மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 நவம்பர், 2010

வளந்துட்டோமுல்ல...

கல்லூரிக் காலத்தில் கவிதை எழுதுகிறேன் என்ற பேரில் எதையாவது கிறுக்குவதும் அதைப் படித்த நண்பர்கள் ஆஹா... ஓஹோவென புகழவதும் என ஆரம்பித்த என் கிறுக்கல்கள் கல்லூரி கையெழுத்துப் பிரதிகளில் அரங்கேறியபோது எதையோ சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷம் மனசுக்குள்...

எங்கள் பேராசானின் நட்பு கிடைத்த போது அவரது எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அவற்றைப் படித்த நான், எழுத்தென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்... நாம் எதையோ கிறுக்கிவிட்டு கவிதை என்கிறோம்... அதையும் நண்பர்கள் சொல்லமுடியாமல் புகழ்கிறார்களே என்ற உண்மையை அப்போதுதான் உணர்ந்தேன்.

ஒரு மாலை வேளை எனது பேராசானுடன் கதைகள் பேசியபடி தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் நடந்து சென்றபோது, எனது நண்பன் முருகன் எழுதிய கதை குறித்த விவாதம் வந்தது.. கதையின் நிறைகுறைகளை ஐயா சொல்லி இப்படி எழுதியிருந்தால் இன்னும் நல்லாயிருக்கும் என்று விளக்கமும் கொடுத்தார். எதுவும் பேசாமல் அவர்களின் உரையாடலை மட்டும் கேட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஐயா 'என்ன பரியன்வயல் பண்ணையாரே (ஆரம்பத்தில் அப்படித்தான் அழைப்பார்... பின்னர் தம்பி... அப்புறம் குமார்) நீங்களும் எழுதலாமே' என்றார். 'நானா... இல்லய்யா எனக்கெல்லாம் கதை எழுத வராது...' என்று ஜகா வாங்கினேன். அவர் விடாமல் 'முயற்சி பண்ணினா வருமுய்யா... என்ன கம்ப சூத்திரமா... இது' என்றார். 'ஐயா வயல்வேலைகள் என்றால் செய்துவிடுவோம்... இதெல்லாம்... அதுக்குத்தான் முருகன் இருக்கானே... அப்புறம் நா வேற எழுதனுமா?' என்றேன். அந்த விவாதம் அத்துடன் முற்றுப் பெற்றது.

சில தினங்களுக்குப் பிறகு ஒரு மாலை நானும் முருகனும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது அன்று ஐயா கேட்ட கேள்வியை முருகன் கேட்டான். 'அட ஏண்டா... நீ வேற அந்தளவுக்கெல்லாம் இந்த அறிவுக்கு எட்டாது... நீ தமிழ் படிக்கிறே... இலக்கியமா எழுதுறே... நா எங்கிட்டு எழுதுறது...' என்றேன். 'சும்மா எழுதிப்பாரு ஐயாகிட்ட கொடுப்போம்.. அவரு என்ன சொல்றாருன்னு பாக்கலாம்...' என்று தூபம் போட்டான். சரி என்று நானும் ராத்திரி உக்காந்து 'இதுதான் காதலான்னு...' அப்பவும் பாருங்க நல்ல கதையா எழுதாம காதல்கதைதான் வந்துச்சி... நாலு பக்கத்துக்கு கட்டுரை மாதிரி ஆரம்பத்துல டீக்கடையில போடுற காதல் பாட்டோட ஆரம்பிச்சு... முடிவுல சுபம் போடுறதுக்கு முன்னால காதல் பாட்டோட முடிச்சாச்சு.

முருகன் வாங்கி பாத்துட்டு 'சூப்பரா இருக்குடா...' அப்படி இப்படி ஓவரா பில்டப் கொடுத்து நம்மளை ஒரு மாய வளையத்துக்கு கொண்டு பொயிட்டான். ஐயாகிட்ட கொண்டு போய் நீட்டினேன். 'என்னய்யா இது... கடுதாசி மாதிரி...' அப்படின்னு வாங்கினார். 'நான் கதை எழுதியிருக்கேன்னு மெதுவா இழுத்தேன். 'அட பண்ணையாரு... கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா' அப்படின்னு வாங்கி படிச்சாரு... நான் அவரின் நெற்றிச் சுருக்கங்களை படித்தேன். ' காதல் கதைதான் வருது... பரவாயில்லை... நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்...' என்று சொன்னார்.

அதன்பின் வசிஷ்டரின் வாக்கு கிடைத்த மகிழ்ச்சியில் கதைகள் என்ற பெயரில் சில அபத்தங்கள் அரங்கேறின. சில நல்லாயிருக்கு என்றும் சில சரியில்லை என்றும் ஐயாவால் அங்கீகரிக்கப்பட்டன. எனது சின்னம்மா பையன், என் சக வயது சகோதரன், நண்பன் பழனியப்பன் அருமையாக கதை எழுதுவான். அவன் கதைபூமியில் பாரத் வெற்றி குமார் என்ற பெயரில் கதைகள் எழுதி வந்தான். அந்த சமயத்தில் ராணுவ வீரனின் மனைவியை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைக்கு ஐயா 'பூமாரங்' என்று பெயரிட தினபூமி -கதைபூமிக்கு அனுப்பி வைத்தேன். அதை முதல் பக்கத்தில் 'கெட்டும் பட்டிக்காடு சேர்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன் பின் கதைபூமியில் எனது கதைகள் அடிக்கடி வந்தன. படம் கொடுத்து கவிதை எழுதச் சொல்வார்கள். அதிலும் எனது கவிதைகள் வாராவாரம் இடம் பெற்றன.

இன்னும் ஞாபகம் இருக்கிறது... மூன்றாம் ஆண்டு படிக்கும்போது 'கட் அவுட் நிழலுக்கு கீழே' என்று நான் எழுதி கவிதை ஐயாவுக்கு ரொம்ப பிடித்த காரணத்தால் 'தாமரை' இதழுக்கு அவரது செலவில் அனுப்பிவைத்தார். பொன்னீலன், கவிஞர் மீரா, தனுஷ்கோடி, ஐயா என்று ஜாம்பவான்கள் எழுதும் பத்திரிக்கையில் நம்ம படைப்பா... சான்சே இல்லை என்று நினைத்திருந்தேன்.

கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் தேவகோட்டை சரஸ்வதியில் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த ரத்தக் கண்ணீர் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ரிசல்ட் வந்துவிட்டதாக ஒரு நண்பர் சொல்லிச் சென்றார். கல்லூரிக்கு சென்றால் எங்கள் பேராசிரியர் கே.வி.எஸ். அவர்கள் ஒவ்வொருவரின் மார்கையும் சொல்ல குறித்துக் கொண்டோம். எனக்கும் வாசிக்கிறார்... 82, 89,78, 87,29 என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இதுவரை அரியரே இல்லை... இந்த செமஸ்டரில் எப்படி... பேசாமல் நின்னேன்...

'என்ன குமார் என்னாச்சு... நல்லாத்தானே எழுதுனீங்க...' என்றார் கே.வி.எஸ். 'ஆமா சார்.... எப்படின்னு தெரியலை...' 'சரி... கவலைப்படாதீங்க மறுகூட்டலுக்கு விண்ணப்பம் போடலாம்' என்றார். 'சரி' என்று கிளம்ப, ஐயாவிடம் இருந்து 'தம்பி குமார்' என்ற அழைப்பு. அவரிடம் சென்றால் ' தாமரை புத்தகத்தைக் கொடுத்து ' பிரிச்சுப் பாருங்க' என்றார். பார்த்தால் கவிதையின் கீழே 'ஒரு கல்லூரி மாணவனின் கவிதை' என்ற குறிப்புடன் எனது கவிதை இரண்டு பக்கங்களுக்கு படத்துடன் வந்திருந்தது. . கவிதை வெளியானதற்கு சந்தோஷப்படுவதா... முதல் அரியருக்காக கண்ணீர் வடிப்பதா தெரியவில்லை.

அதன் பிறகு நிறைய கிறுக்கினேன்.. கல்லூரி முடிந்து கணிப்பொறி நிலையம் நடத்திய போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் நிறைய எழுதினேன்... தினபூமி, பாக்யா, மாலைமலர்-தேன்மலர், உதயம், வாசுகி,ராணி, தினமணிக்கதிர், தினத்தந்தி குடும்பமலர், தங்கமலர், மங்கையர் சிகரம் என எனது எழுத்துக்கள் அச்சில் ஏறி இருக்கின்றன. அபுதாபி வந்த புதிதில் எழுத்துக்கான நேரம் குறைந்தது. சில மாதங்கள் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

ஒரு முறை நண்பனின் வலைப்பூவைப் பார்த்து அதுபோல் நாமும் ஆரம்பித்தால் என்ன என்ற யோசனையில் என் சென்னை நண்பன் தமிழ்க்கவிதைகள் மோகனனின் உதவியுடன் கிறுக்கல்கள் என்ற வலைப்பூ ஆரம்பித்து ஹைக்கூ வடிவ கவிதைகளை மட்டும் எழுதினேன். ஆர்வக்கோளாறில் பெரிய கவிதைகளுக்கு ஒன்று, சிறுகதைக்கு ஒன்று, மனதில் பட்டதை எழுத ஒன்று என நான்கு வலைப்பூவினை ஆரம்பித்து திரு. ஜாக்கி சேகர் அண்ணா சொன்னது போல நேரம் விழுங்கியின் முன் இரவு பகல் பாராது எதையாவது கிறுக்கினேன். அலுவலகம் செல்லுமுன்... வந்தபின்... வலைப்பூவே வாழ்க்கையானது.

எனது கிறுக்கல்களை வாசித்த நண்பர் நாடோடி இலக்கியன் எனது கவிதை குறித்து அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். வேளைப்பளூ, சோர்வு எல்லாம் சேர்ந்து தாக்க எழுதுவது குறைந்தது... அந்த சமயத்தில் நண்பர் பலாபட்டறை சங்கர் உள்பட சிலர் ஒரே வலையில் எழுதுங்கள்... பின் தொடர சிரமமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். அதன்படி சென்ற வருடம் இதே அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட மனசு வலைப்பூவில் மட்டும் எழுதுவது என்று முடிவெடுத்து கலவையாய் இங்கு எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் வட்டமும் நாளுக்கு நாள் பெருகியது.

இந்த ஒரு வருடத்தில் உங்கள் நட்பைத்தவிர நான் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாய் திரு.சீனா ஐயா அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு வாரம் ஆசிரியாராய் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு வாரம் எனது வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்.

எனது படைப்புக்களை படிக்க முடியவில்லை என்பதால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் படைப்பை பகிர்ந்ததும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் நான் தவறாமல் படிக்க நினைக்கிறேன் என்று சொன்ன அன்புச் சகோதரி ஆனந்தி, எனக்கு உடல் நலமில்லை என்ற போது பின்னூட்டமிட்டு நலம் விசாரித்த நட்புக்கள் என இந்த ஒரு வருடத்தில் நான் பெற்ற உறவுகள் அதிகமே.

'நடைமுறை வாழ்க்கையுடன் பரிச்சயப்பட்டு எழுதுங்கள்' என்று எனது ஐயா அடிக்கடி சொல்வார். நான் எழுதும் கவிதைகள் எப்படியோ தெரியவில்லை பெரும்பாலான எனது சிறுகதைகள் நடைமுறை வாழ்க்கையோடு பரிச்சையப்பட்டுத்தான் இருக்ககின்றன என்று நினைக்கிறேன். இதை ஐயாவும் பலமுறை சொல்லியிருக்கிறார்.இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த போதுகூட உங்கள் கதைகளை புத்தகமாக்குங்கள் என்றார். 'ஐய்யய்யோ... அந்தளவுக்கெல்லாம் பெரிசா எதுவும் எழுதவில்லை' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

என் ஆறு வயது மகளுக்கு அப்பாவின் கதை புத்தகத்தில் வந்திருக்கு என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி... சில மாதங்களுக்கு முன் மங்கையர் சிகரத்தில் கதை வந்த போது எங்கள் தெருவில் இருக்கும் எல்லாரிடமும் 'எங்கப்பா கதை வந்திருக்குப்பு' என்ற புத்தகத்தை காட்டி மகிழ்ந்தார்களாம். சில சமயங்களில் போன் செய்யும் போது 'அப்பா எதாச்சும் எழுதுங்கப்ப புத்தகததில...' என்பார் மழலையாய்... நான் சிரித்துக் கொள்வேன். அவர் எனது வாசகர் அல்ல... ஆனால் என்னை சுவாசிப்பவர்... அவருக்கு அப்பா பத்தி எதாவது பேசணும் அதுக்காகத்தான்.

சரிங்க... என்னடா இவன் என்னமோ பேசிக்கிட்டு போறானேன்னு நினைக்கிறீங்களா நாளைக்கு முதல் பிறந்தநாள் என் மனசு வலைப்பூவுக்கு... எல்லாரும் வந்துடுங்க... அபுதாபி கார்னிச்ல வச்சு கேக் வெட்டுவோம்.... மறந்துடாதீங்க... நீங்கதான் கைய பிடிச்சு கூட்டிக்கிட்டு போகணும் ஆமா சொல்லிப்புட்டேன்.

கதிர் அண்ணன் தனது சுயவிவரத்தில் 'நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்' என்று எழுதிருப்பது போல கிராமத்துக் காற்றை சுவாசித்து பாலைவனப் பூமியில் வாழும் நான் இரண்டாம் வருடத்திலும் உங்கள் நட்போடும் அன்போடும் தொடர நினைக்கிறேன்.

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


ரொம்ப முக்கியமுங்க...:

நிறைய நண்பர்கள் நான் வாக்களிக்கவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இண்ட்லியில் எனது பெயர் சே.குமார் என்றிருக்காது... 'shruvish' என்றிருக்கும் நண்பர்களே. நல்லா பாருங்க நான் கண்டிப்பாக வாக்களித்திருப்பேன். ஆமா... அப்புறம் சண்டைக்கு வரப்படாது... சொல்லிப்புட்டேன்.


என்றும் நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

36 எண்ணங்கள்:

எல் கே சொன்னது…

உங்களைப் பற்றி இன்று அதிக விவரங்களை தெரிந்து கொண்டேன் நண்பரே .. உங்கள் எழுத்துப் பயணம் மேலும் சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்

எஸ்.கே சொன்னது…

மீண்டும் இனிய நினைவுகளும் அனுபவங்களும்!
வலைச்சரம்தான் எனக்கும் உங்களை வெகுவாத தெரியப்படுத்தியது!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்!

க.பாலாசி சொன்னது…

இந்த பயணம் மென்மேலும் சிறக்கவேண்டும்.. மனம்நிறைந்த வாழ்த்துக்கள்... உங்களை நான் அடிக்கடி சந்தித்தது உங்களின் ஹைக்கூ கவிதைகள் மூலம்தான்... அதையும் தொடருங்கள்...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அழகான நினைவுகள்... நினைவுகளே மகிழ்ச்சி...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அழகான நினைவுகள்... வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள் மென்மேலும் சிறக்க...அருமை

Menaga Sathia சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ!!

இலா சொன்னது…

நல்லா இருக்குங்க உங்க இலக்கிய பயணம்... பல காதம் பயணம் செய்து பணி தொடர வாழ்த்துகிறேன்...

//அவர் எனது வாசகர் அல்ல... ஆனால் என்னை சுவாசிப்பவர்...// இது எனக்கு ரொம்ப பிடித்தமானதா இருக்கு.. எப்படி இப்படி எல்லாம் எழுத வருது :))

Vidhya Chandrasekaran சொன்னது…

வாழ்த்துகள்...

Philosophy Prabhakaran சொன்னது…

வாழ்த்துக்கள் சார்... எனது நான் வலைப்பூ ஆரம்பித்தகாலம் முதல் எனக்கு நீங்கள் ஆதரவளித்து வருகிறீர்கள்... அதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்... உங்களது கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள் வலைப்பூக்களை ஏன் பராமரிப்பது இல்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க LK...
உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும் அரவணைப்பும் இருக்கும்வரை எனது எழுத்தின் பயணம் தொடரும் நண்பரே..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எஸ்.கே...
வலைச்சரம் நிறைய நண்பர்களைப் பெற்றுத்தந்ததுடன் நல்ல அனுபவத்தையும் கொடுத்தது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாஜி சரவணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க க.பாலாசி...
எனக்கும் ஹைக்கூ எழுதுவதுதான் மிகவும் பிடித்திருக்கிறது. மனசிலும் சிறு பூக்கள் என்ற தலைப்பில் அவ்வப்போது எழுதி வருகிறேன். கிறுக்கல்களை தொடரலாமா என்ற எண்ணமும் இருக்கிறது.பார்க்கலாம் நண்பரே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சங்கவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க வெறும்பய அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க படைப்பாளி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இலா...
//அவர் எனது வாசகர் அல்ல... ஆனால் என்னை சுவாசிப்பவர்...// இது எனக்கு ரொம்ப பிடித்தமானதா இருக்கு.. எப்படி இப்படி எல்லாம் எழுத வருது :))//
எழுதும்போது நினைப்பதை எழுதுகிறேன் நண்பரே... நான் ஒன்றும் வார்த்தை ஜாலத்துடனோ அழகியலுடனோ எழுதுவதாய் சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகரன்...
உங்க அன்புக்கு நன்றி.
எல்லாவற்றையும் பனிச்சுமை காரணமாக மனசில் மட்டுமே எழுதுகிறேன். பார்க்கலாம் சில மாதங்களுக்குப் பிறகு எல்லாத்தையும் மீண்டும் கடை விரிக்கலாம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாழ்த்துகள் குமார் மென்மேலும் சிறக்க...!

க ரா சொன்னது…

வாழ்த்துகள் :)

சுசி சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்.

தமிழ்க்காதலன் சொன்னது…

தோழர் குமாருக்கு வணக்கம். இந்த பதிவு உங்களை இன்னும் நெருக்கமாய் எனக்கு அடையாளம் காட்டியுள்ளது. உங்கள் சிறுகதைகள் மிக நன்றாகத்தான் உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் மிக எளிமையாக, எதார்த்தமாக, அழகாக உரைநடையை கையாளுகிறீர்கள். மிக்க நன்றி நல்ல பகிர்வுக்கு. வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

வோவ்..............இவ்ளோ பெரிய ஆளா நீங்க ???? வாழ்த்துக்கள் சார்

r.v.saravanan சொன்னது…

எழுத்துப் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா

vanathy சொன்னது…

இவ்வளவு இருக்கா. அரியர்ஸ் பேப்பர் என்னாச்சு சொல்லவே இல்லை ( திட்ட வேண்டாம் ). உங்க ப்ளாஷ் back நல்லா இருக்கு. முதலாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வசந்த்...

வாங்க இராமசாமி கண்ணன்...

வாங்க சுசிக்கா...

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்...
உங்கள் நட்புக்கும் என்னை நெருக்கமாய் உணர்ந்த உங்கள் உள்ளத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அமைச்சரே...
ஐய்யோ... நாம அம்ம்புட்டுப் பெரிய ஆளுல்லாம் கெடயாதுங்க... எதோ சில கிறுக்கல்கள் அவ்வளவுதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
இன்னும் நிறைய இருக்கு... அப்புறமா பேசலாம்... அந்த அரியர் கதையை கேக்குறீங்களா...

அப்புறம் என்ன எங்க கேவிஎஸ் சாரே மறுகூட்டலுக்கு ஏற்பாடு பண்ணினாரு... மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில பேப்பேரை எடுத்துப் பார்க்க ஏற்பாடெல்லாம் பண்ணிக் கொடுத்தாரு...

மறுபடியும் டோட்டல் பண்ணி ரிசல்ட் அனுப்புறதா சொன்னாங்க (நல்லா கவனிக்கனும் சொல்ல மட்டும்தான் சொன்னாங்க). ஆறாவது செமஸ்டர் வந்தாச்சு... ரிசல்ட் வரலை...

அப்ப சார்கிட்ட கேட்டதுக்கு அரியர்க்கு பணம் கட்டிடுங்க வந்தா எழுத வேண்டான்னார்.... சரியின்னு கட்டிட்டு பரிட்சையும் எழுதியாச்சு.. ரிசல்ட் வந்தாச்சு 76 மார்க்.

அதுக்கு அடுத்த நாள் மறுகூட்டல் மார்க் வந்தது. 53 மார்க் போட்டு பாஸ்ன்னு... அதுல கீழே இங்கிலீஸ்ல பழைய மார்க் ஸ்டேட்மெண்டை கொடுத்து புதிய மார்க் சீட்டைப் பெற பல்கலைக்கழகத்து நேரில் வரச்சொல்லி... என்னமா வேலை பாக்கிறாங்க பாருங்க..

கேவிஎஸ் சார்கிட்ட காட்டினப்போ இப்ப 76, பழசு 53, கிழிச்சிப் போடுங்க இப்ப உள்ள மார்க கன்சாலிடேட்டட் மார்க் ஸ்டேட்மெண்ட்ல வந்துடும்ன்னாரு...

நல்ல அனுபவம்... இதுல திட்ட என்ன இருக்கு...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//இதை ஐயாவும் பலமுறை சொல்லியிருக்கிறார்.இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த போதுகூட உங்கள் கதைகளை புத்தகமாக்குங்கள் என்றார்.//

எல்ல்ல்ல்லாக் கதைகளையும் ஒரே புத்தகமாய்
போட்டுடுங்க...
மற்றும் வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
நன்றி நண்பரே... உங்கள் அன்புக்கு நன்றி... பார்க்கலாம் நண்பரே.

Cable சங்கர் சொன்னது…

interesting writeup kumar..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கேபிள் அண்ணா...
முதல் முறை என் வலைப்பூவில் உங்கள் பின்னூட்டம்... ரொம்ப நன்றிங்க அண்ணா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மணிபாரதி சொன்னது…

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com