மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 ஆகஸ்ட், 2010வாழ்க்கை வாழ்வதற்கே..!


எதோ வாழ்ந்தோம்... மறைந்தோம்... என்றில்லாமல் வரும் சந்ததியினர் இப்படி ஒருத்தர் இருந்தார் என்று சொல்லும்படியாக வாழ்ந்து மறைவதே பிறவியின் பேராகும்.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் போராடி வாழ்ந்து பார்க்க வேண்டும் அதை விடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதென்பது வடிகட்டிய கோழைத்தனம். கை, கால் ஊனமானவர்களெல்லாம் மன தைரியத்துடன் வாழ்ந்து காட்டும் போது குறையின்றி பிறந்த பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது முட்டாள்தனமானது. ஊனம் என்று இகழாமல் அவர்களின் தைரியத்தையும் பக்குவப்பட்ட மனதையும் பார்த்து வாழ கத்துக்கொள்ள வேண்டும்.

எனது மைத்துனன் (மனைவியின் தம்பி) இறந்தது இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகிறது. வீட்டிற்கு ஒரே பையனான அவர் காதலுக்காக கயிரை நாடினார். யாருக்காக உயிரை மாய்த்துக் கொண்டாரோ அவள் குடும்பம் குழந்தை என்று நம் கண்முன்னே சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவரை இழந்து இன்று வரை சந்தோஷம் இழந்து வாடுவது பெற்றவர்கள் மட்டுமே.

அவள் இல்லை என்றால் என்ன... தான் படித்த படிப்பு இருக்கு அதை வைத்து அவளுக்கு முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் இன்று எதாவது ஒரு கம்பெனியில் பொறியாளராக இருந்திருப்பார்.

எனக்குத் தெரிந்த குடும்பத்தில் தனது தங்கை வேற்று சாதிக்காரனுடன் பழகியதை கண்டித்த சகோதரன், அவள் திருந்துவாள் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் ஒருநாள் அந்தப் பையனும் தன் தங்கையும் ஒன்றாக இருந்ததை பார்த்து விட்டான். தங்கையை எதுவும் செய்யவில்லை அதற்கு மாறாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டான். அந்தத் தங்கை அந்த இளைஞனை கட்டாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக் கொண்டு சந்தோஷ வாழ்க்கை நடத்துகிறார்.

அண்ணனின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் அவனது வாழ்க்கை முடிந்திருக்காது. தங்கைகாக நாம ஏன் சாக வேண்டும் என்று சிந்தித்திருந்தால் அவனும் இன்று குடும்பம் குழந்தை என வாழ்ந்திருப்பான்.

இன்னொருவர் இவரது கதை சற்று வித்தியாசமானது... சகோதரர்கள், சகோதரி என பெருங்குடும்பத்தில் பிறந்த இவருக்கு படிக்கும் காலத்தில் படிப்பு வரவில்லை. வீட்டில் சாணி பொறுக்கவும் மாடு மேய்க்கவும் தன் காலத்தை ஓட்டியவர், திடீரென விஸ்வரூபம் எடுத்தார். எப்படி தெரியுமா? டுட்டோரியலில் சேர்ந்து 10, 12 முடித்தார். பின்னர் பி.ஏ. தொலைதூரக் கல்வியில் படித்தார். வீட்டில் எதோ பிரச்சினை சாவது என முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் கொண்டார்.

படிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்ற இளைஞர் சாதரண பிரச்சினைக்காக உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்றால் இந்நேரம் தனது படிப்புக்கு ஏற்ற ஏதாவது வேலையில் இருந்து கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்திருப்பார்.

இன்றைய உலகில் இளைஞர்களும் இளைஞர்களும் காதலுக்கும் பரிட்சை தோல்விக்கும் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இவள் இல்லை என்றால் இன்னொருவள், இவன் இல்லை என்றால் மற்றொருவன், மார்ச் போனால் அக்டோபர் அதுவும் போனால் மறுபடியும் மார்ச் என்று வாழப் பழகிவிட்டால் எதற்கு உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்த தோழர்கள் தோழியர் இருக்கிறார்கள். படிக்கும் காலத்தில் விழுந்து விழுந்து காதலித்துவிட்டு படிப்பு முடிந்ததும் இருவரும் சந்தோஷமாக பிரிந்து குடும்பம் குழந்தைகள் என்றான பின்னரும் எங்காவது சந்திக்க நேர்ந்தால் மனசுக்குள் காதலை மறைத்துக் கொண்டு 'ஏய்... நல்லாயிருக்கியா...?' என்று கேட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லாக் காதலும் தோற்பதில்லை... எல்லாக் காதலும் ஜெயிப்பதில்லை... ஜெயித்தவகளில் சிலர் சந்தோஷ வானில் பறந்தாலும் பலர் ஈகோ என்ற வளையத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை பார்த்துள்ளோம். காதல் காலத்தின் கோலம் வாழ்க்கை காலத்தின் தவம்... காதல் இல்லாத மனசு இருக்குமா என்றால் சந்தேகமே, இருப்பினும் காதலுக்காக உயிரை விடுவது கோழைத்தனம்.
                              
                               "வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்..."  என்றான் கவி.

தற்கொலை எண்ணங்களை தவிடு பொடியாக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் அர்த்தம் புரியும். உங்கள் முடிவு மற்றவர்களுக்கு இன்பத்தை தராவிட்டாலும் துன்பத்தை விதைக்காமல் இருக்கட்டும்.

இந்த பதிவு மனசின் ஆதங்கம்தான். எனது மைத்துனரின் இழப்பு எங்களுக்கு ஒரு பேரிழப்பு. அதை யாரும் திருப்பித்தர முடியாது... அவரே திரும்பி எங்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்தாலும் நடக்குமா... இப்ப எங்களின் குழந்தைகள்தான் அவரின் பெற்றோருக்கு சந்தோஷத்தை கொடுக்கின்றன. இருப்பினும் அவர்களின் மனவலி குறையுமா?

எனவே தற்கொலை எண்ணத்தை தவிடுபொடியாக்கி வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை சுகமாகும்... உங்களை இகழ்ந்தவர் உங்கள் வாழ்வு கண்டு மனசுக்குள் வருந்தும் காலம் வராமல் போகாது.

-'பரிவை' சே.குமார்

33 கருத்துகள்:

 1. மைத்துனரின் இழப்பு ஈடு செய்யமுடியாதது...படித்ததும் மனம் கஷ்டமாயிடுச்சு...காதல் செய்யும் பாடு..ம்ஹூம்..

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு அலசல் குமார்.யோசித்து செயல்படவேண்டும்.அவசரத்தில் எடுக்கும் முடிவு இப்படியாகிவிடுகிறது.என்ன செய்ய ?ஏன் இப்படி?

  பதிலளிநீக்கு
 3. தன்னம்பிக்கையூட்டும் வரிகள்.

  கண நேர மனச்சோர்வு இப்படிப்பட்ட முடிவுகளுக்கு தள்ளிவிடுவது சோகமே..

  பதிலளிநீக்கு
 4. எல்லாக் காதலும் தோற்பதில்லை... எல்லாக் காதலும் ஜெயிப்பதில்லை... ஜெயித்தவகளில் சிலர் சந்தோஷ வானில் பறந்தாலும் பலர் ஈகோ என்ற வளையத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை பார்த்துள்ளோம். காதல் காலத்தின் கோலம் வாழ்க்கை காலத்தின் தவம்... காதல் இல்லாத மனசு இருக்குமா என்றால் சந்தேகமே, இருப்பினும் காதலுக்காக உயிரை விடுவது கோழைத்தனம்.


  .....நேர்த்தியான கருத்து. இந்த அளவுக்கு உள்ள புரிதல், உங்கள் மைத்துனருக்கும் இருந்து இருந்தால்.... ம்ம்ம்.... மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

  பதிலளிநீக்கு
 5. அந்த ஒரு நொடி கடந்து போயிட்டா ஏதும் நடக்காது. நிறைய support வேணும் இது போல பூஞ்சையா மனசு இருக்கறவங்களுக்கு ...வேதனை மிஞ்சுபவர்களிடம் தான் ...

  பதிலளிநீக்கு
 6. எந்த ஒரு தவறான செயலுக்கும் பின்னாளில்
  வருந்துவது நடக்கும். ஆனால் ஒரு தோல்விக்காக
  தற்கொலையை நாடுவது, பிறகு வருந்துவதற்கு
  சந்தர்ப்பமேயில்லாமல் ஆக்கிவிடுகிறது.

  "நூத்துல பத்துதான் காதலில் ஜெயிக்குது;
  தொன்னூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது"
  என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

  தற்கொலை என்பது காயத்திற்கு மருந்தே அல்ல;
  காலமே மருந்து.

  பதிலளிநீக்கு
 7. இறுக்கமான பதிவு. உங்கள் குடும்ப இழப்புக்கு என்னுடைய வருத்தங்கள்.

  காதலுக்காக உயிர் துறப்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. காதலில் வெற்றியாவது தோல்வியாவது?

  பதிலளிநீக்கு
 8. நல்ல உணர்ந்து எழுதியிருக்கிங்க... குமார்.

  இன்றைய இளையருக்கு தேவையான பதிவு.

  பதிலளிநீக்கு
 9. இனி உடற்குறையுள்ளவர்களை .... மாற்று திறனாளி என்று மட்டுமே அழைக்கலாமே

  பதிலளிநீக்கு
 10. தற்கொலை என்பது கோழைகளின் முட்டாள் தனமான முடிவு...

  தடைகளை உடைத்தெறிந்து வாழ்ந்து தான் பார்ப்போமே.

  பதிலளிநீக்கு
 11. வாங்க மேனகா மேடம்...
  ஈடு செய்யமுடியாத இழப்புதான்... என்ன செய்ய காதல் படுத்திய பாடு.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க ஆயிஷா மேடம்...
  அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் பல வேளைகளில் பாதிப்புக்களைத்தாஅன் தருகின்றன.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க பின்னோக்கி...
  ஆம்... ஒரு நொடியில் எடுக்கும் முடிவுதான் தற்கொலை எண்ணம். அந்த ஒரு நொடி யோசித்தால் தற்கொலைகள் இருக்கக்கூடாது.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க வானம்பாடிகள் சார்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க சித்ரா மேடம்...
  வாழ்க்கையில் புரிதல் இருந்தால்தான் எல்லாமே நம் வசமாகுமே.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க பத்மா மேடம்...
  ஆம். சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள் எடுப்பவருக்கு பாதிப்பைத் தருவதில்லை. ஆனால் உறவுகளுக்குதான் பாதிப்பு.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க நிஜாமுதீன்...
  உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க அப்பாத்துரை சார்...
  உண்மைதான்... மன வலியுடன் எழுதியதே இந்தப் பதிவு.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க கருணாகரசு சார்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  கண்டிப்பாக இனி அப்படியே அழைப்போம். சொன்னதற்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 20. வாங்க வெறும்பய சார்..
  முட்டாள்களின் முடிவால் முட்டாளாவது இருப்பவர்கள்தான்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. மனதை நெகிழ வைத்த பதிவு..!
  அன்புடன்,
  வெற்றி
  http://vetripages.blogspot.com/

  பதிலளிநீக்கு
 22. //வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை சுகமாகும்... உங்களை இகழ்ந்தவர் உங்கள் வாழ்வு கண்டு மனசுக்குள் வருந்தும் காலம் வராமல் போகாது.//

  நிஜம் குமார்!

  உண்மை உணராமல் என்னைத் தோற்கடித்து விட்டதாய்ச் சொல்லி பெருமிதப்பட்டுக் கொண்டவர்கள், மிகக் குறுகிய கால இடைவெளியில்... என்னிடமே வந்து சொல்லிப் போனா. உண்மையில் தோற்றுப்போனது அவ தான் என்று!

  என்னை நானே தட்டிக்கொடுத்துக் கொண்டேன். சில விசயங்களில் வெற்றி, தோல்விகளை காலமே தீர்மானிக்கிறது.

  (பின்னொரு சந்தர்ப்பத்தில் அச்சம்பவத்தை பதிவாக்குகிறேன்.)

  பதிலளிநீக்கு
 23. நாம் சிறு வயது முதல் தோல்வி ஏமாற்றம் இவைகளை குழதைகளுக்கு சொல்லிதர வேண்டும் , வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு பயணிப்பது , படிப்பில் இன்ஜினியரிங் , கம்ப்யூட்டர் படிப்பு படிக்காவிட்டால் வேலை கிடைக்காது போன்ற ஒரு மாயை ஏற்படுத்துவது , காதலில் தோற்றால் வாழ்கை இல்லை என்ற நினைப்பை மாற்றி , அது ஒரு உணர்வு என்பதை அறிந்து கொள்ள வேண்டும் , இவ் உலகில் எல்லோரும் இன்ஜினியரிங் , கணினி படித்துவிட்டால் பின்பு சாப்பாடு கிடைக்காது , படிக்காமல் சாதித்த பலர் உண்டு , கல்வி என்பது அறிவு வளர்சிக்கு மட்டுமே , அதுவே வாழ்கை ஆகாது என்பதை உணர்த்த வேண்டும் , இதற்கு திர்வு பெற்றோர்கள் குழத்தைவுடன் மனம் விட்டு பேச வேண்டும் , அவர்கள் சக்தியை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும் , கணக்கு வராத பையனை இன்ஜினியரிங் படிக்கச் சொல்லி கட்டாய படுத்த கூடாது , அவர்களுக்கு எது நன்கு வருமோ அந்த துறை தெரிந்துஎடுக்க அனுபதிக்க வேண்டும் , பள்ளிகளில் "வாழ்வது எப்படி" - அதில் படிப்பு , தொழில் ,வெற்றி , தோல்வி , பிரிவு ,ஆகியவை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு வகுப்பு வைக்கலாம் .

  பதிலளிநீக்கு
 24. வாங்க வெற்றி...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  உங்கள் வலைக்கு வருகிறேன்.

  வாங்க இர்ஷாத்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க சத்ரியன்...
  உங்கள் வாழ்வில் நிகழ்ந்தது போல் பலரின் வாழ்வில் நடந்திருக்கிறது நண்பரே.
  வாழ்ந்து காட்டினால் வெற்றிகள் நம் பக்கமே.
  பதிவாக்கும் மனநிலையில் இருந்தால் மட்டும் பதிவாக்குங்கள்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வாங்க ராஜன்...
  உங்கள் கருத்து பார்த்து வியந்தேன்.
  அருமை... முற்றிலும் உண்மை.
  வாழ்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தால் நல்லதுதான்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. ஹலோ குமார் சார் ....
  உங்கள் வார்த்தைகள் ஓவன்றும் உங்களது உணர்வினை எங்கள்
  அனைவருக்ம் புரிய வைக்கிறது , ஆனால் இந்த காதல் படுத்தும் பாடு அது யாருக்கும் புரிவதில்லை ..........

  பதிலளிநீக்கு
 28. வாங்க தங்கா...

  முதல் வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.
  உண்மைதான் காதல் படுத்தும்பாடுதான் என்ன செய்வது?

  ஆமா, நீங்கள் வலைப்பூ வைத்துள்ளீர்களா? ஏன் படிக்க முடியவில்லை...?

  பதிலளிநீக்கு
 29. உங்கள் மைத்துனரின் முடிவு தாங்க இயலாத ஒன்று. வேதனை. அனைவருக்கும் வாழத்தான் ஆயிரம் காரணங்கள் வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ள ஒரு காரணம் போதும். அந்த முடிவெடுக்கும் தருணத்தில் சின்ன விழிப்பு ஏற்பட்டாலும்
  அந்த என்னத்தைக் கை விட்டு
  விடுவார்களாம்.. மனசு கனமாகி விட்டது நண்பரே!

  பதிலளிநீக்கு
 30. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (3/11/11 -வியாழக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...