மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 செப்டம்பர், 2012தெருக்கூத்து என்ற நாடகம்.எங்கள் பகுதியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கோவில் திருவிழா என்றால் எதாவது ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும்... அது நாடகம் அல்லது கரகாட்டம், ஒயிலாட்டம் என எதாவது ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். திருவிழாவின் நிறைவு நாளில் விருந்து உபசரிப்புடன் விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள் வைப்பது என்பது தொடரும் மரபு. இந்த மரபு காலப்போக்கில் மாறியிருக்கிறதே தவிர நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பதில் மாற்றம் வரவில்லை. சில வருடங்களுக்கு முன் திருவிழா தினத்தை அலங்கரிப்பதில் எங்கள் பகுதியில் முதலிடம் பிடித்திருந்தது கூத்து எனப்படும் நாடகம்தான். வள்ளி திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, அர்ச்சுனன் தவசு, தூக்குத் தூக்கி என ஏதாவது ஒரு நாடகம் வைப்பார்கள். பெரிய கோவில் திருவிழாக்களில் மூன்று நான்கு நாடகங்கள் கூட நடத்தப்படும்.
விழாவின் முக்கிய நாளன்று இரவு பத்துமணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிங்கார கலையரங்கில் நாடகம் நடத்தப்படும். ஆர்மோனியம் பின்பாட்டுடன் விடிய விடிய நடக்கும் நாடகத்தை காண வந்திருக்கும் கூட்டம் விடியும் வரை அமர்ந்து பார்க்கும் சிலர் நாடகம் பார்த்த இடத்திலேயே கிடந்து உறங்குவார்கள். பிரார்த்தனைக்காக நாடகம் வைப்பவர்கள் பெரும்பாலும் வள்ளி திருமணம்தான் வைப்பார்கள். ஏனென்றால் மற்ற நாடகங்கள் எல்லாம் சோகமாய் இருக்குமாம். சந்தோஷமானதாகதான் வைக்க வேண்டும் என்பதால் பிரார்த்தனைக்காரர்களின் தேர்வு வள்ளி திருமணம்தான்.
நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வள்ளி திருமணம் நாடகம் வைப்பதற்காக கோவிலுக்கு நேராக வயலில் உயர்வான வரப்புப் பகுதியில் சமன் செய்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. திருவிழா அன்று பகலில் சரியான மழை. இரவில் தென்னங்கீற்று, பனைஓலை போன்றவற்றை போட்டு அமர்ந்து நாடகம் பார்த்ததாக ஞாபகம். அதன் பிறகு நம்ம ஊருக்கு நாடகம் ராசியில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இருப்பினும் இன்றும் அந்த நாடகமேடை அமைந்த இடம் கூத்துப் பொட்டல் என்றால்தான் தெரியும். அதன்பிறகு திருவிழா பேச்சு வந்தால் நாடகம் வைக்க வேண்டும் என்று சொல்லியே நாங்கள் கல்லூரி வரும்வரை திருவிழா நடக்காமலே இருந்ததும் அதன் பிறகு நாங்கள் களத்தில் இறங்கியதும் தனிக்கதை.
சரி அந்தக் கூத்தை விட்டுட்டு இந்தக் கூத்துக்குள் வருவோம். நாடக நடிகர்களில் சிலருக்கு நல்ல பெயர் இருக்கும் 'எப்பா கண்டதேவியில அஞ்சாம் திருவிழாவுக்கு வள்ளி திருமணம் கூத்து வச்சிருக்காகளாம்... நம்ம மணி கடையில நோட்டீஸ் பாத்தேன்' என்று தேவகோட்டையில் இருந்து வரும் ஒருவர் சொன்னால் போதும் 'யாரு முருகன்?' என்று கேட்டு ஒரு கூட்டம் கூடும் இன்னார் என்றால் போதும் நாடகப் பிரியர்கள் வாயெல்லாம் பல்லாக 'அப்ப நல்லாயிருக்கும்' என்று சொல்வார்கள். முருகனுக்கு மணிமாறன், ஸ்ரீராம் என்றால் அப்ப தர்க்கம் நல்லாயிருக்கும் என்பார்கள். வள்ளியா கரூர் இந்திரா வரணும்ப்பா... மணிமாறனும் இந்திராவும் நடிச்சா அந்த நாடகம் அருமையா இருக்கும்... அதோட நாரதருக்கு இப்ப வந்திருக்கான்பாரு உருவாட்டி தமிழரசு அவனைப் போடணும்... ஆளு குட்டையா இருந்தாலும் போற இடமெல்லாம் பிச்சு உதறுரானாமே என்று பெரிசுகள் 'ஜொல்'லுவார்கள். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜ் நடிச்சாத்தாம்ப்பா நல்லாயிருக்கும் அப்படின்னு நடிகர்கள் பார்த்து நாடகம் பார்க்க கூட்டம் வரும்.
சரி... இந்த நாடகம் இப்போ என்னாச்சு... கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிப் போகிறது என்றே சொல்லலாம். காரணம் என்னவென்றால் இப்ப திருவிழாக்களில் நாலு மணி நேரம் ஆர்க்கெஸ்ட்ரா வச்சி அதுல நாலு பேரை நடுவில் ஆடவிட்டு விழாவை சிறக்க வைத்துவிடுகிறார்கள். இரவு முழுவதும் விழித்து நாடகம் பார்க்க யாரும் விரும்புவதில்லை. மேலும் கரகாட்டம் என்ற ஒரு அற்புத கிராமியக் கலை நிகழ்ச்சி ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களோடு தன்னை மாற்றிக் கொண்டு வலம் வர ஆரம்பித்ததும் நாடகம் சற்றே எட்டி நின்று வேடிக்கை பார்த்தது. 
போட்டிக் களத்தில் குதிக்க நாடகமும் ஆபாசம் என்னும் ஆடையை கையில் எடுத்தது. ஆரம்பத்தில் பபூன், டான்ஸ் இருவரும் கரகாட்டத்தைவிட கேவலமாக ரெட்டை அர்த்த வசனங்களில் பேச, அதை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. பபூன் , டான்ஸ் முடிந்ததும் மேடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் மக்கள் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்துவிடும். நாடகக்காரர்கள் பார்த்தார்கள் முருகனையும் வள்ளியையும் அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் ஆபாச கூட்டுக்குள் அடைத்துவிட்டார்கள். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நாடகம் என்ற கலை ஆபாச நிகழ்ச்சியாக மாறிப் போனது. 
இப்போதெல்லாம் இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை திருவிழா நடத்துபவர்கள் விரும்புவதில்லை. நாலைந்து நாடகங்கள் நடத்தும் கோவில் திருவிழாக்களில்கூட ஆடல் பாடலும் ஆர்க்கெஸ்ட்ராக்களும் முக்கிய இடம் பிடிக்க நாடகம் என்பதை மறக்காமல் இருக்க போனால் போகிறது என்று ஒன்று மட்டும் நடத்தப்படுகிறது. எப்படியோ ஒரு சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்படுவதால் இன்னும் எங்கள் பகுதியில் நாடகக் கலை அழியாமல் காப்பாற்றப்படுகிறது என்பது சற்று சந்தோஷமான விஷயமே.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் நாடகம் வைக்கலாம் என்று முடிவு செய்து வள்ளி திருமணம் வைத்தோம் வடிவேலு சொல்கிற மாதிரி ஆரம்பம் நல்லாத்தான் போச்சு... நல்ல கூட்டம் கூடியிருந்தது. கரகாட்டம் வைத்தாலே கூட்டம் வராத எங்கள் ஊரில் நாடகத்துக்கு எதிர்பார்த்தைவிட அதிகமான கூட்டம் வந்தது கண்டு எங்களுக்கே ஆச்சரியம். ஆனா நேரம் ஆக ஆக எல்லாரும் போயாச்சு... நாலஞ்சு ஆளுக மட்டும்தான் இருந்தாங்க... 
விழாக் கமிட்டிங்கிற பேர்ல இருந்த பெரிசுகள்ல எங்கப்பா, மெதுவா எங்க சித்தப்பாக்கிட்ட தம்பி இருக்கான்... எனக்கு உறக்கம் வருது என்று என்னைய கோர்த்து விட்டுட்டு தூங்கப் போக...  மெதுவாக ஒவ்வொரு ஆளா கழண்டுக்கிச்சு... எங்க ஐயா ஒருத்தரு, நான் எங்க சித்தப்பா, மச்சான், மாமன் என இன்னும் சிலரும் இருக்க முருகனா வந்தவருக்கு வெற்றிடத்தைப் பார்த்து எவ்வளவு நேரம்தான் மேயாத மானைத் தேடுறதுன்னு கஷ்டமாயிருச்சு... எங்க சித்தப்பாக்கிட்ட அண்ணே இதோட முடிச்சுக்குவோம்... யாருமே இல்லாத கடையில நான் எப்படி டீ ஆத்துறதுன்னு கேட்டாரு... சித்தப்பாவும் பாத்தாரு... அவரு சொல்றதுல ஒரு நியாயம் இருக்குன்னு சரியின்னு சொல்ல... ஆறு மணி வரைக்கும் கத்த வேண்டியவரு சந்தோஷத்துல மானையும் தேடலை மத்ததையும் பாக்கலை வேகவேகமாக வள்ளியை கட்டிக்கிட்டு பொயிட்டாரு. 
இன்றைய நிலமையில் கூத்துக் கலை அழிந்து வருவதற்கு சரியான வரவேற்பு இல்லாததுதான் முக்கியக் காரணம் என்றாலும் கால ஓட்டத்தில் கதைகளை குறைத்து இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இன்று கலை இழந்து நிற்கிறது என்பதுதான் உண்மை... மேலும் இனி வரும் காலங்களில் யாரும் இரவு முழுவதும் விழித்து நாடகங்களைப் பார்க்கப் போவதில்லை... இப்போது திருவிழாக்களில் ஆடல் பாடல், ஆர்க்கெஸ்ட்ரா போன்றவை தலையெடுக்க ஆரம்பித்ததும் நாடகம் மற்றுமின்றி ஓயிலாட்டம் கரகாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பதே யதார்த்தம்.

-'பரிவை' சே.குமார்

9 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. மலரும் நினைவுகள்..

  குரவைக்கூத்து, துணங்கைக் கூத்து தொடங்கி எத்தனை எத்தனை கூத்துகள்..

  சிலப்பதிகாரம் கூட ஒருகாலத்தில கோவலன் சரிதம் என்று வழங்கப்பட்ட கதைதானே..

  எவ்வளவு கூத்துக்களை இழந்திருக்கிறோம்..

  பதிலளிநீக்கு
 3. ஒரு காலத்துல நாங்க பாய் கொண்டு போய் மைதானத்துல விரிச்சி போட்டு இந்த நாடகங்களை விடிய விடிய ரசிச்ச துண்டு...இப்போ சமூக நாடகம் என்கிற பெயரில் ஆரம்பிச்சாங்க....அப்புறம் இந்த வள்ளி திருமணம், மதுர வீரன் எல்லாம் போச்சு...

  பதிலளிநீக்கு
 4. பாஸ்ட் புட் காலத்தில் இரவு முழுதும் விழித்து நாடகம் பார்க்க யாரும் தயாரில்லை குமார் அதுதான் உண்மை

  பதிலளிநீக்கு
 5. ராத்திரி கண்ணு முழிச்சு மேட்ச் பார்க்கறதுலயோ சினிமா பார்க்கறதுலயோ இருக்கற ஆர்வம் கூத்து பார்க்கறதுல மக்களுக்கு இப்பல்லாம் இருக்கறதில்லை. இதான் வேதனையான உண்மை..

  பதிலளிநீக்கு
 6. உண்மைதான் சகோ!வர,வர தரங்கெட்ட சினிமாவைப் பார்த்துப்,பார்த்து இளைஞர்கள் நாடகம் என்றாலே....................பெரியோரும் விதி விலக்கல்ல!எங்கள் நாட்டிலும்(ஈழம்)இதே நிலை தான்.நாடகம் போட்டால் விசிலடித்து ஆர்ப்பாட்டம் செய்து.........................ஹும்!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 7. கிராமத்தில் கோவில் திருவிழாவில் என்னவெல்லாம் நடக்கும்னு அருமையான நினைவுகளோட பகிர்வு.அந்தக் காலம் வேறு தான்!

  பதிலளிநீக்கு
 8. //இன்றைய நிலமையில் கூத்துக் கலை அழிந்து வருவதற்கு சரியான வரவேற்பு இல்லாததுதான் முக்கியக் காரணம் என்றாலும் கால ஓட்டத்தில் கதைகளை குறைத்து இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இன்று கலை இழந்து நிற்கிறது என்பதுதான் உண்மை... //

  murrilum unmai..vaalththukkal

  பதிலளிநீக்கு
 9. இப்போது மிகவும் குறைந்து விட்டது... அந்த மகிழ்ச்சி இனி வரும் என்பது கனவே...

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...