல் பாணியிலேயே உள்ளதை.
2. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே தொடர்ச்சியாக இல்லாமல்...காட்சிகளை மாற்றி மாற்றி அமைத்து... இறுதியில் இணைத்திருக்கலாம்
3. இறுதி நிகழ்வு செய்யும் நபரை மண்டையில் அடித்தது போன்று ஜாதி பெயர் சொல்லாமல் நாகரிகமான வார்த்தையை பயன் படுத்தி இருக்கலாம் .
4. பறை இசைக்க வருபவர்கள் வந்தவுடன் சரக்கடிக்க பணம் கேட்கிறார்கள் என்று சிறுமைப்படுத்தி இருக்க வேண்டாம். அப்படியா நடக்கிறது நடை முறையில்..?
5. ஆரம்பம் முதல் இறுதி வரை சோகமே என இருந்திருக்க வேண்டாம்.
மேலே கண்ட பிழைகளைத் தவிர்த்து.... அடுத்து ஒரு
அருமையான
இனிமையான காதல் கதைகள் / நகைச்சுவைக் கதைகள் எழுதி பரிகாரம் தேடிக் கொள்ளவும்.
வாழ்த்துகள் குமார்.
நன்றி ...

நூலைப் பெற.. திரு தசரதன் 98409 67484
கலக்கல் ட்ரீம்ஸ்
விலை : 250
அன்புடன்
நந்தகுமார்,
திருச்சி.
18/03/2021.
----------------
வரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் அவருக்குச் சொன்ன பதில்தான் கீழே... இதில் என் கதையில் எப்படிக் குற்றம் காணலாம் என்ற எண்ணம் துளிகூட இல்லை என்றும் சொல்லி விடுகிறேன். விமர்சனங்களே என்னை இன்னும் நன்றாக எழுத வைக்கும். இதில் கண்டிருக்கும் குறைகளை எல்லாம் அடுத்த புத்தகம் கொண்டு வரும் பட்சத்தில் கண்டிப்பாகத் திருத்திக் கொள்வேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

ன்பின் நந்தா அண்ணா... நாவலை வாசித்து உங்கள் மனதில்பட்டதை அப்படியே விமர்சனமாய் எழுதியதற்கு ரொம்ப நன்றி. நாவல் குறித்து சிறப்பான விமர்சனம் கிடைத்ததும் மகிழ்ச்சி. பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்தான் அந்த நேரத்தில் சில காரணங்களால் முழுவதுமாய் புத்தக வேலைக்குள் இறங்க முடியவில்லை. முடிந்தவரை தசரதன் சிறப்பாகவே செய்தார். வட்டார வழக்கு என்னும் போது அப்படித்தான் எழுத வேண்டியதும் இருக்கும் என்றாலும் பிழைகள் இருக்கும்தான்... இனிமேல் எழுதும் போது கண்டிப்பாக பிழைகள் இல்லாது எழுதலாம். 1. எனது கதைகள் பெரும்பாலும் கலந்துரையாடல் பாணியில் இருக்காது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எதிர்சேவையில் கூட பெரும்பாலும் கதைகளில் கதாபாத்திரங்கள் பேசுவதாய் எழுதியிருக்கமாட்டேன். இது நாவல் என்னும் போது கதாபாத்திரங்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்பதால் உரையாடல் பாணி... இது அயற்சியைக் கொடுக்கலாம் என்றாலும் இதுதான் சரியெனப்பட்டதால் அப்படியே எழுதியிருந்தேன். 2. கதைகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கலாம்... இது ஒரு குடும்பத்தின் கதை என்பதால் இப்படிப் பயணிப்பதுதான் நல்லது எனத் தோன்றியது. கதை சொல்வது போல் இருந்தால் மாற்றி மாற்றி அமைத்து இறுதியில் இணைத்திருக்கலாம். அப்படி ஒரு கதை முயற்சித்துப் பார்ப்போம். 3. கிராமங்களில் அப்படித்தான் அழைப்பார்கள்... இப்பவும் நான் பார்த்திருக்கிறேன்... முழுக்க முழுக்க கிராமத்து வழக்காய் வரும் கதையில் நகரத்தில் சொல்வது போல், நமக்கு நாமே சொல்லிக் கொள்வது போல் அவரை அழைப்பதாய் வைத்தால் அது கதையுடன் ஒட்டியே இருக்காது என்பது என் எண்ணம்... அதான் அப்படி மற்றபடி நான் எப்போதும் எங்கும் சாதியைப் பார்ப்பதும் இல்லை... அதைக் கீழ்மைப்படுத்துவதும் இல்லை. 4. நீங்கள் பார்க்கும் பறை இசைக் கலைஞர்களுக்கும் எங்கள் பகுதியில் நாங்கள் பார்த்து வளர்ந்த, பார்த்துக் கொண்டிருக்கும் தப்படிக்கும் கலைஞர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நீங்கள் மேடையில் பார்க்கும் கலைஞர்கள் எங்கள் பகுதியில் இருப்பவர்களை தங்களில் ஒருவராய் பார்ப்பதில்லை. இரண்டு வருடம் முன்னர் எங்கள் மாமாவின் இறப்பின் போது தப்படிக்க ஆட்கள் கொண்டு வருவதே பெரும்பாடாய் இருந்தது. அவர்கள் வந்ததும் கேட்டது சரக்குத்தான்... திருவிழா என்றாலும் சாவு என்றாலும் அவர்களுக்கு அதுதான் முதலில் வேண்டும்... உங்கள் பக்கம் நடக்காமல் இருக்கலாம்... எங்கள் பகுதியில் இப்பவும் அப்படித்தான் நடக்கிறது. எங்கள் ஊர்த் திருவிழாவில் கரகாட்டம் வைத்தபோது அவர்கள் உடை மாற்ற போட்டிருந்த கொட்டகை சரிவராது என்றதும் தம்பி வீட்டின் மாடியைப் பயன்படுத்திக்கச் சொல்லியிருந்தோம்.. அடுத்தநாள் நாங்கள் அங்கிருந்து அள்ளியது இருபது பாட்டில்கள்... அதுதான் கரகாட்டம் இப்போ கேவல ஆட்டமாக இருக்கிறது. சில விசயங்களைப் பொதுவில் பேசும் போது அப்படியில்லை என்று அடித்துச் சொல்லிவிடலாம்... அதை அருகிலிருந்து பார்த்தால்தான் உண்மை புரியும்... பார்த்தவையே கதையில்... 5. சோகம்... இதை ஏற்றுக் கொள்கிறேன்... பெரும்பாலும் எனது கதைகள் சோகத்துக்குள்தான் சிக்கிக் கொள்ளும் என்றாலும் நாவலில் கண்ணதாசன் பேசுவது, குடும்ப நிகழ்வுகள் என மகிழ்வான பக்கமும் இருந்தாலும் அடிக்கடி உணர்வுப்பூர்வமான பேச்சுகள் நிகழ்வதால் முழு நாவலும் சோகமாய் இருப்பது போல்தான் தெரியும். அடுத்து ஒரு நாவல் அல்ல இரண்டு நாவல்கள் காதல் கதையுடன் இருக்கு... தசரதன் மனசு வைத்தால் விரைவில் மற்றொரு நாவலுடன் வருவோம். மேலே சொன்னவைகள் உங்களுக்கான விளக்கம்தானே தவிர, உங்கள் கருத்துக்கான எதிர்வாதம் அல்ல... சிறப்பான விமர்சனம் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி அண்ணா... உங்கள் அன்பில் மகிழ்ந்தேன். நன்றி.
நேசத்துடன், பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவற்றை எல்லாம் சொல்லி அதற்கும் தகுந்த பதில்கள் அளித்து... அருமை குமார்...

"காணாதான் காட்டுவான்" எனும் குறளும், அதற்கு எழுதிய பகாவழி பதிவும் ஞாபகம் வந்து போனது...

வாழ்த்துகள்... பாராட்டுகள்...

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ