மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 17 செப்டம்பர், 2016அகல் மின்னிதழ் கட்டுரை : குழலியின் தேவன்

வந்தியத்தேவனும்  வசீகரமான பெண்களும்

Picture

பொதுவாகவே கணவன் மனைவி சண்டையில் 'என்னை மானமுள்ள பொண்ணு என மதுரையில கேட்டாக'ன்னு மனைவி ஆரம்பித்தாலோ அல்லது ‘யாரென்று தெரிகிறாதா?' என கணவன் ஆரம்பித்தாலோ, 'ஆரம்பிச்சிட்டாங்க அவுக வரலாறை உங்க வரலாறை ஒண்ணும் நாங்க கேக்கலை' என்ற வார்த்தை வந்து விழ, சண்டை சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஆமா இப்ப எதுக்கு இதுன்னு தானே யோசிக்கிறீங்க... எனக்கு வரலாறுகள் ரொம்பப் பிடிக்கும். சண்டை போட இல்லை. எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ளவே! ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல’ என்று எங்க ஊர் பெரிசுகள் ஆரம்பித்தால் அதை விரும்பிக் கேட்பவன் நான். எனக்கு வரலாற்றுக் கதைகளின் மீது காதல் என்றே சொல்லலாம். அந்த வரலாற்றோடு ஒன்றி வாசித்து அதை முழுவதும் உள் வாங்கிக் கொள்வதில் அலாதி பிரியம். அப்படி ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது சமீபத்தில் வாசித்த கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்'.
               
பொன்னியின் செல்வனை வாசித்தவர்களுக்கு வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, ஆழ்வார்கடியான், மதுராந்தகர், ஆதித்த கரிகாலன், வானதி, அருள்மொழிவர்மர், பூங்குழலி, கந்தமாறன், மணிமேகலை, ஊமை ராணி, சேந்தன் அமுதன், பழுவேட்டையர்கள் போன்றவர்களில் ஒருவரை அதிகமாகப் பிடித்திருக்கும் அல்லது இவர்களை விடுத்து மற்றவர்களில் யாரையேனும் பிடித்து இருக்கக் கூடும். எனக்குப் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது வந்தியத்தேவன். கதையின் ஆரம்பத்தில் பரந்து விரிந்து கிடந்த வீர நாராயணன் ஏரிக் கரையில் குதிரையின் மீது வந்த வீரன் என் மனசுக்குள் வந்து அமர்ந்துக் கொண்டான். அவன் பின்னே இலங்கை வரை சுற்றி வந்த மனசு கதையை படித்து முடிக்கும் போது அவனை இரண்டாம் இடத்தில் வைத்து சம்புவராயரின் மகளான கந்தமாறனின் தங்கையும் கடம்பூர் மாளிகையின் இளவரசியுமான மணிமேகலையை முதலிடத்தில் வைத்துப் போற்றியது என்பதே உண்மை இங்கு நாம் வந்தியத்தேவனும் அவனுடன் பழகிய அல்லது அவன் பழகிய மிக முக்கியமான வசீகரிக்கும் அழகு கொண்ட அந்த நாலு பெண்களைப் பற்றி பார்ப்போம். ​

வந்தியத்தேவன் இந்தக் காலத்து இளைஞன் போல வாழ்க்கையை சந்தோஷமாக வாழ நினைப்பவன். இந்தக் கதையில் அவனுக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருந்தாலும் அவன் பெண்களைப் பார்த்ததும் இவள் நம் வாழ்க்கைத் துணைவி ஆக மாட்டாளா என்று ஏங்கும் சாதாரண இளைஞன் தான். மணிமேகலையைப் பார்க்கும் போதும், குந்தவையை பார்க்கும் போதும், நந்தினியைப் பார்க்கும் போதும், ஏன் பூங்குழலியைப் பார்க்கும் போதும் கூட அவன் மனசுக்குள் 'உன் மேல ஒரு கண்ணு’ என்று பாட்டு ஓடி வண்ணத்துப் பூச்சி சிறகடிக்கிறது. வானதியை மட்டும் அப்படி அவன் பார்க்கவில்லை அதற்கு காரணம் குந்தவையின் மேல் வைத்த கண்ணை அவன் வானதி பக்கம் திருப்பவில்லை என்பதை அறிந்தாலும் அவள் ராணியாகப் போகிறவள் என்பதை முன்னரே உணர்ந்து விலகிவிட்டான் போல என்ற எண்ணமும் நம்முள் எழத்தான் செய்கிறது.

சரி அந்த நாலு பெண்களைப் பார்த்தபோதும் அவன் மனதில் தன்னுடைய நாயகியாக்கிப் பார்த்தான் என்றாலும் முடிவில் அவன் குந்தவையின் நாயகனாகிறான். குந்தவையைப் பொறுத்தவரை அதிகாரமிடும் பெண்தான். ஆண்கள் அனைவரும் தன் ஆணைக்கு அடி பணிந்து கிடக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவளாக இருக்கிறாள். வந்தியத்தேவனுக்கு பொருத்தமான பெண்ணாக இருப்பது குந்தவையா அல்லது மற்ற பெண்களா என்று பார்த்தால் ‘தலையில எழுதியதை இனி மாற்றவா முடியும்’ என்றும் ‘பிடிக்காமல் செய்து கிட்டேன் ஆச்சு இருபத்தைந்து வருடம், குப்பை கொட்டிக்கிட்டுத்தான் இருக்கேன்’ என்றும் சலித்தபடி சந்தோஷ வாழ்க்கை நடத்துவது போல அல்லாமல் அதிகாரம் செய்யும் பெண்ணாக இருந்தாலும் வந்தியத்தேவனுக்கு பொருத்தமானவள் குந்தவை தான் என்பதை கதை அழுத்தமாக சொல்லிச் செல்கிறது. இருந்தாலும் வாசகனின் மனசுக்குள் மாற்று சிந்தனை என்ற எண்ணம் எழலாமே? நமக்கு எல்லாவற்றிலும் யோசிக்க, பேச, முடிவெடுக்க, சுதந்திரம் உண்டல்லவா? அதனால் வந்தியத்தேவனுக்குள் பட்டாம்பூச்சி பறக்க விட்ட மற்ற மூன்று பெண்களில் ஒருத்தியை மணமுடித்திருந்தால்? என எனக்குள்ளும் ஒரு எண்ணம் எழுத்தான் செய்தது. அது குறித்து கொஞ்சம் எழுதினால்? கற்பனை தப்பில்லையே...

வந்தியத்தேவன் முதலில் சந்திப்பது தன் நண்பன் கந்தமாறனின் தங்கையான மணிமேகலையை, தன் தங்கை குறித்து அவனிடம் நிறையச் சொல்லி அவளை  நீ தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்திருப்பவன், சோழப் பேரரசை கவிழ்க்க நினைக்கும் ஒரு சதியின் காரணமாக அதிலிருந்துப் பின் வாங்கி, ஒரு கட்டத்தில் வந்தியத்தேவனுக்கு எதிரியாகி இறுதியில் நண்பனாகிறான். நண்பன் மாறிய போதிலும் மணிமேகலை மீதான அன்பு அவனிடம் அப்படியே தான் இருக்கிறது. முதன் முதலில் பார்க்கும் போது அம்மாவின் பின்னே ஒளிந்து கொள்ளும் மணிமேகலை, பின்பு வந்தியத்தேவனுக்காக ஆதித்த கரிகாலனின் கொலையை தான் செய்ததாகச் சொல்வதும் அதன் காரணமாக பைத்தியம் பிடித்தது போல் ஆகி இறுதியில் வந்தியத்தேவனின் மடியில் மரணத்தைத் தழுவுகிறாள்.  

முதலில் காதலித்த பெண்ணோ அல்லது இவள் மனைவியாக வந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று நினைக்க வைத்த பெண்ணோ நம் இதயத்துக்குள் ஆயுள் வரை  நிறைந்திருப்பார். அவர்களை எப்படிப்பட்ட உறவு முறை வைத்து கூப்பிடும் சூழ்நிலை இருந்தாலும் மனசுக்குள் மட்டும் அந்த முதல் பிம்பம் ஓரமாக ஒளிர்ந்தபடி இருக்கும். குந்தவையைக் காதலித்தாலும் மணிமேகலையை சகோதரியாக பார்ப்பதாகச் சொன்னாலும் வந்தியத்தேவனுக்கு மணிமேகலை மீது ஒரு ஆத்மார்த்த காதல் உண்டு என்பதை உணரும் கட்டங்கள் பல இருக்கத்தான் செய்கிறது.

அடுத்ததாக அவன் சந்திப்பது நந்தினியை. பெரிய பழுவேட்டையரின் மனைவி. அந்த வயோதிகரை அவள் கணவனாக ஏற்றுக் கொள்ளக் காரணம் அரசியல்.... ஆதித்த கரிகாலனைப் பழி வாங்கவே அவள் பாண்டிய தேசத்தில் இருந்து சோழ நாட்டுக்கு வந்தாள். உடல் அழகிலும் பேச்சிலும் எதிரே இருப்பவரை சொக்க வைப்பதில் கில்லாடி. அப்படியொரு பேரழகியைப் பார்ப்பவர் அனைவரும் அவள் மீது காதல் பித்து கொள்வர். ஆதித்த கரிகாலன், கந்தமாறன்... என பலர் அவள் அழகில் தங்கள் நிலை மறக்க, வந்தியத்தேவன் அவள் மீது காதல் கொள்வதில் தவறில்லையே? நந்தினி தன் திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு முறை காய் நகர்த்துதை அறிந்தவர்கள் அவளை வெறுத்து ஒதுக்கலாம் என்று நினைத்தாலும் அந்தப் பேரழகில் மயங்கி மகுடிக்கு ஆடும் பாம்பாகி விடுவர். அவளைப் பார்க்கும் போதெல்லாம் வந்தியத்தேவனின் மனமும் பித்தம் கொள்கிறது. அவளுக்கும் இவன் மீது ஏதோ ஒரு நேசம். இவனால்தான் காரியம் ஆக வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே இவனைத் தப்பவிட்டு வருகிறாள். ஆதித்த கரிகாலனின் கொலையில் இவன் மாட்டிக் கொள்வது எதார்த்தமான நிகழ்வுதான். நந்தினிக்கு எடுத்துக்காட்டாய் பல அரசியல்வாதிகளைச் சொல்லலாம் இருந்தாலும் ‘தில்’ பட சொர்ணாக்கா கதாபாத்திரம் போல் எனக்குத் தெரிகிறார். (இது தவறாகக் கூட இருக்கலாமோ?)

அடுத்து ஜோசியரின் இல்லத்தில் வானதியுடன் குந்தவையைச் சந்திக்கிறான்.  குந்தவையைப் பார்த்ததும் நந்தினி, மணிமேகலை இருவரையும் மறந்து மனசை இழந்து தவிக்கிறான். சோழப் பேரரசை ஆட்டுவிக்கும் சக்தி, அவளின் சொல் கேட்கும் தகப்பன், பெரிய பாட்டி, தம்பி அருள்மொழிவர்மன் என எல்லாருமே இவளின் கீழ்தான் என்பது போன்ற ஒரு மாயையை தன் மீது குந்தவை பரப்பி வைத்திருக்கிறாள். அப்படியான இடத்தில்தான் வந்தியத்தேவனும் இணைகிறான். இருப்பினும் அவளைப் பார்த்ததும் வந்தியத்தேவன் காதல் கொள்வது போல் அவளுக்கும் அவனைச் சந்தித்த பின் காதல் அரும்பத்தான் செய்கிறது. அவன் இலங்கைக்குச் செல்லும் போது அவளின் மனம் படாத பாடு படுவதை நாம் அறிய முடிகிறது. சிறையில் தவிப்பவனை வெளியில் கொண்டு வரத் துடிக்கிறாள். தன்னை விடுத்து தம்பியிடம் நேசம் கொள்ளும் போது மனசுக்குள் மறுகுகிறாள். மணிமேகலை அவளை விரும்புவதாய்ச் சொல்லும் போதெல்லாம் ஒருவித அச்சம் உண்டாவதைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறாள். எங்கே அவன் நந்தினி பின்னால் போய்விடுவானோ என்ற எண்ணமும் அடிக்கடி தலை தூக்கத்தான் செய்கிறது... ஆரம்ப முதல் பிடிக்காத நந்தினி மீது அவள் வந்தியத்தேவன் மீது காட்டும் கரிசனத்தால் இன்னும் அதிக வெறுப்புக் கொள்கிறாள். மணிமேகலை, நந்தினி தவிர்த்து பூங்குழலி அவனை விரும்பவில்லை என்பதை அறிந்தாலும் பூங்குழலி வானதிக்கு எதிரியாகி விடுவாளோ என்ற அச்சமும் அவளுக்குள் தலை தூக்குகிறது.  வந்தியத்தேவனுக்குள்ளும் குந்தவைதான் தன் மனைவி என்ற எண்ணம் மேலோங்க மற்றவர்களை மறக்கிறான்.

வந்தியத்தேவன் இலங்கை செல்லும் போது கோடியக்கரையில் வைத்துச் சந்திப்பவள்தான் பூங்குழலி. இவள் பெயரில்தான் பூ... ஆனால் ஆளோ பெரும் புயலின் வடிவம். இவளை முதலில் பார்க்கும் போதும் அவனுக்குள் காதல் குழலோசை கடலின் அலையோசையை மீறி கேட்கத்தான் செய்கிறது. வேகமும் விவேகமும் கூடிய பெண், தனக்கு மனைவியானால் எப்படியிருக்கும் என்ற நப்பாசையும் வருகிறது. இருவரும் இலங்கை நோக்கி படகில் பயணிக்கும் போது இருவருக்குள்ளும் மோதல் பிறகு அவளின் துணிவு கண்டு பாசம் கொள்கிறான். தன் உயிரைக் காப்பாற்றிய நண்பன் சேந்தன் அமுதன் காதலிக்கும் பெண் இவள்தான் என்று தெரிந்ததும் அவள் மீது ஒரு சகோதரப் பாசம் பிறந்துவிடுகிறது. அவள் அருள்மொழிவர்மனுக்கு செய்யும் உதவிகளால் அவளுக்கும் அருள்மொழிக்கும் காதல் உண்டாகலாம் என்றும் அவளும் அருள்மொழியை விரும்பத்தான் செய்கிறாள் என்றறிந்த வந்தியத்தேவனுக்கு அருள்மொழி அவளை மணந்தால் நலம் என்று தோன்றுகிறது. நமக்கும் கதையின் போக்கு அப்படித்தான் தோன்றச் செய்கிறது  ஆனால் சேந்தன் அமுதன் ராஜபுத்திர இளவரசன் என்பதால் பூங்குழலி சேந்தன் அமுதனுக்கு மனைவியாகிறாள். அருள்மொழியின் முயற்சியால் சேந்தன் அரசனாக பூங்குழலி பட்டத்து இளவரசி ஆகிறாள். அவளின் பட்டத்து இளவரசி ஆசை நிறைவேறினாலும் என் மனது இந்த ஜோடியை ஏற்க மறுக்கிறது.  

ஆக வந்தியத்தேவன் மனதில் பயணித்த நான்கு பெண்களில் குந்தவை அவன்  மனைவியாக, மணிமேகலை மரணத்தைத் தழுவ... பூங்குழலி பட்டத்து இளவரசியாகிவிட, நந்தினி தன் வேலை முடிந்த திருப்தியில் பாண்டிய நாட்டிற்கு செல்ல கதை சுபமாய் முடிகிறது ஆனால் வந்தியத்தேவனோடு பயணித்த எனக்கு  அவனுக்காக தான் குற்றம் சுமக்க நினைத்து அவனைக் காப்பாற்றப் போராடி இறுதியில் பித்துப்பிடித்து மரணத்தை தழுவிய மணிமேகலைக்கு தனி இடம் தந்தாலும், அந்த பேதைப் பெண் பூங்குழலி? ஆம் பூங்குழலி. அவளிடம்தான் என்ன ஒரு வேகம், விவேகம். புயலெனச் சீறவும் தென்றலெனத் தழுவவும் ஆற்றல் கொண்ட வீரப்பெண்... அவளும், புத்திக் கூர்மையும் விதியையும் மதியால் வெல்லும் திறனும் கொண்ட வந்தியத்தேவனும் இணைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றியது. வீரமும் விவேகமும் நிறைந்த ஒரு பெண்ணை வீரனுக்கு மணமுடிக்காமல் கதையின் போக்குக்காக சிவபக்தனான சேந்தனுக்கு இல்லத்தரசியாக சித்தரித்து, குந்தவையின் கணவனாக ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மனை வழி நடத்தும் நல்ல நண்பனாக வந்தியத்தேவனையும் காண்பித்து கதாசிரியர் இனிதாக முடித்து விடுகிறார்.  

குந்தவை என்னும் அரசியின் கணவனாய் இருப்பதைவிட பூங்குழலி என்றும் படகோட்டிப் பெண்ணின் கணவனாய் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் கதையை படித்து முடித்த போது எனக்குள் தோன்றியது. இது என்ன விபரீதக் கற்பனை என்று  நீங்கள் நினைக்கலாம். தன்னைக் காதலிக்கும் பெண்ணை துவக்கத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து கதையின் முக்கிய காலகட்டத்தில் சகோதரியாய் நினைப்பது என்பது எப்படியோ அப்படித்தான் எனக்குள்ளும் சேந்தன் அமுதன் விரும்பினாலும் அவனை விரும்பாமல் அருள்மொழிவர்மன் மீது ஆசைப்பட்டு அதுவும் நடக்காமல்... சேந்தன் அரசனானதும் அவனை மணந்து பட்டத்து அரசியாகும் பூங்குழலி, வந்தியத்தேவன் கரம் பற்றியிருந்தால் என்ன என எனக்குள் தோன்றியதில் தவறில்லைதானே. கல்கி அவர்கள் தற்போது இருந்திருந்தால் என் சிந்தனை அவருக்கு எட்டியிருந்தால் அப்படி ஒரு மாறுபட்ட பொன்னியின் செல்வனை அவர் படைத்திருந்தால் ஒரு மாறுபட்ட வரலாற்றுப் பொக்கிஷத்தை வாசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியிருக்கும்.

எனக்கு மட்டுமல்ல... உங்களுக்கும்...

***
ட்டுரையை வெளியிட்ட அகல் மின்னிதழ் ஆசிரியர் திரு. GP. சத்யா அவர்களுக்கும் வாசித்த அனைவருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

 1. அரசலாற்றில் செல்லும் ஓடம் போலிருக்கின்றது..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் இப்பதிவை மிகவும் விரும்புவர். ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் வந்தியத்தேவனுடனான பிணைப்பையும், மனப்போக்கையும் அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.ஆழமாகப் படித்திருந்தாலே இவ்வாறு அலச முடியும். முதன்முதலாக நான் பொன்னியின் செல்வனில் வரலாற்றுக்கூறுகள் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆய்வு மேற்கொள்ள விரும்பினேன். பின்னர் சூழல் மாறவே தலைப்பு மாறியது. பொன்னியின் செல்வனில் நான் மறக்காத நிகழ்வுகளில் ஒன்று வந்தியத்தேவன் சிறையில் இருக்கும்போது அவனைப் பார்க்க குந்தவை வருவாள். அந்தச் சிறையிலிருந்து தன்னால் எளிதில் தப்பிக்க முடியும் என்று அவன் கூறும்போது அவள், "என்னுடைய இதயச்சிறையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது" என்று கூறுவாள். இவ்வாறு பலவற்றை ஈடுபாட்டோடு படித்துள்ளேன். தங்களின் இப்பதிவு என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   உங்களைப் போன்ற வரலாறுகளோடு பயணிக்கும் பெரியவர்களின் வாழ்த்து ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. ஆகா! வித்தியாசமான அலசல்..அருமை. காவியத்திலிருந்து இன்னொரு காவியம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. வித்தியாசமாக ஒரு கட்டுரை. அகலில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...