மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 16 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 3

சங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...

னிரெண்டாவது முடிக்கும் வரை எழுத்துப் பக்கம் போனதில்லை என்றாலும் நிறைய வாசிப்பதுண்டு. வாசிப்பு ஒரு போதையாய் இருந்த காலம் அது. நல்ல நாவல்கள் என்றால் விடுமுறை தினத்தில் மாடு மேய்க்கப் போகும் போது புத்தகத்தைக் கையில் கொண்டு போய் வாசிப்பதுண்டு.

கல்லூரி முதலாமாண்டின் இறுதியில்தான் எங்கள் ஐயா பழனி இராகுலதாசன் அவர்களுடன் நெருக்கமாகும் வாய்ப்பு நண்பன் மூலமாய் கிடைத்தது. ஐயா வீட்டுக்குப் போனபோது வீடெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களில் மகிழ்ந்து அங்கு அமர்ந்து வாசிப்பது, வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிப்பதென அப்போதும் வாசிப்பில் மட்டுமே லயித்திருந்தேன். வாசிப்பதும் அது குறித்துப் பேசுவதுமென ஒரு கூட்டமாய் நாங்கள் ஐயா வீட்டில் தினமும் டேரா போட்ட காலம் அது.
ஒரு மாலை சைக்கிளை உருட்டிக் கொண்டே ஐயாவுடன் பேசியபடி நாங்கள் - நானும் நண்பனும் - சென்றபோதுதான்அவன் எழுதிய சிறுகதை குறித்த பேச்சு வந்தபோது 'நீங்களும் எழுதுங்கய்யா' என எங்க ஐயா முதல் விதையைப் போட்டார். அப்படித்தான் இந்த எழுத்து எனக்குள் முளை விட்டு வளர ஆரம்பித்தது.
அதன்பின் தொடர்ச்சியாய் எழுத ஆரம்பித்து கதைகள், கவிதைகள் அவ்வப்போது பத்திரிக்கையில் வர ஆரம்பித்த சமயம், அப்போது பரவியிருந்த கட்அவுட் கலாச்சாரத்தை வைத்து நெடுங்கவிதை ஒன்றை எழுதி வைத்திருந்தேன். ஐயா வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அந்தக் கவிதையை அவரிடம் கொடுத்து 'இது நல்லாயிருக்கான்னு பாருங்கய்யா' என்று சொன்னேன். வாங்கி வாசித்தவர் ஒரு சிறு புன்னகையுடன் இது இருக்கட்டும் திருத்தம் செய்யலாம் என்று சொல்லி அந்தப் பேப்பரில் 'எஸ்.குமார் கவிதை' என எழுதி, தனது மேசையில் வைத்துக் கொண்டார்.
அதன்பின் சில நாட்கள் கழித்து அதை ஒரு வெள்ளைப் பேப்பரில் எழுதி, கவரில் இட்டு அதில் அனுப்புநராய் என் பெயரை எழுதி, C/o - வில் தன் பெயரை இட்டு, முகவரி எழுதி, பெறுநராய் 'தாமரை இதழ்' முகவரியை - அப்போது கரிசல்காட்டு எழுத்தாளர் திரு. பொன்னீலன் ஐயா அவர்கள் ஆசிரியராய் இருந்தார் - எழுதி வைத்திருந்தார்.
அந்தக் கவரை என்னிடம் கொடுத்துக் கவிதையில் திருத்தம் எதுவுமில்லை, அதைத் திருத்தமாய் எழுதி, தாமரைக்கு அனுப்பலாம் என வைத்திருக்கிறேன். போகும் போது போஸ்ட் பண்ணுவோம் எனச் சொல்லி, நாங்கள் போஸ்ட் ஆபீஸ் போனபோது அதை அனுப்பி விட்டு வந்தோம். அதற்குள் என்னைப் பற்றி சிறிய குறிப்பாய் விபரம் எழுதி வைத்திருந்திருக்கிறார். அதை அவர் சொல்லவேயில்லை.
கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது, சைக்கிளில் தேவகோட்டையில் இருந்து குன்றக்குடி, பிள்ளையார்பட்டி எனப் பயணிப்பது, திருவாடானை, காளையார்கோவில், கல்லல் என நண்பர்களின் ஊருக்குப் போய் இரண்டொருநாள் தங்கி ஆட்டம் போடுவது எனத்தான் பெரும்பாலான பொழுதுகள் கழியும்.
அதேபோல் விடுமுறை என்றால் அது எப்படிப் படமாக இருந்தாலும் தியேட்டருக்குப் போவதென நாட்கள் கழியும் அல்லவா...? அப்படித்தான் எங்களுக்கும் நாட்கள் ஓடின.
கல்லூரி விடுமுறை சமயத்தில் சரஸ்வதி தியேட்டரில் 'ரத்தக் கண்ணீர்' - அவ்வப்போது பழைய படங்களைப் போடுவார்கள் - படத்தைப் போட்டிருந்தார்கள். காலைக் காட்சிக்குப் போய்விட்டு வெளியே வந்தபோது ஐந்தாவது செமஸ்டர் முடிவுகள் வந்திருப்பதாகச் சொல்ல, கல்லூரி நோக்கிச் சைக்கிளை அழுத்தினோம்.
அங்க போனதும் எங்க கே.வி.எஸ். சார் 'வாங்க...' என அன்பாய் வரவேற்று மதிப்பெண்களைப் பார்த்துச் சொன்னார். மற்றவற்றில் எல்லாம் நல்ல மதிப்பெண் வந்திருக்க, முதன்மை பாடத்தில் இரண்டு மார்க்கில் பெயிலாகி இருந்தேன். ஆங்கிலத்தில் கூட அரியர் இல்லாமல், முதன்மைப் பாடங்களில் அதுவரை வகுப்பில் முதல் மாணவனாய் இருந்ததால் அது எப்படி நிகழ்ந்தது எனத் தெரியாமல் வருத்தமாய் நிற்க, கே.வி.எஸ். சாரே 'ஏன் என்னாச்சு... சரியா எழுதலையா..?' எனக் கேட்டு, 'நல்லாத்தான் எழுதுனேன் சார்' என்றதும் 'சரி விடுங்க... மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போம்' என்றார்.
மறுநாளே அதற்கு அவரே பணம் கட்டி விண்ணப்பித்ததும், அதற்கான முடிவு வரக் காலதாமதம் ஆனதால் அவரே என்னுடன் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம் வரை வந்து விசாரித்து விரைவில் அனுப்புவோம் என்று சொல்லியும் வராததால் ஆறாவது செமஸ்டருக்குப் பணம் கட்டும்போது 'அரியருக்கும் சேர்த்துக் கட்டிருங்க' எனச் சொன்னதும், அரியர் எழுதி ரிசல்ட் வரும்போது மறு கூட்டல் முடிவு வந்ததும், மறு கூட்டலில் 55 போட்டிருக்க, அரியர் எழுதியதில் 79 வந்திருக்க, அதான் கூடுதலா எடுத்தாச்சுல்ல மறுகூட்டலை தூக்கிக் குப்பையில போடுங்க எனச் சொன்னதும் மேற்படிப்புக்கான தேர்வுக்காக என்னை வீட்டிற்கு வரச்சொல்லி சொல்லிக் கொடுத்ததும் வேறு கதை.
நாம ஐயா அனுப்பிய கவிதைக்கு வருவோம்.
கே.வி.எஸ். சாரிடம் ரிசல்ட் பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஐயா வந்தாங்க, கையில் தாமரை வைத்திருந்தார். 'தம்பி வாங்க' என உள்ளே கூட்டிப் போனார். எங்க சாரிடம் 'தம்பி எழுதுன கவிதை வந்திருக்கு' என்று சொன்னதும், அவரிடம் என் தேர்ச்சி விபரத்தைச் சொல்லி, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றபடி புத்தகத்தை வாங்கி கவிதையை வாசித்து ஒரு புன்சிரிப்போடு ரொம்ப நல்லாயிருக்கு என்றார்.
அதன் பின்தான் ஐயா என்னிடம் புத்தகத்தை நீட்டினார். வாங்கி பார்த்தால் ஒன்றரைப் பக்கத்தில் கட்அவுட்டுக்குக் கீழே ஒரு போலீஸ்காரர் படுத்திருப்பது போன்ற படத்துடன் 'ஒரு கட்அவுட் நிழலுக்குக் கீழே' என்ற தலைப்பில் - ஐயா வைத்த தலைப்புத்தான் - கவிதை வெளியாகியிருந்தது. கவிதையில் இறுதியில் என் பெயருக்கு அடியில் 'ஒரு கல்லூரி மாணவனின் கவிதை' என்று எழுதியிருந்தது. பார்த்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுவும் சும்மா கிறுக்கிக் கொண்டிருந்தவனின் கவிதை ஒன்று தாமரை போன்ற இதழ்களில் வருவதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.
புத்தகத்தைக் கையில் கொடுத்த ஐயா, ஒரு கடித்தத்தையும் கொடுத்தார். அதில் பொன்னீலன் ஐயா கவிதை குறித்து எழுதி, தொடர்ந்து எழுதுங்கள் என வாழ்த்தியிருந்தார். மறக்க முடியாத கடிதம்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தேவகோட்டைக் கிளையில் நாங்கள் உறுப்பினராய் இருந்ததால் வருடாவருடம் பாரதி விழாவுக்கு வரும் பொன்னீலன் ஐயாவுடன் பழகும் வாய்ப்பிருந்தாலும் கவிதை வந்தபின், அவர் தங்கியிருந்த 'நிவாஸ் லாட்ஜ்'க்கு வரச்சொல்லி, நிறைய எழுதுங்க என்றார். இரண்டு ஐயாக்களின் வாழ்த்துத்தான் என்னை இன்னும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது கவிதை எழுதுவதில்லை என்றாலும் எப்போதாவது எழுதிப் பார்ப்பதுண்டு.
இன்னும் தொடரும்.
-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கடந்து வந்த பாதை அருமை குமார்...

ஸ்ரீராம். சொன்னது…

இனிய நினைவுகள்.  கொஞ்சம் ஏற்கெனவே தெரிந்து கொண்ட விவரங்கள் போல இருக்கிறது!