மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 ஜூலை, 2018மனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்

ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவது அண்ணனும் தம்பியும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்ததால் எல்லாருமாக இருந்து மகிழ்ந்த நாட்கள் முகநூல், வலைப்பூ என எதிலும் நுழையாமல் மகிழ்வாய் நகர்ந்தன. 

குடும்பத்துடன் எங்கும் வெளியில் செல்லவில்லை, நண்பர்களைப் பார்க்கவும் செல்லவில்லை. எந்த வேலையாக, எங்கு சென்றாலும் வண்டியில் எனக்கு முன்னே விஷால் ஏறிக் கொள்வான்.எப்போதும் என்னோடு பயணித்தவன் அவன் ஒருவனே. அதனால்தான் இந்த முறை அவனே நிறைய அழுதான்...:( பாப்பா பத்தாவதில் அடியெடுத்து வைப்பதால் அவருக்கு வகுப்பும் டியூசனும் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ள, பக்கத்து ஊருக்குக் கூட எங்களுடன் வரமுடியவில்லை.

பழனி ஐயாவைக் கூட ரோட்டில் வைத்துத்தான் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னவன் வரும் வரையிலான போராட்டங்களில் அங்கும் செல்லவில்லை. அம்மாதான் ரொம்ப பாசமாக இருப்பார் எப்போதும்... இந்த முறை அவரைப் பார்க்கவில்லை. குலதெய்வம் கோவிலான அழகர் கோவிலுக்குக் கூட விடுமுறையின் இறுதித் தினங்களே செல்ல வாய்த்தது. அன்றுதான் மனைவியின் பிறந்தகத்திலும் தலைகாட்டி வந்தோம்.

குடந்தை சரவணன் அண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், அகல் சத்யா, திண்டுக்கல் தனபாலன் அண்ணன் மீரா செல்வக்குமார் அண்ணன் என பலரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது ஆனால் அதற்கான நாட்கள் அமையவில்லை. அப்படியிருந்தும் முத்துநிலவன் ஐயாவின் மகன் நெருடா இங்கிருப்பதால் ஊருக்குப் போய் வாருங்கள் என்று சொல்லியிருந்தார். அதற்கான நேரமும் நாளும் தள்ளிப் போக, ஒருநாள் போய் வந்தே ஆகவேண்டுமென  ஐயாவுக்கு போன் செய்தால் மாலை நாலு மணிக்கு திருச்சி போறேன் என்றார். அன்றைய நாளை விட்டால் அடுத்த நாள் செல்ல வாய்க்காது என்பதால் அதற்கு முன் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.

ஒரு மணி நேரம் மிஞ்சிப்போனால் ஒண்ணே கால் மணி நேரத்தில் போயிடலாம் என முடிவு செய்து உறவினர் கார் ஓட்ட, பாப்பா தவிர்த்து நாங்கள் மூவரும் கிளம்பினால் தேவகோட்டையில் இருந்து தேவகோட்டை ரஸ்தா வரை ரோடு பணி.... அதற்குள் நீந்திச் சென்று  புதுகை அடைந்து மீண்டும் தஞ்சாவூர் ரோட்டில் மெல்லப் பயணித்து ஐயா வீட்டை அடையும் போது மணி நான்கை நெருங்கியிருந்தது.

எங்கே வருகிறீர்கள் என அடிக்கடி போன் செய்து... வழி சொல்லி... மாடியில் காத்து நின்று எங்களை வரவேற்ற ஐயா, திருச்சி  செல்லத் தயாராக இருந்தாலும் எங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி பேசிக் கொண்டிருந்தார்.... அம்மா இருந்தால் உங்களை மிகச் சிறப்பாக உபசரித்திருப்பார், நண்பர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லிக் கொண்டே மிக்ஸர், முறுக்கு கொடுத்து காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்து மிகச் சிறப்பாக உபசரித்தார்.

மாடிக்கு அழைத்துச் சென்று புத்தகங்களைக் காட்டி, நெருடாவுக்கு புத்தகங்கள், எனக்கு... விஷாலுக்கு என தனித்தனியாக கொடுத்தபோது புத்தகங்களைப் பார்த்து விஷாலுக்கு ஆச்சர்யம்... நம்ம ஐயா (பழனி ஐயா) வீட்டுல இருக்க மாதிரி இருக்குப்பா என வியந்தான். நம்ம வீட்டிலும் இது போல புத்தகங்கள் வாங்கி வைக்கணும்ப்பா என்றேன் பின்னர் வீடு திரும்பும் போது.

ரொம்ப நேரம் பேசவில்லை... ஒரு போட்டோவும் எடுக்கவில்லை... பேசிய கொஞ்ச நேரத்தில் எங்களை தன் அன்புக்குள் அழுத்தமாய் அணைத்துக் கொண்டார் ஐயா. உங்க கதைகள் அருமையா இருக்கு... நல்லா எழுதுறீங்க... புத்தகமா எப்ப கொண்டு வரப்போறீங்க என்று கேட்டார். நம் கதை நல்லாயிருக்கு என அவர் சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.

மீரா செல்வக்குமார் அண்ணனையும் சந்திச்சிடலாம்ன்னு நினைச்சேன். அவர் திருச்சியில் இருப்பதாய் ஐயா சொன்னார்கள். இந்த முறையும் அண்ணனைப் பார்க்க முடியாதது வருத்தமே.

இந்த முறை மிகவும் ஒட்டிக் கொண்டது எங்கள் விஷால் வளர்க்கும் ரோஸிதான்... என்ன ஒரு பாசம் அதற்கு...

******

இப்போது மனிதர்களை கேன்சர் கொன்று கொண்டிருக்கிறது. ஊரில் இருக்கும் போது நிகழ்ந்த இழப்புக்களில் அதிகம் கேன்சரால்தான். அதுவும் சிறிய வயதுடையோரெல்லாம் பலியாவது வேதனை. 

******

கருவேல நிழல் என்னும் வலைப்பூவில் கவிதைகள், கதைகள், புரையேறும் மனிதர்கள் என எழுதிக் கொண்டிருந்து விட்டு சில வருடங்களுக்கு முன்னர் சிவகங்கையில் போய் செட்டிலான பா.ராஜாராம் அவர்களின் மரணச் செய்தி கேட்ட போது அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. என்னைப் போல் பலரை மகனே என்று அழைத்த சித்தப்பா அவர். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

******

நம்ம கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் அப்பா இறந்த செய்தியை முகநூல் மூலமாக அறிய முடிந்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்பாவின் இறப்பில் மீளாத் துயரில் இருக்கும் ஐயா இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

******
தீர்வில்லா பிரச்சினைகள் இல்லை... எல்லாப் பிரச்சினைகளும் தீர்வு உண்டு. நாளைய நாள் நல்லதாய் அமையும் என்ற நம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறேன். விரைவில் எல்லாம் சுகமாகும் என்ற எண்ணம் மனசுக்குள் ஆலவிருட்சமாய்....

-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

 1. தங்கள் உள்ளத்தை மொழிபெயர்த்து உள்ளீர்கள்!

  பதிலளிநீக்கு
 2. பழனி ஐயா என்பது பழனி கந்தசாமி ஐயாவா? நண்பர்களை சந்தித்தது நெகிழ்ச்சி. ரோஸி என்பது பூனையா?

  விடுமுறை முடிந்து ஊர் திரும்பியாச்சா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி ஐயா என்பது எனது பேராசான்... என்னை எழுத வைத்தவர்.... கல்லூரி விழாவில் தன் மகனெனச் சொன்னவர்... அவர்கள் வீட்டில் இப்போதும் நான் ஒரு பிள்ளையாய்... அவரைக்கூட வீட்டில் போய் சந்திக்க முடியவில்லை.

   ரோஸி எங்க வீட்டு நாய். விஷால் வளர்க்கும் செல்லக்குட்டி... அவன் மடியில் படுத்துக் கொள்ளும். அதைக் குளிப்பாட்டுவதும் சோறு வைப்பதும்... மாலை பள்ளியில் இருந்து வந்ததும் அதைப் பிடித்துக் கொண்டு நடந்து ஊர் சுற்றி வருவதும் என அவனின் மொத்தப் பொழுது போக்கு ரோஸிதான்.

   உங்களிடம் பேசிய இரண்டு மூன்று நாளில் கிளம்பிட்டேன் அண்ணா...

   பிரச்சினைகள் இன்னும் பேரலையாய்... எழுத படிக்க எண்ணமில்லை... நேற்றைய தனிமை எழுத வைத்தது.

   பேரன்பும் பெருமகிழ்ச்சியும் அண்ணா

   நீக்கு
 3. பதில்கள்
  1. எல்லாரையும் சந்திக்கும் ஆசையிருந்தது ஐயா...
   தொடர்புக்குள் வரமுடியாத சூழல். எங்கள் (அண்ணன்) மகள் திருமணம்... எங்கள் (தம்பி) இல்ல புதுமனை புகுவிழா, எங்கள் ஊர் அம்மன் திருவிழா, மனைவியின் ஊர் அம்மன் திருவிழா என ஊரில் இருக்க வேண்டிய சூழல். முகநூல் பக்கமோ வலைப்பக்கமோ வரவில்லை... அதனால்தான் எங்கும் வரமுடியவில்லை.

   ஐயாவின் சந்திப்பு கூட அவரின் மைந்தர் நெருடாவின் கட்டாயத்தின் பேரில் நிகழ்ந்தது. அவருக்கான புத்தகங்கள் எடுத்த வர வேண்டியிருந்ததால் இந்தப் பயணமும் சந்திப்பும் அமைந்தது.

   அடுத்த முறை தஞ்சாவூருக்கு விருந்துக்கே வந்துடுறேன் ஐயா...

   பேரன்பும் பெருமகிழ்ச்சியும் ஐயா

   நீக்கு
 4. சற்றே இடைவெளிக்குப் பிறகு பதிவு - தொடரட்டும் பதிவுகள். ஊருக்குச் சென்றுவிட்டால் நானும் பதிவுகளில்/இணையத்திலிருந்து விலகியே இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அண்ணா ஊருக்குப் போனால் இணையப் பக்கம் வருவதில்லை.

   இதற்கு முன் அகலில் வெளியான கட்டுரை, பிரதிலிபியில் எழுதிய கதை என இரண்டு பகிர்ந்தேன்.

   பேரன்பும் பெருமகிழ்ச்சியும் அண்ணா

   நீக்கு
 5. அடுத்த முறையாவது சந்திக்கும் வாய்ப்பு கிட்டுமா...?

  பதிலளிநீக்கு
 6. குமார் வாங்க. எப்படி இருக்கீங்க. மகிழ்ச்சி கொஞ்சம் சோகம் என்று உங்கள் ஊர்ப்ப்யணம் முடிந்திருக்கிறது. என்றாலும் குடும்பத்துடன் எனும் போது தனி மகிழ்ச்சிதான் இல்லையா.

  துளசிதரன், கீதா

  கீதா: ரோஸி நம்ம பைரவி செல்லம் என்று நினைத்தேன் அதே...விஷாலுக்கு நல்ல நண்பியாக இருக்கும். சூப்பர் குமார் !! வீட்டில் ஒரு செல்லம் இருந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சிதான்...மிக்க மகிழ்ச்சி செல்லம் வளர்ப்பதற்கு விஷாலுக்குச் சொல்லிவிடுங்கள் இதனை.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...