மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 மார்ச், 2021

மனசு பேசுகிறது : தேர்தல் தொல்லைகளும் கதைகளும்

ந்தத் தேர்தல் வந்தாலும் வந்துச்சு முகநூல்ல அடிச்சி ஆடுற நண்பர்கள் போடுற பதிவுகளையே பார்க்க... இல்லையில்லை சகிச்சிக்க முடியலை... தமிழகத்தை இத்தனை வருட கால ஆட்சியில் தூக்கி நிறுத்தாத கழகங்கள் இந்தத் தேர்தலுக்குப் பின் தான் தூக்கி நிறுத்தப் போற மாதிரி இரு சாராரும் மாத்தி மாத்திப் பதிவுகளைப் போடுறதைப் பார்க்கும் போது தேர்தல் வரை முகநூல் பக்கமிருந்து விடுதலை வாங்கிக்கலாம்ன்னு தோணுது.

முகநூல்லதான் இப்படின்னா... வாட்ஸப்பில் தங்கள் சார்ந்த கட்சிகள் குறித்த உயர்வுகளையும் மற்ற கட்சிகள் குறித்த தாழ்வுகளையும் தினமும் சரவாரியாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் பிடித்த கட்சியே நமக்குப் பிடிக்க வேண்டும் என்ற மனநிலை எப்படி வந்தது என்றே தெரியவில்லை. இவர்கள் தூக்கி நிறுத்த நினைக்கும் தலைமை இதுவரை என்ன செய்து கொண்டிருந்தது. வாரிசு அரசியல் எங்கும் இல்லை எனச் சொல்லிக் கொண்டே எல்லாக் கட்சிகளும் வாரிசு அரசியலுக்குள்தான் நிற்கின்றன. எங்க தொகுதி எம்.எல்.ஏ கூட மகனுக்குத்தான் கேட்டிருக்கிறார். நாம்தான் படித்தவர்கள் நிற்கிறார்கள் எனப் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறோம்... அவர்களின் வேர் யார் என்பது தெரிந்தும் இன்னும் தூக்கித்தான் சுமக்கிறோம். நாம் தூக்கிச் சுமக்கும் வரை அவர்கள் பல்லக்கில்தானே இருப்பார்கள்.

இரு பெரும் திராவிடக் கட்சிகளும் அவை சார்ந்த தேசியக் கட்சிகளும் மட்டுமே இங்கே ஆளவேண்டும் என்ற மனநிலை உடன்பிறப்புக்களுக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கும் எப்போதும் போல் இப்போதும் அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் புதிதாய் களம் காண நினைக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை முகநூலில் அடித்துத் துவம்சம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாமக, விசிக, மதிமுக என இவர்கள் எப்பவும்  போல் பெரிய கட்சிகளின் பின்னால் போய் நின்று கொண்டு விட்டார்கள். தேமுதிக தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு சீண்டுவாரில்லாமல் தேய்ந்து போய்க் கிடந்தாலும் கேப்டனின் மைந்தரின் பேச்சு எங்கள் ஆதரவு இல்லாமல் எதுவும் நடக்காது என்பதாய் இருப்பது காமெடி.

இதைத் செய்வோம் அதைச் செய்வோம் என அள்ளிவிட்டுக் கொண்டிருப்பவர்கள் நீ ஆயிரமா நான் ரெண்டாயிரம் என அள்ளிக் கொடுக்கிறேன் என போட்டாபோட்டி போடுகிறார்கள். இவர்கள் அள்ளிக் கொடுப்பதாய்ச் சொல்லும் பணம் எங்கிருந்து போகும்..? எதன் விலை ஏறும்..? எந்த வரி கூடும்...? நாம் எதையும் சிந்திப்பதில்லை. ஓட்டுக்கு காசு என்ற நிலைக்கு நாம் வந்த பின் அவர்கள் எதை அள்ளி விட்டால் என்ன... வீசுவதை வீசட்டும் அதையும் சிலாகித்து முகநூலில் முக்கிக் கொண்டிருப்போம். இனிமேல் தமிழகமும் வளரப்போவதில்லை... தமிழனும் திருந்தப் போவதில்லை.

நண்பர்களிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... உங்கள் கட்சி உங்களுக்கு எதுவும் செய்து விட்டுப் போகட்டும்... நீங்கள் இன்னமும் உங்கள் தொகுதி எம்.எல்.ஏவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் சாமரம் வீசிக் கொண்டிருங்கள். முகநூலில் கதறக்கதற எழுதித் தள்ளுங்கள். அது உங்கள் உரிமை... நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்காக களப்பணி ஆற்ற வேண்டியது உங்கள் கடமை. அதற்காக அதையெல்லாம் விருப்பமிருக்கா இல்லையா என்று தெரியாமல் வாட்ஸப்பில் அனுப்பித் தொலையாதீர்கள்... இந்தக் கதைகளை எல்லாம் வாசிக்கவோ, கேட்கவோ எனக்கு விருப்பமும் இல்லை... வேலையும் இல்லை.

பிரதிலிபி தொடர்கதை போட்டியில் நானும் கலந்து கொண்டுள்ளேன் என்பது  உங்களுக்குத் தெரியும். பதினைந்து அத்தியாயங்களாகப் பகிர்ந்திருக்கிறேன். ஒரு பெண்ணின் உணர்வுகளைப் பேசும் கதைதான் என்றாலும் அந்தளவுக்குப் பேசியிருக்கிறேனா என்பது எனக்குத் தெரியாது. இதுவரை 2100 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள். நிறையப் பெண்கள் கருத்திட்டு இருப்பதுதான் கதைக்கு கிடைத்த மிக முக்கியமான வரவேற்பு என்று சொல்வேன். இதைப் பெண்கள் படிப்பார்களா என்பதுதான் எனக்குள் நான் கேட்டுக் கொண்ட கேள்வியாக இருந்தது, அப்படியிருந்தும் பெண்களே அதிகம் வாசித்திருக்கிறார்கள். அப்படி வாசித்தவர்களில் வள்ளி மாதவன் என்னும் சகோதரி எழுதிய நீண்ட விமர்சனம் உங்கள் பார்வைக்கு...

"இது மிகப்பெரிய உளவியல் சிக்கலான விஷயம்... நடுவயதில் இருக்கும் நானே ஒவ்வொரு பதிவுக்கும் விமர்சனம் வைக்காமல் இறுதியில் எழுதுகிறேன் எனும்போதே இச்சிக்கலின் மகத்துவம் புரிந்திருக்கும்... எனில் ஆகப்பெரிய பிரச்சினைக்கு மணியடித்ததற்கே உங்களைப் பாராட்ட வேண்டும். இதைக் கல்வியின் ஒரு பகுதியாக கட்டாயமாக்குவதைத் தவிர வேறு எப்படியும் தீர்க்க வழி கிடையாது... இதை எப்படி போதிப்பது என எதிர்ப்போருக்கு சிந்திக்க ஒரு கேள்வி... படித்து வரும் அத்தனை பெண் மருத்துவரும் ஆண் மருத்துவர்களுடன் பயின்றே வெளி வருகின்றனர்... அது சாத்தியமாகையில் இதுவும் சாத்தியமே... குழந்தையிலிருந்தே வயதுக்கேற்ப பாடங்களைத் தொகுத்து அளிக்கும் போது அவர்களுக்கான உடற் கூறியலும் மனக்கூறியலும் புரியவரும்... அப்போது வரும் மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்தப் புரிதலுடனான உறவு சமூகத்தில் நடக்கும் பெருமளவு குற்றங்களைக் குறைக்கும்... ஒரு சிறு நெருடல் பெண்ணின் உணர்வுகளை இன்னும் சற்று நாசுக்காகக் கையாண்டு இருக்கலாமோ..?"

வாசிக்க நினைத்தால் அணைக்குள் அடங்காத ஆசை

லக்கல் ட்ரீம்ஸ் வெளியீடாக வந்திருக்கும் வேரும் விழுதுகளும் நாவலை வாங்கியிருக்கும் நண்பர்களில் இருந்து ஏதேனும் ஒரு முதல் விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் ஒருவர் வாசித்துக் கொண்டிருப்பதாய் சொன்னார். பார்க்கலாம்... விமர்சனமே நம்மை மெருகேற்றும்... இது வாழ்க்கைக் கதை என்பதால் பலருக்குப் பிடிக்காமல் கூட போகலாம்... எப்படியிருந்தாலும் விமர்சனத்தை எதிர்பார்த்தபடி இருக்கிறேன்... விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன். புத்தகம் வாங்க விரும்பினால் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதனைத் தொடர்பு கொள்ளுங்கள். 20% தள்ளுபடியில் தருவதாகச் சொல்லியிருக்கிறார். 

வேரும் விழுதுகளும்
பக்கம். 230 / விலை. ரூ. 250/-

கலக்கல் ட்ரீம்ஸ்
தசரதன்
9840967484
kalakkaldreams@gmail.com

மிழ் டாக்ஸ் இணைய தளத்தில் தொடர் எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு... இந்த முறை நான் முன்பே சொன்னது போல் 'சூப்பர் சிங்கர்-8' குறித்தான பார்வையை வாராவாரம் எழுதும் முயற்சி... தனித்திரியில் எழுத ஆரம்பித்திருக்கிறோம்.. வாய்ப்புக் கொடுத்த தமிழ்டாக்ஸ் இணையாசிரியர் எழுத்தாளர் கவிஞர் சிவமணிக்கு நன்றி. இதெல்லாம் எழுதணுமா எனத் தோன்றும்... இப்போதைய நிலையில் என் எழுத்தில் இன்னும் வளர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள எதாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம்... அதன் காரணமாகவே இந்தத் தொடர்... விருப்பமிருப்பவர்கள் வாசிக்கலாம்.


த்ரிஷ்யம்-2 பார்த்தாச்சு... கிட்டத்தட்ட பாதிப் படம் வரை பொறுமை வேணும்...  அதன்பிறகே கதை ஆட்டம் காட்டுகிறது... பாதிக்குமேல் படம் செமத்தியாக இருக்கிறது. இரண்டாம் பாகம் என ஏதோ ஒரு கதையை, முதல் பாகத்துடன் ஒட்டாத கதையை எடுத்து நம்மைச் சாகடிப்பவர்கள் மத்தியில் முதல் படத்தின் வேர் பிடித்து அதன் தொடர்ச்சியாய் கதையைப் பயணிக்க வைத்திருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர். விரிவாக எழுதும் வாய்ப்புக் கிடைத்தால் எழுதலாம். ஏலா என்றொரு படமும் பலரால் கிண்டல் செய்யப்பட்டாலும் எனக்குப் பிடித்திருந்தது. ஏலாவைப் பாருங்கள் என்று சொல்லவில்லை. விருப்பம் இருப்பின் பார்க்கலாம்... அந்த அளவுக்கு சூர மொக்கையெல்லாம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். சாதியை வைத்து எடுக்கப்படும் குப்பைகளைக் கொண்டாடுவதை விட இந்தப் படங்களைக் கொண்டாடவில்லை என்றாலும் பார்க்கவாவது செய்யலாம்.

'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அரசியல் காட்சிகள்..  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.  உணர்ச்சி வசப்படும் நண்பர்கள் உண்டு.  அவர்கள் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள விட்டால் வசவு நிச்சயம்!

ப்ரதிலிபி தொடர்கதை - வாழ்த்துகள்.

கண்காட்சியில் வேரும்  விழுதுகளும் எப்படிப் போனது என்று அறிய ஆவல்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தேர்தல் தொடர்பானவற்றை..முடிந்தவரை ஒதுக்கிவிடல் நலம். ப்ரதிலிபி தொடர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் குமார்.

தமிழக அரசியல் - சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எனக்குத் தெரிந்து 25 அதிகாரங்களை கொண்டது அரசியல்...! அமைச்சியல் அப்புறம்... அவ்வளவே...

எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வளரட்டும் குமார்... வாழ்த்துகள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்