மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 26 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : சோளகர் தொட்டி

Image result for சோளகர் தொட்டி
'நான் பிணம்'

'நீயும் கூடத்தான் மாதேஸ்வரா...'

இந்த இரண்டு வரிகளும் போலீஸ் மிருகங்களின் காமப்பசிக்கு இரையான மாதியின் மனசுக்குள் வெடித்துப் பிறந்து இன்னும் என் மனசுக்குள் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. சோளகர் தொட்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து வெளிவர முடியாமல் தடுமாறும் மனசுக்குள் இந்த வரிகள் அடிக்கடி மேலெழுந்து தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தாக்கத்தில் தனித்து நிற்கிறேன்... வேறேன்ன செய்ய..?

படிக்கும் காலத்தில் டீக்கடை தினத்தந்தியில் எப்படியும் ஒரு போட்டோ வரும். அந்தப் போட்டோவுக்குக் கீழே போலீஸ் தேடுதல் வேட்டையில் வீரப்பனின் கூட்டாளிகள் இருவரோ மூவரோ நால்வரோ கொல்லப்பட்டார்கள் எனப் போடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து நம்ம போலீஸ் திறமைசாலிகள்டா... சந்தனமரம் வெட்டுறவனைச் சுட்டுக் கொன்னிருக்காங்க பாருங்கன்னு பெருமை பேசித் திரிந்திருக்கிறோம், ஆனால் உடைகள் தைத்து அப்பாவிகளுக்கு இட்டு அவர்களைக் கொன்று அவர்களின் உடலருகில் நாட்டுத் துப்பாக்கியைப் போட்டு வைத்து... ச்சை... என்ன மனிதர்கள் இவர்கள்... இவர்களால் எப்படி அப்பாவி மக்களைக் கொன்று மகிழ முடிந்தது. இவர்கள் கொன்றோம்... கொன்றோமென மார்தட்டியதெல்லாம் அப்பாவிகளின் பிணத்தின் மீது நின்று என்பது இந்நாவலை வாசிக்கும் போதுதான் தெரிகிறது, ரொம்பவே வலிக்கிறது.

வனத்துடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு தங்களின் நிலத்தில் ராகியைப் பயிரிட்டு, விளைவித்து மணிராஜனைக் கும்பிட்டு தங்கள் வாழ்க்கையை மகிழ்வாய் நகர்த்தி வாழும் மக்களின் நிலங்களை மெல்ல மெல்லப் பிடுங்கி, ஒரு கட்டத்தில் அவர்களை வனத்திற்குள்ளும் செல்லக் கூடாதென தடை விதித்து வனத்தோடன வாழ்வாதாரத்தைப் பறித்து, அடுத்த வேளை சோற்றுக்கு என்ன பண்ணுவது என தவிக்க விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறது அரசு இயந்திரமும் பணம் படைத்த சமூகமும். ஒரு ஒற்றை மனிதனை வேட்டையாடுகிறோம் என இரு மாநில அரசுகள் சேர்ந்து மலைசாதி மக்களின் கிராமங்களை எல்லாம் பாடாப்படுத்தி மகிழ்ந்திருக்கிறது .

வனம் எங்களுக்கானது... அதனுடன் நாங்கள் தலைமுறை தலைமுறையாய் உறவு வைத்திருக்கிறோம். அங்கிருக்கும் உயிரினங்களும் மரங்களும் எங்களின் உறவுகள் என்று வாழ்பவர்களை, சந்தன மரத்தை வெட்டக் கூடாது என அதிலிருந்து ஒரு சிறு துண்டு கூட எடுத்தறியாத மக்களை, தங்கள் வயிற்றுப் பாட்டுக்கே வழி தெரியாமல் திண்டாடும் மக்களை, வீரப்பனுக்கு உதவினாய்... அவனுடன் மரம் வெட்டினாய்... என்றெல்லாம் சொல்லி அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் கொடுமைகளை வாசிக்க வாசிக்க அது கொடுக்கும் வலியில் சுவாசிக்க மறந்து போய் மனங்கொள்ளாமல் நிறைந்து நிற்கும் வேதனையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் புத்தகத்தின் பக்கங்களில் அடிக்கடி விக்கி நிற்க வேண்டியிருக்கிறது.

தன்னுடைய முகாமுக்கு வன விலங்குகளாலோ அல்லது வீரப்பனாலோ பாதிப்பு வரக்கூடாதென தொட்டி ஆண்களை எல்லாம் தரையில் தட்டிக் கொண்டு இரவெல்லாம் முகாமைச் சுற்றிச் சுற்றி நடந்து வரச் சொல்லும் கர்நாடக காவல்துறை அதிகாரியின் திமிரும், காட்டுக்குள் செல்ல மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்கச் சொல்லும் தமிழக காவல்துறை அதிகாரியின் திமிரும் ஒன்றுதான். இவர்கள் எல்லாம் காக்கி உடைபோட்டதும் மனச்சாட்சியை தூக்கி வீசிவிடுவார்கள் போல. இவர்களைப் பொறுத்தவரை எந்த ஊராக... மாவட்டமாக... மாநிலமாக இருந்தாலும் குணமும் செயல்பாடுகளும் ஒன்றுதான். அதில் எந்த மாறுதலும் இல்லை.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் பெண்களை வேட்டையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் இந்த வேட்டைக்காகத்தான் அரசு பணத்தை செலவு செய்திருக்கிறது. சோளகர்தொட்டி என்பது இந்த வேட்டையில் சிறுதுளிதான். மாதி, சித்தி, மல்லியைப் போல் எத்தனை பெண்கள் இவர்களால் சீரழிக்கப்பட்டிருப்பார்கள். தங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ள அப்பாவிப் பெண்களை விசாரணை என்ற பெயரில் அள்ளிக் கொண்டு போய் மிருகங்களாய் மாறிக் கொடுமை செய்திருக்கிறார்கள். ஒரே இரவில் எத்தனை மிருகங்கள் ஒரு சிறு பெண்ணை வேட்டையாடியிருக்கிறது. அந்த வேலைக்குப் போனதும் மனித மனம் ஏன் மாறிவிடுகிறது. தன்னிடம் இருக்கும் அதிகாரம் என்னும் போதையால் எவனையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் ஏன் ஏற்படுகிறது..? சுபாஷைத் தவிர வேறு ஒருத்தனுக்குக் கூட அந்தப் பெண்கள் தெய்வமாய், தாயாய், சகோதரியாய்த் தெரியவில்லையே ஏன்..? மிருகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்..? அவை கூட சில நேரங்களில் நல்லவையாக இருக்கின்றன... ஆனால் இவர்கள்...?

ரதி வேறு ஒருவனைக் காதலித்து ஓடிவிட்டாள் என்னும் போது வருத்தப்படும் அந்த மக்களுடன் பெண்ணைப் பெற்றவனாய் நானும் வருந்தி நிற்பதுபோல்தான் எனக்குத் தோன்றியது. இந்தப் பெண் ஏன் இப்படிச் செய்தாள் என்றே நினைத்தேன், ஆனால் மல்லியின் அப்பனைத் தேடி லிங்காயத்து வளைவுக்குப் போய் அவளையும் அவள் கணவனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று மல்லியைச் சூறையாடும் போதும், சோளகர் தொட்டிக்குள் புகுந்து மாதியையும், சித்தியையும் அள்ளிக் கொண்டு போய் அம்மாவையும் பொண்ணையும் ஒரே இரவில் தங்களின் வெறிக்கு இரையாக்கிக் கொள்ளும் போதும், புட்டனின் மனைவி ஈரம்மாளை அவளது வீட்டில் வைத்தே சூறையாடும் போதும் ரதியாவது இந்த மிருகங்களிடமிருந்து தப்பித்தாலே என்று சத்தமாய்ச் சொல்லத் தோன்றியது.

மாதேஸ்வரன் கோவிலுக்குப் பின்னே தற்காலிக முகாமில் பெண்களையும் ஆண்களையும் படுத்தும் கொடுமைகளைப் படிக்கப் படிக்க, அந்த வரிகளை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைகளில் கட்டித் தூக்கி மின்சாரம் வைத்து கத்தி ஓட, உருள விட்டு சந்தோஷிக்கும் காட்டுமிராண்டிகளின் செயல்கள் மனதைப் பதைபதைக்க வைத்தது. அதுவும் நிர்வாணமாக்கி, காதில்... மார்பில்... பிறப்புறுப்பில் என கிளிப்புக்களைப் பொருத்தி செய்யும் கொடுமைகளில் அவர்கள் அலறும் அலறல் இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. மாதேஸ்வரனோ மணிராஜனோ ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. அந்த மிருகங்கள் அவர்களைப் படுத்தியெடுத்தும் படுத்து மகிழ்ந்தும் சந்தோஷமாகத்தான் அடுத்த நாளை நோக்கி நகர்கிறார்கள்.

போலீஸ் காவலில் இருக்கும் கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியால் துடிக்கும் போது மனித மிருகங்கள் உதவி செய்யாத நிலையில் மல்லி அவளுக்கு உதவித்  தொப்புள் கொடியை வெட்டக் கத்தி கேட்டும் கிடைக்காத நிலையில் வாயால் கடித்துத் துண்டிப்பது, மாதிக்கு மாதவிலக்காகி ரத்தப் போக்குடன் தவிப்பதும் அப்போதும் கூட இரக்கமில்லாமல் கரண்ட் வைப்பது, அங்கு அடைத்து வைத்திருக்கும் பெண்களின் மார்பைப் பிடித்து இழுப்பது, பிறந்த குழந்தையை வீரப்பனுக்கு பிறந்தது எனச் சொல்லிச் சிரிப்பது, வீரப்பனுடன் படுத்தேதானே எனக் கேட்பது, ஈவு இரக்கமின்றிப் பிறந்த குழந்தையைக் கொல்வது என மிருகங்களாய் மாறியவர்களைப் பற்றிப் படிக்கும் போதே பதற வைக்கிறது. 

இத்தனை கொடுமைகளையா இவர்கள் செய்தார்கள்..? 

இவர்களுக்கு எந்த ஒரு அழிவும் வரவில்லையா..? 

இவர்களின் குடும்பங்கள் இப்போது சந்தோசமாக இருக்கிறதா...?

ஏன்ற எண்ணம் தோன்றியபோது இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என மனசு வேண்டிக் கொண்டது. 

ஆண்களை அடித்துக் கையை உடைத்து, காலை உடைத்து, புழு வைத்துப் போன புண்களுடன் எல்லாருடனும் அடைத்து வைத்து, தங்களின் வேட்டையில் சிலரைக் கொன்றோமென மாநில அரசிடமும் மக்களிடமும் மார்தட்டிக் கொள்ள, எதுமறியாதவர்களுக்கு வீரப்பனின் உடையைப் போல் தைத்துப் போட்டு அழைத்துச் செல்லும் போது உயிர் பயத்தில் அவர்கள் தவிப்பதும், உறவுகள் அழக்கூட முடியாமல் வேடிக்கை பார்ப்பதும் வெறெங்கும் நடக்காத கொடுமைகள். அதுவும் சரசுவின் புருஷனை அவளுக்கு முன்னே உடை மாற்றி அழைத்துச் சென்று மாலை திரும்பி வந்து தாலியைக் கழட்டிடு எனச் சொல்லும் போதெல்லாம் இவர்களுக்கு இருதயமே இல்லையோ என்ற கேள்வி எழுந்தது.

துரையன், அவன் மகன் ராஜூ, மனைவி சாந்தா, மணியக்காரன் மாதப்பா என நிலத்தை அபகரிக்கும் கும்பல் சற்றே விலகி நிற்க, சிவண்ணா, கொத்தல்லி, பேதன், சிக்குமாதா, புட்டன், ஜோகம்மா, கெப்பம்மா, கரியன், ஜடையன், தம்மையா, மாதி, ஈரம்மா, மல்லி, சித்தி, ரதி, சின்னத்தாயி  என சோளகர் மொழி பேசும், வனத்தையும் நல் மனத்தையும் சொத்தாகக் கொண்ட அந்த மக்கள் நம்மோடு அருகிருந்து பேசுவது போலவும், சோளாகர் மொழியில் 'எப்பாவு நோகுவாக... நாகர்தாபு மினியாக... ஓ லயித்தி.... எல்ல பித்தி...' எனப்பாடுவது போலவும் பீனாச்சியை வாசித்தும் தப்பை அடித்தும் மலைஜாதி நடனம் ஆடுவது போலவும் மனசுக்குள் காட்சிகள் விரிந்து கொண்டே இருக்கிறது. இப்போதும் மனசுக்கு நெருக்கமாகிப் போன மனிதர்களாய் அவர்கள் மாறி நிற்கிறார்கள்.

இந்த மக்கள் பட்ட பாட்டை, வேதனையை, வலியை அவர்களுடன் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பழகி, அவற்றுள் சிலவற்றையாவது பதிய வேண்டும்... அப்படிப் பதியாமல் விட்டுவிட்டால், பின்னொரு காலத்தில், தான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக் கூட கருதப்படும் என்பதால் சோளகர் தொட்டி என்ற நாவலாக்கியிருக்கும் ஆசிரியர் ச.பாலமுருகனை எப்படிப் பாராட்டுவது..? இந்த நாவலை வெளிக் கொண்டு வருவதற்குள்ளோ அல்லது வெளிக்கொண்டு வந்த பின்னோ அவர் எப்படியான பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்...? அப்பாவிகளைச் சூறையாடிய காவல்துறை தனது கேவலமான செய்கைகளை அவரிடம் காட்டாமல் இருந்திருக்குமா..? இது மட்டுமே அந்த மக்கள் பட்ட வேதனையின் முதலும் கடைசியுமான  ஆவணமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. இது போதாது இன்னும் இவர்களின் வலிகளைப் பதிவு செய்து வைக்க வேண்டும். ஒரு தனிமனிதனைத் தேடுகிறோம் என அரசு அதிகார மையம் செய்த கேவலங்களை இன்னும் இன்னும் எழுதித் தள்ள வேண்டும். இதைப் பார்த்தேனும் இனி வரும் காவலர்கள் மனிதர்களாய் வரவேண்டும்.

ஒரு வரலாற்றை எழுதுவதற்கு அவர்களுடன் வாழ்ந்து அதிலிருக்கும் உண்மையை, உள்ளது உள்ளபடி சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேணும். அது பாலமுருகனுக்கு நிறையவே இருந்திருக்கிறது. வாசிப்பவரைத் தன்னுள் ஈர்க்கும் எழுத்து ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் அது இவருக்குக் கிடைத்திருக்கிறது. வலிகளை நம்முள் கடத்திக் கொண்டே சென்றாலும் கீழே வைக்க விடாமல் இழுத்துக் கொண்டே சென்ற எழுத்தில் எங்கும் அலங்காரமில்லை. உண்மைகளை நாவலாக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அப்படியே கொண்டு வரவேண்டும் என்றால் அந்த இடங்களுக்குப் போய், அதைப் பற்றி அறிந்து எழுதும் போதுதான் அந்த நாவலின் உயிர் உச்சமாகும். அதைத்தான் இந்த சோளகர் தொட்டி பெற்றிருக்கிறது. பாலமுருகன் பாராட்டுக்குரியவர்... இவரைச் சந்திக்க நேர்ந்தால் நிறைய விஷயங்களை உள் வாங்கிக் கொள்ள முடியும். காலத்தின் கையில்தானே எல்லாமே இருக்கிறது.

சோளகர் தொட்டி மனதிடத்துடன் வாசிக்க வேண்டிய ஒரு வாழ்க்கைக் கதை. வாசிக்கும் போது உங்கள் கண்களில் கண்ணீர்த் திரையிடும். அந்தக் கண்ணீர்த் திரைக்குள் மாதி, சித்தி, மல்லி, சரசெனப் பல சகோதரிகள் ஓலமிடுவார்கள். அந்த ஓலத்தில் 'நான் பிணம்... நீயும் கூடத்தான் மாதேஸ்வரா...' என்ற வார்த்தைகள் உங்களைச் சுற்றிச் சுற்றி வரும். இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த போது வீரப்பன் வேட்டையில் நம் காவல்துறையும் கர்நாடக காவல்துறையும் சேர்ந்து சிறப்பாய்ச் செயல்படுகிறார்கள் என மார்தட்டிக் கொண்டிருந்தவர்களில் நாமும் ஒருவராய் இருந்திருந்தால் நாமும் கூட பிணம்தான்.

ஆம்... மலைஜாதி மக்கள் அனுபவித்த வேதனை எழுத்தாளார் பாலமுருகன் சொல்லியிருப்பது போல, பாறையை விட கனமானவை, இருளை விட கருமை மிக்கவை, நெருப்பை விட வெப்பமானவை...

வலியைக் கொடுத்த நாவல் சோளகர் தொட்டி, புனைவு... அபுனைவு, வரலாறு, எழுத்தாளர் எழுதும் புதுவரலாறு எனப் பல நாவல்களைப் படித்துக் கடந்து வந்திருந்தாலும் இதைப் படிக்கும் போது ஏற்பட்ட வலி விரைவில் மறையாது.

வாழ்த்துக்கள் பாலமுருகன் எனச் சொல்ல வலிக்கிறது... வனம் மட்டுமே அறிந்த வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறீர்கள்... அந்த மனிதர்களின் ஆன்மாக்கள் உங்களை வாழ்த்தும்.
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறு பகுதியே மனதை உருகுகின்றது...

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு

இனிய தீபாவளி வாழ்த்துகள்

ஸ்ரீராம். சொன்னது…

தலைப்பு முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.  உள்ளடக்கம் இன்றுதான் ரிக்கிறேன்.  படிக்கும்போதே மனம் பதறுகிறது.  அதிகாரம் கையிலிருந்து விட்டால் என்ன எல்லாம் செய்கிறார்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

புத்தகம் சொல்லும் விஷயங்கள் மனதைக் கலங்கடிக்கிறது. எத்தனை கொடூரம்! மனிதன் என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டியவர்கள் அந்த கொடூரன்கள்...

புத்தகம் முழுவதும் படிக்கும் தைரியம் இல்லை குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அய்யா

'பரிவை' சே.குமார் சொன்னது…

முழுவதும் வாசித்தால் அதில் இருந்து மீள முடியாது அண்ணா

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ரசித்தேன்.