மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010ஆராதனாதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அறந்தாங்கி செல்லும் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து 'ஸ்... அப்பா' என்று மூச்சுவிட்டபடி வெளியில் பார்வையை செலுத்தியவனின் பார்வை பூக்கடையில் நின்ற அந்தப் பெண்ணின் மீது நிலைத்தது.

'ஆராதனா மாதிரி இருக்கு' மனசு சொல்ல...

'அவ தானா..?' தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.

'பார்த்து பல வருஷமாச்சு... அவதானா...? இல்ல வேற யாருமா...?' சந்தேகம் சட்டென்று எட்டிப்பார்த்தது.

மனசுக்குள் குழப்பம் குடி கொண்டது. ஆனால் பார்வை மட்டும் அவளிடமே நிலைத்திருந்தது.

சற்றே அவள் அவன் பக்கம் பார்த்து திரும்ப, சந்தேகம் கரைந்தது. அவள்தான் ... அவளேதான்... என்றவன் வேகமாக எழ, அருகில் இருந்தவன் 'என்ன சார்... வெளிய போறீங்களா..? இடத்தைப் பார்த்துக்கவா...? என்க 'வேண்டாம்... அடுத்த பஸ்ல வாரேன்...' என்றவன் கீழே இறங்க, 'கஷ்டப்பட்டு இடம் பிடிச்சிட்டு இறங்கிப் போறதப்பாரு...' என்றவனின் குரல் காற்றில் கரைந்தது.

அவள் முன் சென்றவன், 'ஆராதனா' என்று அழைக்க, திடுக்கிட்டு திரும்பியவள் புருவம் உயர்த்தினாள்.

"நீ... நீங்க ஆராதனாதானே...?"

"ஆமா... நீங்க...?"

"நான் மதன்...."

"........"

"அறந்தாங்கியில பக்கத்து பக்கத்து வீட்ல குடியிருந்தோமே..."

புரிந்தவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. "மதன்... சாரி சட்டுனு ஞாபகத்துல வரலை... எப்படியிருக்கீங்க... அப்பா, அம்மா, தங்கச்சி... அவ பேருகூட... ம்... மகாலெட்சுமி... எல்லாரும் நல்லாயிருக்காங்களா...?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்க... தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி இப்ப சிங்கப்பூர்ல செட்டிலாயிட்டா... நான் மதுரையில இண்டியன் பாங்குல இருக்கேன்... ஆமா... நீங்க...?"

"ம்... அது என்ன மரியாதை... பேரை சொல்லி கூப்பிடுங்க... நான் உங்களைவிட சின்னவதான்..."

"ம்..."

"அப்பா, அம்மா தேனியில இருக்காங்க... நான் ராஜபாளையம்..."

"அர்ஜெண்டா போறியா..?"

"இல்லை... அவரோட தங்கச்சி இங்க இருக்கா... அதான் வந்து பார்த்துட்டு போறேன்..."

"அப்படியா... காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா..?"

"ம்... பேசலாம்..." என்றதும் இருவரும் பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி மதுரை மீனாட்சி ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தனர்.

எதிர் எதிரே அமர்ந்ததும் "என்ன வேணும்...?" என்றவனிடம் "எனக்கு காபி மட்டும் போதும் டிராவல் பண்ணும்போது நான் எதுவும் சாப்பிடுறதில்லை." என்றாள்.

"ஆளே அடையாளம் தெரியலை மதன். பதினைந்து பதினாறு வருஷத்துல எத்தனை மாற்றம்..?"

"ஆமா ... நீ மட்டும் என்னவாம்... குண்டாயிட்டே... "

"அதுக்கு என்ன பண்றதாம்... கல்யாணம் ஆயிட்டாலே உடம்பு ஏறிடுது... உன் குடும்ப வாழ்க்கை எப்படி..?"

"ம் நல்லா போகுது... அன்பான மனைவி, நான் செய்யிறது நல்லதுன்னா தட்டிக் கொடுக்கிறதும் தப்புன்னா தட்டிக் கேக்கிறதுமாக ரொம்ப நல்லவ... அறிவான, அன்பான குழந்தைங்க... ஆமா அங்க எப்படி...?"

"எனக்கென்ன ரொம்ப நல்லா இருக்கேன்... நான் தான் உலகமுன்னு இருக்கிற கணவன், எனக்கு உலகமான குழந்தைகள்... ராஜபாளையத்துல லேடீஸ் காலேஸ்ல புரபஸரா இருக்கேன்."

"அப்புறம்... கடந்து போன வாழ்க்கையெல்லாம் நினைக்கிறதுண்டா..?"

"கண்டிப்பா... எத்தனை சந்தோஷங்கள்... எத்தனை துயரங்கள்... எல்லாம் நினைச்சுப் பார்ப்பேன்... பல எண்ணங்கள் வெளிய சொல்லாமல் மனசுக்குள்ளே மக்கிப் போய்விட்டன... சில நேரம் அது தலை தூக்கும்போது ஒரு சிலதை நினைக்கிறப்போ சிரிப்பு வரும்... ஒரு சிலதை மிஸ் பண்ணிட்டோமோன்னு வருத்தமா இருக்கும்... அப்பல்லாம் தாங்காம அழுதுகூட இருக்கேன்... என்ன செய்ய... காலம் சுகங்களையும் துக்கங்களையும் மாறி மாறித்தானே தருகிறது..." சொன்னபோது ஏனோ அவளது கண்கள் கலங்கியதை அவன் கவனிக்கத் தவறவில்லை.

"ஆமா... நீ நினைக்கிறதுண்டா..."

"ம்... இப்பவும் மொட்டை மாடிக்குப் போன நீயும் மாகாவும் என்னிடம் சண்டை போட்டு பின் சமாதானம் ஆகும் அந்த விடுமுறை நாட்கள் எனக்குள்ளே மலர்ந்து மறையும். நீ சொன்ன மாதிரி சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லாமலே நெஞ்சுக்குள் சேமித்து வைத்தவைகளை அடிக்கடி அசைபோடுவேன். அப்பல்லாம் சே... திராணியற்று விட்டு விட்டோமே என்று என்மேலே கோபம் வரும் இருந்தாலும் சில சந்தோஷங்களை நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்வேன்." என்றவன் ஏனோ பார்வையை தாழ்த்திக் கொண்டான்.

காபி குடிக்கும் வரை இருவரும் பேசவில்லை. வெளியில் வந்ததும் " ஆமா... பசங்க என்ன பண்றாங்க...?" என்றான்.

"மூத்தவ எய்த் படிக்கிறா... சின்னவன் சிக்ஸ்த்... உன் பசங்க..."

"பொண்ணு பிப்த்... பையன் செகண்ட்..."

"சரி... நீ இப்ப கதை, கவிதை எல்லாம் எழுதுறியா..?"

"எப்பவாவது தோணினா எழுதுவேன்... முன்னமாதிரி தினமும் எழுதுறதில்லை... அது ஒரு காலம்... இப்ப வேலைப் பளுவில எங்கே சிந்திக்க முடியுது..?"

"தினமும் வேண்டாம்... வாரத்துல ஒரு நாளாவது எழுதலாமே... என் உன்னோட திறமையை நீயே அழிச்சிக்கிறே... அப்ப நானும் மகாவும் என்ன சொன்னாலும் நீ கேப்பே... இப்பதான் சொல்லுறதுக்குன்னு ஒருத்தி இருக்கா... அப்புறம் எம் பேச்சை கேட்கவா போறே..."

"சே... அப்படியெல்லாம் இல்லை... எனக்காக இல்லாட்டியும் நீ சொன்னதுக்காகவாவது இனி எழுதப் பார்க்கிறேன்.."

"சரி... மகா பேசுனா ரொம்ப கேட்டேன்னு சொல்லு... என்னோட போன் நம்பரை மொபைல்ல ஏத்திக்க... ஒரு நாள் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வா.." என்றபடி நம்பரை சொன்னாள்.

"சரி... நான் மிஸ்டு கால் கொடுக்கிறேன்... என் நம்பரை சேவ் பண்ணிக்க..." என்றபடி அவளது நம்பருக்கு டயல் செய்தான்.

"அப்புறம்... உன்னை இத்தனை வருஷம் கழிச்சு பார்த்தது ரொம்ப சந்தோஷம் மதன்... எனக்கு..." எதோ சொல்ல நினைத்தவளை செல்போன் அழைக்க,

"என்னம்மா.... அம்மா பஸ்ஸ்டாண்டல இருக்கேன்.."

"..."

"வந்துருவேன்..."

"...."

"அப்பா எங்க?"

"...."

"சரி மதன் என்ன பண்றான்...?. சேட்டை பண்றாரா அவரு..." அவள் பேசிக் கொண்டே போக, மதனுக்கு அதிர்ச்சி. 'ஒருவேளை மனசுக்குள்ள மக்கிக் போன எண்ணத்துல நானும் இருந்திருப்பேனோ...?' அவனது எண்ணத்தை "சரி மதன் பார்க்கலாம்" என்ற அவளின் குரல் கரைத்தது.

அவள் பேருந்தில் ஏறி அமர்ந்து அவனுக்கு சைகை காட்ட, அறந்தாங்கி பேருந்தை நோக்கி சென்றவனின் செல்போன் அழைக்க, எதிர்முனையில் அவனது மகளின் குரல் கேட்டு "ஆராதனா... என்னம்மா?" என்றான்.

-'பரிவை' சே.குமார்.

போட்டோ : கூகிள் தேடுபொறி

34 கருத்துகள்:

 1. பழையவைகளை இரை மீட்கும் போது லேசாய் மனது கனக்கிறது. நல்ல கதை. பாராடுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. கதை ஜூப்பரு. சொந்த அனுபவமோ!!!! ( சும்மா தமாஷ்)

  பதிலளிநீக்கு
 3. நல்ல நிகழ்வு. கதை போலில்லாமல்

  பதிலளிநீக்கு
 4. ஆராதனா.. நல்ல பேருங்க. வேட்டையாடு விளையாடு ஜோதிகா தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றாங்க.

  பதிலளிநீக்கு
 5. மதன் மற்றும் ஆராதனா
  இருவரின் வாழ்க்கையும்
  இப்போ நல்லாதான்
  பொய்க்கிட்டிருக்கு.
  கதையும் நல்லாயிருக்கு!

  பதிலளிநீக்கு
 6. கதையின் ஓட்டத்துக்கு நானும் ஓடினேன்...

  பதிலளிநீக்கு
 7. தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன். சிறப்பிக்கவும்.
  http://kayalsm.blogspot.com/2010/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 8. இருவர் மனதிலும் அடைத்து வைத்த ஆழமான காதல் தெரிகிறது...

  பதிலளிநீக்கு
 9. வாங்க ராமலெஷ்மி மேடம்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க நசரேசன் சார்...
  இந்த ம்ம்ம்க்கு என்ன அர்த்தம்?
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க நிலாமதி...
  கண்டிப்பாக பழையவைகளில் காதல் நினைவுகளை (நமக்கு இல்லைங்க... நம்புங்க) அசை போடும்போது மனசு கனக்கத்தானே செய்யும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க வானதி...
  நானும் மதுரைக்கு அடிக்கடிதான் போனேன். இப்படி ஒண்ணும் நடக்கலைங்க... நம்புங்க...
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க சரவணன்...
  ஆமா சரவணன், ஆராதனா நல்ல தமிழ்ப்பெயரும் கூட. எதோ இந்தக் கதையை எழுத நினைக்கும் போது இந்தப் பெயர் எனக்குள்ள சம்மணம் இட்டு உட்கார்ந்து கொண்டு விட்டது. தலைப்பை 'எதிர்பாராதது' என்றுதான் வைத்திருந்தேன். ஏனோ பதிவிடும் போது ஆராதனா என்று மாற்றிவிட்டேன்.

  நடத்துங்க என்பதில் உள்குத்து எதுவும் இல்லையே...?
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க சுசி மேடம்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க செந்தில்..
  நன்றிங்க... கதையை ரசித்து கதையுடன் ஓடியதற்கு.

  பதிலளிநீக்கு
 14. வாங்க கயல்...
  நீண்ட நாளா ஆளையே காணோம். ம்ம்ம்.. வேலைப்பளூ கூடுதல். அதனால் பதிவே மூன்று நாட்களுக்கு ஒருமுறை போடுவதே கடினமா இருக்கு, உங்கள் அழைப்பை ஏற்கிறேன். ஆனா காலதாமதம் ஆகும் பட்சத்தில் பொறுத்துக் கொள்ளவும் தோழி.
  அழைப்புக்கும் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க வெறும்பய அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அருமையான மலரும் நினைவுகள்!!!

  பதிலளிநீக்கு
 17. ஆழமான காதல்
  நல்ல கதை பாராட்டுக்கள் குமார்

  பதிலளிநீக்கு
 18. வாங்க யுவன்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க பொன்ராஜ்...
  நமக்கும் ஆசைதான் இதுபோல் மலரும் நினைவுகளை அசைபோட வேண்டும் என்று அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லை சாமி. இது கற்பனைக் கதையே... குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணி உட்டுறாதீங்கப்பு.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க சரவணன்...
  உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  வாங்க தமிழ்ப்பறவை...
  வாங்க இராமசாமி கண்ணன்...

  உங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. அருமையான கதையும் ஓட்டமும் நண்பரே..
  மேலும் அராதனாவும், மகாவும் எனக்கு மிக மிக மிக பிடித்தமான பெயர்கள்.
  கதை ரொம்ப அருமையா வந்திருக்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 22. இந்த டைப் கதைகள் என்றுமே அலுக்கறது இல்லை. அழுத்தி வைக்கப்பட்ட நிராசைகள் அழுத்தம் தாங்காமல் வெளிவரும் தருணத்தை மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

  முடிவில் ஆராதனா என்ற பெயர் இல்லை என்றாலும் நன்றாகத்தானே இருந்திருக்கும் :)

  பதிலளிநீக்கு
 23. கதை அருமையாக உள்ளது குமார்.

  பதிலளிநீக்கு
 24. பின்னோக்கி said...

  இந்த டைப் கதைகள் என்றுமே அலுக்கறது இல்லை.//
  :))
  aamanga kumar.. nalla irukku.

  பதிலளிநீக்கு
 25. இயல்பான உரையாடல்கள் உங்களின் பலம்.

  கடைசி பாரா இல்லாமலே முடித்திருக்கலாம், இயல்பான கதையில் அந்த பாரா செயற்கையாய் ஒட்டாமல் இருப்பதாக நினைக்கிறேன்.

  உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
 26. வாங்க கமலேஷ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பின்னோக்கி
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வாங்க இளம்தூயவன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி மேடம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாங்க இலக்கியன்...

  நலமா... நாளாச்சு பார்த்து... என்னை ஆரம்பித்தில் இருந்து ஊக்கப்படுத்துபவர்களில் முதலாமவர் நீங்கள். கண்டிப்பாக தருகிறேன்.
  நண்பர் பின்னோக்கியும் உங்கள் கருத்தையே சொல்லியுள்ளார்.

  கண்டிப்பாக நீக்கிவிடுகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...