மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 4

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...

***

தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாரதி விழாவில் எப்போதும் மாலை நிகழ்வில் குன்றக்கடி அடிகளார் அவர்கள் பேசுவது வழக்கம். காலை நிகழ்வில் இலக்கியவாதிகள் பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து பேசுவதுண்டு. அப்படி ஒருமுறை பேசுவதற்காக திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது அவர் மதுரையில் வேலையில்லாத ஒரு துறையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் அரசுத் தேர்வு எழுதும் பள்ளிக் குழந்தைகளுக்கு 'நீங்களும் சாதிக்கலாம்' என எழுதி, மேடைகளில் பேசிக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

விழாவுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே நல்ல மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. இறையன்பு அவர்கள் மதுரையில் இருந்து தேவகோட்டை வந்து திரும்ப வேண்டும். அவரிடம் அங்கிருந்து வாடகைக் காரில் - அரசு கொடுத்த காரை சொந்தப் பயணங்களுக்கு அவர் பயன்படுத்துவதில்லை - வந்து விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். விழாவுக்கு இருநாள் முன்பு பேசியபோது 'நானெப்படித் தனியாளாய் இங்கிருந்து வந்து பின் திரும்பி வருவது..? யாராவது ஒருவரை வரச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட, அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், 'என்னால் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் வரமுடியாது என்று கறாராய் சொல்லிவிட்டார்.
எங்க சவரிமுத்து ஐயா அவர்கள் யாரை அனுப்புவது என யோசித்து, பழனி ஐயாவிடம் கேட்டு, இறுதியில் எங்களை - என்னையும் நண்பனையும் - அனுப்ப முடிவு செய்தார். அதன்படி நாங்கள் முதல்நாள் இரவே மதுரை போய், அவரைப் பார்த்துப் பேசி, அவர் எப்போதும் போகும் காருக்குச் சொல்லி வைத்திருந்ததால் சரியாக அதிகாலையில் வருகிறோம் எனச் சொல்லி தங்குமிடம் போய்விட்டோம். மறுநாள் காலை ஐந்து மணிக்கு அவர் இல்லம் போனபோது எங்களுக்காக வாசலில் காத்திருந்தார். அவர் அருகில் பிளாஸ்க்கில் எங்களுக்கு காபியும் இருந்தது.
கிளம்பும் போது லேசான தூறல். காரில் ஏறியது முதல் பேசிக் கொண்டே வந்தார். அதனால்தான் துணையாள் கேட்டிருப்பார் போல. மாட்டுத்தாவணி தாண்டி வந்தபோது மழையினால் மரங்கள் விழுந்து கிடப்பதால் மதுரை - மேலூர் ரோட்டில் பயணிக்கக் முடியாது என்று மாற்றுப் பாதையைக் காட்ட, ஊரெல்லாம் சுற்றி, அழகர் கோவில் - மேலூர் ரோட்டைப் பிடித்துப் பயணிக்க ஆரம்பித்தோம்.
எங்களைப் பற்றிய விபரமெல்லாம் கேட்டுக் கொண்டவர், எங்கள் பேரைச் சொல்லிப் பேசியபடி அரசியல், எழுத்து என எல்லாம் பேசி, குட்டிக் குட்டிக் கதைகளாய் சொல்லிக் கொண்டே வந்தார். அப்போதெல்லாம் இறையன்பு என்பவர் மிகப்பெரிய எழுத்தாளர் என்று தெரியாது என்றாலும் அவர் ஒரு நல்ல அரசு ஊழியர் என்பது தெரியும். அவர் சொன்ன கதைகள் எல்லாமே அத்தனை சிறப்பாய் இருந்தன. பேசிக் கொண்டே வந்தார்.
அரசு தன்னை ஏன் இப்படி ஒரு இடத்தில் கொண்டு வந்து போட்டு வைத்திருக்கிறது என்பதையும், ஒரு வேலையும் இல்லை என்றாலும் காலை பத்து மணி முதல் ஐந்து மணி வரை அலுவலகத்தில்தான் இருப்பேன் என்பதையும், இந்த மாதிரி பேசுவதற்கு அழைக்கும் போது மதுரைக்குள் என்றால் மாலை ஆறு மணிக்கு மேல், வெளி இடங்கள் என்றால் விடுமுறை தினங்களில் என முடிவு செய்து வைத்திருப்பதையும் சொன்ன போது அவர் தன் தொழில் மீது கொண்ட பக்தி தெரிந்தது. இதுவரை எத்தனையோ தலைப்புக்களில் பேசியிருக்கிறேன் ஆனால் பாரதி பற்றிப் பேசப்போவது இதுதான் முதல் முறை எப்படிப் பேசப்போறேன்னு தெரியலை, நிறையத் தயாராகியிருக்கிறேன் என்றார்.
தேவகோட்டை போய்ச் சேர்ந்து பாரதி பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார். எல்லாருக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. எல்லாருடனும் மிகவும் நெருக்கமாகப் பேசினார். கிளம்புகிறேன் என்று சொன்னவரை வழி அனுப்ப ஐயாக்கள் போய், காருக்கான வாடகையை டிரைவரிடம் கொடுத்து போய் விட்டு வாருங்கள் என்று சொன்னதும் 'எங்கே அவனுங்க ரெண்டு பேரும்..?' என்று கேட்டார். 'யாரு..?' என ஐயா கேட்க, 'என்னைக் கூட்டியாந்தவனுங்க' என்று சொன்னதும் 'தம்பிக உள்ள இருக்காங்க...' என்று ஐயா சொல்ல, 'வரும்போது கூட்டிக்கிட்டு வந்துட்டு போகும்போது தனியாப் போன்னு சொல்றதுதான் செட்டிநாட்டு வழக்கமா..?' என்றதும் 'இல்ல ஒரு வாரமாவே தம்பிகளுக்கு நல்ல வேலை, ஓய்வே இல்லை. நீங்க ஆள் வந்தே ஆகணுங்கிறதால அவங்களை அனுப்புனோம்... இன்னைக்கு அவங்க ஓய்வெடுக்கட்டும். வேணும்ன்னா வேற ஆளனுப்புறோம்' என்றதும் 'எனக்கு அவங்க ரெண்டு பேரும்தான் வேணும்' என்று சொல்லி, எங்களை மீண்டும் மதுரைக்கு அழைத்துப் போனார்.
தேவகோட்டை தாண்டும் போதே மழை ஆரம்பித்தது... சரியான மழை, அடித்துப் பெய்யும் மழையில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான 'நீங்களும் சாதிக்கலாம்' நிகழ்வில் அவர் பேசுவதற்காக அங்கு போய் நிகழ்வு முடிந்ததும் மழை விடாததால் காத்திருந்து, கொஞ்சம் விட்டபோது மீண்டும் மதுரை நோக்கிப் பயணித்தோம். போகும் போது அப்படியே குன்றக்குடியில் அடிகளாரைப் பார்த்துட்டுப் போகலாம் என்று சொன்னார், நாங்கள் காரைக்குடியில் இருந்து கிளம்ப் நேரமானதால் அது முடியாமல் போய்விட்டது.
மீண்டும் கதைகளுடன் மதுரைக்குப் பயணித்து அவரை விட்டு விட்டு, பஸ்ஸில் திரும்பி வந்தோம். நாங்கள் இருவரும் எழுதுவோம் என்பதைக் கேட்டதும் தொடர்ந்து எழுதுங்க என்று சொன்னதுடன் எழுதியதை எனக்கு அனுப்புங்க நானும் வாசிக்கிறேன் என்று சொல்லி எங்களுக்கு அவரின் முகவரியை எழுதிக் கொடுத்து என்னுடன் அடிக்கடி பேசுங்கள் என்றும் சொன்னார்.
அந்த ஒருநாள் அவருடனான பயணம் என்றுமே மறக்க முடியாதொரு பயணமாய் அமைந்தது.
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான நினைவுகள்...