மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சினிமா : ஹோம் (மலையாளம்)

 ஹோம்...

சின்னதாய் ஒரு முன்கதை அதுதான் அந்தக் குடும்பத் தலைவனை முன்னிறுத்தும் கதை என்றாலும் அதை வெளிக்கொணர மழை இரவில் மகன் சொல்லும் 'உனக்குச் சொல்லிக்கிற மாதிரி என்ன இருக்கு... அரைப்பக்கத்தில் எழுதிடலாமே உன்னுடைய அறுபது வருட வாழ்க்கையை...' என்ற எள்ளல் வார்த்தை தேவைப்படுகிறது.


உள்ளெழும்பிய அல்லது மகனால் எழுப்பி விடப்பட்ட யார் முன்னிலும் வைக்கப்படாத முன் கதையை மகனிடம் வைக்க நினைத்து தோற்றுத் திரும்பும் இரவுகள் கையிலிருந்து உடையும் காபிக் கோப்பையைப் போல் சுக்கு நூறாகின்றன.

சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தவிப்பவருக்கு 'உன் கையெழுத்தில் எனக்கொரு கடிதம் எழுதிக் கொடு' என்ற மகனின் வார்த்தைகள் கோடை மழையாய் சில்லிப்பைக் கொடுக்கிறது, அழகாய் எழுதியதை மகன் போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அனுப்புவதை அறியாமல், அந்தப் பேப்பரைக் கையில் எடுத்து படபடப்புடன் மகன் முகம் பார்க்க, அவனோ உன் எழுத்துக்கான வேலை முடிந்துவிட்டது என்பதாய் அந்தப் பேப்பரின் மீதொரு பேப்பர் வெயிட்டைச் சுற்றி விடுகிறான். அது அவரின் முன்கதைக்கான பால்யத்துப் பம்பரச் சுற்றலில் நினைவை நிறுத்துகிறது.

அந்த இரவு அவரின் முன்கதையை மகனிடம் விவரித்துச் சொல்ல வைத்தாலும் அதில் ஒன்றும் இல்லை நான் பார்த்த அப்பாவுக்குள் இப்படியெல்லாம் ஒரு சாகசக்கதை இருக்க வாய்ப்பில்லை என்பதான எள்ளல் அவரின் இளமைத் துள்ளலை வேரோடு சாய்கிறது. தன் கதை யாருக்கும் ஏற்புடையது அல்ல என்பதை உணர்ந்து தவித்து அங்கிருந்து எழுகிறார்.

அக்கதையோட முடிச்சு இறுதியில் ஒரு புள்ளியில் இணைக்கப்படுகிறது. அது இணைக்கப்படும் போது அந்த வீட்டிற்குள் எங்கோ ஒரு மூலையில் புதைந்து கிடந்த சந்தோஷம் மீண்டும் விழித்துக் கொள்கிறது, அந்த சந்தோஷம் அந்த மனிதனின் முகத்தில் குடி கொண்டு புன்னகையாய் நம்மை எல்லாம் கவர்கிறது.

தன் இரண்டு மகன்களும் செல்போனில் பண்ணும் அட்டகாசங்களைப் பார்த்து தானும் அப்படி ஒரு போன் வாங்க வேண்டுமென நினைப்பதும், இயக்குநரின் அப்பாவிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருந்தால் அது உனக்குத்தானே கேவலம் என்பதாய் மகனிடம் சொல்வதும் அந்த வார்த்தையை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத போது தானே போன் வாங்கிக் கொள்வதும், அதன் பின் நடப்பவையால் ஏற்படும் பிரச்சினைகளும் என அந்த நடுத்தர வயது மனிதன் தனக்குள் இருக்கும் அந்தக் கதையைச் சுமந்தபடி பரிதாபமாய் விழித்துப் பதுங்கி நிற்பதில் உயர்கிறது இந்த வீடு... அகம்... இயக்குநர் பாணியில்  சொல்லப்போனால் அழகான மனிதர்கள் நிறைந்த ஹோம்.

இங்கே நாயகன் அப்பா ஆலிவர் ட்விஸ்டா - மகன் அந்தோனி ஆலிவர் ட்விஸ்டா என்று பார்த்தால் பல இடங்களில் காமெடியாய் பார்க்க வேண்டிய நம்மைக் கண் கலங்க வைத்த அப்பா ஆலிவர் ட்விஸ்டே நம் கண்ணில் நிறைந்து நிற்கிறார்.

மகன் இயக்குநர் என்பதில் அவருக்குப் பெருமை, ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்துவிட்டு அடுத்த படத்துக்கான கதை எழுத முடியாமல் தவிக்கும் மகனுக்கோ அப்பாவின் அறுபது ஆண்டு வாழ்க்கையில் அப்படி என்னத்தைச் சாதித்துவிட்டார் என்ற எள்ளல் மட்டுமே இருக்கிறது.

பெற்றவருக்கு ஒண்ணும் தெரியாது எனச் சொல்லும் மகன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவை மேலே வைத்துப் பார்க்கிறான்... அவருக்கு எல்லாம் செய்கிறான்... அவரின் கால் தூசி நீ வருவாயா என்ற எள்ளலை எப்போதும் தன்னிடத்தை வைத்திருக்கிறான். அதைச் சரியாக அப்பாவிடம் கடத்தியும் விடுகிறான். அது தன்னுள்ளே பாயும் போது அந்த மனிதன் விக்கித்து எழுந்து நகர்கிறார். அவனுக்கு அப்பா மீது அதீத கோபமெல்லாம் இல்லை நேசம் இருக்கிறது என்பதை அடுத்த காட்சிகளில் காட்டியும் விடுகிறான். அப்பாவும் அதை மறந்து மகனின் காரின் மீதிருக்கும் அழுக்கை கழுவுகிறார், ஓரிடத்தில் மகன் மீதிருக்கும் தூசியையும் தட்டுகிறார். அவரின் பாசம் அப்படியாகவே இருக்கிறது.

படம் கொஞ்சம் நீளம்தான் என்றாலும் பார்க்க ஆரம்பித்தால் நம்மை எழுந்து போகவிடாது. ஒரு நடுத்தர வயது அப்பனை அப்படியே கண் முன் கொண்டு வந்து விடுகிறார் இந்திரன்ஸ்... அவர் காமெடியாய் நகரும் காட்சிகளில் கூட நம் உதடுகள் சிரிக்க மறந்து கண்கள் குளமாகின்றன என்பதே உண்மை. இறுதிக்காட்சியில் நான் அழுதேன்...  இறுதிக் காட்சியில் தனக்குள் பொதிந்திருக்கும் அந்த முன்னிறுத்தும் கதையின் நாயகி என் தெய்வமே என வந்து நிற்கும் போது அந்த ஒற்றைப் புன்னகையில் தன் அகத்து (இதைக்கூட இயக்குநர் ஹோம் என்றிருக்கலாம்) அழகைக் நம்முன்னே காட்டி நின்றபோது பார்க்கும் யாரையும் அழ வைத்துவிடுவார் என்பதை படம் பார்த்தீர்கள் என்றால் உணர்வீர்கள்.



சொட்டைத் தலை, சற்றே அழகற்ற முகம், நடை, பாவனை என எதிலும் ஒட்டாத புறக்கணிப்பை மட்டுமே வாங்கிக் கொண்டு எல்லாரிடத்திலும் அன்பு செய்யும் ஒரு மனிதனின் அக அழகை அப்பட்டமாகக் காட்டிச் செல்லும் படம் இது.

என்னோட எல்லாத்தையும் என் வீட்டுக்குள்ளும் அங்கிருக்கும் மனிதருக்குள்ளும் இறக்கி வைப்பேன், அதை அவர்கள் முகம் சுழிக்காது ஏற்றுக் கொள்வார்கள் என்பதைச் சொல்லும் படம்தான் இது.

ஆரம்பக் காட்சியில் அந்த மீன் தொட்டி உடைவதும் அதன் பின்னான காட்சிகளில் அந்த மனிதன் உடைக்கப்படுவதும், ஒரு கட்டத்தில் அதிலிருந்து அவனே உடைத்துக் கொண்டு வருவதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையாதாகிறது.

தமிழில் எடுக்க வேண்டிய படம் என்று பலரும் சொல்வதைப் பார்க்க முடிகிறது. இப்படி ஒரு கதையை நாம் நாயகன் நாயகி காரில் போகும்போது ஊடலுக்குப் பின் கூடலை ஸ்விட்சர்லாந்தில் டூயட்டாக்கி விடுவோம். மகனால் புறக்கணிப்படுகிறோம் என்பதைவிட வருங்கால மாமனாருக்குக் கொடுக்கும் அன்பில் பாதி கூட எனக்குக் கொடுக்கவில்லையே என்ற வேதனையை அப்பாவுக்கு ஒரு சோகப்பாடலாய் கொடுத்து மொத்தப் படத்தையே முடித்துவிடுவோம்.

தமிழ் சினிமாவுக்கென்று ஒரு களம் இருக்கிறது... அது சாதியும் மதமும்... அங்கேயே நாம் நின்று கொண்டிருப்போம். திருப்பி அடி, திருப்பி அடி என அரிவாளையும் கத்தியையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்போம். அதைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம், மூவர்ணக் கொடியில் நாலாவது வர்ணம் நாங்களே எனச் சொல்ல வைத்துக் கைதட்டுவோம், சாதீயம் வளர்ப்போம். எல்லாரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதில் பெற்ற வெற்றியை சாதி வெறியை ஊட்டும் படங்கள் வாயிலாகக் கொண்டாடித் தீர்ப்போம். நாம் சாதிக்குள் சிக்கி சீரழிவோம். கேரளக்கரையில் அழகழகான கதைகளுடன் வந்து கொண்டே இருக்கிறார்கள். நாம் அங்கிருந்து சதை இறக்குமதி செய்து சூப்பர் ஸ்டாரினிகள் என அவர்களின் கார்களுக்குப் பின்னே ஓடுவோம். அவர்கள் கதைகளில் முன்னே நகர்ந்து சென்று கொண்டே இருக்கட்டும்.

இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாசி, நெல்சன், மஞ்சு பிள்ளை மற்றும் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றாலும் இந்திரன்ஸ் கலக்கியிருக்கிறார்.

கேரளாவின் மாநிலத்தின் சிறந்த குழந்தைகளுக்கான பட விருதைப் பெற்ற பிலிப் அண்ட் த மங்கி பென் மற்றும் ஜோ அண்ட் த பாய் படங்களை இயக்கிய ரோஜின் தாமஸ் இயக்கியிருக்கிறார். ஒரு வீட்டுக்குள் அந்த மனிதர்களுடன் நம்மை வாழவைத்து அதில் மகத்தான வெற்றியும் பெற்றிவிட்டார். 

ஹோம் தவிர்க்க வேண்டிய படமல்ல... தரமான பாடம்.

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்கத் தூண்டுகிறது, நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்கள்.  அமேசானில் இருக்கிறதோ...   பார்க்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்த்து விடுகிறோம்... நன்றி...

சிவபார்கவி சொன்னது…

Oliver Twist name for the father. And flowerhorn fish.. you forget to describe.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விமர்சனத்தை எழுதியுள்ள விதம், நடை திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

anubhaskar சொன்னது…

நீல.வண்ணத்தில் .எழுத்துக்கள் படிக்க கஷ்டமாக உள்ளது. எப்போதும் கருப்பு வெள்ளை என்றிருந்தால் நல்லது

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அவசியம் பார்ப்பேன்
நன்றி