மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 7 டிசம்பர், 2013

ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல் : ஜூ.வியில் தமிழருவி மணியன்

 மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு... 

வணக்கம். வளர்க நலம். 


'இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் 'சிந்தனையாளர்கள்’ பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது. 'இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்’ என்று நீங்கள் சங்கநாதம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. 

ஈழ நிலத்தில் இலங்கை அரசு இனப்படுகொலையை நடத்தியது என்று முதன்முதலாக நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. உங்கள் வாக்குமூலம் மத்திய அரசின் வாக்குமூலம் என்று நாங்கள் ஏற்கக்கூடுமா? மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் திரு. ராசா 'இனப்படுகொலை’ என்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து உங்கள் அரசு அகற்றியது ஏன்? இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை 'இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது? 

இரண்டாம் உலகப் போரில் யூத இனத்தைப் படுகொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையின் இரக்கமற்ற நடவடிக்கைகளால் அதிர்ந்துபோன சர்வதேச சமுதாயம், 'இனியரு முறை இதுபோன்ற அரக்க மனதுடன் எந்த அரசும் செயல்பட அனுமதிக்கலாகாது’ என்று தீர்க்கமான முடிவுடன்... ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவில் டிசம்பர் 9, 1948 அன்று இனப்படுகொலையைத் தடுக்கவும். மீறுவோரைத் தண்டிக்கவும் ஓர் அமைப்பை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, ஜனவரி, 12, 1951 அன்று நடைமுறைப்படுத்தியது. அதுதான் ‘Genecide convention’ என்பதை அறிவார்ந்த நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். ஓர் அரசு இழைக்கும் கொடுமைகளிலேயே கடுமையானதும், மன்னிக்க முடியாததும் இனப்படுகொலை என்பதில் இரு கருத்து இருக்கவே இயலாது. 

'இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று நீங்கள் மனிதகுல நாகரிகத்தின் உச்சத்தில் நின்று உரத்த குரலில் அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இனப்படுகொலை இலங்கை அரக்கர்களால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியபோது நீங்களும், உங்கள் மத்திய அரசும் வெறும் மௌனப் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாபாதகச் செயலுக்குப் பக்க பலமாகவும் இருந்தீர்கள் என்பதை உலகம் நன்கறியும். ஈழத் தமிழர் அழிவுக்கு நாள் குறித்த இலங்கை அரசுக்கு இணக்கமாக நடந்துகொண்ட நீங்கள், போரை நிறுத்த எவ்வளவோ முயன்றதாகச் சொல்கிறீர்கள். கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கா புத்தியில்லை? 

'குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது’ என்கிறீர்களே... குற்றவாளிகள் ராஜபக்ஷே சகோதரர்களைத் தவிர வேறு யார்? ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுகுவித்த ராஜபக்ஷேவை உங்கள் அரசுதானே குடியரசு மாளிகையில் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தது? காமன்வெல்த் விளையாட்டு அரங்கில் அவருக்குத் தனிமரியாதை தந்து பரவசப்பட்டவர் நம் பாரதப் பிரதமர்தானே! புத்தகயாவிலும், திருப்பதியிலும் அவர் புனித யாத்திரை நடத்துவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் அளித்தது யார்? நீங்கள் அறிவாளி என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக, நாங்கள் எதையும் நம்பும் முட்டாள்கள் என்று நீங்கள் முடிவெடுத்துப் பேசுவதில் நியாயமில்லை. 

'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத்தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது’ என்றும் நீங்கள் சுருதி பேதம் சிறிதும் இல்லாமல் சொல்லி இருப்பதைப் படித்தபோது சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை சிதம்பரம் அவர்களே! ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-ல் உருவானது. அது, இடையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தமாக நவம்பர் 14, 1987 அன்று அங்கீகரிக்கப்பட்டது. இடையில் 26 ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களும், இந்திய அரசும் இன்றுவரை இடையறாமல் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை 13-வது திருத்தம் மூலம் பெற்றுத்தருவதற்கு இரவு பகல் பாராமல் முயன்றுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், அந்த அரசியல் தீர்வோ இந்திய அரசின் இயலாமையால் தொடுவானம்போல் பிடிபடாமல் விலகி நின்று வேடிக்கை காட்டுகிறது. ஏன் இந்த நிலை என்று எவரேனும் கேட்டால், விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என்று தயங்காமல் பழிதூற்றுவீர்கள். 

விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கை ராணுவத்தால் மே 18, 2009 அன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக ராஜபக்ஷே ஆரவாரத்துடன் அறிவித்து நான்கரை ஆண்டுகள் நடந்துவிட்ட பின்பும், 13-வது திருத்தம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை நிதியமைச்சரே? போர் நடந்த நேரத்தில் 13-வது திருத்தம் வழங்கும் உரிமைகளோடு கூடுதலாகவும் சில உரிமைகள் ஈழத் தமிழருக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ராஜபக்ஷேவின் வாய் மலர்ந்த அரசியல் தீர்வுதான் '13 ப்ளஸ்’ என்பதை அரசியல் விழிப்பு உணர்வுள்ள ஒருவராவது மறக்க முடியுமா? இன்று அதே ராஜபக்ஷே, 'தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றிப் பேச நான் என்ன முட்டாளா?’ என்று ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்ததையும், '13 மைனஸ்’ என்று புதிய பல்லவி பாடுவதையும் மன்மோகன் அரசு ஏன் மனதில் கொள்ளவில்லை? ஈழத் தமிழருக்குரிய உரிமைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் அதிசய அட்சய பாத்திரம் 13-வது திருத்தம் என்பது போன்ற பொய்யான மாயத்தோற்றத்தை நீங்களும், காங்கிரஸ் அறிவு ஜீவிகளும் இன்னும் எவ்வளவு காலம் உருவாக்கி இந்த இனத்தை ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய மாநிலங்களுக்குரிய உரிமைகள் ஈழ மண்ணில் வடக்கிலும் கிழக்கிலும் சென்று சேர இந்த 13-வது திருத்தம் எந்த வகையில் உதவக்கூடும்? 

ராஜபக்ஷேவின் கண்ணசைவுக்கு ஏற்பக் காரியமாற்றும் ஆளுநரே உண்மையான நிர்வாக அதிகாரம்(executive power) உள்ளவர். அவருக்கு 'உதவுவதும் பரிந்துரைப்பதும்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பணி. நிதி மேலாண்மை ஆளுநர் வசம். ஆளுநர் விருப்பத்துக்கு இசைய மறுக்கும் மாகாண சபை கலைக்கப்படும். அந்த அதிகாரம் இலங்கை அதிபர் கையில்... 13-வது திருத்தம் சொல்லும் செய்தி இதுதானே! சட்டம்-ஒழுங்கு, காவல் துறை, அரசு நிலம் என்று எதன் மீதும் முற்றுரிமை மாகாண அவைக்கு அறவே இல்லை. 'தேசிய நலன்’ என்ற போர்வையில் இலங்கை நாடாளுமன்றம் தமிழர் நலனுக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும். இதுதானே நீங்கள் முயன்று உருவாக்கிய 13-வது திருத்தத்தின் அம்சங்கள்! 'வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரே மாகாணமாக மாறும். சிங்களத்துடன் தமிழ், இலங்கையின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படும்; ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்’ என்ற இரண்டு அம்சங்கள் மட்டுந்தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உருப்படியானவை. ஆனால், அந்த இரண்டும் சிங்கள பௌத்த பேரினவாத கூட்டத்தால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டபோது, 'காந்தியின் குரங்குகளாக’ (இது தவறான சொற்பிரயோகம் இல்லை) நீங்கள் அனைவரும் காட்சி தந்தது ஏன்? விளக்குவீர்களா? 

எந்த உரிமையும் தமிழருக்குத் தருவதற்கு வழிவகுக்காத இந்த 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் சிங்கள அரசுக்குச் சம்மதம் இல்லை. இதை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழரின் 'அரசியல் அதிகாரம்’ பழுதுபடாமல் பாதுகாக்கப்படும் வரை இந்திய அரசும் நீங்களும் ஓயப்போவதே இல்லை. நல்ல நாடகம். நீங்கள் ஒரு கற்றறிவாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர்; சர்வதேச சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர். இந்த ஏதுமறியாப் பாமரனுக்கு நீங்கள்தான் தெளிவான பதிலைத் தரக்கூடும். இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் பலமுறை கூடிப் பேசி, விவாதித்து... இறுதியில் ஓர் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டால், அந்த ஒப்பந்தம் இரு நாடுகளையும் சம அளவில் கட்டுப்படுத்துவதுதானே நியாயம்? பின்னாளில் அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரு நாடு தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தால், அந்த இழிசெயலை இன்னொரு நாடு பார்த்தும் பாராமல் நடந்துகொண்டால், இரண்டு அரசுகளின் 'இறையாண்மை’ என்னாவது? இறையாண்மை பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இந்த அறிவிலிக்கு விளக்கவுரை வழங்க வேண்டும். 

ராஜபக்ஷே அரசு, இப்போது 13-வது திருத்தத்தை நிராகரித்தாலோ, நீர்த்துப்போகச் செய்தாலோ, தார்மிக அடிப்படையில் அது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் தகுதியை இழந்துவிடாதா? அதனுடைய தவறைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா? நீங்கள்தான் எனக்குத் தெளிவுரை தரவேண்டும். காரணம், காங்கிரஸில் உள்ள 'அறிவுஜீவிகளின் ஆதர்சம்’ நீங்கள் ஒருவர்தான் என்று பழைய காங்கிரஸ்காரனாகிய நான் பூரணமாக அறிவேன். 'இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு சிறுபான்மையினர் தனி நாடு கேட்க முடியாது. இதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக அரசியல் முடிவெடுக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கிய நீங்கள், இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களின் பிரிவினை கோரிக்கையை நினைவூட்டியிருக்கிறீர்கள். இந்திரா காந்தி வங்கதேசத்தைப் பிரித்துக் கொடுக்கப் படை நடத்தியபோது 'பாகிஸ்தான் இறையாண்மை’ பறிபோவதை ஏன் சிந்திக்கவில்லை? ஈழத் தமிழரின் பசியாற்ற ராஜீவ் காந்தி வான்வழியாக விமானங்களை அனுப்பி உணவுப்பொருள்களை வீசியபோது 'இலங்கை இறையாண்மை’ மீறப்படுவதை ஏன் பொருட்படுத்தவில்லை? அப்போதெல்லாம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைக்குரல் எழவில்லையா? 

'ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது எளிதல்ல’ என்று புத்தஞானம் போதிக்கிறீர்கள். அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஒத்துவராத நிலையில் நடந்த இனப்போரில் 11 ஆயிரம் பேர் பலியானதும், பத்து லட்சம் அல்பேனியர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், செர்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட அல்பேனியர்கள் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்துடன் 'கொ சோவா’ தனிநாடு கண்ட சரித்திரம் உங்களுக்குத் தெரியாதா? யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டதைச் சிந்தியுங்கள். ஆப்பிரிக்காவில் எரித்ரியா, தெற்கு சூடான், இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து விடுபட்ட திமூர் ஆகியவற்றில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தனி நாடு கண்ட வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பணிகளுக்கிடையில் கொஞ்சம் பிரித்துப் படியுங்கள். 

நீங்கள் மிகவும் 'சீரியஸான’ மனிதர் என்று இதுவரை நினைத்திருந்தேன். வடிவேலுவைவிட நகைச்சுவை உங்களுக்கு நன்றாக வருவதை இன்றுதான் அறிந்தேன். 'சர்வதேச அரங்கில் மன்மோகன் அரசு கடந்த நான்கரை ஆண்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சியினால்தான், கனடா போன்ற நாடுகள் கொழும்புக்கு எதிராகப் பேசிவருகின்றன’ என்று எப்படி உங்களால் இவ்வளவு நகைச்சுவையாகப் பேச முடிகிறது? கொஞ்சம் போனால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மன்மோகனிடம் நடத்திய ஆலோசனைப்படியே யாழ்ப்பாணம் போனதாகவும், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகப் பேசியதாகவும் கதை சொல்ல முனைவீர்களோ? 

சிதம்பரம் அவர்களே... சமத்துவம் இல்லாத இடத்தில் சமதர்மம் இருக்காது. சமதர்மம் நிலவாத சூழலில் சுதந்திரக் காற்றை யாரும் சுவாசிக்க இயலாது. சிங்கள பௌத்த பேரினவாத அரசும், ராஜபக்ஷே சகோதரர்களும், இனவாத அமைப்புகளும், வெறிபிடித்த பௌத்த துறவிகளும்(!) ஒருநாளும் ஈழத் தமிழருக்கு எந்த உரிமையும் வழங்கப்போவது இல்லை. இலங்கையைப் போன்ற போக்கிரி அரசை 'நட்பு நாடு’ என்று நீங்களும் உங்கள் அரசும் பாராட்டலாம். ஆனால், உலக நாடுகள் நீண்ட நாள் வேடிக்கை பார்க்காது. ஒரு நாள் அவை வெகுண்டு எழும். அப்போது ஈழ மக்கள் வாக்கெடுப்பு (Referendum) மூலம் நிச்சயம் தமிழீழம் மலரும். 

'குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது’ என்றீர்கள். அடுத்த நாளே அந்தக் குற்றவாளிகளின் கடற்படையை வலுப்படுத்தி எங்கள் மீனவர்களை மேலும் கொன்று குவிக்க வழிவகுக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை நீங்களே இதற்கு முன்பு நிரூபித்திருக்கிறீர்கள். தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி, ஜனநாயகப் பேரவை நாயகராக நீங்கள் வலம் வந்தபோது ஒரு வார இதழில் 'நமக்கே உரிமையாம்’ என்று ஒரு கட்டுரைத் தொடரை வடித்துத் தந்தது உங்கள் நினைவில் நிழலாடுவது உண்டா? 

'இந்தியாவின் தேர்தல் விதிகளை மாற்றுவதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். முதலில் மாற்றப்பட வேண்டிய விதி எது தெரியுமா? யாரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியாது என்றொரு விதியை இயற்ற வேண்டும். அதேபோல் யாரும் மூன்று பதவிக் காலங்களுக்கு (15 ஆண்டுகளுக்கு) மேல் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும். பழையன கழிவதற்கும், புதியன புகுவதற்கும் இதுவே சிறந்த வழி’ என்று அதில் ஊருக்கு உபதேசம் செய்தீர்களே... அதன்படி நீங்கள் நின்றீர்களா? 

'தேர்தல் விதியையே மாற்றி எழுதிய’ மகத்தான மனிதரல்லவா நீங்கள்! பாவம் நீங்கள்... 'இந்த கூட்ட அமைப்பாளரும் நான்தான். அழைப்பாளரும் நான்தான். பேச்சாளரும் நான்தான்’ என்று எவ்வளவு வெளிப்படையாக உங்கள் இதய வலியை இறக்கிவிட்டீர்கள்! முதலில் பல்குழுக்களாகப் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு காங்கிரஸை ஒன்றாக்கப் பாருங்கள். அதற்குப் பிறகு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்க ஓயாமல் போராடலாம்!

-தமிழருவி மணியன்.

நன்றி: ஜூனியர் விகடன்
-'பரிவை' சே.குமார்.

தொடர்கதை: கலையாத கனவுகள் - 33

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

33. கால ஓட்டமும் காதல் ஆட்டமும்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவை காதலிக்கிறான். அக்காவுக்கு கட்ட நினைக்கும் மாமா பையன் நல்லவன் இல்லை என்பதால் அம்மாவுடன் சண்டை போட, அண்ணன் மூலம் மாமா பையன் சிங்கப்பூர் அனுப்பப்படுகிறான். வைரவனை அடிக்க வந்த இளங்கோ ஆட்களை ராம்கி அடித்த ஆத்திரத்தில் அவனை போட ஆள் ஏற்பாடு பண்ணுகிறார்கள். கடவுள் கிருபையால் சேகர் மூலமாக அதிலிருந்து தப்பிக்கிறான். விடுமுறைக்கு சித்தி வீடு போகிறாள் புவனா, அவளைப் பார்க்காமல் கவலையோடு நாட்களைக் கடத்துகிறான்.

இனி...


போன் மணி அடிக்கவும் "டேய் இருடா... நா எடுக்கிறேன்... புவியா இருந்தாலும் இருக்கும்" என்றபடி போனை எடுத்தான் ராம்கி.

"அலோ" என்றவனை எதிர்முனை கட்டைக்குரல் "யாரு சேகரா?" என்று திருப்பிக் கேட்கவும் "டேய் சேகர் உன்னைத்தான்டா கேக்குறாங்க" என்று அவன் கையில் கொடுத்துவிட்டு வந்து சோகமாய் அமர்ந்தான். சேகர் நீண்ட நேரம் பேசிவிட்டு வந்தான்.

"சித்தப்பாடா... அப்பாக்கிட்ட ஏதோ பேசணுமாம்... அதான்... நாங்கூட தங்கச்சிதான் பேசுதோன்னு நினைச்சேன்..." என்றான்.

"நானும் அப்படித்தான்டா நினைச்சேன்... காவேரி வேற பொண்ணு பேசுச்சுன்னு சொன்னுச்சில்ல... சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்... புவியா இருந்தா மறுபடியும் கூப்பிடுவாதானே..."

"ஆமாடா... வெயிட் பண்ணலாம்..." என்றபடி கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் சேகரின் அப்பா அம்மாவும் வந்துவிட, இனி இவர்களுக்கு மத்தியில் அவளிடம் எப்படி பேசுவது என்று நினைத்து  "சரிடா நான் கிளம்புறேன்" என்றவனை "இருப்பா... காபி போட்டுட்டேன் குடிச்சிட்டுப் போ..." என்றார் சேகரின் அம்மா.

அப்போது மீண்டும் போன் மணி அடிக்க, சேகர் போனை எடுத்தான். எதிர்முனை "அலோ... சேகர் அண்ணன் இருக்காங்களா?" என்றதும் "நான் சேகர்தான் பேசுறேன்... நீங்க?" என்றான்.

"புவனா பேசுறேண்ணே... அவரை வரச் சொல்றீங்களா? அப்புறம் கூப்பிடுறேன்..."

"இங்கதான் இருக்கான்... டேய் உனக்குத்தாண்டா போன்... உன்னோட பிரண்ட்..." என்று கண்ணடித்தான்.

போனை வாங்கி "அலோ" என்றான்.

"ராம் நாந்தான்..."

"சொல்லு... எப்படியிருக்கே? "

"நல்லாயிருக்கேன்... பொழுதே போகலை..."

"ம்... எனக்குந்தான்... எப்படா காலேசு திறப்பாங்கன்னு இருக்கு...  நீ எப்ப வருவே?"

"ஆமா... எனக்குந்தான்...ஆனா லீவெல்லாம் இங்கதான்... காலேசு திறக்கும் போதுதான் வருவேன்..."

"ம்... நா வேணா அங்க வரவா... வந்தா பாக்கலாமா?"

"இங்கயா... அய்யோ... வேண்டாம்... இப்ப சித்தப்பா வெளிய போயாச்சு... சித்தி வெளியில பேசிக்கிட்டு இருக்காங்க... அதான் போன்ல டிரைப் பண்ணினேன்... சித்தி வந்தா யாருக்கு எதுக்குடி போன் பண்ணினேன்னு கேப்பாங்க.. "

"இங்கயும் சேகர் பேரண்ட்ஸ் வந்துட்டாங்க... இல்லேன்னா பயமில்லாம பேசலாம்..."

"ம்.. உங்களை ஆள் வச்சி அடிக்க அந்த இளங்கோ ஏற்பாடு பண்ணினானாமே?" படபடப்பாகக் கேட்டாள்.

"இ... இல்லையே... அ... அப்படியெல்லாம் எதுவும் இல்லை..."

"எனக்கு எல்லாந்தெரியும்... நான் போன் செஞ்சதே முக்கியமா இதைக் கேக்கத்தான்... வைரவன் எங்கிட்ட எல்லாம் சொன்னான். அவன் இளங்கோவைக் கூப்பிட்டு சத்தம் போட்டு விட்டானாம்... வைரவன் எங்கிட்ட எதுக்கு சொன்னான்னு தெரியலை.... உங்ககூட பேசினாலே கோபப்படுவான்... ஆனா இதை எங்கிட்ட சொன்னான்... அவனுக்கு உங்க மேல கொஞ்சம் பாசம் இருக்கத்தான் செய்யுது... ஆமா அடிக்க வந்தவன் மோசமான ரவுடியாமே... எதோ நல்ல நேரம் அந்த நேரத்துல யாரோ வந்து காப்பாத்தியிருக்காங்க.. இல்லேன்னா..." அதற்கு மேல் பேசாமால் எதிர்முனை விசும்பியது.

"அதெல்லாம் இல்லை... முன்னால உள்ள கோபத்துல அடிக்க வந்தானுங்க... சேகர்தான் அந்த நேரத்துல வந்து காப்பாத்துனான்.. வந்தவன் சேகரோட பிரண்ட்டுங்கிறதால என்னோடவும் பிரண்ட் ஆகிட்டான். எல்லாம் விவரமா பேச முடியாது. வெளியில நிக்கிற சேகர் அப்பா எப்ப வேணுமின்னாலும் உள்ள வரலாம்... அழுகாதே... நான் நல்லாயிருக்கேன்... நீ உடம்பை பார்த்துக்க... சித்தி வந்துறப்போறாங்க அப்புறம் வீணான சந்தேகம் வந்துடும்..." மெதுவாகப் பேசினான்.

"ம்... எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை... உங்களைப் பார்க்கணும் போல இருக்கு... எங்கம்மா சித்திக்கிட்ட லேசுவாச சொல்லியிருப்பாங்க போல... மெதுவா கேட்டாங்க... ஒரு பையன் கூட ரொம்ப குளோசாமேன்னு... ஆமா என்னோட பிரண்ட்... ஒரு பொண்ணும் பையனும் பிரண்டா இருக்கக்கூடாதா என்னன்னு திருப்பிக் கேட்டதும் உன்னையப் பற்றித் தெரியும்... எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை... ஆனா உங்கம்மாதான் பயப்படுறாங்கன்னு சொன்னுச்சு... சித்தி நான் எப்பவும் சுத்தம் தெரிஞ்சிக்கன்னு சொல்லிட்டேன். அப்புறம் பேசலை.... சரி சித்தி வந்தாலும் வந்திரும். நா வச்சிடுறேன்... முடிஞ்சா ரெண்டு நாள் கழிச்சுக் கூப்பிடுறேன்..."

"சரி... உடம்பைப் பார்த்துக்க... சியூடா..." என்றபடி போனை வைத்துவிட்டு திரும்ப... "என்ன மாப்பிள்ளக்கு போனெல்லாம் வருது... புதுசா இருக்கு... இதுவரைக்கும் ஒரு போனும் வந்ததில்லை... காலேசுக்குப் போனதும் போன்ல பேசுற பிரண்டெல்லாம் கிடைச்சாச்சா" என்ற சேகரின் அம்மாவுக்கு சிரிப்பை மட்டும் பதிலாக்கி வெளியில் வந்தான்.

அவனை அப்படியே தள்ளிக் கொண்டு வீதிக்கு வந்த சேகர், "என்னடா... என்ன சொன்னா?"

"அழுகுறாடா... எனக்கு கஷ்டமா இருக்கு...."

"அழுகுறாளா... ஏன்டா... என்னாச்சு... வீட்ல தெரிஞ்சிருச்சா என்ன..."

"இல்லடா.... என்னைய போட வந்தது அவளுக்குத் தெரிஞ்சாச்சு..."

"அது சரி... யாரு சொன்ன?"

"வைரவந்தான்... ஆமா எப்படிடா வைரவனுக்கு..."

"இது என்ன சிதம்பர ரகசியமா... மணிக்கு இளங்கோவும் வைரவனும் ஒண்ணுதான்... எல்லாரும் சொந்தக்காரங்கதான்... எவனாவது வைரவங்கிட்ட இளங்கோ ஒருத்தனை போடச் சொன்னாரு... கடைசியில அவன் தப்பிச்சிட்டான்னு சொல்லியிருப்பான். உடனே வைரவன் யாரு என்னன்னு விசாரிச்சிருப்பான்... நீன்னு சொல்லவும் அவகிட்ட சொல்லியிருப்பான்..."

"எம்மேல பாசமிருக்கவும்தானே இளங்கோவை சத்தம் போட்டிருக்கார். அது போக புவிக்கிட்டயும் சொல்லியிருக்கார்."

சேகர் சத்தமாக சிரித்தான். அவனது சிரிப்புக்கு அர்த்தம் புரியாத ராம்கி "எதுக்குடா சிரிக்கிறே?" என்றான்.

"போடா வெண்ணை... பாசமாவது மண்ணாங்கட்டியாவது... நாளைக்கி இளங்கோகூட சேர்ந்து உன்னைய அடிக்க வந்தாலும் வருவான்... இங்க பாரு அவனைப் போட ரெடியாயிட்டானுங்க...  ஒதுங்கியிருன்னு சொல்லுறதுக்காகக் கூட தங்கச்சிக்கு போன் பண்ணியிருப்பான்... பாசமாம்... பாசம்... இவனுக எல்லாமே காலைச் சுத்தின கருநாகம் மாதிரி... கடிக்காம விடமாட்டானுங்க..."

"ம்... புவிய பாக்கணும்போல இருக்குடா..."

"இன்னும் கொஞ்ச நாள்தானே வெயிட் பண்ணு..."

ல்லூரி திறந்து ஸ்டிரைக், சின்னச் சின்ன சண்டைகள் என நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, இதற்கிடையே வைரவனும் இளங்கோவும் பேப்பருக்கு இவ்வளவு என பணம் கொடுத்து டிகிரியை முடித்திருந்தார்கள். வைரவன் மதுரை லா காலேசிலும் இளங்கோ பெங்களூரில் எல்.எல்.பியும் படிக்கப் போய்விட்டார்கள். ராம்கி வீட்டிலும் டெலிபோன் வந்துவிட்டது. 

கல்லூரியின் புதிய ரவுடிகளாக சுதாகரும், சிவாவும் பொறுப்பேற்க அவர்களின் அடிபொடிகளாக சிலர் உருவானார்கள். புவனா ராம்கியின் காதல் இடையூறு இன்றி சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்தது. பலமுறை ராம்கியை தாக்க சிவா முயன்றும் சுதாகர் அதை தகர்த்துக் கொண்டே வந்தான். இரண்டாம் வருட படிப்பு இருவருக்கும் இடையிலான மிகப் பெரிய அடிதடியால் இருமுறை காலவரையற்ற கல்லூரி மூடலுடன் நிறைவு பெற்றது.

ராம்கியின் அண்ணனும் முத்துவும் சிங்கப்பூரில் சந்தோஷமாக இருந்தனர். முத்துவின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக போனில் அண்ணன் ராசு சொன்னதும் எல்லாருக்கும் சந்தோஷம். சேகருக்கும் காவேரிக்கும் திருமண செய்து வைத்துவிடலாம் என இரு வீட்டிலும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க, இப்போதெல்லாம் புவனாவும் ராம்கியும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்களின் காதலுக்கும் இரண்டு வயதாகப் போவதால் கொஞ்சம் பயம் குறைத்து ஒரு பிடிப்பு ஏற்பட்டிருந்தது. அன்று கல்லூரி முடிந்ததும் இருவரும் அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சைக்கிளை தள்ளியபடி சிரித்துப் பேசியபடி நடக்க ஆரம்பிக்க, அவர்களுக்கு எதிரே தமிழய்யா சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 5 டிசம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : நீர் பாய்ச்சுதல்


கிராமத்து நினைவுகள் எப்போதும் நினைத்தாலும் மாலை நேரத்தில் காற்றில் கீதமிசைக்கும் பயிரைப் போல அழகானதாய்... வயல் வெளியில் வீசும் இளங்காற்றைப் போல் இனிமையானதாய் இருக்கும். அப்படி இதுவரை நிறைய நினைவுகளை அசை போட்டாச்சு. இன்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய அனுபவ நினைவலைகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

எங்கள் ஊரில் கண்மாய் நிறைந்தால்தான் விவசாயம் செய்வார்கள். அதிலும் கண்மாயில் சின்ன முட்டு, பெரிய முட்டு என்று இரண்டு மேடான பகுதிகள் இருக்கின்றது. மழை பெய்து பெரிய முட்டு மறையும் அளவுக்கு தண்ணீர் நிறைந்தால் அந்த வருடம் விளைச்சலுக்குப் போக தண்ணீர் மிச்சமிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை வராது என்பது வழிவழியாக எங்கள் ஊர் பெரியவர்கள் வைத்திருக்கும் ஒரு கணக்கீட்டு முறை.

கண்மாயில் பெரிய முட்டு மறையுமளவுக்கு இல்லாமல் சின்ன முட்டே மறைந்திருக்க மழை வரும் என்ற நம்பிக்கையில் விவசாயம் செய்து மழை இல்லை என்றால் தண்ணீர் பாய்ச்சும் போது கண்மாயில் தண்ணீர் குறையக் குறைய மடை வழியாக தண்ணீர் ஏறிப் பாய்ந்து வயலுக்குச் செல்லாது. அப்போது தண்ணீரை இறைத்துத்தான் பாய்ச்ச வேண்டும்.

ஆரம்ப நாட்களில் மடையை மறைத்துக் கூட தண்ணீர் கிடக்கும். தண்ணீருக்குள் இறங்கி சரியாக மடையின் துவாரத்தைத் திறந்து தண்ணீரைத் திறந்துவிட்டால் குபுகுபுவென கண்மாய்க் கரைக்கு அந்தப்புரத்தில் உள்ள மடவாய் வழியாக தண்ணீர் வெளியேறி வாய்க்காலில் புரண்டு ஓடி வயலை அடையும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குறையக் குறைய வேகமும் குறைத்து ஒரு கட்டத்தில் தண்ணீர் ஓடாது நின்றுவிடும்.

எங்கள் ஊரில் கண்மாய் தாழ்வாகவும் வயல்வெளிகள் மேடாகவும் ஆகிவிட்டன. எனவே தண்ணீர் ஏறிப் பாய்வது என்பது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே.  பிறகு தண்ணீரை இறைத்துத்தான் பாய்ச்சுவோம். மடைக்கு அருகில் மூன்று கம்புகளை நட்டு மேலாக சேர்த்துக்கட்டி தண்ணீர் பக்கமாக இரண்டு கம்புகளுக்கும் இடையில் ஒரு கம்பைக் கட்டி தண்ணீர் இறைத்து ஊற்றுவதற்கு ஏற்றார்போல் மணல் மூடை, கொழுஞ்சிச் செடிகள், தண்ணீருக்குள் கிடக்கும் ஒரு வகை கீரைக்கொடி என எல்லாம் போட்டு மேடை அமைத்து வைத்துவிட்டால் ஊரார் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்வார்கள்.

எல்லாருடைய வீட்டிலும் எரவாமரம் என்று ஒன்று தண்ணீர் இறைப்பதற்காக வைத்திருப்பார்கள். மூன்று பக்கமும் அடைத்து சற்றே வளைந்து நீண்டிருக்கும். மேலே கைபிடிப்பதற்கு வாகாக உருண்டையான மண்வெட்டிப் பிடிபோல ஒன்றை வைத்துக் கட்டியிருப்பார்கள். இது ஆண்கள் தண்ணீர் இறைக்க உபயோகிப்பது ஆகும். ஆண்கள் இல்லாத குடும்பத்தில் பெண்கள் சிறிய கொட்டாப்பெட்டியில் இரண்டு பக்கமும் பிடிக்கும்படியாக கயிறு கட்டி வைத்திருப்பார்கள். இருபுறமும் இரண்டு பேர் நின்று தண்ணீரை மோந்து மோந்து ஊற்ரி இறைப்பார்கள். இந்த முறையில் தண்ணீரை மோந்து இறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் தண்ணீரை மோக்கும் போது வலது கை மேலும் தண்ணீரை ஊற்றும் போது வலது கை கீழாகவும் இருவருக்கும் ஒரே சமயத்தில் இயங்க வேண்டும். நானும் இந்த முறையில் அம்மாவுடனும் அக்காவுடனும் இறைத்திருக்கிறேன்.

ஆண்கள் எரவாமரத்தை வைத்துதான் இறைப்பார்கள். இரண்டு கம்புகளுக்கும் இடையில் கட்டிய கம்பில் எரவாமரத்தைக் கட்டி தண்ணீர் மோக்கும் போது தரை தட்டுகிறதா எனப்பார்த்து சரி பண்ணி இறைக்க ஆரம்பித்தார்கள் என்றால் இரவு முழுவதும் இறைப்பார்கள். இரண்டு கையையும் வைத்து எரவாமரத்தை பின்னுக்கு இழுத்து தண்ணீர் மோந்து தொழைமேடை மேலே தூக்கி ஊற்றுவார்கள். கால் ஏக்கர் அரை ஏக்கருக்கு எல்லாம் தண்ணீர் இறைத்தே பாய்ச்சி விடுவார்கள். ஒரே நேரத்தில் இரண்டு எரவாமரம் போட்டு இரண்டு பேர் நின்று இறைப்பார்கள்.எங்கப்பாவுடன் அண்ணன்கள் தண்ணீர் இறைத்தனர். பின்னர் நானும் தம்பியும் ஒரு மரத்தில் மாற்றி மாற்றி இறைக்க அப்பா ஒரு மரத்தில் இறைப்பார்கள். 


தண்ணீர் இறைக்கும் அலுப்புத் தெரியாமல் இருக்க அழகான பாடலைப் பாடுவார்கள்.  அந்தப்பாடல் பத்தில் இருந்து ஆரம்பித்து நூற்றிப் பத்துவரை போய் மீண்டும் பத்துக்கே திரும்பி வரும். இதை பிள்ளையார் என்ற கணக்கில் வைப்பார்கள்.ஒருமுறை 110 வரை போனால் ஒரு பிள்ளையார் என்பது கணக்கு. பாடலை ஆரம்பிக்கும் போது பத்தோடிப் பாய... பதினொன்னுகான் ஒண்ணு... பதினொன்னுகான் ரெண்டு... எனப் போகும்... நூற்றிப் பத்துவரை போயி பின்னர் மீண்டும் திரும்பி பத்துக்கே வருவார்கள். இந்தப் பாடலை ராகத்துடன் அழகாகப் பாடுவார்கள். இந்தச் செய்யிக்கு இத்தனை பிள்ளையார் போதும் என்பார்கள். ஒரு சில வயல்கள் ரொம்ப தூரத்தில் இருக்கும் அந்த வயலில் தண்ணீர் தலைவைத்துப் பாய ஆரம்பிக்கவே இரண்டு மூன்று பிள்ளையார் பாடவேண்டும்.

இந்தப் பாடலை எங்க ஐயா (அப்பாவின் அப்பா) பாடினார் என்றால் ரொம்ப தூரத்துக்கு கேட்கும். அவ்வளவு அழகாக பாடுவார். பள்ளியில் படிக்கும் போது இரவு நேரத்தில் டியூசன் விட்டு இருட்டில் வரும்போதே பாட்டை வைத்து யார் தண்ணீர் இறைக்கிறார்கள் என்று சொல்லிவிடுவோம். பெரும்பாலும் எங்க ஐயா இறைத்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.அந்தக் குரலை வைத்தே நடுவுலார் காஞ்சரமடையில தண்ணீர் இறைக்கிறார் போல பாட்டுச் சத்தம் கேக்குது எனச் சொல்லிவிடுவார்கள். அந்தளவுக்கு அவரது பாடல் பிரபலம்... அந்தக் குரல்... அவரது ஏற்ற இறக்கத்துடனான பாடல் பாடும் அழகு என எல்லாமே இரவில் அவ்வளவு அழகாக இருக்கும்.

அப்புறம் தண்ணீர் பாய்ந்து ஓடும்போது மற்ற வயல்களுக்கு தண்ணீர் உடைத்துக் கொண்டு போகுதா... நண்டுச்சிலவு வழியாக தண்ணீர் போகுதா... இல்லை யாரும் வரப்பில் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களா எனப் பார்த்து அடைக்க வேண்டும். இல்லையேல் காலில் அட்டை கடிக்க நின்று தண்ணீர் இறைத்தும் பயனில்லாமல் போகும்.

ஒரு சில சமயங்களில் மடை திறந்து தண்ணீர் பாய்ச்சியே விளைந்து கடைசியாக ஒரு தண்ணீர் அல்லது இரண்டு தண்ணீர் பற்றாக்குறை வரும். அப்போதெல்லாம் எரவாமரம் போட்டு இறைக்காமல் மோட்டார் வைத்து மணிக்கு இவ்வளவு பணம் எனக் கொடுத்து இறைத்து விளைய வைத்துவிடுவார்கள்.

வயலுக்கு தண்ணீர் இறைத்தால் இரண்டு தோளும் வலி பின்னி எடுக்கும் இருந்தாலும் தண்ணீர் சலசலவென ஓடி வெடிவோடிப் போய்க்கிடக்கும் வயலில் பாய்ந்து வெடிவெல்லாம் நிரம்பி கதிர் சலசலவென காற்றில் ஆடிச் சிரிக்கும்போது கிடைக்கும் சந்தோசத்திற்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.

*** தண்ணீர் இறைக்கும் படம் தேடியபோது வாய்க்காலில் தண்ணீர் இறைக்கும் இந்தப்படங்களே கிடைத்தது. கண்மாயில் தண்ணீர் இறைக்கும் படம் இணைத்தில் இல்லை. இந்தப் படத்தை இணையத்தில் பகிர்ந்தவருக்கு நன்றி.

-கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

மனசின் தோற்றமும் வளர்ச்சியும்...

ல்லோருக்கும் வணக்கம்...

எழுத்து... எழுத ஆரம்பித்ததும் வசந்தத்தை அள்ளி வீசிய சாமரம்... எழுத்து என்னும் மகரந்தம் எனக்குள் சூழ் கொண்டது கல்லூரி நாட்களில்தான். அதுவும் உன்னால் எழுத முடியும்... முயற்சி செய்து பார் என என்னை எழுத்துலகுக்கு ஒருவர் கைபிடித்து இழுத்ததால் கிறுக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து வசப்பட ஆரம்பித்திருந்தாலும் இன்னும் நல்லதொரு எழுத்தாக உருவெடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த கிராமத்து மண்ணுக்குள்ளும் எழுத்து என்னும் விதை முளைக்கும் என்று வலுக்கட்டாயமாக எழுத்துக்குள் இழுத்து வந்தவர் என கல்வித் தந்தை பேராசன் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு எனது முதல் நன்றியை உரித்தாக்குகிறேன்... கல்லூரிக் காலத்தில் நான் எழுதியவைகளை... இல்லையில்லை கிறுக்கியவைகளை எல்லாம் பொறுமையுடனும் பொறுப்புடனும் படித்துத் திருத்தி... நல்லாயிருக்கு என என்னை உற்சாகமூட்டிய தோழர் தோழியருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியினைச் சொல்லிக் கொள்கிறேன்.


மனசு...

இந்தப் பெயருக்கு நான் மட்டுமே சொந்தக்காரன் அல்ல... எங்கள் அறுவர் குழுவுக்கு சொந்தமான பெயர் இது. ஆம் கல்லூரியில் நாங்கள் நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயரே மனசு. நாங்கள் என்றால் மட்டும் போதுமா என்ன... மனசில் அங்கம் வகித்த நட்புக்களின் பெயரை இந்த நேரத்தில் சொல்வதே சாலச் சிறந்ததாகும். கையெழுத்துப் பிரதி உதயமாகக் காரணமாக இருந்தவன் என்னில் பாதியாய் இருந்த கரு.முருகன், இவனது முயற்சியால் கைகோர்த்தவர்கள் இளையராஜா, பிரபாகரன், அம்பேத்கார் என்ற மூன்று முத்தான நண்பர்கள். மற்றொருவர் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் எதற்கும் துணிச்சலுடன் பயணிக்கும் சுபஸ்ரீ இவர்களுடன் நான் என ஆறு பேர் சேர்ந்து மனசு இதழை ஆரம்பித்தோம்.

கல்லூரியில் அப்போது எங்களுக்கு முந்தைய ஆண்டு மாணவர்களில் அசோகன் மற்றும் நவநீதன் என்ற இரணடு அண்ணன்கள் நீ என்ற பத்திரிக்கை நடத்தி வந்தார்கள். நாங்கள் மனசு ஆரம்பிக்கும் போது எனது சகோதரர் மா.பழனியப்பன் தனது நண்பர்களுடன் இணைந்து ரோஜா என்ற இதழை நடத்தினார். கல்லூரியில் சிறுகதைப் போட்டியெல்லாம் நடத்தி 'பல்லக்கில் ஏறும் பட்டங்கள்' என்ற தொகுப்பைக் கொண்டு வந்த பரக்கத் அலி கவி'தா' என்ற இதழை நடத்தினார். ஒவ்வொரு இதழுக்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்தது. எங்கள் மனசு எல்லாப் பக்கமும் நல்ல பெயரைப் பெற்றது. 

வலையில் எழுத ஆரம்பித்த போது கவிதை, ஹைக்கூ, மனதில்பட்டது, சிறுகதைக்கென தனித்தனியாக வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். பின்னர் சில நண்பர்கள் ஒரே இடத்தில் பதியுங்கள் எதற்காக இத்தனை வலைப்பூக்கள் என உரிமையுடன் சொன்னார்கள். அவர்கள் சொன்னதும் சரியெனத் தோன்ற எல்லாவற்றையும் எழுத மனதில்பட்டதை எழுத பயன்படுத்திய எனக்குப் பிடித்த பெயரான மனசை பயன்படுத்திக் கொண்டேன். மனசு எனக்குள் எத்தனையோ இன்பத்தை விதைத்த பெயர். கல்லூரியில் கையெழுத்துப் பிரதியாய் ஆரம்பித்து இன்று எனது வலைப்பூவாய் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது 'மனசு'.

கல்லூரியில் படிக்கும் போது பத்திரிக்கைகளில் கதை, கவிதை என எழுதி வெளிவரும் போது கிடைத்த சந்தோஷத்தைவிட வலைப்பூவில் எழுதும் போது அதன் நிறைகுறைகளை அப்போதே நண்பர்கள் சுட்டிக் காட்டுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எழுதும் எழுதுக்கு உடனுக்குடன் நண்பர்களால் அங்கீகாரம் கிடைப்பது என்பது மிகப் பெரிய பாக்கியமே. அந்தப் பாக்கியத்தைக் கொடுத்தது இந்த வலைப்பூ உலகம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த உடன் கொஞ்ச நாட்களாக விட்டு விலகி இருந்த சிறுகதைகளை எழுத ஆரம்பித்தேன். வலையில் பதிந்து போக எழுதிய மொத்தக் கதைகள் 100க்கு மேல் போய்விட்டது. கவிதைகள், ஹைக்கூ என எழுத்து நீண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியே. ஆரம்பத்தில் சாதாரணமாக எழுத ஆரம்பித்து தற்போது எங்கள் பக்க பேச்சு வழக்கில் கதைகளை எழுதும் போது கிடைக்கும் பாராட்டுக்கள் அதிகமாகவே தெரிகிறது. எல்லாம் சாத்தியமானது வலை நட்புக்களால்தான்...

வலைப்பூவில் எழுத காரணமாய் இருந்த என் இனிய நண்பன் மோ.கணேசனுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இந்தக் காலகட்டத்தில் வலைச்சரத்தில் எனக்கு இரண்டு முறை ஆசிரியர் பொறுப்புக் கொட்டு என்னை பட்டை தீட்டிக்கொள்ள... வலையுலகுக்கு என்னை பிரகாசமாக தெரிய வைக்க உதவிய எங்கள் ஐயா திரு.சீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஐயா அவர்கள் எங்கள் குடும்ப நண்பராக குடும்ப விழாக்களில் கலந்து கொள்கிறார் என்றால் அது இந்த வலைப்பூ கொடுத்த மதிப்பான உறவு என்று நினைக்கும் போது மனம் சந்தோஷத்தில் குதிக்கிறது.

எனது எழுத்துக்களை வாசித்து நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டும் அம்மா, அக்கா, அப்பா, ஐயா, அண்ணன், தம்பி, தங்கை, சார், நண்பன், தோழன் என எத்தனையோ உறவுகளைக் கொடுத்தது இந்த வலைப்பூ. என்னில் இருந்து என்னை இயக்கும் எனது அன்பு நட்புக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து தங்களது மதிப்புமிக்க கருத்துக்களைச் சொல்லி எனது எழுத்துக்களை மேம்படுத்துங்கள் உறவுகளே... இந்த இனிய உறவு வாழ்நாளெல்லாம் அன்போடு தொடரட்டும்...

சில சமயங்களில் வலைப்பூவை விட்டு விலக நினைத்து ஒதுங்கினாலும் உங்கள் அன்பு மட்டுமே அதற்கு அணை போட்டு மீண்டும் எழுதத் தூண்டுகிறது. எழுத மட்டுமில்லாமல் எத்தனை விதமான எழுத்துக்களை (சு)வாசிக்கவும் கொடுத்து வைத்திருக்கிறது என்று நினைக்கும் போது உண்மையிலேயே அளப்பரிய சந்தோஷம் மடை திறந்த வெள்ளமென கரை புரண்டு ஓடுகிறது.

என்னைத் தொட்டுத் தொடரும் உரிமையான 280 நட்புக்களுக்கும், தொடராவிட்டாலும் வாசிக்கும் எண்ணற்றா நட்புக்களுக்கும் என் அன்பான வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.

ஆமாம்... எதற்காக இம்புட்டு பெரிய நன்றிப் பகிர்வுன்னு பார்க்கிறீங்களா? மனசு வலைப்பூவில் இது எனது 500வது பகிர்வு. மொத்தத்தில் இது நான்கு வலைப்பூவிலுமாகச் சேர்த்து 695வது பகிர்வு. இதெல்லாம் எனக்குள் சாத்தியப்பட காரணம் நீங்கள் மட்டுமே.



படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி.
என்றும் நன்றியுடன்....
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 2 டிசம்பர், 2013

சினிமா: கதையின் நாயகர்கள்


MGR-SIVAJI movies to be ditialize

ந்தியச் சினிமாவில் தமிழ் சினிமா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்தச் சினிமா எத்தனை ஜாம்பவான்களைக் கொடுத்திருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். குறிப்பாக தமிழகத்திற்கு முதல்வர்களைக் கொடுத்த சினிமா இதுவல்லவா. இன்னும் சிலருக்கு முதல்வர் ஆசையை... கனவை விதைத்து வைத்திருப்பதும் இந்தச் சினிமாதானே. 

இந்தியச் சினிமா நூற்றாண்டு விழா பல பிரச்சினைகளையும் குளறுபடிகளையும் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் அம்மாவின் புகழ்பாடும் விழாவாக அமைந்தது. செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமை மூதறிஞர் கலைஞர் ஐயா அழைக்காதது போல இந்த் சினிமா விழாவுக்கு தமிழ் சினிமாவின் முதுகெலும்புகள் சிலரை அழைக்க விடாமல் அம்மா நடத்திக் காட்டினார் என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு இமையங்கள் தமிழ் சினிமா ஆட்சிப் பீடத்தில் இருந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சிம்புவின் விரல்வித்தை போல் மூக்கில் ஸ்டைலாக விரலை ஆட்டிச் சமாளித்து ரசிகர்களைப் பெற்று வைத்திருந்தார். நடிகர் திலகமோ தனது நவரச நடிப்பால் சிங்க நடையால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். ஆனால் நம்பர் ஒன் என்ற இடத்தை மக்கள் திலகமே கையில் வைத்திருந்தார். இவர்களது காலத்தில்தான் ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், எஸ்.எஸ்.ஆர், நாகேஷ், என்.எஸ்.கே., சந்திரபாபு, நம்பியார், அசோகன் என பல ஜாம்பவான்கள் ஜொலித்தார்கள். எல்லோருமே அவரவரின் திறமையால் வெற்றிக் கொடி நாட்டியவர்கள்தான். இவர்கள் காலத்திலேயே சிவக்குமாரும் களத்தில் இறங்கிவிட்டார்.

இவர்களுக்கு அடுத்த தமிழ்ச் சினிமாத் தலைமுறை நடிகர்களாக இறங்கியவர்களில் பேர் சொல்லும் பிள்ளையாக இருவர் நின்று விட்டனர். ஒருவர் எம்.ஜி.ஆர். போல் என்றால் மற்றொருவர் சிவாஜியைப் போல்... ஆம் அந்த இரண்டு நட்சத்திரங்கள் ரஜினியும் கமலும்... ஆரம்பத்தில் இருவரும் இணைந்தே நடித்தார்கள். பின்னர் தனித்தனியாக நடிப்பதென முடிவு செய்து களம் இறங்க நல்ல பலன் கிடைத்தது. இங்கும் தனது ஸ்டைலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரஜினியாகவும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கமலாகவும் இருக்க , இங்கும் நடிப்பை விட ஸ்டைலே சிறந்ததாகி முதலிடத்தை ரஜினி தக்க வைத்துக் கொண்டார். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என பல படங்களில் ரஜினி என்ற அழகான நடிகனைப் பார்க்க முடிந்தது. இயக்குநர் எஸ்.பி,.முத்துராமன் ரஜினியின் மீது குண்டுகளைக் கட்டி நடிப்பை இறக்கி... ஒதுக்கி வைத்துவிட ரஜினி என்னும் மகா நடிகன் மறைந்து ஸ்டைலால் மட்டுமே கலக்கும் சூப்பர் ஸ்டார் நிலைத்துவிட்டார். கமலைப் பொறுத்தவரை நடிப்புக்காக எதை வேண்டுமானாலும் இழப்பார் என்ற பெயரைப் பெற்ற போதிலும் கஷ்டப்பட்டு நடித்தாலும் இரண்டாம் இடத்தில்தான் இருக்கிறார். ரஜினி தினத்தந்தி மாதிரி எல்லா இடத்திலும் வாசிக்கப்படுவார். கமலோ தினமணி மாதிரி குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாசிக்கப்படுவார். இருந்தும் தமிழ்ச் சினிமாவின் முக்கிய முதுகெலும்பாய் இருவரும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த இரு வெள்ளி நட்சத்திரங்களுக்கு இடையில்தான் விஜயகாந்த, சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், முரளி, இராமராஜன் என்ற நிறைய நட்சத்திரங்கள் ஜொலித்தன. குறிப்பாக மோகன், இரு துருவங்களுடனும் போட்டி போட்டு ஜெயித்தவர் என்றே சொல்லலாம். எத்தனை வெள்ளிவிழாப் படங்கள்... எத்தனை அழகான பாடல்கள். இதேமாதிரித்தான் மற்றவர்களும் தங்களது தனித்துவத்தால் ஜொலித்தார்கள். மோகன் விட்டுச் சென்ற இடத்தில் வெற்றி கொடி நாட்டியவர் இராமராஜன். ராஜாவின் தேனான இசை இவரின் படங்களுக்கு மிகப்பெரிய பலம். இவர் பட்டி தொட்டியெல்லாம் தன் கைக்குள் வைத்திருந்தார். இவரது படம் வெளியானால் மற்றவர்களின் படங்கள் தள்ளிப் போன காலமும் உண்டு. இந்தக் காலகட்டத்தில்தான் பாக்யராஜ், ராஜேந்தர் என்ற இரண்டு ஜாம்பவான்களும் வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள் என்பதை எல்லோரும் அறிவோம்.

அடுத்த தலைமுறையாக தல தளபதி ஆட்சிப் பீடத்தில் ஏற, சூர்யா, விக்ரம் என்ற இரண்டு மகா கலைஞர்களுக்கு இரண்டாம் இடத்தில்தான் ஆசனம் கிடைத்தது. விஜயைப் பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் அப்பாவின் படங்களாலும், சங்கவி, யுவராணி, சுவாதியின் கவர்ச்சியாலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டாலும் அதன் பின்னான காலங்களில் தன்னை ஒரு முழு நடிகனாக மாற்ற மிகவும் உழைத்தவர். இன்று சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போடுகிறார் என்றால் அந்த இடத்துக்கு வருவதற்காக தன்னைச் செதுக்கியவர், ஆனால் அஜீத்தின் நிலையோ வேறு... எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல்... ஏற்றிவிட ஏணி இன்றி... தானே ஏறியவர்... விபத்து... ஆபரேசன்... தோல்விப் படங்கள் என எத்தனை சறுக்கல்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல சமீபத்திய படங்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்துள்ளன. அடிபட்டுப் பட்டு வந்ததாலோ என்னவோ அவரது பேச்சில் அப்போது இருந்த வேகம் குறைந்து விவேகமாய் மனதில் பட்டதைப் பேசி எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கி வைத்துள்ளார். இன்று இருவரும் முதலிடத்துக்கான ரேஸில்தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் நடிக்கவே தெரியலையே என்ன கொடுமை சரவணா என்று நினைக்க வைத்த சூர்யா இப்போது பின்னிப் பெடலெடுக்கிறார். அடுத்த கமல் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பால் எல்லோரையும் கவர்கிறார் விக்ரம். இவர்களோடு வந்தவர்கள் வந்தார்கள் சென்றார்கள் என்ற நிலையில்தான்  தமிழ்ச் சினிமா இருந்தது.

அந்த நேரத்தில்தான் அடுத்த தலைமுறை நடிகர்களாக களம் இறங்கினார்கள் தனுசும் சிம்புவும் இருவருக்கும் சினிமாக் குடும்பப் பின்னணி இருந்தது கூடுதல் பலம். இதில் தனுஷ் வித்தியாசமான நடித்து ஒல்லிப்பிச்சானாக இருந்தாலும் பெயர் சொல்லும்படியான இடத்தைப் பிடித்துவிட்டார். சூப்பர்ஸ்டாரின் மாப்பிள்ளை என்ற போதும் அலட்டலில்லாமல் தன் பாதையில் பயணித்து இன்று அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். டான்ஸ் என்றாலே சிம்புதான் என்ற அளவுக்கு ஆட்டத்தில் பட்டையை கிளப்பும் சிம்பு, தனது மன்மத செய்கைகளால் நிறைய கெட்டபெயரைச் சம்பாரித்து வைத்துள்ளார். கொஞ்சம் விண்ணைத் தாண்டி வந்தால் தனுசுக்கு போட்டியான நடிகர் சிம்புதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவர்களுக்கு இடையே நிறைய... நிறைய... பேர் தெரியாத நடிகர்கள் வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். தங்கள் திறமையால் தனியிடம் பிடித்து அமர்ந்தவர்களில் விஷால், ஆர்யா, கார்த்திக், ஜீவா, அதர்வா முரளி இப்படி சிலரை முக்கியமாகச் சொல்லலாம். எத்தனை புதுமுகங்கள்... எத்தனை புது முக இயக்குநர்க்ள் வந்தாலும் தொடர்ந்து நிற்பவர்கள் ஒரு சிலரே.


அட இவங்களை விட்டுட்டு பதிவை முடிச்சா நல்லாயிருக்காதுல்ல.... அதாங்க இப்போ சத்தமேயில்லாமல் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி மற்றும் சிவ கார்த்திகேயன் இருவரையும்தான். விஜய் தனது முத்திரை நடிப்பால் நிலையான இடத்தில் அமர்ந்து விட்டார். அதேபோல் தனது டயமிங் நகைச்சுவையால் முன்னணி இடம் பெற்று கோடிகளை சம்பளமாக்கி ஆடிக்கார் வாங்கி அசத்தலாய் தன் இடத்தைப் பிடித்திருப்பவர் சிவா. இருந்தாலும் நகைச்சுவையை மட்டுமே வைத்துக் கொண்டு சிவாவால் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய சினிமா உலகம் போட்டி நிறைந்த உலகமாகிவிட்டது. மது, மாதுக்களை மையமாக வைத்து கதைகள் வருவது தமிழ்ச் சினிமாவின் கதை வறட்சியையே காட்டுகிறது. என் கதையைச் சுட்டு படம் எடுத்துட்டான்... என்னை ஏமாத்திட்டான்னு உதவி இயக்குநர்களின் அழுகுரல்கள் கோடம்பாக்க வீதிகளில் ஏராளமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு நடிகனுக்கு பிரச்சினை என்றால் ஒரு சாரார் ஒதுங்கி நின்று கைகொட்டி சிரிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. ஒரு இயக்குநரை மற்றொரு இயக்குநர் தாக்கிப் பேசுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படியே போனால் தமிழ்ச் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வை நோக்கிப் பயணிக்கும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.


கடைசியாக மலையாளம்: இப்போது எனக்குள் மலையாளச் சினிமா பார்க்கும் மோகம் அதிகரித்துள்ளது. அன்னாவும் ரசூலும் பார்த்த கையோடு ஆமென் பார்த்தேன். அன்னா அளவுக்கு ஆமென் என்னுள் பாதிக்கவில்லை. அன்னாவில் ஆண்ட்ரியாவை ஒரு தேவதையாக காட்டியிருப்பார்கள். அதிக வசனம் இல்லாமல் கண்களாலேயும், முகபாவனையாலும் கலக்கியிருப்பார். ஆமென்னில் சுப்ரமணியபுரம் சுவாதி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருப்பார். மலையாளச் சினிமாவுக்கு கவனிக்கப்பட வேண்டி நடிகர்கள் சிலர் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயம். அந்த வரிசையில் பகத் பாசில். ஆள் ஒண்ணும் அப்படி அழகும் இல்லை... உயரமும் இல்லை... ஆனால் நடிப்பில் சிகரம் தொடும் காலம் தூரமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. எதார்த்த நடிகன்... தமிழில் தனுஷ் போல... நேற்று 'தட்டாத்தின் மறையாத்து' பார்த்தேன். பார்க்கலாம்... இந்து முஸ்லீம் லவ் ஸ்டோரி... நல்லாத்தான் இருக்கு. எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் டாஸ்மாக்கையும் குத்துப்பாடலையும் நம்பும் தமிழ்ச் சினிமாவில் கதை பஞ்சம் இருக்கும் போது இந்த மலையாளிகளுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகான கதைகள் கிடைக்கின்றன என்பதுதான். அற்புதமான கதையை குத்துப்பாடல்கள் இல்லாத கவிதையாய் இயக்குகிறார்கள்.

-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மனசு பேசுகிறது: ரசனையான விருப்பம்.


மீரகத்தில் 42 தேசிய தின அனுசரிப்புக்கள் மிகவும் கோலாகலமாக இருக்கின்றன. சென்ற இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வீழ்ச்சியாலோ என்னவோ அவ்வளவாக ஆர்ப்பாட்டமில்லாத தேசிய தினம் இந்த வருடம் எக்ஸ்போ 2020 கிடைத்த மகிழ்ச்சியில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை பீச்சோர பூங்காவுக்கு நண்பர் குடும்பத்துடன் வந்திருப்பதாகச் சொன்னதும் அங்கு சென்றோம். அங்கு அரபிப்பாடல்கள், தப்பு அடித்துக் கொண்டு அரபிகள் ஆடும் ஆட்டம் என அமர்க்களமாய் இருந்தது. விடிந்தால் தேசிய தினம். இதோ வீதிகளில் கார்களின் ஆரன்களை அடித்துக் கொண்டு ஒரே ஆர்ப்பட்டமாக இளைஞர் கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. கார்னிச் ரோட்டில் கார்களில் அரபிகளும், வந்தேறிகளும் ஆட்டம் பாட்டத்துடன் செல்வதைக் காண எல்லாரும் போய்விட்டார்கள். இரவு முழுவதும் ஒரே ஆட்டம்தான்... தேசிய தினக் கொண்டாட்டத்தால் அழகிய விளக்கொளிகளில் ஜொலிக்கிறது அபுதாபி, நேற்று ஒரு நண்பரிடம் பேசிய போது ஊரில் 12 மணி நேரத்துக்கு மேல மின்சாரம் கிடையாது. இங்க பாருங்க ரோடெல்லாம் சீரியல் செட்டாப் போட்டு கலக்குறாங்கன்னு சொன்னார். உண்மைதான் எங்கு பார்த்தாலும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

ரசனை என்பது ஆளாளுக்கு மாறுபடும். கிரிக்கெட் பார்ப்பவனும் உண்டு, கிரிக்கெட் என்றாலே விலகி ஓடுபவனும் உண்டு. நீச்சல் அடிப்பவனும் உண்டு, அதை பார்த்து ரசிப்பவனும் உண்டு. மீன் பிடிப்பவனும் உண்டு. அதை ரசித்து உண்பவனும் உண்டு. ரசிக்க வைக்கும்படி எழுதுபவனும் உண்டு. ரசனையாய் வாசிப்பவனும் உண்டு. இப்படி எல்லாவற்றிலும் எல்லாருக்கும் ரசனை என்பது வேறுபட்டுத்தான் இருக்கும். இங்கு எங்கள் அறையில் எடுத்துக் கொண்டால் இருக்கும் ஆறு பேருக்குள்ளும் ரசனை என்பது எதிலும் ஒத்துப் போவதில்லை.

ஒருத்தருக்கு எப்பவும் பிடித்தது குத்துப் பாடல்கள்தான். மெலோடியாக எதாவது பாடலைப் போட்டால் என்ன பாட்டுப் போடுறீங்க... சாவுக்கு சங்கு வச்ச மாதிரின்னு சொல்லி குத்துப் பாட்டுப் போடச் சொல்லிடுவார். அவரோட மொபைல்ல மருந்துக்குக் கூட மெலோடி பாட்டு என்பது இல்லை. அவரது ரசனை எல்லாம் துள்ளல் இசைப் பாடல்களில் மட்டுமே.  இதேபோல் மற்றொருவருவர் ரசனையோ எப்பொழுதும் சினிமா... சினிமா... சினிமா மட்டுமே. படம் இல்லை என்றால் பார்த்த படத்தையே பல முறை பார்ப்பார். ஆனால் எல்லாருக்கும் பிடிக்கும் படம் இவருக்குப் பிடிக்காது... எது மொக்கைப்படம் என்று நாம் கருதுகிறோமே அதை சூப்பர் என்று நாலைந்து முறை பார்ப்பார். இன்னொருத்தர் ரசனையாய் தூங்கத் தெரிந்த மனிதர். வியாழன் இரவு படுத்தால் வெள்ளி மாலை 5 மணிக்கு மேல்தான் எழுவார். சாப்பாடு, தண்ணி, அட ஏன்... பாத்ரூம் கூட போக எந்திரிக்க மாட்டார். இப்படி ஆளாளுக்கு ரசனையாய் விரும்பும் விருப்பங்கள் மாறும்.

சமீபத்தில் நான் அன்னாவும் ரசூலும் பார்த்தேன். இது குறித்துக் கூட எழுதியிருந்தேன். இன்று நண்பருடன் அது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் அந்தப் படத்தைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆமென் பார்த்துட்டிங்களா... இல்லைன்னா பாருங்க அதுவும் நல்லாயிருக்குன்னு சொன்னார். இப்படியாக பேசிக் கொண்டிருக்கும் போது மேலே சொன்ன சினிமாவை விரும்பும் நண்பர் வந்தார். அவரிடம் அன்னாவும் ரசூலும் பாத்துட்டிங்களான்னு நண்பர் கேட்டார். அதற்கு அவரோ அது ஒரு குப்பை' என்றார். நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. ரசனையோட பார்த்தா அது குப்பையில்லைன்னு தெரியும் என்றார். ஆமா அன்னாவும் ரசூலும் என்று இழுத்தவர் படத்தைப் பாரு... இதெல்லாம் படமுன்னு எடுக்கிறானுங்க... எனக்கு சுத்தமாப் பிடிக்கலை என்றதும் உங்க ரசனையும் என்னோட ரசனையும் ஒத்துப் போகாது. இதுக்கு மேல உங்ககிட்ட பேச முடியாதுன்னு சொல்லி நண்பர் ஒதுங்கிட்டார். 

இப்படித்தான் என்னோட நெருக்கமான நண்பன் ஒருவன் கல்லூரியில் படிக்கும் போது எங்களுடன் பேசுவதைவிட பெண்களுடன் பேசுவதையே விரும்புவான். எப்பவும் அவனைச் சுற்றி நாலு பெண்கள் இருக்க வேண்டும். என்ன பேசுவார்கள் என்று தெரியாது. அவனது வாய் அரவை மில்லாக வார்த்தைகளை அரைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இருவரும் சைக்கிளில் வருவோம். சைக்கிளை நிறுத்தியதும் நோட் வாங்கனும் புத்தகம் கொடுக்கனுமின்னு லேடீஸ் அறைப்பக்கம் போயிடுவான். என்னடா... அவன் வந்துட்டானா... நேரே அங்கதானே போவான் என்பார்கள் நண்பர்கள். எத்தனை கேலி கிண்டல் பண்ணினாலும் நண்பன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டான். அவனுக்கு ரசனையான விருப்பம் பெண்களுடன் பேசுவது. சொல்லிச் சொல்லிப் பார்த்த நண்பர்கள் கடைசியில் பொம்பளப் புள்ளைங்களோட பேசாட்டி தலை வெடிச்சிரும்டா உனக்கு போ... போய் பேசு என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ரசனை என்பது அவரவர் சொந்த விஷயம்தான்... எந்த ஒரு தனிமனித விருப்பத்தையும் மற்றவர் மீது திணிக்கக் கூடாது. எனக்கு இது பிடிக்கும் உனக்கும் இது பிடிக்கனும் என சொல்வது அபத்தமானது. இப்படியும் சில பேர் இருக்கிறார்கள்... எனக்கு இதுதான் பிடிக்கும் நீயும் இதைத்தான் செய்யனும் என அதிகாரமாகச் சொல்வார்கள். நீயா நானாவில் ஒரு குழந்தையின் அம்மா 'எந்த டிரஸ்ஸைக் கொடுத்தாலும் வேண்டான்னு சொல்லிடுறா சார். இவளுக்குத்தானே எடுக்கிறோம் என்றார். அப்போ கோபிநாத், அந்தக் குழந்தையிடம் ஏம்மா அம்மா எவ்வளவு வருத்தப்படுறாங்க... அவங்க போடச் சொல்ற டிரஸ்ஸைப் போட்டா என்னம்மான்னு கேட்டார். அதுக்கு அந்தக் குழந்தை பிடிக்காத டிரஸ்ஸை போடச் சொன்னா எப்படிப் போடுறதாம் என்றது. அந்தக் குழந்தையின் பக்கம் இருந்து பார்த்தால் அது சொன்னது சரிதானே. பெரும்பாலான பெற்றோர் நமது விருப்பங்களை மட்டும்தானே குழந்தைகளிடம் புகட்டுகிறோம். படிக்கிறானோ இல்லையோ அவனது விருப்பங்களைக் கேட்பதில்லை. இஞ்சினியரிங்தான் படிக்கனும் என்று சொல்கிறோமா இல்லையா?. இப்படி நமது ரசனைகளை நாம் எல்லோரிடமும் திணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ரசனை என்பது தனி மனித விருப்பமே. அவரவர் ரசனையை அவரவர் ரசிப்போம். ஒருவர் ஒரு விஷயத்தை ரசிக்கிறார் என்றால் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அது குறித்து மோசமான கருத்தைச் சொல்லாமல் உங்கள் ரசனை நல்லாயிருக்கு என்று சொல்லப் பழகிக் கொண்டோமேயானால் வாழ்க்கை இனிமையாகும்.

மனசு பேசுகிறது தொடரும்...

-'பரிவை' சே.குமார்.