மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

பிக்பாஸ் : அரைச்ச மாவை அரைப்போமா...

Image result for bigg boss 104 day images

104ம் நாள்...

ஆண்டவரின் வருகை.

எப்பவும் கதவு திறந்ததும் கமல் உள்ளிருந்து வருவார். இன்று முதலில் உள்ளே ஆட்கள் கதவைத் தள்ளித் திறப்பதைக் காட்டினார்கள். சரி அப்பத் தலைவர் உழைப்பவர்கள் பற்றி ஒரு பெரும் கருத்துக் களமாடுவார் போலும் என நினைத்தால் அஃதே நிகழ்ந்தது.

இந்தக் கதவு தானியங்கி என்றுதான் நீங்கள் எல்லாம் நினைத்திருப்பீர்கள்... இது ஆட்களால் இயக்கப்படுவது... அவர்கள் தள்ளித் திறந்தால் மட்டுமே நான் அரங்குக்கு வரமுடியும்... அவங்க இல்லைன்னா நான் அங்கிட்டு நின்னுதான் பேசணும் என ஆரம்பித்து, அவர்களை அழைத்து அறிமுகம் செய்து, கதைவை இழுத்து மூடச் சொல்லி, இதற்கே ஆள் தேவையென்றால் பிக்பாஸ் வீட்டின் ஒவ்வொரு அசைவுக்கும் எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள் என்பதை அடுக்கி நாடு வரைக்கும் நகர்ந்தார். 

இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது... இவர்கள் எல்லாம் நூறு நாள் வேலைக்காரர்கள் போல கம்மாய்கரையில் படுத்துக் கதை பேசிவிட்டு காசு வாங்கவில்லை 24 மணி நேரம் கடுமையாய் உழைத்து... அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை மனநிறைவுடன் பெறுகிறார்கள். இப்படிப் பலருக்கு வேலை கிடைப்பதாலேயே நான் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டிருக்கிறேன் என்றார்.

மேலும் உழைப்பாளிகள், விவசாயம், அரசு ஊழியர்கள் எனப் பேசி... கஜா புயலின் போது மின்சார வாரிய ஊழியர்கள் வேலை பார்த்த விதம் குறித்து, மேலே தொங்கிக் கொண்டு சாப்பிட்டதைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.

கஜாப் பாதிப்பை மற்றவர்கள் காரிலும் ஹெலிகாப்டரிலும் போய் பார்த்து வந்தார்கள். நான் மக்களோடு மக்களாகப் பயணித்து மின்சார ஊழியர்களுடன் பேசி, போட்டோ எடுத்து வந்தவன் என்றெல்லாம் மய்யமாய்ப் பேசினார். 

எதுவுமே இல்லாத இடத்தில் கமல் என்ன செய்ய முடியும்...? அரசியல்தான் பேச முடியும் இல்லையா...? அதைத்தான் செய்தார்... கொஞ்சம் அதிகமாகவே செய்தார்... அதான் நமது அம்மாவுல கமலுக்கு எதிராப் பொங்கியிருப்பானுக போல... காற்றுதான் பேனர் விழக் காரணம் அதைக் கைது செய்யுங்கள் எனச் சொல்லும் மகா மேதாவி அமைச்சர்களைப் பெற்ற தமிழகம் அல்லவா.?

என்னமோ பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டிகளும் பிரச்சினைகளும் நிறைந்து இருப்பது போல் வெள்ளிக்கிழமை நிகழ்வைப் பாருங்கள் என்று சொன்னார்... அங்க என்ன இருக்குப் பார்க்க... காலையில எப்பவும் போல விடிஞ்சி வெள்ளக்கோழி கூவி, வெள்ளாடு மேயப் போனதுக்குப் பின்னால, எழுந்து வர்ற கோவில் மாடு மாதிரி எட்டு மணிக்கு மேல பாட்டுப் போட்டானுங்க...

எங்கெங்கே கதவிருக்கோ அங்கங்க இருந்து ஆட்கள் வந்தார்கள்... இந்த ஆட்டம் எல்லாம் ஒத்திகை பார்த்ததுதான் போலும்... உள்ளிருக்கும் நால்வரும் வந்தவனுகளோட சேர்ந்து ஆடினார்கள். ரொம்ப நேரம் ஆடுனாங்க... அப்புறம் ஆளப் போறான் தமிழன் பாட்டுக்கு சாண்டியையும் முகனையும் தூக்கியும் ஷெரினையும் லாஸ்லியாவையும் கை பிடித்து அழைத்தும் கொண்டு வந்து சிகப்புக் கதவுக்கிட்ட நிறுத்திக் கைகாட்டினார்கள். என்ன சொன்னாங்கன்னு தெரியலை... இந்தக் கதவு என்னடா பாவம் பண்ணுச்சு... அதை படாதபாடு படுத்தி எடுத்து வச்சிட்டீங்களேடான்னு சொல்லாமல் சொன்னானுங்க போல.

ஆட்டம் முடிஞ்சதும் எப்பவும் போல அட்டகாசம் குருநாதா.. அதகளம் குருநாதா, நன்றி குருநாதா... நான் ஆப்பி... நீங்க ஆப்பியான்னு சாண்டி கேட்டுக்கிட்டு இருந்தார். அப்புறம் எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து அனுப்பினார்கள்... அதையும் தின்னானுங்க...

அப்புறம் வெள்ளைப் பனியனைக் கொடுத்து உங்க அன்பை, நினைவுகளை ஒவ்வொருவரும் பகிர்ந்துக்கங்கன்னு சொல்ல, பக்கம் பக்கமாக் கதை, கவிதை, கட்டுரையெல்லாம் மாற்றிமாற்றி எழுதிக் கொண்டார்கள். சில இடங்களில் படம் வரைந்து பாகமெல்லாம் குறித்தார்கள்.

அடுத்து கமல் வந்தார்... எல்லாரும் தனித்தனியாப் பிக்பாஸ்கிட்ட பேசியதில் சோகம், வருத்தம், மகிழ்ச்சி, நகைச்சுவை என எல்லாமே மிக்சர் மாதிரிக் கலந்து இருக்கு... அதையும் நீங்க கண்டிப்பாப் பார்க்கணும்ன்னு கண்ணடிச்சிட்டுப் போய்விட்டார்... 

ஆமா இப்பவும் அந்தக் கதவை மனிதர்கள்தான் திறந்தார்கள்... 

அகம் டிவி வழியே நாமும் அங்கிருந்த பார்வையாளர்களும் அகத்துக்குள் போய் அவனுக பேசினதைப் பார்க்க ஆரம்பித்தோம்.

இந்த 104 நாள்ல 101 தடவையாச்சும் கேட்கப்பட்ட கேள்விகள்... 

அதே பதில்கள்... 

ஒண்ணும் புதுமையில்லை...

ஒண்ணுமில்லாத வாய்க்கு பொரியரிசியை அள்ளிப் போட்டது மாதிரி...

'இந்த வீட்டில் எதைத் தவற விடுவீர்கள்..?'

'மீண்டும் முதலில் இருந்து விளையாண்டால் எதை மாற்ற நினைப்பீர்கள்..?'

'இங்கே இழந்ததும் பெற்றதும் என்ன..?'

'இந்த வீட்டிற்குச் சொல்ல நினைப்பது என்ன...?'

'கடைசியா மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?'

இப்படியான கேள்விகளை நால்வரிடமும் மாற்றி மாற்றிக் கேட்டார் பிக்பாஸ்... 

பதில்கள் பெரும்பாலும் ஒரே மாதியாகத்தான் இருந்தன... நாமினேசனுக்கு கவின் சொல்லிக் கொடுத்துச் சொன்ன கருத்துப் போல.

ஒவ்வொரு முறையும் நாமினேசன் பண்றதும் பின்னே அவங்ககிட்ட பேசுறதுமே கஷ்டமாயிருந்துச்சுன்னு சாண்டியும்... 

கோபத்தைக் குறைச்சிக்கிட்டேன், நிறைய நட்புக் கிடைத்ததுன்னு முகனும்... 

மக்களோட கைதட்டலை இடையில் இழந்ததை நினைத்து வருந்தினேன் என ஷெரினும்... 

இங்க விளையாடத்தான் வந்தேன் ஆனா அதைவிட்டுட்டு வேற மாதிரி பொயிட்டேன்னு லாஸ்லியாவும் சொன்னாங்க.

ஆனாலும் ஒரு ரியாலிட்டி சோவுல எதுவுமே இல்லாம பத்துநாளை ஓட்டுறதுங்கிறது உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம்தான்... அதைத் திறம்படச் செய்யும் விஜய் டிவிக்கும் பிக்பாஸ் குழுவுக்கும் கமலுக்கும் வாழ்த்தை இப்பச் சொல்லலைன்னா பின்னே எப்பவும் சொல்ல முடியாது.

சென்ற சீசன்களில் இங்கு இருந்தவர்கள் எல்லாம் என்னடா கூத்தடிக்கிறானுங்க... நம்மளை வச்சிச் செஞ்சானுங்களேன்னு நினைச்சுச் சிரிக்கலாம்... சிரிக்கலாம்... சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்... ஆனா நாம பொறுமையாப் பார்க்க வேண்டிய கட்டாயாமாகிப் போச்சு... பின்னே இதை எழுதணுமே.. .கடுப்படிக்கிறானுங்க யுவர் ஆனர்.

எல்லாருக்கும் முடிச் சுத்தம், முகச் சுத்தம், நகச் சுத்தம், பாதச் சுத்தமெல்லாம் பண்ணி பளபளன்னு ஆக்கிட்டானுங்க... பவுடர் போட்டா பன்னிக்குட்டியும் பார்க்க நல்லாயிருக்கும்ன்னு சொல்ற மாதிரி, சும்மா எல்லாரும் ஜம்முன்னு இருந்தாங்க. அப்புறம் எல்லாரையும் புகைப்படம் எடுத்தார்கள். 

அவங்களுக்கு வெள்ளிக்கிழமை ரொம்ப மகிழ்வான பொழுதாய் நகர்ந்திருக்கும் போல, நமக்கு மலராத பொழுதுதான். அசுரன் பார்த்த மகிழ்ச்சி மனசுக்குள் இருந்ததால் தப்பித்தேன்.

மறுக்கா கமல் வந்தார்... அகம் டிவி வழியே உள்ளே போனார்... பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த நடிகர், நடிகைகள் மாதிரி நால்வரும் அமர்ந்திருந்தாங்க... 

கமல் குசலம் விசாரித்து என்னத்தைடா பேசுறது... எதாவது ஒரு கருமத்தைச் செஞ்சிருந்தா அதுல ஆரம்பிக்கலாம்... இவனுக தின்னுட்டுத் தூங்கியிருக்கானுங்க... பத்தாததுக்கு வெளியே போனவனெல்லாம் வந்து விருந்து சாப்பிட்டுப் போயிருக்கானுங்க... அவனுகளைப் பற்றிக் கேட்டா இவனுக கதை எழுத ஆரம்பிச்சிருவானுங்க... இப்ப என்ன செய்யலாம்ன்னு யோசிச்சி... பிக்பாஸ் கேட்ட கேள்விகளை மீண்டும் மாற்றிக் கேட்டார்.

லாஸ்லியாவை செய்தி வாசிம்மா... பிக்பாஸ் வீட்டு நிகழ்வை ஒரு செய்திச் சுருக்கமாத்தாம்மான்னு சொல்ல, அதுவும் ஒரு வழியாப் பேசிச்சு... அதுல மக்கள் மனசுல யார் இடம் பிடிக்கிறாகளோ அவங்க வெளியேற்றப்படுவாகன்னு சொன்னுச்சு... கமலும் கண்டுக்கலை... லாஸ்லியாவெல்லாம் மக்கள் மனசுல இடம் பிடிக்காமத்தானே இறுதிக்கு வந்திருக்கு. கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் சொன்னது சரிதான்.

லாஸ்லியா முடிச்சதும்... அய்... பாருங்க... இப்ப நியூஸ் வாசிக்கிறச்சொல்லோ கைகால் ஆட்டிக்கின்னு வாசிக்கலை பாருங்க... இப்பத்தான் அவங்க செரியா நீயூஸ் வாசிக்கிறாங்கோ... இத்துக்கு யார் காரணங்கிறே... அல்லாம் நம்ம பிக்பாஸ் வூடுதான் நைனான்னு கமல் பேசினார்.

அப்பறம் முகனை நீதானே பாட்டை நேயர் விருப்பமாய்ப் பாடச் சொன்னார்... அந்த வரிகளில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது. அதுவும் முகன் இரு மீன்கள் என உச்சஸ்தாயிக்குள் நுழையும் போது நம்மளை அறியாமல் பயபுள்ள கலக்குறான்னு சொல்லத் தோணுது. உங்க ஸ்டுடியோவை ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன்... அதை அனுபவித்தவனுக்குத்தான் மிஸ் பண்ற வலி தெரியும்... நான் அனுபவித்திருக்கிறேன்னு கமல் சொன்னார்.

அடுத்து சாண்டி, நாலு பேர் இறுதியில் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றிருந்தால் எப்படிப் பேசியிருப்பார்கள்ன்னு வனிதா, சேரன், மோகன், மீராவை வைத்து காமெடி என்ற கண்றாவியைப் பண்ணினார். ஏன் தர்ஷன், கவின், அபிராமி, சாக்சியெல்லாம் சேர்த்திருக்கலாமே.... நட்புடா... பாசம்டா... நேசம்டா...

சேரன் சண்டைக்குப் பின் எடுத்துச் சொல்லி புரிய வைப்பேன் என்றதை இவர் காமெடி ஆக்கினார். சண்டைகளின் போது இவர் அங்கு போவதேயில்லை... கேட்டால் என் பொண்டாட்டி சண்டை போட்டாலே நான் விலகிப் போயிருவேன்னு சொல்வார்.... இங்கே சேரனைக் கிண்டலடித்தார்.

மற்ற மூவரையும் அப்படியே... இது தேவையில்லாத ஆணி... நான்தான் எல்லாவற்றிலும் சிறந்தவன்... மற்றவனெல்லாம் முட்டாள் என நினைக்கும் ரகம்... மற்றவர்களைக் கேலி செய்தே நூறு நாட்களை ஓட்டியவர் இறுதிப் போட்டியில் நிற்கிறார்... காரணம் அவரின் நகைச்சுவை என்றாலும் அடுத்தவரைக் கேலி செய்வது தவறான செயல் என்பதைச் சாண்டி இறுதிவரை புரிந்து கொள்ளவேயில்லை... 

அதை வெகுவாக ரசித்த கமலும் எடுத்துச் சொல்லவில்லை... இன்னும் சொல்லியிருக்கலாம் என்று வேறு சொன்னார்.

அடுத்து ஷெரினின் போட்டோக்கள்... வந்தபோதும் இப்போதும் இருக்கும் மாற்றங்களைக் காட்டும் விதமாக பகிரப்பட்டது... இது சில தினங்களுக்கு முன் இணையத்தில் கேலி பண்ணிக் கலக்கிய போட்டோ... அதைப் போட்டு எவ்வளவு மாறிட்டீங்க... அழகாயிட்டீங்க... சினிமாவுல மறு பிரவேசம் கண்டிப்பாக இருக்குன்னு சொல்ல, நானே இவ்வளவு ஒல்லியாயிட்டேங்கிறதை என்னோட படங்கள் போடும்போது உணர்ந்திருக்கிறேன் சார் என்றார் ஷெரின். 

ஆம் ஷெரின் அழகாய் மாறியிருக்கிறார்... லாஸ்லியா பெருத்திருக்கிறார்... இப்பச் ஷெரின் எல்லாருக்கும் டார்லிங்தான்... அப்ப லாஸ்லியா...? கவினுக்குத்தான் டார்லிங்... என்ன சரிதானே.

சென்ற சீசன்களில் எல்லாம் இருவர் மட்டுமே இறுதி நாட்களில் இருந்ததாய் ஞாபகம்... இப்போ நால்வர் இருக்கிறார்கள்... இவர்களில் ஒருவர் போகவேண்டும் அதை நாளை செய்வோமே... அதுவரை சந்தோஷமா இருங்களேன்னு சொல்லிட்டு கமல் போக, வீட்டுக்குச் சாப்பாடு வந்தது. சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்று மாலை ஆறு மணிக்காம்... எப்படியும் மூணு மணி நேர நிகழ்வாச்சும் இருக்கும்... நிறைய நிகழ்வுகள் இருக்கும்... நல்லாவும் இருக்கும்ன்னு நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

நாளைய பகிர்வே கடைசிப் பகிர்வு இந்தப் பிக்பாஸ் சீசன்-3க்கு... 

நாளையுடன் சேர்த்து மொத்தம் 86 பதிவுகள்... தொடர்கதைகள் பகிர்ந்தபோது, அதுவும் வாரம் ஒன்றென 80 பகுதிகள், 40 பகுதிகள் என எழுதியிருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து 85 நாட்கள் எழுதியிருக்கிறேன் என்பது என்னளவில் மிகப்பெரிய விஷயம்... என்னைப் பதிவெழுத வைத்த அனைவருக்கும் நன்றி.

பிக்பாஸ் எழுதுவதை மிகப்பெரிய குற்றமென நட்புக்கள் சொன்ன போதும் , நான் எழுதிய ஒவ்வொரு பதிவும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் சிறப்பாய்த்தான் இருந்தது. 

என் எழுத்தில் நிறைய மாற்றங்களைச் செய்து பார்க்க முடிந்தது... 

நகைச்சுவையாய்... விமர்சனப் பார்வையாய்... நிகழ்வுடன் சமூகப்பார்வையும் சேர்த்து... என எல்லா விதமாகவும் எழுத முடிந்தது. 

என் வலைப்பூவில் திண்டுக்கல் தனபாலன் அண்ணன் தொடர்ந்து கருத்துச் சொல்லி ஊக்கப்படுத்தினார். சகோதரி நிலாமதியும் கருத்துச் சொல்லித் தொடரச் சொன்னார். ஸ்ரீராம் அண்ணன். ஜி.எம். பாலசுப்ரமண்யம் ஐயா, வெங்கட் நாகராஜ் அண்ணன் எனச் சிலரும் அவ்வப்போது கருத்துச் சொன்னார்கள். அனைவருக்கும் நன்றி.

அதேபோல் பிரதிலிபியில்தான் எனக்கு 150 புதிய நட்புக்கள் கிடைத்தார்கள். அவர்களுக்கும் நன்றி. இதை எப்போதும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்றாலும் பிக்பாஸ் எழுத ஆரம்பித்தபின் அதற்காகக் கிடைத்தது உண்மையில் பெரிய விஷயம்தான். 

பிரதிலிபியில் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திய சகோதர, சகோதரிகள் டாக்டர் பிரணிதா, புவனா ராஜபாண்டி, சாரு, சிவா குட்டி, கண்மணி, சந்தியா அருண்குமார், சுந்தர் ஜி, சின்ன ராஜூ, ASivarun varun, Rajesh Sen, சுவாதி, அனாமிக்கா, மனோ அம்மா உள்ளிட்ட (இன்னும் சில பேர்களை மறந்திருக்கலாம் மன்னிக்கவும்) அனைவருக்கும் நன்றி.

என் மற்ற பதிவுகளிலும்... அதாவது இனிப் பிரதிலிபியில் பகிர்ந்து கொண்டால்.. ஹி...ஹி... உங்கள் கருத்துக்களை அன்போடு எதிர்ப்பார்ப்பேன்... மறக்காமல் வாங்க... என்றும் உறவோடும் நட்போடும் பயணிப்போம். 

நன்றி.

பிக்பாஸ் நாளை முடியும்.
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. ஒரு வழியாய் முடிவுக்கு வருகிறதா பிக்பாஸ்?   அதைப் பார்ப்பதை, அல்லது நீங்கள் அதைப்பற்றி எழுதுவதை குற்றம் என்று நான் சொல்லவில்லை.  எனக்கு அதில் சுவாரஸ்யமில்லை என்றே சொன்னேன்.  நேற்றிரவு என் மகன்கள் அதைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  கடும் மைக்ரேனுடன் நான் ரூமில் கதவைச்சாத்திப் படுத்திருந்தேன்!

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...