மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

சுதந்திரம் படும் பாடு




மருத்துவமனையில் இருக்கும் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஊருக்கு போக பேருந்துக்காக நின்று கொண்டிருந்த ராகவனிடம் "தம்பி... இந்தப் பஸ்ஸூ திண்டிவனம் போகுமா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"ஐயா... இது கரூர் போற பஸ்... திண்டிவனம் பஸ் அந்தக் கடைசியில நிக்கும்... அங்க போங்க..." என்றதும்.

"அங்கிட்டு நிக்குமா?...ம்..." என்றபடி முகத்தை துடைத்தவர், " ஆமா... நீங்க இந்த பஸ்ஸூலயா போறீங்க?" என்றார் மெதுவாக.

"இல்லைங்க... எங்க ஊருக்குப் போற பஸ் இனிமேத்தான் வரும்..."

"அப்ப எனக்கு கொஞ்சம் பஸ்ஸை காட்டி விடுறீங்களா...? உங்களுக்கு புண்ணியமாப் போகும்"

அவரைப் பார்க்க பாவமாய் இருந்தார். படிக்காத மனிதர் வேறு... சரி பஸ் வர இன்னும் எப்படி அரைமணி நேரம் ஆகும். எவ்வளவு நேரம்தான் நிக்கிறது... இப்புடி போய் அவருக்கு பஸ்ஸை காட்டிட்டு வரலாம் என்று நினைத்தவன் "சரி வாங்க ஐயா..." என்றான்.

"நல்லாயிருப்பீங்க தம்பி..." என்றபடி தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு மஞ்சள் பையை கையில் இறுக்கமா புடிச்சிக்கிட்டு அவனுடன் நடக்கலானார்.

"உங்க பேரு என்ன தம்பி"

"ராகவன்... ஆமா திண்டிவனத்துல யாரு இருக்கா?"

"எம்மக தம்பி..."

"எந்த ஊரு ஐயா உங்களுக்கு..."

"ஆறாங்கல்..."

"அங்கிருந்தா வாறீங்க... யாரையாவது கூட அழைச்சிக்கிட்டு வந்திருக்கலாமே"

"இருந்தா அழைச்சுக்கிட்டு வரலாம்... யாரும் இல்ல தம்பி... ஒரே பொட்டப்புள்ள உள்ளூருலதான் கட்டிக் கொடுத்தேன். மருமகப்பிள்ளை பொழப்புக்காக திண்டிவனம் போனாங்க... அங்கிட்டே வீடு வாங்கி குடும்பத்தையும் கூட்டிப் பொயிட்டாரு..."

"ம்..."

"நமக்காக அவங்களை இருக்கச் சொல்லமுடியுமா?"

"இப்ப மகளைப் பார்க்கப் போறீங்க... மகளுக்கு பலகாரம் எல்லாம் போகுது போல.."

"இது என் பேத்திக்குட்டிக்கு... மெட்ராஸ்ல பெரிய வேலையில இருக்கா... இப்ப லீவுல வந்திருக்கா... அவ தினமும் பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணி வந்துட்டு போ தாத்தான்னு ஒரே அடம்... அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாமுன்னு போறேன்..."

"ம்..."

"கிழவி இருந்தவரைக்கும் கவலையில்லை தம்பி... அவ போய் ஆறு மாசமாச்சு... இப்ப சாப்பாட்டுக்குக் கூட கஷ்டம்தான்... மக வரச்சொல்லி சத்தம் போடுறா... அது எப்புடி தம்பி அவ மாமனார் மாமியா இன்னும் நம்ம ஊருலதான் இருக்காங்க... நம்ம மக வீடா இருந்தாலும் அவங்க மயன் வீடுல்ல... நாம போய் அங்க தங்கி அதெல்லாம் சரியா வராதுண்ணுட்டேன்... முடிஞ்ச வரைக்கும் சமைப்பேன்... உள்ளூர்லதான் தங்கச்சி மக இருக்கு. அது அப்பப்ப எதாவது ஆனம் கொண்டாந்து கொடுக்கும். கிழவி எங்கூடவே இருந்த வீடு அதுக்குள்ள படுத்து உறங்குறது ஒரு சொகந்தான் தம்பி...." சொன்னபோது அவரின் கண்கள் கலங்கியது போல் தோன்றியது.

"ஆமா செலவுக்கெல்லாம்..."

"பேத்தி பணம் அனுப்பிடுவா... அது போக நா சுதந்திர போராட்ட தியாகி தம்பி... பென்சம் பணம் வருது..."

தியாகி என்றதும் "தியாகின்னா எங்க ஊர்ல நிறையப் பேரு போராட்ட காலத்துல வேடிக்கை பார்த்துட்டு தியாகி பட்டியல்ல சேர்ந்துக்கிட்டு காசு வாங்குறாங்க... அப்படியா..."

"அட என்ன தம்பி... நேதாஜியோட படையில சேரத் தயாரா இருந்தவன் நான். புதுக்கோட்டையில நடந்த ஒரு போராட்டத்துல கலந்துக்கிட்டு அடிவாங்கி... இந்தா பாருங்க... இந்த கையை... வளஞ்சு இருக்கா... போலீசுக்காரன் அடிச்சு ஒடச்சது... நாடு சுதந்திரத்துக்காக நானும் நிறைய அடிபட்டிருக்கேன் தம்பி. இள ரத்தம் பயம் அறியாதுங்கிற கணக்கா எல்லாத்துக்கும் முன்னாடி நிப்பேன்..."

"சும்மாதான் கேட்டேன்... கோவிச்சிக்காதீங்க..."

"எதுக்கு தம்பி கோவப்படப் போறேன்... நாங்க கஷ்டப்பட்டு வாங்கின சுதந்திரம் இப்ப மிட்டாய்க்காக ஏத்துற கொடியோட முடிஞ்சிடுது... எந்த டிவிக்காரந்தம்பி சுதந்திரத்திரத்துக்காக போராடுனவங்கிட்ட பேட்டி எடுக்க வாரான். எதாவது ஒரு நடிகனோ நடிகையோ சுதந்திரத்தைப் பத்தி பேசிறதைதானே போடுறான்... அவங்களைச் சொல்லி குத்தமில்ல தம்பி... நீங்களும் அதைத்தானே விரும்புறீங்க..."

அவர் சொன்னது சரியென்பதால் ராகவனால் மறுத்துப் பேசமுடியவில்லை. அமைதியாக நடந்தான்.

"இலவச டீவின்னாங்க.... நா போயி நின்னா நீயெல்லாம் டிவி பாத்து என்ன பண்ணப்போறேன்னு பஞ்சாயத்துப் போர்டுல ஒருத்தன் சொல்றான். கூப்பன் கடைக்குப் போன ரெண்டு கிலோ சீனி கொடுத்துட்டு எல்லாத்துலயும் வாங்கினதா எழுதிக்கிறான். என்னப்பா நான் சீனி மட்டும்தானே வாங்கினேன்னு கேட்டா... பேசாம போ இல்லைன்னா பூச்சிபுடிச்ச பருப்பும் கட்டிச் சோப்பும் கொடுத்துடுவேன்னு மிரட்டுறான்.... தேர்தலப்ப ஓட்டுக் கேக்க வர்றவங்கிட்ட நம்ம குறையை சொல்ல நினைச்சா இளவட்டமெல்லாம் இளிச்சுக்கிட்டு பணத்தை வாங்கிகிட்டு ஓட்டுப் போட்டுடுறீங்க... அப்புறம் எப்படி"

இதுவரை சாதாரணமாக பேசிக்கொண்டு வந்தவருக்குள் எரிமலையாய் எண்ணங்கள் இருப்பதைப் பார்த்து வியந்து போனான் ராகவன்.

"எத்தனை இழப்புகள்... எல்லாம் எதற்கு சுதந்திர காத்தை சுவாசிக்க... இப்ப முடியுதா... அன்னைக்கு வெள்ளைக்காரங்கிட்ட போராடி இன்னைக்கு கொள்ளைக்காரங்கிட்ட கொடுத்திட்டோம்... அவனுக குடும்பம் தழைக்க எத்தனை குடும்பத்தை அழிக்கிறாங்க... இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலை தம்பி..."

"ஆமாய்யா... நீங்க சொல்றது உண்மைதான்... இப்ப நாடு போற போக்கைப் பார்த்தால் பேசாம வெள்ளக்காரங்கிட்டயே இருந்திருக்கலாம் போலன்னுதான் தோணுது..."

"ம்... நாம இப்படியாகுமுன்னு நினைக்கலையே... இனி யாராலயும் அரசியல்வாதிங்க கையில சிக்கி இருக்கிற நாட்டை காப்பாத்த முடியாது... உன்னைப் போல பசங்க எதாவது செஞ்சாத்தான் உண்டு... அது நடக்குற காரியமா சொல்லு தம்பி"

"...."

"இதுக்கு உனக்கே பதில் தெரியலை... சரி வழி காட்ட வந்த புள்ளைகிட்ட நா எதெதோ பேசிக்கிட்டு... "

"இல்ல ஐயா உண்மையதானே சொன்னீங்க... சாதாரண கிராமத்து ஆளா பார்த்த உங்ககிட்ட இப்படி ஒரு முகத்தை நான் எதிர் பார்க்கவே இல்லை.... இந்த பஸ் திண்டிவனம் போகும் ஐயா... ஏறிக்குங்க..."

"சரி... தம்பி ரொம்ப நன்றிப்பா" என்றபடி பேருந்தில் ஏறியவர், எதோ யோசனையா இறங்கினார்.

"என்னாச்சுய்யா..."

"தம்பி பஸ்ல போகும்போது தண்ணி தவிச்சா குடிக்க தண்ணி வாங்கனும்... பஸ் கிளம்ப இன்னம் நேரம் இருக்கான்னு கேட்டு சொல்லிட்டு நீங்க போங்க, நான் போய் வாங்கிக்கிறேன்."

"நீங்க மேல ஏறுங்க நான் வாங்கிக்கிட்டு வாரேன்..." என்றபடி கண்டக்டரிடம் பஸ் இப்ப கிளம்பிடாதேன்னு கேட்டுக்கிட்டு தண்ணியும் பிஸ்கட்டும் வாங்கி வந்து கொடுத்தான்.

"எவ்வளவு தம்பி..."

"இருக்கட்டும் ஐயா... என்ன லெட்ச ரூபாயா செலவழிச்சுப்புட்டேன்."

"இல்ல தம்பி இந்தாங்க... வச்சிக்கங்க" என்றபடி சுருட்டி வைத்திருந்த பணத்தை அவனிடம் நீட்ட, அதிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு மீதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு வாரேன்யா என்றதும்...

"தம்பி போன் இருந்தா இந்த நம்பருல கூப்பிட்டு எம்மக கிட்ட சொல்லிட்டிங்கன்னா பஸ்ஸை விட்டு இறங்கிறப்ப பேரன் வந்து கூட்டிப்பான்" என்றதும்

அந்த நம்பருக்கு போன் செய்து அவரையே பேச சொல்லிவிட்டு அவரிடம் விடைபெற்று மீண்டும் அவன் நின்ற இடத்துக்கு போய் பஸ்ஸூக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அப்போது ஒரு இருவது பேர் அடங்கிய இளைஞர் கும்பல் கையில் பேனருடன் பேருந்து நிலையத்துக்குள் வந்து, "அமெரிக்க அரசே எங்களிடம் வாலாட்டாதே..."ன்னு கூச்சல் போட ஆரம்பிக்க...

'நம்ம பெற்ற சுதந்திரம் இங்க சில சர்வாதிகாரிகள் மத்தியில் சிக்கிக் கிடக்கு அதை விட்டுட்டு இங்க இருந்து இவங்க கத்துறது பக்கத்து ஊருக்காரனுக்கே கேக்காது, இதுல மாவட்டம்... மாநிலம்... நாடு... மொழி... கடந்து அமெரிக்காவுக்கு கேக்கப் போகுதாம்... எல்லாத்துக்கும் சுதந்திரம் இருக்கு இங்க' என்று நினைத்தவன், 'இளைஞர்கள் எதாவது செஞ்சா நாட்டை காப்பாத்தலாம்' என்று பெரியவர் சொன்னதை நினைத்து சிரித்துக் கொண்டான்.

-'பரிவை' சே.குமார்

26 எண்ணங்கள்:

மாதவராஜ் சொன்னது…

சரளமாக எழுத்து நடை இருக்கிறது. வழிகாட்ட வந்த இளைஞனுக்கு வழி சொன்ன பெரியவர்!

இங்கே இருக்கிறவர்கள் அமெரிக்கா சொல்படி கேட்கும்போது, இங்கே இருக்கிறவங்களை மட்டும் எதிர்த்து போராடினால் போதாது அல்லவா.

டெம்ப்ளேட் வாசிக்க கஷ்டப்படுத்துது.

vasu balaji சொன்னது…

நல்லாருக்கு:)

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நல்ல கதை

thamizhparavai சொன்னது…

நல்லா இருக்குங்க..பிரசாரத்தொனி தென்படாமல் இயல்பான மொழிநடையில் போகுது கதை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மாதவராஜ் அண்ணா...
உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஆசிர்வாதமாய்...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

டெம்ப்ளெட் மாற்றியாச்சு... இப்ப எப்படியிருக்குன்னு பாருங்கண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க உழவன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ் பறவை...

வாழ்த்துக்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல கருத்துள்ள கதை குமார்.

School of Energy Sciences, MKU சொன்னது…

மிகவும் அருமை நண்பரே! நான் தேவகோட்டை இராம்நகரில் என் பாட்டி வீட்டுக்கு எல்லா விடுமுறைக்கும் வருவேன். உங்களை சந்திக்க ஆவல்.

r.v.saravanan சொன்னது…

எழுத்து நடை நன்று குமார்
கதை நன்றாக இருக்கிறது

vanathy சொன்னது…

very nice & well written story.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
ரொம்ப நாளாச்சு... பதிவையும் காணோம்.
வேலைப்பளூ அதிகமோ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வில்சன்...
அப்படியா நண்பரே... கண்டிப்பாக சந்திக்கலாம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

அன்னைக்கு வெள்ளைக்காரங்கிட்ட போராடி இன்னைக்கு கொள்ளைக்காரங்கிட்ட கொடுத்திட்டோம்//

மற்றும் மாதவராஜின் கமெண்ட்ஸ் உண்மை குமார்.. அருமை நல்ல நச்..கதை .. வாழ்த்துக்கள் குமார்.

Ahamed irshad சொன்னது…

Super Story Br.Kumar Asathal...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேனம்மை அக்கா...
நீண்ட நாளைக்குப் பிறகு என் வலைப்பக்கம் நீங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.
ஆமா... அக்கா மாதவராஜ் அண்ணனின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இர்ஷாத்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

நல்ல கருத்துள்ள கதை... ஆனா உண்மை சுடுது...நல்லா எழுதி இருக்கீங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தங்கமணி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

இயல்பான நடை... follower tooo

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க புதிய மனிதா அவர்களே...

முதல் வருகைக்கும் நட்பில் மலர்ந்ததற்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ரொம்ப அழகா எழுதுறீங்க.. பெரியவர் சொன்ன வார்த்தை எல்லாம் சத்தியம்..
ராகவனின் சிரிப்பின் அர்த்தம் புரிகிறது...

மோகன்ஜி சொன்னது…

கதையை நேர்த்தியாகக் கொண்டு செல்கிறீர்கள். ரசித்தேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. ஆனந்தி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மோகன்ஜி...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

சுதந்திரத்தை நாம் படுத்தும் பாட்டை அழகாக பதிவுசெய்துள்ளது பாராட்டுக்குரியது..

கதை உணர்த்தும் உண்மை வருந்தத்தக்கதாகவுள்ளது.