மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 1 நவம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 6)

முந்தைய பகுதிகள் : 


பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4      பகுதி-5


ஐந்தாம் பகுதியின் இறுதியில்....

"அம்மா... பழங்காலத்துல இருக்க முடியுமா? இப்ப எவ்வளவோ மாறிடுச்சி... படிக்கணுமின்னா பிரிஞ்சி இருக்கத்தான் வேணும்... ஆமா... அப்பா எங்கயோ கெளம்புனது மாதிரி இருந்துச்சு..."

"ஆமா... தபால்காரர் வரல... தம்பி பணம் அனுப்புறேன்னு சொன்னான்... அதான் பாத்துட்டு வரலாம்ன்னு கெளம்புனே... நீ வந்துட்டே... இனி என்னத்த போனே..." என்றபோது "வாக்கா... ரொம்ப நாளா ஆளக்க்கணோம்... ஆமா அத்தான் வந்ததும் வராததுமா ஓடிட்டாரு..." என்று கேட்டுக் கொண்டே சுந்தரிக்கு அருகில் வந்து அமர்ந்தான்.

இனி...

'என்னக்கா ஆளையே காணோம்... அத்தான் வந்ததும் வராததுமா ஓடிட்டாரு' என்றபடி அருகில் அமர்ந்த கண்ணதாசனின் தலையைத் தடவிக் கொண்டே "கண்ணா... உங்கத்தான் பிரசிடெண்டுல்ல வீடு தங்க எங்க நேரம் இருக்கு... ரெண்டு நாளா நச்சரிச்சி இன்னைக்குத்தான் கூட்டிக்கிட்டு வந்தாரு..." என்றாள் சுந்தரி.

"பிரசிடெண்ட்டுன்னா சும்மாவா... நல்ல பேரை சம்பாரிச்சாத்தானே அடுத்தவாட்டி பயமில்லாம ஜெயிக்கலாம்... அப்பத்தானே நீயும் பிரசிடெண்டு பொண்டாட்டியின்னு சொல்லிக்கிட்டு லாத்தலாம்..." என்று சொல்லிச் சிரித்தான்.

"படுவா... சந்தடி சாக்குல என்னைய கிண்டல் பண்ணுறியா... நீ என்ன பேசுனாலும் நம்ம வீட்டுச் செட்டுல நீதான்டா பாசக்காரன்... இல்லையாம்மா" என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டாள்.

"எம் மவன் கண்ணன் அச்சு அசல் மூத்தவுகளாட்டாமே.... கொணமுன்னா கொணம் அப்புடிக் கொணம்... அந்தக் கொணமெல்லாம் இந்தா... உங்கப்பனுக்கு அறவே கெடையாது... தர்மனாட்டம் அவுக... யாரையும் எடுத்தெறிஞ்சு பேசமாட்டாக... யாசகமுன்னு வந்து நின்னா இல்லேன்னே சொல்ல மாட்டாக... இவனும் அப்படித்தான் இருக்கான்... பிறத்தியாருக்கு ஒண்ணுன்னா முன்னால நிப்பான்..." காளியம்மாள் மூத்த கொழுந்தனை நினைத்து கண் கலங்கினாள்.

"ஆமாத்தா... எங்கண்ணன் மேல சுத்துப்பட்டு கிராமத்து சனங்க எல்லாம் அம்புட்டு மரியாதை வச்சிருந்தாக... எல்லாத்துக்கும் நான்னு நிக்கும்... ம்... நீங்க எல்லாரும் அப்ப சின்னப்புள்ளக ராவுல வயலுக்கு தண்ணி பாக்கப் போனவுக பாம்பு கடிச்சி செத்துட்டாக... இவனும் கணகமும் வெவரந்தெரியாத புள்ளக...  எங்கண்ண பொண்டாட்டி சூட்டிகையான ஆளா இருந்ததால இதுகள வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டாலும் வாழ்க்கையில ஜெயிச்சிருச்சி... எல்லாரும் ஒண்ணா மண்ணா இருக்கதுனால ஒம்புள்ள எம்புள்ளன்னு இல்லாம எங்க மூணு பேரோட புள்ளக எல்லாமே எங்கவுட்டுப் புள்ளகளாத்தான் வளந்துச்சிக... அதுனாலதான் சித்தப்பன் மக்க பெரியப்பன் மக்கன்ன்னு வித்தியாசமில்லாம எல்லாம் அண்ணந்தம்பி அக்கா தங்கச்சியா ஒட்டிக்கிட்டு கெடக்குக... கடைசி வரைக்கும் எல்லாரும் இப்புடியே இருக்கணுமின்னுதான் நான் வேண்டிக்கிறேன்...  எங்கண்ணனோட ஆச கண்ணன நல்லா படிக்க வைக்கணுமின்னு... இவனும் அந்த ஆசைய காப்பாத்திட்டான்...."

"ஆமா... உங்க மகன் படிச்சிட்டு என்ன கலெக்டர் உத்தியோகமா பாக்குறான்... வயக்காட்டுலதானே கெடக்கான்...."

"ஏன்க்கா விவசாயம் பாக்குறது என்ன குத்தமா? அப்பா அம்மாவோட ஆசை படிச்சேன்... சின்ன வயசுல இருந்து அம்மாவுக்கு வயவேலயில உதவுனதால அதுமேல ஒரு ஈர்ப்பு... நமக்குத்தான் ஊருக்குல்ல நெலம் அதிகம்... அப்புறம் என்ன ஒரு போகம் வெளயிற நெல்ல வித்து வருசத்துக்கும் சாப்பிடலாம்... அதுல சேமிப்பும் இருக்கு... பயலுக படிப்புக்கும் கவல இல்ல... என்ன தொடர்ந்து ரெண்டு மூணு வருசத்துக்கு மழ தண்ணி பெய்யலைன்னாத்தான் கஷ்டம்... கெடக்க நெலம் ஒரேயெடத்துல ஏக்கர் கணக்குல கெடந்தா வெவசாயப்போரை போட்டு வருசத்துக்கும் எதாவது வெளய வச்சிக்கிட்டு இருப்பேன்.... பாக்கலாம் கொள்ளக்காட்டுல நம்ம எடத்துக்குப் பக்கமா இருக்க கணபதி மாமாவோட எடத்தை வாங்கி தோட்டம் போடலாம்ன்னு பாக்குறேன்... பாக்கலாம்..."

"நல்ல ஐடியாதான்... அவரு குடும்பமே திருச்சியில செட்டிலாகிட்டாங்க... இனியா இங்க வந்து வெவசாயம் பண்ணப்போறாக... கேட்டுப்பாரு... படிச்ச படிப்புக்கு வேலக்கிப் போயிருந்தா நல்லா சம்பாரிக்கலாமுல்ல.... ஆமா பயலுகள ஆஸ்டல்ல சேத்து படிக்க வைக்கலாம்ல்ல... இங்க விட்டு ஆடு மாடுன்னு அதுக பின்னாடி திரியப்போறானுங்க..."

"அட ஏக்கா நீ வேற ஒண்ணய மாதிரி பெத்த ரெண்டையும் ஆஸ்டல்ல விட்டுட்டு வீட்டுக்குள்ள நானும் எம்பொண்டாட்டியும் எம்மொகத்தை நீ பாரு... உம் மொகத்தை நா பாக்குறேன்னு உக்காந்திருக்கவா... படிக்கிற புள்ளக எங்க இருந்தாலும் படிக்குங்க... எதுக்கு ஆஸ்டல் அது இதுன்னு அதுகள தனிமைப்படுத்தணும்... இன்னைக்கி ஆஸ்டல்ல விட்டு படிக்க வைக்கிறதாலதான் கல்யாணம் ஆனதும் பெத்தவுகள ஆஸ்டலுக்கு அனுப்பிடுதுக... அப்ப குய்யோ முறையோன்னு கத்தி என்ன பண்ண... இப்ப பத்துப் பன்னெண்டு வருசம் அதுகள அப்பன் ஆத்தா பாசமில்லாமத்தானே வளக்குறோம்..."

"அப்பா உனக்கிட்ட பேசி ஜெயிக்கமுடியாதுடா.... ஆமா எங்க உம்பொண்டாட்டி..?"

"மாடவுத்துக்கிட்டு போயிருக்கு... நீ வந்திருக்கேன்னு தெரிஞ்சா பறந்து வந்துருவா... சரி இரு நா அப்புறம் வாறேன்..." என்றபடி எழுந்தவன் "என்ன சித்தப்பா போஸ்டாபீஸ் போறேன்னு சொன்னீக... அக்கா வந்ததும் பிளான் மாறிடுச்சா...?"

"சாயங்காலம் போயிட்டு வாறேன்... இனி வெயில்லு வந்திரும்..."

"நா அங்கிட்டுப் போனா லெட்டரா இருந்தா வாங்கிட்டு வந்திருவேன்... இது பணமுன்னுல்ல சொன்னீக... தபால்காரரு இருந்தா உங்க சித்தப்பன மாதிரி கையெழுத்துப் போட்டுட்டு வாங்கிட்டு போ... இனி இதுக்காக நா வேற அங்க வரணுமான்னு சொல்லிக் கொடுப்பாரு.... ஐயர் இருந்தா உங்க சித்தப்பனுக்கு பணம் வந்திருக்கு... அந்தாள வந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுன்னு சொல்லுவாரு... அதான்... சரி சாயந்தரம் நா போன கூட்டிக்கிட்டு போயி விட்டுட்டுப் போறேன்... வாங்கிட்டு வாங்க..."

"செரிப்பா... மத்தியானத்துக்கு மாப்ள சாப்பிட வாறேன்னாக...  கோழிதான்  அடிக்கப் போறோம்.... இங்க வந்து சாப்பிடு..."

"அது சரி அக்கா வந்தோடனே பாத்துப்பாத்து வளர்த்த கோழி சூட்டானா... அக்கா இதுக ரெண்டும் புளிக்கொழம்பா வச்சி சாப்பிடுதுக... நல்லா வாங்கி சாப்பிடச் சொல்லிட்டுப் போ... சரி மத்தியானம் வாரேன்... வர்றேங்க்கா..."

"ஏய்.... எரை அள்ளிப் போட்டு கோழியப் புடிச்சித்தா போயி அறுத்துக்கிட்டு வாரேன்..." என்றதும் பச்சரிசிக் குருனையில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு போய் வாசலில் போட்டு விட்டு "போக்... போக்... போக்..." என்று கோழியைக் கூப்பிட்டாள் காளியம்மாள்.

லுவலகத்தில் பரபரப்பாக ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தான் குமரேசன். அப்போது அவனது மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தவன் தனது அண்ணன் மணி என்பதை அறிந்து எழுதியதை விட்டுவிட்டு "ம்... சொல்லுண்ணே... என்ன விஷயம்? இந்த நேரத்துல போன் பண்ணியிருக்கே? அண்ணி, மகால்லாம் நல்லாயிருக்காகளா?" என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான். 

"ஆமாடா... நான் போன் பண்ணினாத்தான் உனக்கு அண்ணி, மகா நெனப்பெல்லாம் வரும்... இருக்கியா செத்தியான்னு ஒரு போன் பண்ண மாட்டே... அதுக்கு அபியாச்சும் பெரியத்தான் என்ன பண்ணுறீங்கன்னு வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் கூப்பிடும்... சரி எப்படியிருக்கே? எல்லாரும் நல்லாயிருக்காகளா?" என்றான் மணி

"எல்லாரும் நல்லாயிருக்கோம்... அவ டீச்சருண்ணே... அவளுக்கு நேரம் இருக்கும்.... எல்லாருக்கும் கூப்பிட்டு அரட்டை அடிப்பா... என்னோட பொழப்பப்பத்தித்தான் உனக்குத் தெரியுமே.... நாயா அலையுறேன்... இப்பத்தான் ஆபீசுக்கு வந்து ஒரு ஆர்ட்டிக்கிள் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன்... என்ன விஷயம்ண்ணே.... இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கே... எதுவும் பணப் பிரச்சினையா?"

"ஏய்... அதெல்லாம் இல்லடா... சும்மாதான் போன் பண்ணினேன்..." என்று மணி சொன்னாலும் 'அண்ணன் சும்மா இந்த நேரத்துல போன் பண்ண மாட்டாதே.. சரி என்ன சொல்லுதுன்னு பாப்போம்' என்ற யோசனையோடு "ம்... ஊருக்குப் பேசினியா?" என்றான்.

"ம்... அம்மாக்கிட்ட அன்னைக்குப் பேசினேன்... அப்பா ஏதோ சறுக்கை அடைக்கப் போயிருக்காருன்னு சொன்னுச்சு..."

அண்ணனே தொடரட்டும் என "ம்" என்று சொல்லிவிட்டு காத்திருந்தான்.

(வேரும் விழுதுகளும் தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையாகச் செல்கிறது! தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கிராமத்து நடைமுறைகளை கண்முன் நிறுத்தும் நடை..பாராட்டுக்கள்.

Menaga Sathia சொன்னது…

இப்போதான் விட்டுப்போன பகுதிலாம் படிச்சு முடித்தேன்...அருமையான கிராமத்து எழுத்து நடை..கதை சுவராஸ்யமாக செல்கிறது..


மேலும் வலைச்சரத்தில் கருத்து சொல்லாமல் இங்கே சொல்வதற்கு மன்னிக்கவும்.வலைச்சர ஆசிரியராக பணிபுரிந்ததற்கு வாழ்த்துக்கள்.மேலும் என்னை அறிமுகபடுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ...

Yarlpavanan சொன்னது…

ஊர்க்/ கிராமத்துக் கதை
ஒரு தனிச் சுவை
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கிராமத்து ஒயிலான நடை....அருமையாகச் செல்லுகின்றது. தொடர்கின்றோம்!

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.!

கதையின் நகர்வு நன்றாக செல்கிறது. படிக்கும் போது கிராமத்தை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திச் செல்லும் கதையின் பாங்கு அற்புதம்.!
தொடர்கிறேன்.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.