மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 ஜூலை, 2018‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)


சில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு முறைப்படி வாசகர் பார்வை அதிகம் கிடைக்கப் பெறாத கதை... முடிவை மாற்றியிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கிறது இப்போது. பேய்க் கதைகள் எழுத நாம் என்ன பி.டி.சாமியா..? நமக்கு இதெல்லாம் வருமான்னு ஒரு முயற்சி அவ்வளவே. எது எப்படியோ உங்கள் பார்வைக்காக இங்கு கதை விரிக்கிறேன்.... உங்களின் உள்ளார்ந்த கருத்துக்களைச் சொல்லுங்க.

**************

ப்படி நள்ளிரவில் வந்து இறக்கி விடுவான் என்று ராமு நினைக்கவே இல்லை. கிளம்பிய நேரத்துக்கு மாலை ஆறு மணிக்கெல்லாம் தேவகோட்டை வரவேண்டிய பேருந்து, நாப்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் நகராமல், இடையில் டயர் பஞ்சரானது வேறு சேர, பனிரெண்டரை மணிக்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறான்.

தேவகோட்டையில் இருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தன் ஊருக்கு எப்படி இந்த இரவில் செல்வது என்பதே இப்போது அவனது உள்ளத்துக்குள் ஓடும் மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. அப்பா போன் பண்ணும் போதே எப்படியும் நடுராத்திரிதான் வந்து சேரும்போல நீங்க வந்து காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

நண்பன்... நண்பன் என்ன நண்பன், சின்னத்தை மகன் ராஜாவுக்கு போன் பண்ணின போது 'வேலையா திருச்சிக்கு வந்திருக்கிறேன் மாப்ள... ரெண்டு நாளாகும் வர' என்று சொல்லிவிட்டான்.

அண்ணன் சுப்பு இருந்தால் எந்த நேரம் என்றாலும் வந்து விடுவான். அவனும் சென்னைக்கு வேலைக்குப் போய் ஒரு  மாதம்தான் ஆகிறது.

என்ன செய்யலாம்...? ஆட்டோக்காரர்களைக் கூப்பிட்டால் அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நான் வரலைங்க... என்பார்கள்.  டாக்சிக்காரர்களோ ஒண்ணுக்கு மூனா வாடகை கேப்பார்கள். பெரும்பாலும் பொணம் ஏத்தும் வண்டிகளே வாறேன்னு சொல்லுவாங்க...

சுந்தரப்பய வீட்டுலதான் இருப்பான் ... அந்த நாய்க்குப் போனடிச்சா எடுக்கவே மாட்டேங்குது... மூதேவி தூங்குச்சுன்னா கும்பகர்ணந்தான்... இப்ப என்ன செய்யிறது என்ற பலமான யோசனையுடன் சங்கர் டீக்கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்தான்.

ராமு சரியான பயந்தாங்கொள்ளி என்று பெயரெடுத்தவன்... பத்தாவதில் மைக்கேல் சார்க்கிட்ட டியூசன் படிச்சப்போ ஆறு மணி இருட்டுல வீடு வர்றதுக்கே வேர்த்து விறுவிறுத்துப் போய் வருவான். அதுவும் சுடுகாடு ரோட்டை ஒட்டியிருப்பது அவனது பயத்துக்கு மேலும் பயம் சேர்க்கும். டியூசன் விட்டு வரும்போதுதான் மருந்தக் குடிச்சிச் செத்த மேல வீட்டுச் சந்திரன எரிச்சிக்கிட்டு இருந்தாக.... வந்து விழுந்தவன்தான்... மூணு நாள் காய்ச்சல்ல கிடந்தான்.

'நீ என்ன சின்னப்புள்ளையாடா.... உங்கண்ணன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வரச்சொன்னாலும் வருவான்... நீ என்னடான்னா இப்படிப் பயப்படுறே'ன்னு அம்மா திட்டினாலும் அவனோட பயம் மட்டும் போகவேயில்லை.

டவுனுல ராத்திரி எத்தன மணிக்கு வேணுமின்னாலும் நடந்து போகலாம். அங்க பேய்க்கதைகள் எல்லாம் அதிகமாக இருப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அப்படி இருட்டில் நடக்க முடியுமா என்ன...? எத்தனை பேய்க் கதைகள்... அதுபோக வில்லுக்கம்பு வெள்ளச்சாமி, முனீஸ்வரன்னு சாமிகளின் கதி கலங்க வைக்கும் கதைகள் வேறு...

எப்பத் தனியாகப் பயணிக்கிறானோ அப்பல்லாம் அவனுக்கு இந்தக் கதைகளும் நண்பர்கள் சொன்ன கதைகளும் ஞாபகத்தில் வர, முகத்தில் திட்டுத்திட்டாக வியர்க்க ஆரம்பிக்கும்... வாய் தன்னை அறியாமல் கந்தர் சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். கவசம் சொன்னால் பயம் போகும் என்பது அவனின் நம்பிக்கை.

சரி ஆட்டோக்காரனிடம் கேட்டுப் பார்ப்போம்... எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாமென்ற முடிவோடு அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனான்.

'அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நேத்து நல்ல மழை இங்க... உங்க ஊரு ரோடு ரொம்ப மோசம்... இப்ப தண்ணி வேற கிடக்கும்... காசுக்கு ஆசைப்பட்டு வந்து லோல்பட  விரும்பலை... வண்டி வராது' என்றான் முழுக்குடியில் நின்ற ஆட்டோக்காரன். அவன் சொன்னதையே மற்றவர்களும் சொல்ல, சரி நடக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவன் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அப்போது அப்பா அழைத்தார்... 'ம்... இப்பத்தான் வந்தேன்... ஆட்டோல்லாம் வர மாட்டேங்கிறானுங்க...நடந்து வந்திடுறேன்.' என்றான்.

'நீ அங்கயே நில்லு நான் வர்றேன்... எம்புட்டுத்தூரம் நடந்து வருவே' என்றவரை இந்த நேரத்துல நீங்க எதுக்கு வர்றீங்க... உங்களுக்கு ராத்திரியில கண்ணும் சரியாத் தெரியாது... மழையால ரோடெல்லாம் மோசமா வேற கிடக்காம்... நான் மெல்ல நடந்து வந்துடுறேன்... அரை மணி நேரத்துல வந்துருவேன்...' என்று அவரைத் தடுத்துவிட்டு நடந்தான்.

என்னென்னமோ நினைவுகள் மனதுக்குள் எழ, நடப்போமா வேண்டாமா... என்ற யோசனையும் மெல்லத் தலை தூக்கியது.

'நாம என்ன சின்னப்பிள்ளையா... ஆம்பளை... இனி இருட்டுக்குப் பயந்துக்கிட்டு இருந்தா கேவலமா இல்லை...' என்று வீராப்பாய் மனசுக்குள் நினைத்தவன் 'நடடா ராமு... நீ ஆம்பளை' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

தேவகோட்டையை விட்டு அவனோட ஊருக்குப் பிரியும் கிளைச்சாலையில் இறங்கிவனை இருட்டு தனக்குள் இழுத்துக் கொண்டது. விளக்கொளி விடுத்து இருளில் இறங்கும் போதே 'கதக்' என்றது மனசு.

இன்னும் இருட்டுப் பழகவில்லை என்பதால் மெல்ல அடியெடுத்து வைத்தான். வலது காலை வைத்த இடத்தில் தாவு இருந்திருக்கும் போல அதில் கிடந்த தண்ணிக்குள் 'சதக்'கென கால் இறங்க, 'சை...  இந்த ரோட்டைப் போட்டுத் தொலைய மாட்டேங்கிறானுங்க... காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போட்டா ரோடெங்கிட்டுப் போடுவானுங்க...' என் கடுப்போடு சற்று சத்தமாகவே சொன்னான்.

இருட்டு பழகிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தான், ரோட்டோரத்தில் குட்டையாய் தேங்கி நின்ற தண்ணிக்குள் கிடந்து கத்தும் தவளைகளின் 'கொர்ர்ர்... கொர்...' என்ற சத்தம் பயத்துக்கு தூபம் போட, மொபைலில் சாமிப் பாடல்களைத் தேடி 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' என்ற பாடலை ஓடவிட்டு இயர் போனை காதில் மாட்டிக் கொண்டான்.

நடையில் வேகம் சைக்கிளில் இருந்து டிவிஎஸ் 50-க்கு மாறியது.

லேசான குளிர் சிகரெட் கேட்டது... மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தவனுக்குள் மெல்ல மெல்ல பய நினைவுகள் மேலெழும்ப, நினைவுகளை மாற்ற முயற்சித்துத் தோற்றான்.

சின்ன வயதில் தன் வயதொத்த, தங்களுடன் ஓடிப்பிடிச்சி விளையாண்ட சித்ராவின் திடீர் மரணமும், ராத்திரியோட ராத்திரியா எரித்துவிட்டு வந்ததும் சாமி பாட்டையும் தாண்டி மனசுக்குள் எழ, சித்ரா எரிந்த தீயின் நாக்குகள் நெஞ்சுக்குள் சுட, படபடப்பு கூடியது. சை... எதுக்கு இப்ப தேவையில்லாத நினைவுன்னு நினைச்சிக்கிட்டே மனசுக்குள் வேறு நிகழ்வுகளை கொண்டு வர முயற்சித்துத் தோற்றான்.

செத்ததுக்கு அப்புறம் பேயா ஆட்டம் போட்டு சகட்டுமேனிக்கு அம்புட்டுப் பேரையும் பிடிச்சி ஆட்டுன சவுந்தரம் மனசுக்குள் வர,  'டேய் பேராண்டி... இருட்டுக்குள்ள போறியே... அப்பத்தா தொணக்கி வரவாடா...'ன்னு முதுகுக்குப் பின்னால குரல் கேட்பது போல் தோன்ற, பயம் அவனைச் சூழ்ந்து கொண்டது. 

திடீரென அவனுக்கு நாவறட்சி எடுத்தது, முதுகில் தொங்கிய பேக்கில் வைத்திருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து நடந்தபடியே... அதுவும் வேகமாக நடந்தபடியே மடக் மடக்கென குடித்ததில் சட்டையை நனைத்துக் கொண்டான்.

'இங்கருடா... சுப்பிரமணி தூக்குப் போட்டுச் செத்தானுல்ல... அந்த மரத்துப் பக்கம் மட்டும் போவாதே... பிடிச்சிக்கிறானாம்... அவன் பிடிச்சா கயரை எடுத்துக்கிட்டு சாகப்போறேன்னு போறாங்களாம்...' எட்டாவது லீவுல ஆயா வீட்டுக்குப் போனப்போ மாமா மகன் கருப்பட்டி கண்ணன் சொன்னது இப்ப ஞாபகத்துக்கு வந்தது.

ரோட்டோரத்தில் நின்ற ஆலமரம் தலை விரித்து  நிற்கும் பேய் போல் தெரிய, இதயம் ஏறுக்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

அவன் நடையின் வேகம் இப்போது டிவிஎஸ் 50-ல் இருந்து ஹோண்டாவுக்கு மாறியிருந்தது.

அடக்கி வைத்த மூத்திரத்தை அடிச்சே தீர வேண்டும்... இனித் தாங்காது... எங்கே பயத்தில் பேண்ட்லயே போயிருவோமோ என்ற நிலை வந்தபோது நின்று அடிக்கப் பயம்... கண்ணை மூடிக்கொண்டு ஜிப்பைக் கழட்டியவனின் கால்கள் நிற்க மறுத்து நடக்க... யாருதான் ரொம்பத் தூரம் பேயிறாங்கன்னு பாப்போமா என அவன், முருகன், ரமேஷ் மூவரும் போட்டி போட்டது ஞாபகம் வர லேசான சிரிப்பும் வந்தது. நடந்தபடியே பெய்ய ஆரம்பித்தான்.

சுப்பிரமணியோட தோப்புக்கிட்ட போகும் போது உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. சின்ன வயசுல இருந்து இந்த இடத்துல உருளைக்கிழங்கு வாசம் அடிச்சிக்கிட்டேதான் இருக்கு... நல்லபாம்பு இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துருச்சு போல என்று நினைத்துக் கொண்டான்.

பய நினைவு மாறியதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. தூரத்தில் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் கோபுர விளக்குகள் தெரிய ஆரம்பிக்க, சாமியைக் கும்பிட்டுக் கொண்டான்.

அவனின் நடையின் வேகம் மட்டும் குறையவே இல்லை.

பள்ளிக்கூடம் படிக்கும் போது ராமசாமி ஐயா செத்ததுக்கு மண் முட்டியில வச்ச தண்ணியை பயலுக எல்லாம் சேர்ந்து கல்லெடுத்து எறிஞ்சி உடைச்சதும் புகையிலையை எடுத்து ஓணானைப் பிடித்து அதுக்கு வச்சிவிட்டு கிறுக்குப் பிடிச்சி ஓட வச்சதும் ஞாபகம் வர, 'ஏலே சுப்பையா மவனே... எம் முட்டித் தண்ணி எங்கடா... எனக்கு வேணும்.... தந்துட்டுப் போடா... போயில வாங்கித் தாடா.... வாயி நமநமன்னு இருக்கு 'ன்னு காதருகில் வந்து கேட்பது போல் தோன்ற பயம் மறுபடியும் மனசுக்குள் 'பச்சக்' என ஒட்டிக் கொண்டது.

சாமி பாட்டுக் கேட்டாலும் மனசுக்குள்ள ஆவி ஆட்டமாவே இருக்கே... சை... எதை நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிறமோ அதையே நினைக்கச் சொல்லுது. எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இதுக மட்டும்தான் ஞாபகத்தில் வரணுமா என்ன...  பேய், பிசாசுன்னு சுத்திச் சுத்தி வருதே இந்த மனசு.... அவனுக்கு மனசு மீது கோபம் வந்தது.

சிறிது தூர நடைக்குப் பிறகு அவனைச் சுற்றி மல்லிகைப் பூவின் வாசம் அடிப்பது போல் தோன்றியது.  உதடு வறண்டு போக,  நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. சம்பந்தமில்லாம மல்லிகைப் பூ வாசம்... கொலுசு சத்தமும் கேக்குமோ என இயர் போனை எடுத்துவிட்டு கேட்டான். சில் வண்டுகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் மட்டுமே கேட்டது. அப்ப மல்லிகை வாசம் எப்படி...?

'ராமு... நல்லாயிருக்கியா... பாத்து எம்புட்டு நாளாச்சு... நீயெல்லாம் சந்தோஷமாத்தான் இருப்பே... நாந்தான்டா... சந்தோஷமில்லாமா... உடம்பெல்லாம் எரியுதுடா... என்னால முடியலைடா...' கோபத்தில் தீவைத்துக் கொண்டு செத்துப் போன பெரியப்பா மக அகிலா அழுது கொண்டே பேசுவது போல் இருந்தது. அக்காவுக்கு மல்லிகைப் பூன்னா உயிருல்ல என்பது ஞாபகத்தில் வர 'காக்க காக்க கனகவேல் காக்க' என வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட வேக நடை ஓட்டமாக மாறியது. குளிராக இருந்த போதிலும் வியர்வையில் தெப்பலாய் நனைந்திருந்தான்.

செல்லையாவின் ஆட்டுக் கசாலையைக் கடந்தபோது 'ஒரு காலத்துல எம்புட்டு ஆடு அடைச்சிக் கிடக்கும்... அவரு செத்ததுக்கு அப்புறமே எல்லாம் போச்சு... இப்பப் பாரு... கசாலை இருந்ததுக்கு அடையாளமா நாலு கல்தூண்தான் நிக்குது' தனக்குள் சொல்லிக் கொண்டவன்  அந்தக் கசாலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதானே செல்லையாய்யா செத்துப் போனாரு... முனி அடிச்சிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க... என அவரின் சாவுக்குப் பின்னே போன மனசை சனியன் பிடிச்ச மனசு எங்க சுத்துனாலும் அங்கதான் போயி நிக்கிது என மனசின் மீது கோபப்பட்டான்.

இன்னும் கொஞ்சத் தூரம்தான் ஓடியாச்சும் வீடு போய் சேர்ந்துடணும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு சுடுகாட்டைக் கடக்கணுமே என்ற நினைவு வர, பயம் இன்னும் அதிகமாகியது. உடம்பில் உதறல் எடுப்பதை உணர்ந்தான்.

'அப்பாவ மெல்ல மெல்ல வரச் சொல்லியிருக்கலாம்... கொஞ்சத் தூரம் நடந்து வந்திருந்தாக்கூட இந்நேரம் அவரு வந்திருப்பாரு.... என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு... வந்துருவேன்னு வெத்துப் பந்தா வேற... பயத்துலயே செத்துருவேன் போலவே...'  என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு முன்னே பத்தடி தூரத்தில் திடீரென வெள்ளையாய் ஒரு உருவம் நடந்து செல்வது தெரிய, அவனுக்குத் திக் என்றது.

நின்று விடலாமா என்று யோசித்தவனுக்குப் பின்னால் இருந்து 'பயமா இருக்கா பேராண்டி.... நீ இந்த கயித்துக் கட்டில்ல படுத்துக்க... நான் உள்ள கெடக்க பலகையில படுத்துக்கிறேன்... வா' என செல்லையாய்யா கூப்பிடுவது போல் தோன்ற, படபடப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எகிறியது.

நடையின் வேகத்தை அவன் அதிகமாக்கிய போது முன்னே நகர்ந்த வெள்ளை உருவமும் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

'நாந்தான் வீராப்பா வரவேண்டான்னு சொன்னேன்... அம்மாவுக்கு எங்கே போச்சு அறிவு... அவன் பயப்படுவான்... நீங்க மெதுவாப் போய் கூட்டிக்கிட்டு வந்திருங்கன்னு அப்பாவை அனுப்பியிருக்கலாம்தானே... வீட்டுக்குப் போய் வச்சிக்கிறேன்...' என அந்த நேரத்திலும் அம்மா மீது கோபப்பட்டான்.

திடீரென கோவில் மாடொன்று சடச்சடவென ரோட்டைக் கடக்க, ரோட்டோரத்தில் இருந்த காரஞ்செடிக்குள் சரச்சரவென சத்தம் கேட்க, அவனுக்குத் ‘திடுக்’ தூக்கிவாரிப் போட்டது. பயம் போக தூத்தூ எனத் துப்பினான்.

அந்த திடுக்கில் காதில் மாட்டியிருந்த இயர் போனும் கழண்டு கொள்ள, தூரத்தில் நரி ஒன்று ஊளையிடுவதும். அதைத் தொடர்ந்த அந்தையின் அலறலும் கேட்க, 'முனியய்யா... என்னைப் பெத்த அப்பனே...  பத்தரமா வீடு கொண்டு போய்ச் சேரு... உனக்கு நாளக்கி தேங்காய் வாங்கி உடைக்கிறேன்' என வேண்டியபடி நடையின் வேகத்தைக் கூட்டினான். அவன் முன்னே நடந்த வெள்ளை உருவம் இன்னும் முன்னேதான் போய்க் கொண்டிருந்தது.

முன்னால் பார்க்கவும் பயமாக இருந்தது... பின்னால் திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. சுற்றிலும் கேட்கும் சப்தங்கள் வேறு பயத்தைக் கூட்ட, மீண்டும் இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு, ஆசுவாசத்திற்கு கொஞ்சம் தண்ணீர் குடித்து, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சுடுகாடு நெருங்க நெருங்க 'தம்பி சிகரெட்டு ஒண்ணு எனக்குக் கொடுத்துட்டுப் போவே' என்று யாரோ கேட்பது போலவும், 'எனக்கு மல்லிகைப் பூ வாங்கியாந்தியா' என அகிலாக்கா கேட்பது போலவும் 'வாடா ஓடிப்பிடிச்சி விளையாடலாம்' என்று சித்ரா கூப்பிடுவது போலவும் பிரமை ஏற்பட, அவனை அறியாமல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான்.

என்ன ஓடினாலும் வெள்ளை உருவத்தைத் தாண்ட முடியவில்லை. அது அவனுக்கு முன்னே நகர்ந்து கொண்டுதான் இருந்தது.

பின்னால் ஏதோ ஒரு வண்டி வருவது போல் சத்தம் கேட்க, இந்த நேரத்துல யாரு... பேயா இருக்குமோ... செத்தவன் எவனாச்சும் வண்டி ஓட்டிக்கிட்டு வாரானோ... அய்யோ... காலையில என்னைய பொணமாத்தான் பார்ப்பாங்க போலயே.... செல்லையாய்யா செத்த மாதிரி முனி அடிச்சிருச்சின்னு சொல்லுவாங்களோ... என்று நினைத்தவனுக்கு உடம்பெல்லாம் சில்லென வேர்க்க, இதயம் எக்ஸ்பிரஸ் ரயில் போல் படபடக்க ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான்.

அவனருகில் வண்டி வந்த போது. 'அடே ராமுவா... உயிருக்குப் பயந்து ஓடும் போதே நினைச்சேன்... நீனாத்தான் இருக்கும்ன்னு.... ஆமா மாமவ வரச் சொல்லியிருக்கலாமுல்ல... பயந்தோளிப் பயலே.... இந்த ஓட்டம் ஓடுறே... நல்லவேள சுடுகாட்டுக்கிட்ட இன்னும் போவல... அங்கிட்டு போயிருந்தா பயத்துல மயங்கி விழுந்திருப்பேன்னு நினைக்கிறேன்... வா... வண்டியில வந்து ஏறு....' எனச் சிரித்தார் செல்லையாய்யா பேரன் ராஜேந்திரன்.

ராஜேந்திரனை அனுப்பி வச்ச முனியய்யாவுக்கு மனசுக்குள்ள நன்றி சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறி அவர் தோள் வழியாக மெல்ல முன்பக்கம் பார்த்தேன்.

வெள்ளை உருவத்தைக் காணோம்... 'அப்ப நம்மூருக்கு ரோடு இல்ல... குளக்கால் வழியாத்தான் வரணும்...  கடையடச்சிட்டு இருட்டுக்குள்ள நான் வரும்போது எனக்கு முன்னால ஒரு வெள்ள உருவம் வர்ற மாதிரியே இருக்கும். சரியா நம்ம முனியய்யா கோவில்கிட்ட வரும்போது மறைஞ்சிரும்... அது நம்ம முனியய்யாதான் தெரியுமா...' அப்படின்னு அப்பா எப்பவோ சொன்னது இப்ப ஞாபகத்தில் வர... அப்படியும் இருக்குமோ... இல்ல வில்லுக்கம்பு வெள்ளச்சாமி... அதுவுமில்லேன்னா செல்லைய்யாய்யா மாதிரி யாராச்சும்.... நினைவு மீண்டும் பேய்க்குள் பயணிக்க, பயத்தில் ராஜேந்திரனின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு  கண்களை இறுக மூடிக் கொண்டான்.

'சிவப்பி செத்த கதை தெரியுமா...?' என ராஜேந்திரன் ஆரம்பிக்க, சுடுகாட்டைக் கடக்க வேண்டுமே என்ற நினைப்பே வயிற்றைக் கலக்க சிவப்பி கதை வேறயா என்று நினைத்தவனுக்குப் பின்னே மல்லிகைப் பூ வாசம் தொடர ஆரம்பித்தது.
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

 1. 'பயம்' என்ற ஒரேயொரு மையக்கருத்தை வைத்துக்கொண்டு மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் குமார்!

  பதிலளிநீக்கு
 2. எவ்வளவு நினைவுகள்! எத்தனை பயங்கள்!
  எப்படியோ முனியய்யா கூட துணைக்கு வந்து இருக்கிறார், அடுத்து துணைக்கு உறவினரையும் அனுப்பி விட்டார்.

  கதை அருமை.

  பதிலளிநீக்கு
 3. பயத்தை பரவ விட்டிருக்கிறீர்கள். அருமையோ அருமை.

  பதிலளிநீக்கு
 4. திக் திக்ன்னு தான் படித்தேன்...

  அருமை..

  பதிலளிநீக்கு
 5. எழுத்தில் இந்த அளவு பயத்தைக் கொணரமுடியுமா என வியந்தேன், இல்லை பயந்தேன்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...