மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 2

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மயக்க இயலாத நினைவுகள்-2, எத்தனையோ நினைவுகளில் சிலவற்றை மட்டும் அங்கு பகிர்ந்திருக்கிறேன். அதையே இங்கும் பகிர்ந்து வைப்பதால் எப்போது வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும்தானே.

ள்ளிக்கால நினைவுகள் நிறைய இருக்கும் இல்லையா..?, அதில் இருந்து ஒன்றுதான் இதுவும்.

எங்கள் ஊரில் பெரும்பாலானோர் படித்த பள்ளி என்பதால் அதில்தான் நாங்களும் படித்தோம். மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைகள் எல்லாம் போங்க எனப் போகச் சொல்லி விடுவார்கள். மேகம் இருட்டி, லேசாக மின்னல் வெட்ட ஆரம்பித்தால் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து யார் எப்போது வருவார்கள் என்ற எண்ணமே ஓடும். அவர் வந்ததும் வகுப்பு ஆசிரியர் 'கிராமத்துப்...' என ஆரம்பித்ததும் தயாராய் வைத்திருக்கும் புத்தகப் மூட்டையை - ஆமாங்க அப்பல்லாம் அது மூட்டைதான் பை இல்லை - தூக்கிக்கிட்டுத் தயாராய் நிற்போம்.
நாங்கள் கிளம்பிப் போனதும் வானம் வெட்டரிக்கவும் செய்யும், பொத்துக் கொண்டு ஊத்தவும் செய்யும். எதுவும் நடக்கலாம் என்றாலும் புத்தகப் பை நனையக் கூடாது என்பதில் எங்கள் தலைமையாசிரியர் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்வார் என்பதால் பையை எல்லாம் அவர் அறையில் வைத்து விட்டுப் போக வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டு வைத்திருப்பதால் அங்கே வைத்து விட்டு, மதியம் சத்துணவுக்குக் கொண்டு செல்லும் தட்டை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு - அது சில நேரங்களில் தலை நனையாமல் காக்கும் குடையாகவும் இருக்கும் - ஆட்டம் போட்டுக் கொண்டு செல்வதுண்டு.
ஆரம்பத்தில் எதுவும் சொல்லாத எங்கள் எட்டாப்பு சார் - சுந்தரமூர்த்தி என்று சொல்வதை விட எட்டாப்பு சார் என்ற பெயரே எல்லாருக்கும் ஒருவித பயத்தை உருவாக்கி வைத்திருந்தது - அடேய் ஒரு எட்டு வச்சா உங்க ஊரு, கிராமத்துப் பிள்ளைங்கன்னதும் நீங்களும் கிளம்பிப் போறீங்களே ரொம்ப ஓவர்டா என்று சொல்ல ஆரம்பித்தாலும் மழை வந்துட்டா போக முடியாது சார் என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவோம்.
பள்ளியை விட்டு வெளியில் வந்ததும் மழை என்றால் பக்கத்தில் இருக்கும் செட்டிய வீட்டு வாயிற்படிகளில் ஒதுங்கி நின்று விட்டுச் செல்வோம். தேவகோட்டை சத்திரத்தார் ஊரணியைத் தாண்டிவிட்டால் எங்க ஊர் வரை ஒதுங்குவதுற்கு ஊரணி அருகில் இருக்கும் பிள்ளையார் கோவில், எங்கள் ஊரை ஒட்டியிருக்கும் கோவிந்தய்யாவோட ஆட்டுக் கசாலை தவிர வேறு இடமிருக்காது. ஒன்பதாவதுக்கு தே பிரித்தோவுக்குப் போன போது பொட்டல்வெளியாக இருந்த இடத்தில் நரிக்குறவர் காலணி வந்தது, அதன் பின் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் குடியானவர்கள் வீடுகளைக் கட்டிக் கொண்டு எங்க ஊருக்குப் போகும் பாதையில் பாதி தூரம் வரை வீடுகள் வந்து விட்டது.
சரி கதைக்கு வருவோம், சில சமயங்களில் பிள்ளையார் கோவிலைத் தாண்டியதும் மழை பிடித்துக் கொள்ளும். சாதாரண மழையாகவோ பேய் மழையாகவோ பெய்யும். மழை அடித்துப் பெய்யும் போது நனைவது ஒரு சுகம், நனைவது என்றால் மொத்தமாய் நனைத்து, மழை நீரைப் பருகி ஆஹா... அதெல்லாம் அனுபவித்தால்தான் ஆனந்தம்.
எங்கள் ஊர் ரோடு என்பது அப்போது பாதிவரை ஆவாரம் செடிகளுக்கு இடையே போகும் வண்டிப்பாதை (நகராட்சிக்கு உட்பட்ட பகுதி), அதன் பின் சரளை ரோடு (பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி) அதுவும் எங்க பகுதி செம்மண் பூமி என்பதால் மழைத் தண்ணீர் 'செம்புலப் பெயல் நீர் போல'ன்னு சொல்ற மாதிரி காவிக்கலர்ல ஓடும்.
மழையில் நனைந்தபடி சென்று மழை விட்டபின் ரோட்டின் ஒரு மருங்கிலும் கிடக்கும் தண்ணீரில் - ரோட்டுக்கு வெட்டுன சின்னச் சின்னக் கட்டங்களான சிறுதாவு - விளையாடுவோம். ஒரு தாவுக்கும் இன்னொரு தாவுக்கும் இடையில் சிறு வரப்பு போல் இருக்கும் அதை உடைத்து விட்டால் தெற்கு வடக்காகத் தண்ணீர் ஓடும். அதில் கற்களை வைத்துப் பாலம் கட்டி விளையாடுவிட்டு வீடு போய்ச் சேரும் போது சுத்தமாக நனைந்து, உடம்பெல்லாம் செம்மண் ஒட்டிப் போய்ச் சேர்வோம்.
வீட்டில் திட்டுக் கிடைக்கும் என்றாலும் மழையில் நனைந்து ரசித்ததும், அடுத்த நாள் வீட்டுப் பாடம் எழுத வேண்டாமே என்ற எண்ணமும் பெரும் மகிழ்வைக் கொடுக்கும்.
அதன் பின் சைக்கிளில் பள்ளி, கல்லூரிக்குச் சென்ற பின்னும் மழையில் நனைந்தபடி சைக்கிள் ஓட்டுவது அலுப்பதேயில்லை. இப்போதும் வண்டியில் போகும் போது மழை என்றால் நனைந்து கொண்டே பயணிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்த முறை ஊருக்குப் போனபோது டிரைவிங் லைசென்ஸ் எடுக்க காரைக்குடி போய்விட்டுத் திரும்பும் போது ரயில்வே கேட்டைத் தாண்டியதும் மழை பிடிக்க, அங்கிருந்து தேவகோட்டை வீடுவரை கிட்டத்த பதினாலு கிலோ மீட்டருக்கு மேல் அடித்துப் பெய்த பேய்மழையில் - ரெயின்கோட்டெல்லாம் எப்போதும் போடுவதில்லை - வண்டியில் வந்தது மறக்க முடியாத அனுபவம்.
மழையும் 'கிராமத்துப் பிள்ளைங்க...' என்ற வாசகமும் எப்போதும் மறக்காமல் மழைக்கால காளானாய் மனசுக்குள் பூத்து நிற்கும்.
முடிந்தால் இன்னும் தொடர்வோம்.
நன்றி.
-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மறக்க முடியாத நினைவுகள்...... இங்கே பதிவாக படிக்கத் தந்தமைக்கு நன்றி குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

மழையில் நனையும் ஆவல் இருந்தாலும், 'ஜுரம் வரும், சளி பிடிக்கும்' பயமுறுத்தல்களுக்கு பணிந்து, பயந்து நனையாமல் இருந்த காலங்களே அதிகம்.  முழுக்க நனைந்து ஆட்டம் போட்டதில்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மகிழ்ச்சியான நினைவுகள் அருமை...