மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஏப்ரல், 2013மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 1

மரக்காணம் கலவரம் குறித்து தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ குரு இன்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழக சட்டசபையில் இன்று மரக்காணம் கலவரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. 

பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.), ஜெ.குரு (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி-, கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) உள்ளிட்டோர் விவாதத்தில் பேசினர். 


உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டுவோம்: 

இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்தார். அதன் விவரம்: மாமல்லபுரத்தில் 25ம் தேதி வன்னியர் சங்கம் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி, "சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா" ஒன்றை நடத்த அறிவித்திருந்தது. இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக உறுப்பினர்கள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. இதில் பங்கேற்கும்படி வன்னியர் சங்கத்தின் சார்பாக, தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. 

"வங்க கடலா, வன்னிய கடலா, ஒரு கோடி வன்னியர்கள் சித்திரை பெருவிழாவிற்கு அலைகடலென திரண்டு வாரீர்" எனவும், "கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது" எனவும், "நாங்க உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா" எனவும், "சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது" எனவும் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. 

இவ்விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி, இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை 16.4.2013 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அம்மனு மீது காவல் துறையினர் 19.4.2013க்குள் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கம் கோரும் குறிப்பாணை ஒன்றை சார்வு செய்து, அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்தின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குவது குறித்துத் தீர்மானிக்குமாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது. 


சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி...:

இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்படி விழா அமைப்பாளர்களுக்கு இவ்விழா நடக்கும் போது இரு சமுதாயத்தினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும்; குறிப்பாக கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டு இவ்விழாவின் போது நடந்த கலவரத்தை சுட்டிக் காட்டியும்; இவ்விழாவிற்கு வந்த தொண்டர்கள் வாயிலாக விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும், இவ்விழாவில் தலைவர்கள் பேசும் போது சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி இருந்ததையும்; அப்பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இரு சமுதாயத்தினர் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதையும்; இவ்விழா சம்பந்தமாக காவல் துறையினர் அளித்த நிபந்தனைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதையும்; கால அவகாசத்தை மீறி இவ்விழாவை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதையும்; இதற்கு முன்பு இவ்விழாக்களின் போது நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதையும்; விழாவின் போது அதிகப்படியான கூட்டத்தை கூட்டுவதற்கு போதிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததையும்; ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேர கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானதையும்; மேற்படி விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கடற்கரை ஒழுங்கு முறைப் பகுதி என்பதால், அதற்குரிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறையினர் இடமிருந்து முன் அனுமதி பெறாததையும்; விழா நடக்கும் இடம், தொல்லியல் துறை பராமரித்து வரும் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளதையும்; அத்துறையினர் இடமிருந்து அனுமதி பெறாததையும் விவரமாகக் குறிப்பிட்டு, விழாவிற்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது என கேட்டு இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு விழாவிற்கு அனுமதி கோரியிருந்த திருக்கச்சூர் ஆறுமுகமுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச மாட்டோம்: இதற்கான பதில் கடிதம், திருக்கச்சூர் ஆறுமுகத்திடமிருந்து காஞ்சிபுரம் காவல் துறையினரால் 18.4.2013 அன்று பெறப்பட்டது. 

அக்கடிதத்தில், இவ்விழாவினால் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது எனவும்; ஜெ.குரு உள்ளிட்ட தலைவர்கள் எவரும் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பிற சமூகத்தினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள் எனவும்; திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் துவக்கி, காவல் துறையினர் குறிப்பிடும் நேரத்திற்கு முன்பாக எந்த விதமான கால தாமதமும் இன்றி நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்படும் எனவும்; இந்த விழாவின் மூலம் எந்த விதமான சாதி பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விழாவில் கலந்து கொள்பவர்களால் ஏற்படாது எனவும்; விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும்; போக்குவரத்து பாதிக்காத வகையில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர அவசியக் காரியங்களுக்கு சென்று வர வழி அமைத்து தரப்படும் எனவும், விழா நடத்தும் பகுதி முழுவதும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுத்தம் செய்து தரப்படும் எனவும்; காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும்; காவல் துறையினர் வழிகாட்டுதல்படி அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் விழா நடத்தப்படும் என்றும் திருக்கச்சூர் ஆறுமுகம் அந்தக் கடிதத்தில் உறுதியளித்து இருந்தார்.

-நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...