மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

மன்றில் தேர்வு : நிர்மலாவின் முடிவு (சிறுகதை)

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் திரு. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் 'மன்றில் சிறுகதைப் பட்டறை' ஒன்றை நடத்துகிறார். அதில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஒரு கரு கொடுக்கப்படும். அதற்கு புதன்கிழமைக்குள் எழுதப்படும் கதைகளில் இருந்து ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறியதாய் ஒரு பரிசுத் தொகையும் அவர்கள் கொண்டு வர இருக்கும் சிறுகதைத் தொகுப்பில் அக்கதைக்கு ஒரு இடமும் வழங்கப்படும். கருவுக்கு எழுதுதல் என்பது சற்று கடினமே என்பதால் நான் தொடர்ந்து எழுதுவதில்லை. முதல் முறை எழுதிய போது பரிசுக்குத் தேர்வாகவில்லை என்றாலும் நல்ல கதை என அவர் போன் பண்ணிப் பேசினார். அதன்பின் இடையில் இருமுறை எழுதிப் பார்த்தேன் ஒரு பயிற்சிக்காக.

சென்ற வாரம் ஜி.ஏ.பிரபா மேடம் அவர்கள் எழுதி கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதையைக் கொடுத்து அதே கருவை வைத்து உங்கள் எண்ணத்தில் உதிர்க்கும் கதையை எழுதுங்கள் என்றார்.எழுதிப் பார்ப்போமே என புதன் மதியத்துக்கு மேல்தான் பகிர்ந்தேன். வியாழன் காலை நான் எழுதிய கதையே இந்தவாரத் தேர்வாய் வந்திருந்தது. மகிழ்ச்சி.

கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

நன்றி.

*****

"அக்கோவ்... இப்ப எதுக்கு ஒப்பாரி வச்சி ஊரக்கூட்டுறே... சித்த சும்மாயிருக்க மாட்டியா?" அதட்டினாள் பார்வதி.

"எப்புடிடி சும்மா இருக்கச் சொல்லுறே... ஊரு மெச்சக் கலியாணம் பண்ணிக் கொடுத்தோமேடி... இப்புடி வந்து நிக்கிறாளே..." என்றபடி முந்தானையில் மூக்கைச் சிந்தி முகம் துடைத்தாள் கஸ்தூரி.

"என்ன பண்ணச் சொல்றே..? நாம அப்புடி வளத்திருக்கோம்... மொதல்ல அழுகையை நிறுத்து..."

"ஏ வளப்புள என்ன கொறடி வச்சேன்... என்னக் காட்டிலும் அந்த மனுசன் ஆத்தா ஆத்தான்னுல்ல தாங்குனாரே... அவருக்குத் தெரிஞ்சா உசுர விட்டுருவாரேடி... பாத்துப்பாத்து வளத்து பல்லாக்குல ஏத்திவிட்டா இந்தப் பாவிமக பல்லக்கு ஓட்டயின்னு பாதியில வந்துட்டாளே..." மீண்டும் ஒப்பாரியை ஆரம்பித்தாள்.

"எக்கோவ்... சொன்னாக் கேக்கமாட்டே... அக்கம்பக்கத்துச் சனமெல்லாம் என்னவோ ஏதோன்னு வரப்போவுதுக... அதுககிட்ட இவ இப்புடிப் பண்ணிட்டு வந்து நிக்கிறான்னு சொல்லப் போறியாக்கும்... பொறுமையா இரு... அத்தான் வரட்டும்... உக்காந்து என்ன ஏதுன்னு பேசி ஒரு முடிவுக்கு வருவோம்... அவ இப்புடிப் பண்ணிட்டு வந்துட்டான்னு அப்புடியேவா விட்டுறப் போறோம். எதயும் நின்னு நிதானிச்சி மூணாவது மனுசளுக்குத் தெரியாம கமுக்கமாத் தீத்து வக்கணும்..."

"என்னவோடி ராத்திரி எட்டுமணிக் காருக்குப் போறேன்னு சொன்னவள இருடி காலயில போலாமுன்னு இதுக்குத்தான் சொன்னேம் போல. உன்னயமாரி என்னால பட்டுன்னு ஒரு முடிவுக்கு வரமுடியலடி... நீ இல்லேன்னா இன்னேரம் நா அவள வெட்டிப் போட்டுட்டு நானும் போயிருப்பேன்."

"இந்தா... வெட்டிட்டு நீயும் பொயிட்டா எல்லாம் தீந்துருமா சும்மா பேசிக்கிட்டு, மொதல்ல எந்திரிச்சி மொகத்தக் கழுவிட்டு வா. அத்தான் வந்ததும் மெல்ல எடுத்துச் சொல்லி, என்ன பண்ணலாம் ஏது பண்ணலாமுன்னு ஒரு முடிவுக்கு வரலாம். அவுகள வேணுமின்னா வரச்சொல்லவா..? அவுக நாலு பேத்துக்கு நல்லது சொல்றவுக, அவுகளுக்கு இதை எப்புடிச் சரி பண்றதுன்னு தெரியும்.."

"அத வரச்சொல்லு அதுதான் இதுக்குச் சரியான ஆளு... எண்ணி ஒரு வருசம் முடியலயேடி... அதுக்குள்ள வந்துட்டாளே பாவி மக... பெத்த வயிறு பத்தி எரியுதுடி, இவளப் பெத்ததுக்கு வயித்துல பெரண்டைய வச்சிக் கட்டியிருக்கலாமேடி..." மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள் கஸ்தூரி.

இவர்கள் எதையோ பற்றி பேசுகிறார்கள் என்பதாய் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த நிர்மலா, ;நிம்மி... எந்திரிச்சி முகத்தக் கழுவுடி' என்ற பார்வதியின் வார்த்தையை சட்டை செய்யாமல் விட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்தாள்.

"வயித்துல வேற வளருதேடி... அதுக்காகவாச்சும் இவ பொறுத்துப் போயிருக்க வேணாம்... பொட்டச்சிக்கு எதுக்குடி இம்புட்டு வீம்பு"

"அட இருன்னு சொன்னா இருக்கமாட்டே... சும்மா ஓட்டப்பானக்கிள்ள நண்ட விட்டமாரி... அவ எதாச்சும் சொல்றாளா பாத்தியா... விட்டத்தப் பாத்துக்கிட்டு விட்டேத்தியா உக்காந்திருக்கா. அவருக்குப் போன் பண்ணிட்டேன். அவுக ரெண்டு பேரும் வரட்டும் பேசிக்கலாம்."

*******

"என்ன எல்லாரும் காலயில ஒருமாரி உக்காந்திருக்கிய... அட நிம்மி வந்திருக்கு... ஏத்தா எங்கத்தா மாப்ள வரலயா..?" என்றபடி கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார் பரமசிவம்.

"வரல... இவுகதான் வந்திருக்காக..." கஸ்தூரி கடுப்பாய் சொன்னாள்.

"அதுக்கு எதுக்கு நீ கடுப்பாப் பேசுறே..? அவருக்கு ஆயிரம் வேல இருக்கும்... சும்மா சும்மா ஓடியாற முடியுமா..?"

"கடுப்பாப் பேசாம உங்க மக பண்ணிட்டு வந்திருக்கதுக்கு தூக்கி வச்சிக் கொஞ்சுவாக்களாக்கும்..."

"எதுக்குடி படபடன்னு பேசுறே..? ஏய் பாரு என்னாச்சு... சும்மாவே உங்கக்கா சொல்றது புரியாது... ஆமா எதுக்கு உங்கக்கா இப்பக் கடுகடுன்னு பேசுறா..."

"அதுக்கு வேற வேலயில்ல... நீங்க வாங்க சாப்பிட..."

"எனக்கு சாப்பாடெல்லாம் வேணாம்..."

"போங்க போயிச் சாப்பிடுங்க... நல்ல மகளப் பெத்திருக்கோம்... போன எடத்துல நல்லா பேரு வாங்கிக் கொடுத்திருக்காக... சந்தோசமாச் சாப்பிடுங்க... இனி நமக்கு அது ஒண்ணுதான் கொறச்சல்..."

"என்னடி குதர்க்கமாப் பேசுறே... என்னன்னு சொல்லுடி..."

வாசலில் வண்டி வந்து நிற்க, "ஏதோ வண்டி வருதே, பாரு... அது யாருன்னு பாரு... பிரசிடெண்ட் தம்பி வர்றேன்னு சொன்னுச்சு... அதுவா இருக்குமோ..?" என்றபடி எழுந்தார்.

"நீங்க இருங்கத்தான்... அவுகள வரச்சொன்னேன்... அவுகதான் வர்றாக..."

வீட்டிற்குள் நுழைந்தான் பர்வதத்தின் கணவன் "அட வா சின்ராசு..." என்றார் பரமசிவம்.

"ஆமாண்ணே..." என்றவன் "எங்கே அவ...?" என்றபடி நிர்மலாவை நோக்கிப் போனான்.

"அட இருங்க... வந்ததும் வராததுமா... உக்காருங்க மொதல்ல... அத்தான் இருக்காகள்ல பேசலாம்..."

"என்ன நடக்குது இங்க... ஆளாளுக்கு என்னமோ சொல்லுறிய.... செய்யிறிய..." பரமசிவம் வேகமாக எழுந்தார்.

"நீங்க இருங்கத்தான்..."

"ஏய் கல்யாணி என்னடி... உம்மக சண்ட எதுவும் போட்டுட்டு வந்திருக்காளா..? அதுக்காகத்தான் சின்ராச வரச்சொன்னியளா..? என்ன சின்ராசு உனக்கு என்னன்னு தெரியுமா..?"

சின்ராசு சொல்ல வாயெடுக்கும் முன், "என்னத்தச் சொல்ல... உங்கமக வாந்தது போதும்ன்னு கெளம்பி வந்துட்டாக...." கஸ்தூரிஅழுகையோடு சொன்னாள்.

"என்னது... ஏய் நிம்மி நெசந்தானா...?" கத்தினார் பரமசிவம்.

"அண்ணே... இருங்க... விசாரிப்போம்... நிம்மி இங்கிட்டு எந்திரிச்சி வாறியா... இல்ல எனக்கு வர்ற கோவத்துக்கு அங்க வந்து ரெண்டு அப்பு அப்பவா" சின்ராசு தன் பங்குக்கு கத்தினான்.

நிம்மி அந்த இடத்தை விட்டு எழவில்லை.

"அடிஆத்தி எழுந்தா அவுக பவுசு என்னாகுறது..? இவுக எங்காத்தான்னு செல்லங்குடுத்து வளத்தாகள்ல அதான் அவுக நல்ல பேர வாங்கிக் கொடுத்துட்டு வந்திருக்காக... அப்புடியே அரங்கனாட்டம் அந்தக் கெளவிவிட்டுப் புத்தி..."

"அக்கா நீதான் சும்மா இரேன்..." என்றபடி நிர்மலாவின் அருகில் போய் "நிம்மி... வா... சித்தியிருக்கேனுல்ல... நா பாத்துக்கிறேன்..." என அவளின் கை பிடித்தாள். சுந்தரபாண்டியன் சித்தியும் இப்படித்தானே நடந்துக்குவா என நினைத்த நிர்மலாவுக்கு அந்த நிலையிலும் லேசான சிரிப்பு வந்தது.

"நிம்மி... அம்மா சொல்றது...?" மகளிடம் மெல்லக் கேட்டார் பரமசிவம்.

"எல்லாரும் நிம்மி போடுங்க... நிம்மி... நாயிக்கிச் செல்லங் கொடுத்துத்தான் கெடுத்து வச்சிருக்கிய..." கஸ்தூரி கடுப்படித்தாள்.

"ஏய் நீ சும்மா இரு... கடுப்பக் கெளப்பிக்கிட்டு..."

"அத்தாச்சி இருங்க என்ன நடந்துச்சுன்னு கேப்போம்... ஊருக்கு ஒண்ணுன்னா முன்னால நிக்கிற குடும்பம் நம்மது நம்ம குடும்பத்துல ஒண்ணுன்னா சும்மா விட்டுட்டு வேடிக்க பாப்போமா... என்ன நடந்துச்சுன்னு தெரியணுமில்ல... எதுக்கு கோவிச்சிக்கிட்டு வந்தான்னு தெரிய வேணாம்... சும்மா கத்திக்கிட்டே இருந்தா... வெவரம் என்னன்னு தெரிஞ்சாத்தானே மேக்கொண்டு முடிவெடுக்க முடியும்... இருங்க... பேசுவோம்." சின்ராசும் தன் பங்குக்கு சத்தம் போட கஸ்தூரி அடங்கினாள்.

"வாயத் தொறந்து சொல்லு நிம்மி... என்ன நடந்துச்சுன்னு அப்பாக்களுக்குத் தெரியணுமில்ல..?" அவளின் முதுகில் ஆதரவாய் தடவியபடி சொன்னாள் பார்வதி.

"நல்ல குடும்பம்ன்னு பாத்திய... நல்ல மாப்ளயின்னு பாக்கலயே..."

"ஏய் நிம்மி என்ன குதர்க்கமாப் பேசுறே... நல்ல இடம்ன்னு நாலு பேருக்கிட்ட விசாரிச்சி, மாப்ள சொந்தமாத் தொழில் பண்றாரு கொணத்துல தங்கம்ன்னு சொன்னதாலதானே உன்னயக் கட்டுனோம்... அவருக்கூட வாழ முடியாத அளவுக்கு அப்புடி என்ன தப்பக் கண்டுபிடிச்சே..?"

"அட ஆம்பளயின்னா கூடக்கொறச்சித்தான் இருப்பான். நாமதான் அனுசரிச்சிப் போவணும்... அந்தக் காலத்துல குடிச்சிட்டு வந்தாளும் கட்டுனவன்னு அணச்சிக்கிட்டு வாந்துதான் பத்துப் பன்னென்டுன்னு பெத்துப் போட்டாவா... இம்புட்டு ஏ எம்புருசனுக்கு குடிப்பழக்கமிருந்துச்சு மூணு புள்ள பொறப்புறம் அவர எப்புடி மாத்தணுமோ அப்புடி மாத்தி மனுசனா நாலு பேரு முன்னால நிக்க வக்கல... அப்புடிக் குடும்பத்தக் கொண்டாரோணும் அதுதான் பொம்பளக்கி அழகு... அத்துக்கிட்டு வந்திட்டா... ஊரு வாழாவெட்டியின்னுல்ல சொல்லும்..." கஸ்தூரி இடைபுகுந்தாள்.

"இப்ப உன்னய இந்த வியாக்கியான மயிரெல்லாம் கேட்டாகளா... சும்மா இருக்கியா இல்ல அப்புடியே ஒரு எத்து எத்தவா... நீ சொல்லு என்ன நடந்துச்சு...? எதுக்கு கோவிச்சிக்கிட்டு வந்தே..? ம்... சொல்லு..." பரமசிவம் மீசையைத் தடவிக் கொண்டார்.

நிர்மலா பேசாமல் நிற்க, "ஏய் என்னன்னு சொல்லித் தொலடி... விட்டத்தயும் தரயயும் விடாமப் பாத்தா விடிஞ்சிடுமா...?" பார்வதி கத்தினாள்.

"இருடி... பொம்பளயளுக்குப் புத்தியில்ல... கூப்பாடுதான் போடுறிய... சாதிசனம் காதுல விழுந்தா ஒண்ணு மூணா ஊரு நாடெல்லாம் போயிரும்... நம்ம மானந்தான் சந்தி சிரிக்கும்.. கட்டிக்கொடுத்தாக வாழ வக்கில்லாம வந்து நிக்கிறான்னு வாய்க்கு வந்தபடி பேசுவாக...  நிம்மி நடந்தது என்னன்னு சொன்னாத்தானே நாங்க ஒரு முடிவுக்கு வரமுடியும்... சொல்லு..."

"இதுல நானெடுத்த முடிவை உங்க முடிவு என்ன செய்யும்ன்னு எனக்குத் தெரியல... அந்தாளுக்கு கல்யாணமாகி ஒரு வருசமாகப் போகுது, நமக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி  இருக்காங்கிற நெனப்பு சுத்தமாயில்ல... ராத்திரி வீட்டுக்கு வந்தா மட்டும் போதுமா..? அதுவும் எதுக்கு வர்றான்னா... பெத்தவங்களாப் பொயிட்டீங்க இல்லேன்னா பச்சையாச் சொல்லிப்புடுவேன்..." பேச்சை நிறுத்தினாள்.

"அதான் நீயே முடிவு பண்ணிட்டு வந்துட்டியே... அப்புறம் என்ன மயித்துக்குப் பெத்தவுகளுக்கு மரியாத..." கஸ்தூரி கத்தினாள்.

"அட இருடின்னா..." பரமசிவம் வேகமாக எழுந்தார். சின்ராசு அவரை இழுத்து அமர வைத்தான்.

"என்னையப் பேச விடுறியளா..?"

"பேசு..."

"சொந்தத் தொழில்ன்னுதான் கட்டுனிய... தெரிஞ்சும் யாரும் புள்ளையப் பாழுங்கெணத்துல தள்ளமாட்டாக. கட்சி, ரசிகர் மன்றமுன்னு கல்யாணத்துக்கு முன்னால இருக்கதுல எந்தத் தப்புமில்ல. அப்பவும் கண்டிக்க ஆளிருந்தா அதுக்குள்ள நல்லவன் போமாட்டான். இங்கதான் கண்டிக்க ஆளில்லையே... ஆத்தாக்காரி என்னமோ அவ மகன் அரசாளப் போறமாரி பீத்துற... அப்பன்காரன், அவன் இருந்திருந்தா திருந்தியிருப்பான்னு கேக்குறவுக, வெவரந் தெரியாதவுக சொல்லலாம்... ஆனா அவனெப்படிச் செத்தான்..? அவனோட தலைவன் ஊழல் பண்ணிட்டு உள்ள போனதுக்கு உத்தமனை கைது பண்ணிட்டீங்களேடான்னு முச்சந்தியில நின்னு தீவச்சிக்கிட்டு செத்திருக்கான். அவனோட சாவுக்கு கட்சி கொடுத்த பணத்துல கடைய வச்சிக்கிட்டு இவனும் கட்சி, எம்.எல்.ஏ, மந்திரி, தலைவன்னு திரியிறான். அவனுக ஊருப்பக்கம் வந்தா இவனுக்குச் சோறு தண்ணி வேண்டாம்... அதான் தண்ணி அவனுக வாங்கி ஊத்திருறானுங்க... திங்கப் பிரியாணி கொடுத்துடுறானுங்க... அப்புறம் எதுக்கு வீடு, வாச, குடும்பமெல்லாம். எதையும் கண்டுக்கலை... திட்டியும் திருந்தலை... அவனுக்கு ராத்திரிக்கிச் சொகம் கொடுக்க நா வேணும்... இல்லேன்னா அடிப்பான்... மிதிப்பான்... அதுக்காகவே செவனேன்னு கெடந்து புள்ள வேணாமுன்னு நெனச்சாலும் அது வெளஞ்சிருச்சி... அறுத்து வீச மனசில்லை... சொமக்குறேன்."

"எங்களுக்கு இதெல்லாம் நீ ஏன் முன்னமே சொல்லல... நாம பேசுவமுத்தா..." கொஞ்சம் மென்மையாகப் பேசினான் சின்ராசு.

"பேசி என்னாகும் சித்தப்பா... அவனெல்லாம் தலைவனுக்கு உழைக்கப் பிறந்தவன்... அவனுக்கு பொண்டாட்டி குடும்பமெல்லாம் செட்டாகாது. இவன் தலைவனுக்காக ரோட்டுல திரிவான்... அங்கே தலைவனோட குடும்பம் கோட்டையில அரசாளும். இன்னக்கி அப்பனுக்கு கொடி பிடிப்பான், நாளக்கி அறுபது வயசுல மயனுக்கு கொடி பிடிப்பான், அப்புறம் முடிஞ்சா பேரனுக்கும்... ஆனா இவனோட கொடியும் கோவணமும் மாறாது... தலைவனும் மந்திரிகளும் ஊரெல்லாம் சொத்து வாங்கி உலகத்தையே ஆள முயற்சிப்பாங்க... இவனோட குடும்பம் அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சையெடுத்து அரை வயித்துக் கஞ்சிக்கு அல்லாடிக்கிட்டு இருக்கும். இவனோட அப்பன் நல்லவனாயிருந்திருந்தா இவனும் தொழில்ல கவனம் செலுத்தியிருப்பான். இவனோட நான் எல்லாத்தயும் ஏத்துக்கிட்டு வாழ்ந்தா நாளக்கி எம்புள்ளயும் ரோட்டுல கொடிதான் பிடிப்பான். கடைசிவரைக்கிம் இவனமாரி ஆளுகளுக்கு ஒரு  வார்டு மெம்பர் பதவிக்கு கூட வக்கிருக்காது... அதனால..."

"அதனால..?"

"எங்க ஏரியா கவுன்சிலரா கட்சிக்கு பெரிசா உழைக்காத, காசு பணம் நெறைய வச்சிருக்கிற பட்டாபிய நிப்பாட்டியிருக்காங்க, அவருக்கு ஓட்டுக் கேக்க எம்.எல்.ஏ வந்தாரு... அப்ப நீங்கள்லாம் ராப்பகலா உழைச்சி அவர கவுன்சிலராக்கணும், இல்லேன்னா தலைவரு என்னைய மதிக்கமாட்டாருன்னு சொல்ல, இந்தாளும் இவனமாரி ஆளுகளும் உசுரைக் கொடுத்தாச்சும் ஜெயிக்க வைப்போம்ன்னு சத்தியம் செய்யிறாங்க. எவனுக்கோ உயிரைக் கொடும்போமுன்னு சொல்ற நாயிங்க குடும்பத்துக்கு என்ன செய்யுதுக... ஒண்ணுமில்லை..."

அவளே தொடரட்டும் என மற்றவர்கள் பேசாமல் இருந்தனர்.

"எம்.எல்.ஏ முன்னாடி போக நினைச்சப்போ சுத்தி நிக்கிற அல்லக்கைங்க என்னை உள்ள விடல ஆனாலும் போராடிப் போயி எம்புருசனைக் காட்டி இவனுக்கெல்லாம் குடும்பம் தேவையில்ல... உங்களுக்காக உழைச்சி குடும்பத்துக்குன்னு என்ன வச்சிருக்கான்... ஜெயிக்க வையிங்கன்னு இவனுகளுக்கிட்ட சொன்னவுக ஜெயிச்சதும் என்ன செஞ்சீங்க... பிரியாணியும் அம்பது ஓவாயும் குடிக்க குவாட்டரும் கொடுத்தா இவனைமாரி ஆளுகளை நம்பியிருக்க குடும்பம் பொழச்சிக்குமா... யோசிச்சீங்களா... இவனெல்லாம் எங்க வாழ்க்கைக்குத் தேவையில்லை... வாழ்நாளெல்லாம் கொடி பிடிக்க உங்களுக்குத்தான் தேவை... நீங்களே ஒரு நாயாட்டம் உங்களோட வச்சிக்கங்கன்னு சொல்லி, எந்தாலியக் கழட்டி அவரு கையிலயே கொடுத்துட்டு திரும்பிப் பாக்காம வந்துட்டேன்..." 

அப்போதுதான் எல்லாருடைய பார்வையும் அவளின் கழுத்தின் மீது திரும்பியது. அது வெறுமையாய் இருந்தது.

"எதாயிருந்தாலும் பேசித் தீக்கலாம்த்தா... பேசித் தீக்க முடியாத காரியம்ன்னு உலகத்துல எதுவுமில்லத்தா" என்றார் பரமசிவம்.

"பேசி... அட ஏம்ப்பா... அம்மா சொன்னமாரி அன்னக்கி வேணுமின்னா எப்புடிப்பட்டனா இருந்தாலும் அனுசரிச்சிக் குடும்பம் நடத்தியிருக்கலாம். ஆனா இப்ப காலம் ரொம்பவே மாறிப்போச்சு... இன்னமும் ஆம்பளைக்கு அடிமையாக வாழ வேண்டிய தேவையில்லை... எனக்கு அது வேண்டவே வேண்டாம்... நீங்க எனக்கு உதவுனாலும் இல்லாட்டியும் என்னால இந்த உலகத்துல  எம்புள்ளைய நல்லா வாழ வைக்க முடியுங்கிற நம்பிக்கை இருக்கு... இந்த சமூகத்துல தனி மனுசியா சாதிக்க முடியுங்கிற வைராக்கியம் இருக்கு... வாழ்ந்து காட்டுவேன்..." எந்தப் பதட்டமும் கண்ணீரும் இல்லாமல் பேசி முடித்தாள் நிர்மலா.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, ரொம்ப நேரம் பேசாமலே இருந்த நிம்மி கடைசியாக பேசியபோது என்ன தெளிவு...   இந்தக் காலமோ அந்தக் காலமோ இதுதான் தொண்டர் வீட்டின்  நிலைமை.  அருமை.

Yarlpavanan சொன்னது…

சிறந்த கதை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

பேச்சுத் தமிழில் வாசிப்பது காதில் கேட்பது போல இனிமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கதை. பாராட்டுகள் குமார்.