மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 21 செப்டம்பர், 2016மனசு பேசுகிறது : கடிதங்கள்

காணமல் போன கடிதங்கள் என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழ் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதை வாசித்த பின்னர் கடிதத்துடனான நம் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக... இல்லை சுத்தமாகவே மறைந்து போய்விட்டது குறித்த நினைவு மெல்ல மேலெழும்பியது. அன்று கடிதங்கள்தான் உறவுக்குள் பாலமாய் இருந்தன என்று அடித்துச் சொல்லலாம்... சந்தோஷம், துக்கம், வருத்தம் என எல்லாம் சுமந்து பயணப்பட்டவை அவை. காலத்தின் வளர்ச்சியில் காணாமலேயே போய்விட்டன என்றாலும் மத்திய மாநில அரசுகள் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேச கடிதம் எழுதுவதை இன்னும் வாடிக்கையாக வைத்திருக்கிறது. அவர்கள் கடிதம் என்று சொல்வது மின் அஞ்சலையோ அல்லது பேக்ஸ் செய்தியையோ... இருப்பினும் கடிதம் எழுதியிருக்கிறேன் என்றுதான் சொல்கிறார்கள். தற்போதைய காவிரிப் பிரச்சினையில் கூட நம் முதல்வர் கடிதம் மட்டுமே எழுதினார். சரி விடுங்க இதைப் பேசினால் எழுத்து அரசியலுக்குள் போய்விடும். 

Image result for இன்லேன்ட் லெட்டர்

கடிதம்... பள்ளியில் படிக்கும் காலத்தில் வெளியூரில் இருந்த அண்ணனின் கடிதம் வரும். 'அன்புள்ள அப்பா' என்று ஆரம்பிக்கும் அந்தக் கடிதம் பெரும்பாலும் வீட்டுப் பிரச்சினைகள் குறித்து அப்ப எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதமாகத்தான் வரும். அதில் உரம் வாங்க பணம் அனுப்புகிறேன் என்றும் தீபாவளி, பொங்கல் என்றால் செலவுக்கு பணம் அனுப்புகிறேன் என்றும் எழுதப்பட்டிருக்கும். கடிதத்தின் இறுதியில் தம்பிகளை நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள் என்று முடிந்திருக்கும்.

அப்பா யாருக்கும் கடிதம் எழுதினாலும் 'உ சிவமயம்' போட்டு, ஒரு பக்கம் அவர் பெயர் மற்றும் ஊர், மறுபுறம் பெறுபவர் பெயர் மற்றும் ஊர் போட்டு அதன் கீழே தேதியிட்டு அதன் பின்தான் கடிதத்தை ஆரம்பிப்பார். அண்ணன்களுக்கோ அத்தான்களுக்கோ என்றால் சிரஞ்சீவி அன்புள்ள மகன்/மாப்பிள்ளை என்று ஆரம்பித்து நலம் விசாரித்து... எல்லாருடைய நலமும் எழுதி.... விவசாயம் முதல் மாடு கன்று போட்டதுவரை விரிவாய் எழுதுவார். அவர் கடிதம் எழுத உட்கார்ந்தால் யோசித்து யோசித்து எழுதிய் சில சமயங்களில் கடிதத்தில் இடமில்லாமல் சின்ன பேப்பரில் எழுதி உள்ளே ஓரமாய் ஒட்டி வைப்பார். கடிதம் எழுதி முடிப்பதற்குள் வாயில் இருக்கும் புகையிலை எச்சிலைத் துப்ப ஏழு தடவை எழுந்து செல்வார். வேற என்ன எழுதணும் என்று அம்மாவிடம் வேறு அடிக்கடி கேட்டு திட்டையும் வாங்கிக் கொள்வார்.

அண்ணன்கள் அத்தான்கள் சிங்கப்பூர் சென்ற பிறகு, பதினைந்து நாளைக்கு ஒரு தடவை ஏர்மெயில் கடிதம் வரும். அதுவும் கஷ்டங்கள் சுமந்துதான் அங்கும் இங்கும் பறக்கும். இப்போது போல் அப்போது செல்போன் வசதி இல்லை.... ஏன் வீட்டில் தொலைபேசி கூட இல்லை... சிங்கப்பூரில் இருந்து கடிதம் வந்தால் ரொம்ப ஆவலாய்ப் பிரிப்போம். அதற்குக் காரணம் அதற்குள் வைத்து அனுப்பப்படும் புகைப்படங்கள்தான். முழங்கால் வரை மூடிய ஷூ போட்டுக் கொண்டு சிமெண்ட் அள்ளும் போட்டோக்கள்... பல மாடிக் கட்டிடத்தின் உச்சியில் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தலையில் மஞ்சள் கலர் தொப்பி வைத்து நிற்கும் போட்டோக்கள்... இரயிலில் பயணிக்கும் போட்டோக்கள்... தேக்காவில் சொந்தங்கள் கூடி எடுத்த போட்டோக்கள்... என அவர்களின் நிஜ வலி சுமந்த நிழல்படங்களைப் பார்த்து சந்தோஷப்பட்ட வயது அது. இப்போது இங்கு அது போன்ற மனிதர்களைக் கடக்க நினைக்கும் போது அன்று அவர்கள் பட்ட கஷ்டம் மனசுக்குள் மெல்ல எழும்பி வதைக்கிறது. இன்னைக்கு நினைத்தால் ஊருக்குப் பேசலாம்... நினைத்த போது ஊருக்குப் போகலாம்... ஆனால் அன்று வாரம் ஒருமுறை பேசுவது என்பதே அரிது. வீட்டில் தொலைபேசி வந்த பிறகு ஞாயிறுகளில் பேசுவார்கள்... வீட்டில் எந்த நல்லது கெட்டது என்றாலும் வருவது என்பது சந்தேகமே.. இரண்டு வருடங்கள் முடிய வேண்டும் விடுமுறை பெற என்ற சூழல் அப்போது... அப்படிப்பட்ட காலத்தில் ஒரே ஆறுதல் கடிதங்கள்தான்.

அப்படிப்பட்ட வாழ்க்கையில் திருமணம், திருவிழா போன்ற சந்தோஷத்தை விடுங்கள்... இறப்புக்கள்... எத்தனை இறப்புக்களுக்கு வர முடியாமல் தவித்திருப்பார்கள் என்பதை இப்போது உணர முடிகிறது. வீட்டில் உறவு இறந்தால் கூட வரமுடியாது. எப்படிப்பட்ட நரக வாழ்க்கை அது... இன்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களின் பெரும்பாலான நிலை இப்படித்தான். திருவிழா நிகழ்வுகள் எல்லாம் கடிதத்தில் எழுத்தாய் பயணித்தாலும் வீடியோவாக யாரோ ஒருவரிடம் கொடுத்து அனுப்பப்படும். கடிதங்கள் தாங்கி வந்த போட்டோக்களில் அண்ணன் அடிப்பட்டு கால் முழுவதும் கட்டுப் போட்டுக் கிடந்த போட்டோ இன்னும் கண்ணுக்குள் நிழலாடுகிறது. பெரும்பாலும் வெளிநாடு செல்லும் கடிதங்கள் போட்டோக்களுடன் மட்டும் பயணிக்காமல் கோவில் திருநீறு, குங்குமம் எல்லாம் சுமந்து செல்லும்.

பள்ளியில் படிக்கும் போது அதிக கடிதம் எழுதுவதில்லை... பொங்கல் தீபாவளி வாழ்த்துக்கள் மட்டுமே... இப்ப வாழ்த்தும் வாழ்ந்து முடிஞ்சு போச்சு இல்லையா... பொங்கல் வாழ்த்துக்கள் எத்தனை சந்தோஷத்தைச் சுமந்து வரும்... போகும்... ம்... எல்லாம் போச்சு... எழுதும் போது பெருமூச்சுத்தான் வருகிறது. கல்லூரி சென்ற பின்னர் காளையார்கோவில், ஆனந்தூர், திருவாடானை என நண்பர்கள் இருந்ததால் செமஸ்டர் விடுமுறையில் எப்படியும் கடிதம் வந்துவிடும். நானும் எழுதுவதுண்டு. அப்போதெல்லாம் ஆதி, திருவாடானையில் இருந்து 'அன்பின் பங்காளிக்கு' என்று ஆரம்பித்து நிறைய எழுதியிருப்பான். அதே போல் அண்ணாத்துரை காளையார்கோவிலுக்கு அருகே கடம்பங்குளம் என்ற ஊரில் இருந்து கடிதம் எழுதுவான்... அவன் எங்கள் வீட்டில் ஒருத்தன் என்பதால் அம்மாவில் ஆரம்பித்து பெரிய அக்கா குழந்தைகள் வரை கேட்டு எழுதியிருப்பான்.

நாமளும் கவிதை, கதை எழுத ஆரம்பித்த கால கட்டம் அது... கவிதைகள் பத்திரிக்கைகளில் வர, பேனா நட்பு என்று ஒன்று அப்போது உண்டு... அந்த அடிப்படையில் சில தபால் அட்டைகளில் முகம் தெரியாத நண்பர்கள் கடிதம் எழுதுவார்கள். அவர்களுக்கு பதில் போட்டதும் உண்டும். அப்படிச் சில காலம் சில நண்பர்கள் தொடர்ந்தார்கள். பெரும்பாலான கவிதைப் போட்டிகள், மாலை முரசு இதழில் வரும் வார்த்தைகள் கண்டுபிடித்தல், பாக்யாவிற்கான கவிதை எல்லாமே தபால் அட்டையில்தான் எழுதி அனுப்புவதுண்டு. சுபமங்களாவில் தபால் அட்டை சிறுகதை என்று ஒன்று போடுவார்கள். அதற்கும் எழுதி பிரசுரமாகியிருக்கிறது. தாமரைக்கு... செம்மலருக்கு... ராணிக்கு... தினபூமியில் வியாழக்கிழமை கொடுக்கப்படும் படத்துக்கு எழுதும் கவிதைக்கு என 50,100 தபால் அட்டைகளை மொத்தமாக வாங்கி வைத்தும் இருந்திருக்கிறேன். பின்னர்தான் போட்டிகளுக்கான தபால் அட்டை 10 ரூபாய் என்று  மாற்ற, நாம மெல்ல பதுங்கியாச்சு.

கல்லூரி முடித்த பின்னர் நட்புக் கூடு கலைந்தது... பெரும்பாலும் கடிதங்கள் மட்டுமே நட்புக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தது. ராமகிருஷ்ணன், நவநீ, அண்ணாத்துரை, சேவியர், ஆதி, திருநா,பிரான்சிஸ் என அனைவரோடும் சிலகாலம் கடிதப் போக்குவரத்து இருந்தது. பின்னர் வாழ்க்கைப் பயணத்தில் மாறி... மாறி....எல்லாம் மாறிப்போச்சு. அதன் பின்னான நாட்களில் கடித சுவராஸ்யம் மட்டுமின்றி நாப்பது அம்பது வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும் மெல்லக் குறைந்து விட்டது. 

நண்பன் முருகன் சிங்கப்பூரில் இருந்தபோது எனக்கு அடிக்கடி கடிதம் வரும். அந்தக் கடிதங்கள் வாழ்க்கைப் பிரச்சினையையும் பேசும்... எங்கள் கல்லூரிக்கால வாழ்க்கையையும் பேசும்... அதில் இறுதியாக முடிந்தால் இந்த ஞாயிறு வீட்டுக்கு வா... உன்னுடன் பேச வேண்டும் என்று முடிந்திருக்கும். அப்போது எங்கள் வீட்டிலும் போன் இல்லை.. முருகன் வீட்டிலும் இல்லை. அவனோட வீட்டுக்கு எதிரே இருந்த தீயணைப்பு நிலைய நம்பருக்குத்தான் போன் அடிப்பான். அங்கு போய் காத்திருந்தால் கூப்பிடுவான்... சில நிமிடங்கள் பேசுவோம். மற்றபடி எல்லாமே கடிதத்தில்தான். பெரிய பெரிய எழுத்தில் நிறைய எழுதுவான்... இடமில்லாமல் சுற்றிச் சுற்றி எழுதியிருப்பான்.

அன்று கடிதங்களும் வாழ்த்துக்களும் கொடுத்த சந்தோஷத்தை இன்றைய மின்னஞ்சலும் வாட்ஸ்அப் செய்திகளும் குறுஞ்செய்திகளும் கொடுக்கின்றனவா என்றால் சத்தியமாக இல்லை என்றே சொல்லலாம். ஒருவேளை அதனுடன் பயணப்பட்டு எப்பவும் செல்லும் கையுமாகத் திரிபவர்களுக்கு வேண்டுமானால் அது சந்தோஷத்தைக் கொடுக்கலாம். 'லெட்டர் வந்திருக்கா..' என வாரம் இரண்டு முறை ஊருக்குள் வரும் தபால்காரரிடம் கேட்டு அவர் இல்லை என்று தலையாட்டியதும் 'என்ன இந்தப்பய லெட்டரே போடாம இருக்கான்' என்றபடி முந்திய லெட்டர் வந்து இத்தனை நாளாச்சே என்று நாளை எண்ணிப் பார்த்தும் பொங்கல் வாழ்த்துக்களை வாங்கி அவசர அவசரமாய் பிரித்துப் பார்த்தும் வாழ்ந்த அந்த நாட்கள் எத்தனை சுகமானவை. 

பள்ளிகளில் தேர்வு பெற்ற விபரத்தை கடிதத்தில்தான் அனுப்புவார்கள். நாங்கள் படித்த தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கடிதத்தில் வீட்டுக்கு வரும்.  அது போக பள்ளியில் தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பாக வந்து நம்மை எழுந்து நிற்கச் சொல்லி மதிப்பெண்களை வாசித்து... எல்லாத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் எந்திரி, ஒரு பாடம் போனவன், ரெண்டு, மூணு, நாலு, எல்லாம் என எழுந்து நிற்க வைத்து... சரி விடுங்க... அதெல்லாம் கனாக்காலம்... இனி காணாத காலம். தேர்ச்சி விபரம் வரும் கடிதத்தை பிரிப்பதற்குள் கை காலெல்லாம் ஆடும் பாருங்க... அதுவும் ஒன்பதாவது ரிசல்ட்டுக்குத்தான் உடம்பு பிரபுதேவா டான்ஸ் ஆடுச்சு... காரணம் என்னன்னா நாங்க படித்த நடுநிலைப்பள்ளியில் இருந்து மேல் நிலைப்பள்ளிகளுக்குப் போய் ஒன்பதாவது தேர்வது என்பது காவிரியில் தண்ணீர் கொண்டு வர படும்பாடுதான்.... அப்படியும் ஜெயித்தவர்களில் நாமளும் ஒரு ஆள்ன்னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம்... அப்ப ஜெயிச்சதும் வீட்டுல நம்ம படிப்பை கண்டுக்க மாட்டாங்க... 

கடிதங்கள் சுவராஸ்யம் நிறைந்தவை... பெரிய மாடு கன்னு போட்டிருக்கு... பால் கம்மியாத்தான் இருக்கு... அக்காவையும் பெண் கேட்டு வந்தார்கள்... மாப்பிள்ளை இன்ன வேலை பாக்கிறாராம்... நமக்கு தோதான இடந்தான்... வயலுக்கு எல்லாரும் அடி உரம் போட்டுட்டாங்க... நாமளும் போட்டுட்டா நல்லது... அம்மாவுக்குத்தான் அடிக்கடி முடியாம வருது.... நேத்து டாக்டர்கிட்ட காமிச்சிட்டு வந்தோம்... ஒய்வெடுக்க சொல்லுது... அது ஓய்வெடுத்தா இங்க யாரு பாக்குறது.... இப்படி நிறைய விஷயங்களை எழுதுவார்கள். எல்லாம் எழுதி பார்த்துக் கொள்ள வேண்டியது என்று முடிந்திருக்கும் அந்த பார்த்துக் கொள்ள வேண்டியதில்  மொத்தத்துக்குமான பணத்தேவை அடங்கியிருக்கும்.

சாதாரணமாக எழுதப்பட்ட கடிதங்களுக்கு மத்தியில் சில கடிதங்கள் பொக்கிஷங்கள்தான்... அவற்றை இப்போது பிரித்துப் படிப்பதில்தான் எத்தனை சுகம்... எத்தனை பேரின்பம்... சில வாழ்த்துக்களும் கூட... இப்போது எடுத்துப் பார்த்தால் அந்த நாள் மெல்ல மனசுக்குள் கிளை விடும்...  நான் வைத்திருக்கும் சில கடிதங்களில் முருகனின் கடிதங்கள், திருமிகு இறையன்பு அவர்கள் எனது ஹைக்கூக்களை வாசித்துவிட்டு எழுதிய கடிதம், தாமரையில் முதல் கவிதை வெளியான போதும் மற்றொரு கவிதையை ஐயா மூலமாக வாசித்த போதும் திரு. பொன்னீலன் அண்ணாச்சி எழுதிய கடிதங்கள், அண்ணாத்துரை சென்னையில் இருந்தபோது எழுதிய கடிதங்கள் மிக முக்கியமானவை.

இன்றைக்கு கடிதங்கள் போன இடம் தெரியவில்லை... தபால்காரர் எங்கள் ஊருக்குள் வருவதே இல்லை. அரிதாக யாருக்கேனும் ஏதேனும் கடிதம் வந்திருந்தால் கண்டதேவிக்கு போகும் யாரிடமாவது கொடுத்து விட்டு விடுகிறார்கள். 'அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த' என்றோ 'சிரஞ்சீவி' என்றோ 'மேதமை தாங்கிய ஐயா' என்றோ 'பாசத்துக்குரிய நண்பனுக்கு' என்றோ ஆரம்பித்த கடிதங்கள் தன் வாழ்வை இழந்து விட்டன... இப்ப எல்லாம் வாட்ஸ்அப்பிலும் மின்னஞ்சலிலும்தான். அவை என்ன சொல்ல நினைக்கிறோமே அந்தச் செய்தியை மட்டுமே தாங்கிச் செல்கின்றன இவற்றின் ஊடாக நாம் சந்தோஷம், துக்கம். வலி, வேதனை என எவற்றையும் அதிகம் திணிப்பதில்லை. நறுக்கென்று நாலு வார்த்தையில் முடித்து விடுகிறோம். 

கடிதங்கள் காணாமல் போனாலும் அவை சுமந்து வந்த சந்தோஷங்களும் துக்கங்களும் இன்னும் மனசுக்குள்... கடிதங்கள் கொடுத்த சந்தோஷங்கள்தான் எத்தனை எத்தனை... என்பதை அனுபவித்தவர்கள் அறிவோம் அல்லவா..?

சரி இந்தப் பாட்டையும் கேளுங்க...

-'பரிவை' சே.குமார். 

20 கருத்துகள்:

 1. காலம் மாறுகிறது! கடிதங்களுக்கு தேவை இல்லாமல் போகிறது. அந்தக் காலத்தில் இன்லேண்ட் கடிதத்தின் இடங்களை வீண் செய்யாமல் பொடித்துப்பொடித்து ஒவ்வொரு இடுக்கிலும் எழுதி, ஃபிரம் அட்ரசின் இடத்திலும் எழுதிய காலங்கள் நினைவுக்கு வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. வளர்ச்சி என்னும் பெயரில்
  கடிதம் எழுதுதலையே முற்றாய் மறந்து விட்டோம்
  என்னதான் அலைபேசியில் உடனே அழைத்துப் பேசினாலும்
  என்னாலும் பெட்டகமாய் உடனிருக்கும் கடிதத்திற்கு இணை ஆகுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. மீண்டும் கடிதம் எழுதும் காலம் வரக்கூடுமோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. எத்தனை கடிதங்கள்! கடிதம் எழுத சோம்பல் பட்ட போது நாலுவரியாவது எழுது என்று கடிதம் அம்மா, அப்பாவிடமிருந்து வரும் போது கண்ணீர் வடிய இன்லேண்ட் கடிதத்தில் கொஞ்சம் கூட வேஸ்ட் செய்யாமல் எழுதிய காலங்கள், அவர்கள் அன்பை தாங்கி வந்த கடிதங்கள் எத்தனை எத்தனை!
  நினைத்து பார்க்க இன்பத்தையும் துன்பத்தையும் தரும்.

  அருமையான பதிவு.

  உங்கள் மனம் மட்டும் பேசவில்லை எல்லோர் மனமும் பேசும் இந்த பதிவை படித்தவுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. கடிதங்கள் காலப்போக்கில் மறைந்து போனாலும் அதன் நினைவுகள் என்றும் மனதில் பசுமையாக இருக்கும்! நல்லதொரு பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. இன்னும் தொடர்ந்து அஞ்சலட்டையில் நான் கடிதம் எழுதி வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. அருமையான நினைவலைகள்! இருவருக்குமே கடிதங்கள் என்றால் பல அருமையான நினைவுகளை மீட்டுவிடும்...மகிழ்வான நாட்கள்.

  கீதா: எனது மாமா இப்போதும் போஸ்ட் கார்டில் எல்லோருக்கும் தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார். வயது 85...

  ஒரு சில கடிதங்களை வைத்திருந்தேன். காலப்போக்கில் அவை பொடிப் பொடியாக ஆனதால் போய்விட்டன...2001 வரை கடிதங்கள் தான். அதன் பின் தான் கணினி வந்தது வீட்டிற்கு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது...நல்ல பகிர்வு!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசி சார் / கீதா மேடம்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. வணக்கம் சார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. //அன்று கடிதங்களும் வாழ்த்துக்களும் கொடுத்த சந்தோஷத்தை இன்றைய மின்னஞ்சலும் வாட்ஸ்அப் செய்திகளும் குறுஞ்செய்திகளும் கொடுக்கின்றனவா என்றால் சத்தியமாக இல்லை என்றே சொல்லலாம்.//
  நிதர்சனத்தை மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!! வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை, சோகம் தாங்கி, மகிழ்ச்சியை சுமந்து, கண்ணீரை சிந்த வைத்து, புன்னகையை வரவழைத்த கடிதங்கள் எத்தனை எத்தனை! என் மாமியார் நலம் விசாரித்து எழுதுவதே முதல் பக்கம் பூராவும் நிறைந்திருக்கும். மாடு கன்று போட்டது முதல் சீம்பால் சாப்பிட அருகே யாருமில்லையே என்ற ஆதங்கம் வரை.. இந்த மின்சார யுகத்தில் அந்த நாட்கள் இனி திரும்ப வரப்போவதில்லை! பழைய நாட்களை நினைவலைகளில் திரும்ப மிதக்க விட்டு விட்டீர்கள்! ஜெய்சங்கர் [ கெளரி கல்யாணம்] ' ஒருவர் மனதை ஒருவர் அறிய' என்று பாடிக்கொண்டே தபால்காரர் வேடத்தில் வருவது நினைவுக்கு வருகிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அம்மா...
   நினைவலைகளை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. தில்லி வந்த புதிதில் நிறைய கடிதங்கள் எழுதியதுண்டு. இப்போது எழுதுவதில்லை.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...