மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் -1

ங்கப்பலகைகள் முகநூல் குழுமத்தில் மறக்க இயலாத நினைவுகளைப் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அங்கு எழுதியது இங்கும்.

நினைவுகள்ன்னு எழுதுனா சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் மறக்க முடியாதவைகள் நிறைய இருக்கு. அப்ப சின்ன வயசு நினைவோட ஆரம்பிப்போம். ஆரம்பிக்கலாங்களா..?

நடுநிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த நிறையச் சம்பவங்களில் என்னை வச்சிச் செய்த சம்பவம் இது.
எங்க ஊர் தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். எங்க அம்மாவும் இன்னும் சில அம்மாக்களும் அடிக்கடி படத்துக்குப் போவார்கள். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை சந்தைக்குப் போகும் போது சத்தமில்லாமல் அம்மாவும் பஞ்சம்மாவும் - இருவரும் ஒரே ஊர், எதிர் எதிர் வீடு, சிறு வயது முதல் இன்று வரை தோழிகள் - படம் பார்த்து விட்டு வருவார்கள்.
பள்ளியில் படிக்கும் போது மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ எங்களையும் படத்துக்கு அழைத்துப் போவார்கள். அப்போதெல்லாம் ரெண்டு மூணு குடும்பமாய் சேர்ந்துதான் போவோம். மாலை ஆறு மணிக்காட்சிக்குச் சென்றால் இரவில் நடந்து ஊர் வந்து சேர்வதற்குப் பேச்சுத் துணையும் ஆட்கள் அதிகமாக இருந்தால் பயமில்லாமல் வரலாம் என்ற எண்ணமுமாய் கூட்டணி அமைக்கச் சொல்லும்.
தேவகோட்டையில் மொத்தம் மூன்று தியேட்டர்கள் - இப்போது இரண்டுதான், சரஸ்வதியை மூடி பலகாலம் ஆச்சு - இருந்தாலும் புதிய படங்கள் காரைக்குடியில்தான் போடப்படும். படம் எங்கள் ஊர் வரும் முன்னரே பாடல்களை விவிதபாரதி, திருச்சி, சென்னை மற்றும் இலங்கை வானொலிகளில் கேட்டு ஓரளவு பிடித்த பாடல்களாய் மாறும். ரெண்டாவது படிக்கும் போதே ரேடியோவில் பாட்டுக் கேட்க ஆரம்பித்து பாட்டு கேட்டால் எந்த வேலையையும் பார்க்கலாம் என்ற மாதிரி ஆகிப் போய்விட்டது. இப்போதும் எழுத்து, படிப்பு, அலுவலக வேலை, தூரத்துப் பயணம் என எல்லாவற்றையும் பாட்டைக் கேட்டுக் கொண்டுதான் செய்வேன்.
சரி நினைவுக்குள்ளே போவோம்.
'தூறல் நின்னு போச்சு' படம் பார்க்க பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் நேரமாச்சு என வேகமாய் விரட்டிக் கூட்டிப் போனார்கள். படத்தின் பாடல்கள் எல்லாமே கேட்டுப் பிடித்துப் போன பாடல்கள் வேறு, பாக்யராஜ் படம் வேறு ரொம்ப ஆவலாய் கிளம்பிப் போனேன். அப்பல்லாம் தீவிரக் கமல் ரசிகனாய் இருந்தாலும் சிலரின் படங்களுக்கு மட்டும் போக அடம்பிடிப்பதுண்டு, பாக்யராஜ் அந்த வகை. படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றிப் பேசிக் கொண்டே - பாக்யராஜ எப்படிச் சண்டை போட்டார், டான்ஸ் ஆடினார்ன்னு (அறியாத வயசுல அப்படித்தான்) - வீடு வந்து சேர்ந்தோம்.
ஏழரை மறுநாள்தான் தொடங்கியது.
பள்ளிக்கூடத்தில் மதியச் சாப்பாட்டை முடித்து விட்டு 'தவட்டாங்கம்பு' விளையாடிக் கொண்டிருந்த பெரிய பசங்களை நாங்க நாலஞ்சி பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருந்தோம். மரத்தில் இருந்து குதிச்சுப் பிடிப்பவன் கையில் படாமல் வட்டத்துக்குள் இருக்கும் கம்பை எடுக்க ஓடுவார்கள். அப்படித்தான் சூசை அண்ணன் - பள்ளியில் படிக்கும் போதே கல்லூரியில் படிப்பவர் போல் இருப்பார் - மரத்தில் இருந்து வேகமாகக் குதித்தார். குதித்த வேகத்தில் நிலை தடுமாறி மனுசன் நேரா என் மேல் வந்து விழுந்து என்னை அருகில் இருந்த சுவற்றில் தள்ளினார். போய் விழுந்தவனின் இடது கையில் ஏதோ நிகழ்ந்தது.
அந்த நேரத்துல ஆபீஸ் ரூம்ல இருந்து அந்தப் பக்கம் வந்த எங்க பாப்பாத்தி டீச்சர் - மதியம் முதல் பிரிவேளை அவங்கதான் - அவரை திட்டிவிட்டு என்னைத் தூக்கி கையைத் தடவி விட்டு, வகுப்பில் உட்காரச் சொன்னார். அடிபட்ட கை கொஞ்ச நேரத்துல வேலையைக் காட்ட ஆரம்பிச்சிருச்சு. வலி உயிர் போக, மெல்ல வீங்கவும் ஆரம்பிச்சிருச்சு. வலியால் அழுகை வந்துவிட்டது. டீச்சர் வகுப்புக்கு வந்ததும் என்னைக் கூப்பிட்டு கையைப் பார்த்தவர் வீக்கத்தைப் பார்த்து சட்டையைக் கழட்டச் சொல்லி அதைத் தண்ணியில் நனைத்துப் பிழிந்து கையில் சுற்றி விட்டு, எங்க ஊர் பையன் ஒருவனை அழைத்து வீட்டுக்குக் கூட்டிப் போகச் சொல்லிவிட்டார்.
வீட்டுக்கு வந்து வலியோட படுத்திருந்தேன். மாடு மேய்ச்சிட்டு இருட்டோட திரும்பிய அம்மா அர்ச்சனையை ஆரம்பித்தார். 'பாக்யராஜ் குதிச்ச மாதிரி குதிச்சிருப்பாக - பாக்யராஜ் குதிச்சிருந்தாலும், அதுவும் நானு மரத்துல இருந்து குதிச்சி - சும்மா நின்னாகளாம் அவனா வந்து விழுந்தானாம். வலிச்சாக் கெட, நானெல்லாம் பாக்க முடியாது'ன்னு ஒரே திட்டு. எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருந்த குப்பம்மா - பெரியம்மா முறை - வந்து என்னன்னு கேட்டு 'நல்லாத்தேன், புள்ள வலியில துடிக்கிறான் நீ என்னடான்னா திட்டிக்கிட்டு இருக்கே'ன்னு எங்கம்மாவுக்கு நாலு திட்டு விட, 'இந்த நேரத்துல நா எங்கே போவேன். உடச்சிக்கிட்டு வந்தானுல்ல வலியோட கெடக்கட்டும் நாளக்கிப் போவோம்' என்று சொல்ல, குப்பம்மா போய் ஆவரங்கொலை பறித்துக் கொண்டு வந்து ஒத்தடம் கொடுத்து, அதையே அரைத்து கையில் தடவியும் விட்டார். வலி சற்று இறங்கியது போலிருந்தது என்றாலும் இரவெல்லாம் தூக்கமில்லை.
அப்போதெல்லாம் தேவகோட்டை, காரைக்குடியில் நுட வைத்தியசாலை இல்லை, குன்றக்குடிதான் போகணும். காலையில 8.30 மணிக்கு கே.எஸ்.எஸ். கண்டதேவி - எங்க ஊரில் இருந்து பத்து நிமிட நடை - வழியாக காரைக்குடிக்குப் போகும். அதில் போய் அங்கு இறங்கி, அங்கிருந்து குன்றக்குடிக்குப் போகணும். அப்படிப் போய்விட்டு வர ஒருநாள் ஆயிரும். என்னை அம்மா கூட்டிப் போகும் அன்று எங்க அக்கா பள்ளிக்கூடம் போகாமல் மாடு மேய்க்க வேண்டும்.
மறுநாள் காலையில் வேகவேகமாகக் கிளம்பி, சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் வாசலில் நின்று பஸ்ஸைப் பிடித்துக் காரைக்குடி போய், அங்கிருந்து குன்றக்குடி போய்ச் சேர்ந்தோம். கையைப் பிடித்துப் பார்த்தவர் மெல்ல ஆட்டிப் பார்த்து பிசகித்தான் இருக்கு சரி பண்ணிடலாம் என்றபடி என்ன படிக்கிறே எனக் கேட்க ஆரம்பித்து பேசியபடி மெல்ல கையை அப்படி இப்படின்னு சில திருகுகள் நடத்தி படக்கென இழுத்து ஒடிப்பது போல் செய்ய, முட்டிக் கை எலும்பில் ஒரு சத்தம். அம்புட்டுத்தான் என்றபடி கட்டுப் போட்டு, தைலத்தை அதில் ஊற்றி, கழுத்தில் தொட்டி கட்டி அதில் தொங்கவிட்டு விட்டு அடுத்து எப்போ வரணும், அதுவரை எப்படி இந்த மருந்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். அந்தத் தைலத்தோட வாசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... )
அப்படிக் கட்டுப் போடப் போகும் போதுதான் ரேடியோவுல 'ஏரியக்கரை பூங்காற்றே' , 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி' இல்லேன்னா 'ஏன் சோகக் கதையைக் கேளு'ன்னு ஏதாவதொரு பாட்டைப் போடுவானுங்க. ஒரு கைப் பக்கம்தான் சட்டை போட முடியும். அந்தச் சட்டையை மெதுவாக மாட்டுறது இல்லாட்டி டவுசரைத் தேடுறதுமா பாட்டை முழுசாக் கேக்கணுமின்னு நின்னா, 'தம்பி பாட்டுக் கேட்டு வர்ற வரைக்கும் பஸ்சுக்காரன் நிக்கமாட்டான். அதை விட்டுட்டா வேற பஸ் வர மணிக்கணக்காகும்'ன்னு அம்மா கத்திக்கிட்டே நின்னாலும் பாட்டைக் கேட்டுட்டுத்தான் போவேன். கத்திப் பாத்துட்டு 'இந்தப் படம்தான் கையை உடைச்சிச்சு... அந்தப் பாட்டுல அப்புடி என்னதான் இருக்கோ'ன்னு சற்று வேகமாகத் திட்டு ஆரம்பிச்சதும் பாதிப் பாட்டுல ஓடிருவேன்.
முட்டைப் பத்துப் போட்டு விட்டதுக்கு அப்புறம் ரெண்டு மூணு தடவை போனோம்ன்னு நினைக்கிறேன். அப்பல்லாம் 'அம்மா நீ போம்மா... இந்தா வைக்கப் படப்புக்கிட்டப் போறதுக்குள்ள ஓடியாந்திருவேன்'னு சொல்லித் திட்டைக் காதில் வாங்காமல் பாட்டின் சப்தத்தைக் கூட்டி வைத்து விட்டு நிற்பேன். 'உனக்கு ரொம்பக் கொழுப்புடா' என அக்கா சொல்வதைக் காதில் வாங்காமல் ஏன் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமேன்னு பாட்டைக் கேட்டுட்டு வேகவேகமா ஓடி எங்கம்மா கம்மாய்கரையைத் தாண்டும் முன் பிடிச்சிருவேன். 'அப்புடிப் பாட்டுக் கேக்கச் சொல்லுது' எனச் சொல்லிவிட்டு 'வேகமா நட' எனக் குளக்கால் வழியாக நடையின் வேகத்தைக் கூட்டுவார். இப்ப இரண்டு ஊருக்கும் இடையில் தார் ரோடு வந்துவிட்டது.
ஒரு வழியாக் கை சரியாயிருச்சு. எப்பவும் நேரமாச்சு வீடு போய் சேரணும் என்று விரட்டிக் கூட்டி வரும் அம்மா கடைசி நாள் கட்டை அவிழ்த்ததும் வா முருகனைக் கும்பிட்டுப் போவோம் எனச் சொல்லி மலையேறி சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு கூட்டி வந்தார்.
அதுக்கு அப்புறம் எவன் விளையாண்டாலும் அந்தப் பக்கமே போகமாட்டேன்.
எங்கம்மா இப்பவும் 'தூறல் நின்னு போச்சு' படம் போட்டா, 'இந்தப் படத்தைப் பாத்துட்டுத்தான் தம்பி கையை உடைச்சிக்கிட்டு வந்துச்சு'ன்னு சொல்லும். தூறல் நின்னு போச்சு ஒண்ணும் உடைக்கலை, தூர நின்னவனை சூசையப்பர்தான் உடைத்தார் என்பதை இப்பச் சொன்னாலும் நம்பாமல் நீ பாக்யராஜ் மாதிரி சண்டை போட்டிருப்பேன்னுதான் சொல்லும்.
ஆமா பாக்யராஜ் அப்படியெல்லாம் சண்டையா போட்டார்...?
இந்த நிகழ்வும் தூறல் நின்னு போச்சும் என்னால் மறக்க முடியாத நினைவாய் மனசுக்குள்.
முடிந்தால் மற்றொரு நினைவை எழுதலாம்.
நன்றி.
-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சுவையான நினைவுகள்... இல்லை, வலியான சுகமான நினைவுகள். அல்லது இசையான நிகழ்வுகள், இனிமையான நினைவுகள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான நினைவுகள்...