மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 19 செப்டம்பர், 2012சினிமா: சுந்தர பாண்டியன்
இயக்குநர் சசிகுமாரை அவரின் முந்தைய படங்களுக்காக ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. அதனால்தான் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் அவரே தயாரித்து கதாநாயகனாக நடித்து  இருக்கும் சுந்தர பாண்டியன் படம் வெளிவருவதற்கு முன்னரே ரொம்ப எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் சில குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் செய்தது என்றே சொல்லலாம்.

படம் ஆரம்பிக்கும் போது உசிலம்பட்டி மதுரை மாவட்டத்துல புறக்கணிக்க முடியாத ஊரு என்று ஆரம்பித்து உசிலம்பட்டி பற்றி சில விசயங்களைச் சொல்லி  காதலிக்கிறேன்னு பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனை கள்ளிக்காட்டுக்குள்ள கொல்றதைச் சொல்லி கதைக்குள் செல்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய தலக்கட்டு ரகுபதியோட மகன் சுந்தரபாண்டியனாக சசிக்குமார் இதுவரை நண்பர்களின் காதலுக்காக போராடியவர் இதில் நண்பனின் காதலியை தனதாக்கி கொள்கிறார். ஆரம்பத்தில் வரும் பாட்டில் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் நகரும் படத்தில் அலட்டல் இல்லாத நடிப்பால் மீண்டும் ஒருமுறை சபாஷ் போட வைத்திருக்கிறார். 

சசிகுமாருக்கு குரல் மிகவும் கவர்ச்சிகரமாக கணீர் என்று இருப்பது மிகப்பெரிய பலம். வசனங்களை அலட்டலில்லாமல் பேசும் அழகுக்காகவே அவரை எல்லாருக்கும் பிடித்துவிட்டது என்பதே உண்மை. என்ன ஒரே மாதிரி கதாபாத்திரங்களாகவே அவர் நடித்து வருவதை இத்துடன் நிறுத்தி விட்டு தாடிக்கு கொஞ்சம் விடுப்பு கொடுத்து கதாபாத்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

கல்லூரி முடித்து விட்டு வேலை வெட்டிக்குப் போகாமல் டீக்கடையில் அமர்ந்து பெண்களை கேலி பண்ணும் கதாபாத்திரத்தில் பெண்களைப் ஒரு விதமாக பார்ப்பதாகட்டும் கண்ணடிப்பதாகட்டும் நண்பனின் காதலுக்கு உதவப் போகிறேன் என்று பேருந்தில் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியாகட்டும், சிறையில் இருந்து வரும் போது வீட்டில் என்ன நினைப்பார்களோ என்று வருந்துவதாகட்டும் லட்சுமி மேனனுடனான காதல் காட்சிகளாகட்டும்  கடைசிக் காட்சியில் நண்பர்களிடம் வசனம் பேசுவதாகட்டும் எல்லாவற்றிலும் ஜொலித்திருக்கிறார்.

அவருக்கு பக்கபலமாக வரும் நண்பர்களில் சூரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். தேர்தல் புயலில் காணமல் போன வடிவேலுவின் இடம் எனக்குத்தான் என்று அப்பா காதாபாத்திரம் ஒன்றை வைத்து வாடா போடா என்று ஏக வசனத்தில் பேசும் சந்தானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அவரைப் பிடிக்காதவர்கள் எல்லாருக்கும் சூரியை கண்டிப்பாக பிடிக்கும். நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்கும் காலம் விரைவில் வரும்.

சூரி பேசும் வசனத்தை கேட்டு சிரித்து அடங்கும் போது அடுத்த வசனம் நம்மளை மீண்டும் சிரிக்க வைக்கிறது. ஆனால் வசனங்களை அள்ளியெறியாமல் நறுக்கென்று அவரை பேச வைத்திருக்கிறார் இயக்குநர். பாம்பிஞ்சுல இருந்து பல்லுப் போனதுவரை மாப்பிள்ளையாலதான் சந்தோசப்படுத்த முடியும்... மாப்ளே இங்க ஹீரோவெல்லாம் உருவாக்க முடியாது நாமளா ஆயிக்கணும்... ரன்னிங்க்ல செவப்பா இருக்கவன் ஏறினா ஹீரோம்பாளுங்க கருப்பா இருக்கிறவன் ஏறினா காமடியன்னும்பாளுங்க... சச்சினா இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு... எங்களாலதான் மரக்கடையே வச்சிருக்கான் இல்லேன்னா மைக்ரோசாப்ட் கம்பெனிய இவந்தான் நடத்திருப்பான் என படம் முழுக்க கலகலக்க வைக்கும் வசனங்களால் கலக்கியிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் அர்ச்சனாவாக லட்சுமி மேனன், இவருக்கு முதல்படம் பிரபு சாலமனின் கும்கி என்றாலும் சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டு விட்டது. ஆரம்பக்காட்சியில் அக்காவின் கொழுந்தனுக்கு கட்ட வேண்டும் என்று வீட்டில் பேசும் போது எதிர்த்து பேசி எவ்வளவோ பாத்துட்டோம் இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு என்று கண்ணாடி முன் பேசுவதில் ஆரம்பித்து பேருந்துக் காட்சிகளில் படத்தின் மொத்தக் கதையும் அவர் மேல் பயணித்தாலும் தனது தோழியிடம் பேசியபடி கண்களாலேயே நடித்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது சசிக்குமார் காதலை சொல்லும் போது மிரட்டுவதாகட்டும் அப்புறம் நண்பனின் காதலை சொல்ல வரும் சசிக்குமாரை காதலிப்பதாக சொல்லும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சியாகட்டும் அருமையாக செய்திருக்கிறார்.  கும்கியிலும் நல்ல கதாபாத்திரம்தான் என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பார்.

இசைஞானியின் பொன்மானே... பாடலுடன் கண்டமனூருக்குள் வரும் தாமரை என்ற பேருந்தில் இடைவேளை வரையான படம் கலகலப்புடன் நகர ஆரம்பிக்குது. லட்சுமி மேனனை பேருந்தின் முன்பக்கம் இருந்து காதலிக்கும் நண்பன், அவருக்குப் போட்டியாக பேருந்தின் பின்னால் இருந்து லுக்கு விடும் அழகர்சாமி இவர்களுக்கு மத்தியில் நண்பனின் காதலுக்காக பேருந்தில் பயணிக்கும் சசிகுமார், சூரி , நாயகிக்கு துணையாக அவளின் தோழி, பேருந்துக்குள் சின்னச்சின்ன காதாபாத்திரங்கள் என படம் தொய்வில்லாமல் செல்கிறது.

அழகர்சாமி  பேருந்தில் பின்புறம் நின்றே நாயகி லட்சுமி மேனனை காதலிப்பதாக சசிகுமார் குழுவில் வந்து சொல்லி அவர் சொல்லும் டீலுக்கு ஒத்துக் கொண்டு  ஒரு மாதம் பேருந்துக்குள் அப்படியிப்படி முயற்சித்து முடியாமல் விலகிக் கொள்கிறார். சசிகுமார் நாயகியை காதலிப்பதை அறிந்து வில்லன் போல மாறி மீண்டும் பேருந்தில் ஏறி நாயகியை வம்புக்கு இழுக்கிறார். பேருந்துக்குள் நடக்கும் காதல் சண்டையில் பரிதாபமாக உயிரை விட்டாலும் அதன் பிறகு படத்தின் கதையை டுவண்டி 20 மேட்ச் மாதிரி வேகமெடுக்க வைத்துச் செல்கிறார்.

ஆரம்பக்காட்சிகள் லட்சுமி மேனனை காதலிக்கும் அறிவழகனாக வந்து நண்பன் காதலிப்பதை அறிந்து மனசு வருந்தி பின்பு நண்பனுடனே சுற்றி கிளைமாக்ஸ் காட்சியில் சுயரூபத்தைக் காட்டும் நண்பனாக இனிகோ பிரபாகரன் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

 முறைப்பொண்ணாக வந்து முந்திரி வாங்கும் போது யாரு பங்காளிக்கா என்று சசிகுமார் கேட்க, இல்ல பாயாசத்துக்கு என்று சொல்லும் அத்தை பொண்ணு, லட்சுமி மேனனின் அக்கா கொழுந்தனாக வந்து அவளை கட்டிக்கொள்ள நினைக்கும் விஜய் சேதுபதி, பரஞ்சோதி, சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், லட்சுமி மேனனின் அப்பாவாக வரும் தென்னவன், அப்பத்தா, அம்மாக்கள், அக்கா, சித்தி என அனைவரும் கொடுத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லாருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இசை என்.ஆர்.ரகுநந்தன் பாடல்களைவிட பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு பல இடங்களில் நம்மையும் படத்தோடு பயணிக்க வைக்கிறது. 

கடைசி காட்சியில் மண்டையில் அடிபட்டும் கத்திக் குத்துப்பட்டும் விழுந்து கிடந்தாலும் பாரம்பரிய தமிழ் கதாநாயகனாக மாறி எல்லாரையும் அடித்து துவைத்து வீர வசனம் பேசியிருக்கிறார் நாயகன் சசிகுமார்.  இது அவரது எல்லாப் படத்திலும் வரத்தான் செய்கிறது. இருந்தும் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. படத்தின் கதை போகும் வேகத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சசிகுமார் அன் கோவின் சுந்தர பாண்டியன் வெற்றிக் கோட்டையில் கொடியை நாட்டிவிட்டது, 


சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் சசிக்குமாருக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் இந்த சுந்தர பாண்டியன்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் வழங்கிய  இணையத்தளங்களுக்கு நன்றி

9 கருத்துகள்:

 1. அப்பா பாக்கலாம்னு சொல்லுங்க!

  பதிலளிநீக்கு
 2. இந்த வாரம் செல்ல வேண்டும்... ரசித்து எழுதிய விமர்சனத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 3. ஒரே மாதிரி கதைக் களம் உபயோகிப்பது பலவீனம். கிட்டதட்ட எல்லா படமும் ஒரே கதைதான்

  பதிலளிநீக்கு
 4. நல்லா வந்தா சரிதான்....உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி...

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 5. படத்தை உங்கள் எழுத்து நடையில் நல்லா விமர்சனம் செஞ்சிருகீங்க குமார் எனக்கு படம் பிடிச்சிருந்தது

  பதிலளிநீக்கு
 6. தம்பியின் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுது..(ஆனா முடியாது..நம்ம கூகுலாண்டவர் மனசு வச்சாத்தேன் முடியும்..இங்கெல்லாம் அதிகம் தமிழ் படம் வராது...)

  பதிலளிநீக்கு
 7. ரசனையோட எழுதியிருக்கிறீங்கள் குமார்.ஆனாலும் படங்கள் பார்ப்பது நல்லாவே குறைஞ்சுபோச்சு இப்பல்லாம்.எல்லாப் படங்களும் ஆளை மாற்றிவிட்டு சுவை ஒரேமாதிரித்தானே இருக்கு !

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...