மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 மார்ச், 2013

தீர்மானமல்ல காரணம்! - தினமணி தலையங்கம்


பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ஒன்று "மேக்பெத்'. ஸ்காட்லாந்து நாட்டு அரசன் டன்கேன் என்பவனை, தனது மனைவி மேக்பெத் சீமாட்டியின் வற்புறுத்தலின் பேரில் கொலைசெய்து அரசனாகிறான் மேக்பெத் என்கிற தளபதி. அந்தக் குற்ற உணர்வு, கணவன் மனைவி இருவரையும் நிம்மதி இழக்கச் செய்கிறது. மேக்பெத் சீமாட்டி மனநோயால் பீடிக்கப்பட்டு இறப்பாள். மேக்பெத் கொல்லப்படுவான்.

அரசனைக் கொன்றுவிட்டு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் திரும்பும் கணவன் தளபதி மேக்பெத் கூறுவான், ""கழுவினால் மறையும் ரத்தக் கறைகளா இவை? கடல் வெள்ளம் முழுவதையும் விட்டுத் தேய்த்துக் கழுவினாலும் மறையாத கறைகள் அல்லவா இவை? என்று.

குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு, மேக்பெத் சீமாட்டியும், தூக்கத்தில் பிதற்றிக் கொண்டு நடக்கும் நிலைக்குத் தள்ளப்படுவாள். அப்படி ஒருநாள் தூக்கத்தில் நடக்கும்போது, மேக்பெத் சீமாட்டி பிதற்றுவதாக ஷேக்ஸ்பியர் எழுதி இருக்கும் வரிகள் இவை - அரேபியாவின் ஒட்டுமொத்த வாசனைத் திரவியங்களையும் போட்டுத் தேய்த்தாலும் என்னுடைய இந்த விரல்களில் இருக்கும் ரத்தவாடையை அகற்ற முடியாது போலிருக்கிறதே!

ஈழத் தமிழர் பிரச்னையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், அப்படியே கொண்டுவர முடியாவிட்டாலும்கூட, நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடந்த படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து, இப்போது மத்திய அமைச்சரவையிலிருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் திமுக விலகி இருக்கிறது. இதற்கும் "மேக்பெத்' நாடகத்திற்கும் என்ன தொடர்பு என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் கடுமையான போர் நடந்து வந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுகதான். முதலமைச்சராக இருந்தவர் மு. கருணாநிதிதான்.

இப்போதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் திமுகவின் ஆதரவு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இரண்டாவது பெரிய கட்சியே திமுகதான். திமுகவின் ஆதரவு இல்லாவிட்டால் அரசே கவிழ்ந்துவிடும் என்கிற நிலைமை.

அப்போது ஈழப் பிரச்னையில் திமுக எடுத்த நிலைப்பாடு என்ன? 14.10.2008-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது; 24.10.2008-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியது; 12.11.2008-இல் சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டது; 04.12.2008-இல் பிரதமரை எம்.பிக்கள் சந்தித்தது; 27.12.2008 அன்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது; 28.03.2009 அன்று பிரதமருக்கும் சோனியாவுக்கும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடிதம் எழுதினார்; 7.04.2009 அன்று பிரதமர், சோனியா, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் ஆகியோருக்குத் தந்தி அடித்தார்; 09.04.2009-இல் பேரணி நடத்தினார்; 21.04.2009-இல் மீண்டும் பிரதமருக்கும், சோனியாவுக்கும் தந்தி அனுப்பினார் கருணாநிதி; 27.04.2009-இல் ஆளும் கட்சியாக இருந்த திமுக, தமிழகத்தில் பந்த் நடத்தியது; 27.04.2009-இல் கண்துடைப்பு உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. இதையெல்லாம், "மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!' என்று தலைப்பிட்டு கடந்த ஆகஸ்ட் 29 அன்று அவர் அறிக்கை விடுத்திருக்கிறார்.

இப்போது எடுத்திருக்கும் முடிவை அப்போது எடுத்திருக்க வேண்டாம், எடுப்பதாகச் சொல்லி இருந்தால்போதும்; கூட்டணியிலிருந்து விலகி இருக்க வேண்டாம், அமைச்சரவையிலிருந்து வெளியேறி இருந்தால் போதும், முள்ளி வாய்க்கால் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். குறைந்தபட்சம், இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் இனப் படுகொலை நடந்தேறி இருக்காது.

அப்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் அமைச்சரவையிலிருந்து விலகுங்கள், மத்திய அரசுக்கு ஆதரவை விலக்குங்கள் என்று ஊடகங்களும், தமிழ் உணர்வு உள்ளவர்களும் ஓலமிட்டபோது, நாங்கள் ஆட்சியில் இருப்பது பிடிக்காமல் பதவி விலகச் சொல்கிறார்கள் என்று சப்பைக் கட்டுக் கட்டிய அதே கருணாநிதி இப்போது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் விட்ட கதையாக, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை என்று காரணம் கூறி, கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

தன்னைப் பிரணாப் முகர்ஜியும், ப. சிதம்பரமும் ஏமாற்றிவிட்டார்கள் என்று இப்போது மேக்பெத் சீமாட்டியைப் போலக் குற்ற உணர்வில்  புலம்புகிறவர், ஏமாற்றியது தெரிந்ததும் விலகி இருக்கலாமே, யார் தடுத்தது? குதிரைகள் ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டிய கதையாக அல்லவா இருக்கிறது கருணாநிதியின் முடிவு.

அமெரிக்கத் தீர்மானம் என்பதே உப்புச் சப்பில்லாத ஒரு தீர்மானம். அதை ஆதரிப்பதும் ஒன்றுதான் எதிர்ப்பதும் ஒன்றுதான். நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது வெளியேறுவதற்கு வேண்டுமானால் சாக்காக இருக்குமே தவிர, அதனால் ஆகிவிடப் போவது ஒன்றுமில்லை. பல்லாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டு விட்டனர். பல லட்சம் பேர் இன்னும் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது ராஜபட்ச மட்டுமல்ல. பதவிக்காக மௌனம் சாதித்த திமுகவும் கருணாநிதியும் கூடத்தான்.

இலங்கைப் பிரச்னையில், ஈழத் தமிழர் நலனில் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் நிஜமான அக்கறை இருந்திருக்குமானால், தகவல் தொலை தொடர்புத் துறை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கேட்டுப் பெற்றது போல, வெளிவிவகாரத் துறையைக் கேட்டுப் பெற்றிருக்க முடியுமே, ஏன் செய்யவில்லை? செய்ய மாட்டார், அதில் அவருக்கு அக்கறை இல்லை.

இப்போது மட்டும் ஏன் இத்தனை நாளும் இல்லாத திடீர் ஆவேசம், அக்கறை? அதற்குக் காரணம், ஒன்று மேக்பெத் சீமாட்டியை அலட்டியது போன்ற குற்ற உணர்வாக இருக்கலாம். குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி காண்பதென்பதேது?

இன்னொரு காரணம், நிச்சயமாக ஈழத் தமிழர் மீதான அக்கறையல்ல, வெளியில் தெரியாத வேறு ஏதோ ஒரு காரணம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதை, கருணாநிதியின் பாணியில் கூறுவதாக இருந்தால், "மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை' அவ்வளவே!

-நன்றி : தினமணி
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

பால கணேஷ் சொன்னது…

குதிரைகள் ஓடியபின் லாயத்தைப் பூட்டுகிறதுபோல; மல்லாந்து படுத்து எச்சில் துப்புவுதைப் போல... என்ன அழகாக உவமைகளால் சாட்டையடி! நீங்கள் ரசித்ததை நானும் மிக ரசித்தேன் நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி காண்பதென்பதேது...?

சேக்காளி சொன்னது…

//மேக்பெத் சீமாட்டியைப் போலக் குற்ற உணர்வில் புலம்புகிறவர்//
என்று கூறி உண்மையான புலம்பலுக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.மேக்பெத் சீமாட்டியை போலக் குற்ற உணர்வு உள்ளதாய் நடிப்பதற்கு(நடிப்பதற்கு என்பதின் கீழ் அடிக்கோடிட முடியவில்லை)
//நிச்சயமாக ஈழத் தமிழர் மீதான அக்கறையல்ல, வெளியில் தெரியாத வேறு ஏதோ ஒரு காரணம்//என்பது தான் சரி.