மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 1 மார்ச், 2013

பாரதி நட்புக்காக வழக்காடு மன்றம் பகுதி - I



அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் கொண்டாட்டமாக திரு. நாஞ்சில் சம்பத் தலைமையில்  "இன்றைய வாழ்க்கைமுறை மகிழ்ச்சியானது என்பது குற்றம்" என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் சென்ற வெள்ளி மாலை 6 மணிக்கு அபுதாபி இண்டியன் பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. வழக்குத் தொடுப்பவராக பேராசிரியர் முகம்பது ரபீக் அவர்களும் வழக்கை மறுப்பவராக பேராசிரியர் பு.சி. கணேசன் அவர்களும் பேசினார்கள்.

எப்பவும் போல் ஆஷா நாயர் நடனப் பயிற்சியில் மாணாக்கர்கள் நடனத்தில் கலக்கினர். பாரதி பாடலுக்கும் நாட்டுப்புறப் பாடலுக்கும் அழகான உடையலங்காரங்கில் அழகிய நடனமாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அதன்பின் கவிஞர் சங்கர் அவர்கள் வழக்காடு மன்றத்தில் பேசவிருந்த பேச்சாளர்களை தனது கவிதை வரிகளால் அருமையாக அறிமுகம் செய்து வைத்தார். திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு இது எட்டாயிரமாவது இலக்கிய மேடையாம்.

'ஆசை முகம் மறந்து போச்சா' என்று நடனமாடினார்கள் என்றால் 'ஆசைமுகம் மறக்கலையே' என்றபடி தனது உரையை தொடங்கிய நாஞ்சிலார், பாரதி நட்புக்காக அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து தனது இலக்கியப் பேச்சை மெதுவாக ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகமெடுத்து மேடைகளில் முழங்கும் வேகத்துடன் பாரதியின் பாடல்களை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி... உச்சஸ்தாயியில் கர்ஜித்து தான் ஒரு சிறந்த பேச்சாளன் என்பதை சொல்லாமல் சொல்லி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். 

அவர், "எனக்கு கல்யாணம் பண்ணிய போது கிரைண்டர் பிரபலமாக சமயம். எங்க குடும்பம் பெரிய குடும்பம். இட்லி, தோசைக்கு மாவு ஆட்ட ஈசியா இருக்குமேன்னு ஒன்று வாங்கி வைத்தேன். ஆரம்பத்தில் இட்லி, தோசை என எல்லாம் நல்லாத்தான் போச்சு. ஒரு முறை நான்  ஊருக்குப் போனப்போ இட்லி இல்லை... என்னம்மா இட்லி தோசைக்கு போடுறது இல்லையா என்றேன். கல்லு கனமா இருக்கதால போடுறது இல்லை என்று பதில் வந்தது. கிரைண்டரும் துணி போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அம்மா அப்பா வயசானவங்க... இட்லி தோசையின்ன சாப்பிட நல்லாயிருக்குமே என்றதும் அதெல்லாம் போடுறது இல்லை என்றாள். சரி நான் ரெண்டு நாள்தான் இங்க நிக்கிறது அப்பவாச்சும் போடலாமுல்ல... நீங்க நிக்கிறதால வேணுமின்னா போடலாம் என்றவள், இப்ப மாவை ஆட்டி கலக்கிக் கொடுக்கிற டேபிள் டாப் கிரைண்டர் வந்திருக்காம்.. என்றதும் அதையும் வாங்கிக் கொடுத்தாச்சு... இப்ப அதுலயும் அரைக்கிறதில்ல... என்னம்மான்னு கேட்டப்போ உங்களுக்கு விஷயம் தெரியாதா நம்ம ஆறுமுகம் மாவுக் கடை போட்டிருக்கான்ல என்று சொன்னாள்."

"பிரிட்ஜ்ன்னு ஒண்ணு உயிர் காக்கிற மருந்து வைக்கிறதுக்காக பயன்பட்டது... இப்ப வீடுகள்ல மாவு வைக்கிறதுக்கும் , சாம்பாரும் பூவும் வைக்கிறதுக்கு பயன்படுது... அதுவும் சின்னதே போதும் இருந்தாலும் பக்கத்து வீட்ல டபுள் டோர் பிரிட்ஜ் வாங்கிட்டாங்கன்னா நாமளும் உடனே வாங்கனும். வாங்கிக் கொடுத்தாலும் சாம்பாருல மல்லிகைப் பூ வாசம், மல்லிகைப்பூவுல சாம்பார் வாசம்ன்னு இருக்கு. என் மனைவி வாரம் ஒரு முறை அதில் வைத்திருக்கும் இட்லிகளை எடுத்து துடைத்து வைக்கிறாள். நான் இப்ப சாம்பார் நல்லாயில்லைன்னு சொல்றதே இல்லை என்று சொல்லி அனைவரையும் சிரிப்பு என்னும் வலைக்குள் சிக்க வைத்தார். 

ஆங்கில எழுத்தாளரரின் சிறந்த கதையான, நாமெல்லாம் அறிந்த கதையான கணவன் மனைவிக்கு வாட்சை விற்று கூந்தலில் மாட்டும் அழகிய கிளிப் வாங்கி வருவதும் மனைவி கூந்தலை விற்று கணவனின் வாட்சிற்கு அழகிய ஸ்டிராப் (தோல்) வாங்குவதுமான கதையைச் சொல்லி வாழ்க்கையின் இனிமையை ஆழமாக எடுத்துரைத்தார்.

இங்கே நாங்க ஒரு வழக்குக்காக வந்திருக்கிறோம். இந்த வழக்கை இன்றே தீர்ப்பு சொல்லி முடிக்க வேண்டும்.  தாமதமாக ஆரம்பித்தாலும் தீர்ப்பை இன்னொரு நாள் மாற்றி வைக்க முடியாது.  வழக்கு தொடுக்க வந்திருக்கும் ரபீக் சிறந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர் ஆனந்த விகடனில் மானசீகன் என்ற பெயரில் கவிதை எழுதி வருகிறார். இன்றைய வாழ்க்கை முறை மகிழ்ச்சியாக இல்லை என்று சில வாதங்களை எடுத்து வைக்க இருக்கிறார். 

இல்லை... மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்று பேச வந்திருக்கும் பூ.சி.கணேசன் அருமையான இலக்கியவாதி... அருமையான பேச்சாளர்... இருபது வருடத்திற்கும் மேலான கல்விப் பணியில் இருக்கிறார். அப்படிப்பட்டவர் என்னை நடுவராக வைத்து நடக்கும் வழக்காடு மன்றத்தில் பேச ஒத்துக் கொண்டதே பெரிய விசயம். அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும். இப்ப நாலு மாசமாவே நமக்கு நேரம் நல்லாயிருக்குன்னு சொல்லுறாங்க என்று சிரித்து அரசியலில் 'கோ'வை விட்டு 'அ'விடம் வந்து 'ஆ' வாங்கிய மகிழ்ச்சியை அவ்வப்போது தொட்டுச் சென்றார்.

நீதிபதி எப்படிப்பட்டவரா இருந்தாலும் வழக்கறிஞர்கள் மிகச்சிறந்தவர்களாக இருப்பார்கள். ஜெயந்திரர் வழக்கில் அவருக்காக வாதாட ராம்ஜெத்மலானி வந்தார். நீதிபதியா இருந்தவரு உத்தமராசா, அவரு கார் டொர்ரு...டொர்ருன்னு கிளம்பவே லேட்டாகும். ஆனா வழக்கறிஞரோ தனி பிளைட்ல நூறு உதவியாளர்களோட வாராரு. யுவர் ஆனர்ன்னு சொன்ன ஐந்து லட்சம் போச்சு... 

சரி இனி வழக்கை விசாரிப்போம். ஒரு பேச்சாளனுக்கு கைதட்டல்தான் முக்கியம். கை தட்டாமல் பார்த்தால் பேச்சாளானுக்கு எப்படியிருக்கும் என்பதை எல்லா பேச்சாளர்களும் சொல்லும் கதையை சொல்லி தாமதமாக ஆரம்பித்து இருப்பதாலும் இன்று இரவே பணி நிமித்தம் திரும்பி செல்ல வேண்டியிருப்பதாலும் விரைவாக வழக்கை தொடுங்கள் என்று பேராசிரியர் ரபீக் அவர்களை பேச அழைத்து வழக்காடு மன்றத்தை தொடங்கி வைத்தார்.

வழக்கு தொடுத்தல்... மறுத்தல்... தீர்ப்பு...  எல்லாம் அடுத்த பதிவாக...

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

தினேஷ்குமார் சொன்னது…

நாடுகடந்த நமக்கொரு ஆறுதல் கூடும் .......

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நல்ல பதிவு. கிரைண்டர் கதை சுவாரசியம்.

இன்றைய காலத்தில் நாம் எல்லாமே கஷ்டப்படாமல் சுலபமாக கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.

வழக்குக்கும் தீர்ப்புக்கும் காத்திருக்கிறேன்.

Unknown சொன்னது…

arumai arumai

Unknown சொன்னது…

arumai arumai

மகேந்திரன் சொன்னது…

இலக்கியம் பேசும் நாஞ்சில் சம்பத் அவர்களை மிகவும் பிடிக்கும்..
அற்புதமான பேச்சாளர்...
அபுதாபியில் நடுக்கடலில் இருப்பதால் காணக் கிடைக்காது போயிற்று...
பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே...