மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 ஆகஸ்ட், 2021

எதிர்சேவை - விமர்சனக் கூட்டம்

சில நிகழ்வுகள் நமக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும், அப்படியான ஒரு நிகழ்வுதான் நேற்றைய மாலையை மகிழ்வான மாலையாக, மறக்க முடியாத மாலையாக மாற்றிய 'எதிர்சேவை' விமர்சனக் கூட்டம்.

புத்தகம் வந்து இரண்டாண்டுகள் ஆகி விட்ட நிலையில், சென்ற வருடத்தில் தஞ்சை பிரகாஷ் விருதும் வாங்கியிருக்கும் சூழலில், நாங்கள் கூட 'எதிர்சேவை'யை தூக்கி வைத்து விட்டு 'வேரும் விழுதுகளும்' என கந்தசாமியுடன் பயணித்து, அப்படியே எதிர்சேவை கதையை வைத்தே ஒரு நாவலாக்கினால் என்ன (இதைக் கேட்டது சில்வியா பிளாத் மேடம், நேற்றைய கூட்டத்தில் மஜீத் அண்ணன் எதிர்சேவையை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றார் - கிட்டத்தட்ட 350 பக்கங்களுக்கு மேல் மிகப் பெரிய நாவலாகவே அது விரிந்திருக்கிறது, களம் எப்பவும் போல் தேவகோட்டையும் எதிர்சேவைக்காக மதுரையும்) என்ற கேள்வியின் தொடர்ச்சியாக அடுத்த நாவலை எழுதி முடித்திருக்கும் வேளையில் எங்களின் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் எதிர்சேவைக்கு ஒரு விமர்சனக் கூட்டம் என்பது எழுத்தாளனாய் என்னை இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாகத்தான் நான் நினைக்கிறேன்.

எழுதிய எல்லாக்கதைகளும் நல்லவை என்று எப்போதும் சொன்னதில்லை என்பதால் எதிர்சேவையில் இருக்கும் ஒவ்வொரு கதைக்கான விமர்சனப் பார்வையும் எனக்குத் தேவையாய் இருந்தது. நம் பாணி எழுத்து என்பது கிராமத்துக் குடும்பங்களுக்குள் உறவாடுவது மட்டுமே என்பதால் வாசித்தவர்களின் பார்வையில் அது  எப்படியாக இருக்கிறது என்பதே முக்கியம். கதையை எழுதி முடித்தபின் அது வாசகனுக்கானது என்பதை நான் எப்போதுமே பின்பற்றுவதுண்டு, எனவே என் கதையில் நீ எப்படிக் குற்றம் சொல்லலாம் என்ற கேள்விக்கு என்னிடம் எப்போதும் இடம் இருப்பதில்லை. கதை குறித்தான பார்வை என்பது அவர் அவர் மனநிலையைப் பொறுத்தது. அதுவும் எங்கள் அமீரக எழுத்தாளர் குழுமத்தில் மனதில் உள்ளது அப்படியே வெளியே வரும் என்பதுதான் சிறப்பு, அதுதான் எழுத்தாளனை இன்னும் சிறப்பாக எழுத வைக்கும், முகத்துக்காக எப்போதும் யாரும் பேசுவதில்லை.

தொடக்க ஆட்டக்காரராக ஆட்டத்தை ஆரம்பித்த பிலால், தீபாவாளிக் கனவை எந்தளவுக்கு புகழ்ந்தாரோ அதை அப்படியே வைத்து விட்டு மற்ற கதைகள் எல்லாம் என் மனதுக்கு நெருக்கமாய் இல்லை என்று சொன்னார், மேலும் எங்க பக்கத்து எழுத்து எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்றதுடன் ஆண்டன் செக்காவ் என ஏதோவெல்லாம் சொன்னார், சத்தியமா எனக்கு கந்தசாமி, ராமசாமிகளை மட்டுமே தெரியும் என்பதால் செக்காவ் பக்கம் போகலை.

ஜெஸிலா மேடம் எப்படியும் அடித்துத் துவைப்பார் என்று நினைத்தபோதும் அடித்தார் ஆனால் அதிகமாகத் துவைக்கவில்லை என்பதே உண்மை. ஜீவநதியைப் பற்றிப் பேசியவர் பெண்கள் எல்லாருமே ஆண்களுக்கு அடங்கியே இருப்பதாய் எழுதியிருப்பதாய்ச் சொன்னார். கிராமத்து வாழ்க்கையில் இன்றும் பலரின் வாழ்க்கை அப்படித்தான் பயணித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை என்றாலும் எதிர்சேவையில் இருக்கும் கதைகளில் வேண்டுமானால் பெண்கள் அப்படியிருந்திருக்கலாம் ஆனால் நான் எழுதிய கதைகளில் பெரும்பாலும் பெண்கள் அடிமை என்பதாவோ, அவர்களை கீழ்தரமாகவோ (கறுப்பியில் கூட மூன்று பெண்களின் கதை என்றாலும் அவர்களுக்கு ஆண்களால் நிகழும் துன்பங்களைத்தான் சொல்லியிருப்பேன்)  எழுதியதாய், எழுதுவதாய் நினைவில்லை. ஒருவேளை இன்னும் மாற்றம் வேண்டும் போலும்.

பெரும்பாலும் போட்டிகளில் வென்ற கதைகள் என்பதால் போட்டிக்காக எழுதிய கதைகளாய்த்தான் தெரிகின்றன என்றார், இதுவரை போட்டிக்கென்று கதைகள் எழுதியது கிடையாது (முகநூல் படக்கதைகள் , நண்பர்கள் கலந்து கொள்ளச் சொல்லும் போட்டிகள் தவிர்த்து) எழுதியிருக்கும் கதையில் இது சரிவரலாம் என்ற நம்பிக்கையில்தான் அனுப்புவது வழக்கம், போட்டி, பரிசுகள் என்றெல்லாம் எழுதுவதில்லை. (பல போட்டிகளின் பரிசுகள் வந்து சேரவேயில்லை. குறிப்பாக வீராப்புக்கும் நினைவின் ஆணி வேருக்கும்தான் பெரிய தொகை - அது வரவேயில்லை. யாவருமில் வென்ற பத்தாயிரம், அவர்கள் பரிசுக்கான விழா வைக்க முடியாத சூழலில் இருப்பதால் இன்னும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை)

பால்கரசு முதல் நாள் எனது அறையில் பேசியதில் பாதி கூட பேசவில்லை என்பதே உண்மை. எங்களுடன் நிறைய விஷயங்களைப் பேசினார், பால்கரசெல்லாம் குமாருக்கு ரொம்ப நெருக்கம் என்ற மற்றவர்களின் எண்ணத்தையெல்லாம் பொடிப்பொடியாக்குவார் என்பதாய் இருந்த அவரின் பேச்சில் சாரு, ஜெமோ, எஸ்.ரான்னு அடித்து ஆடினார்.  எச்சில் துப்பியதையும் ஈ மொய்த்ததையும் பற்றிக் கூட அன்று நிறையப் பேசினார் என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் வீராப்புக்குள் போகுமுன் தீபாவளிக் கனவுக்குள் அவர் பயணித்தது தவறாகிவிட்டது, தன் வாழ்வின் பழைய நினைவுகளைக் கண் முன் நிறுத்தி அவரைக் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராக மாற்றிவிட்டது. தீபாவளிக் கனவு நம் பால்யத்தை மனசுக்குள் கொண்டு வரும் என்பது உண்மைதான் என்றாலும் பால்கரசு அதற்கு மேல் பேச முடியாமல் போனது வருத்தமே. தான் வந்த பாதையை மறக்காமல் இருக்கும் மனிதன் மதிப்புக்குரியவன் அந்த வகையில் எனக்கு பால்கரசுவின் பழையதை மறக்காத தன்மை எப்பவும் பிடித்தமான ஒன்று, நானும் எங்க வீட்டில் பாலாறு தேனாறு ஓடுச்சுன்னு சொல்றதில்லை... இப்படித்தான் வாழ்ந்தோம் என்று சொல்வதே பெருமை என்று நினைப்பவன் நான்.

அப்பாவின் நாற்காலியைப் பற்றிப் பேசிய சிவமணி அப்பாவின் பொருட்கள் என்பது இன்னமும் கிராமங்களில் இருக்கிறதா தெரியாது ஆனால் அப்படி ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லி, அப்பாவின் வேட்டி என்றொரு கதையைச் சொல்லி தன் பக்க கருத்துக்களை முன் வைத்தார். நிகழ்வின் இறுதியிலும் அவர் தன் கருத்து இதுதான் என்பதை மிகச் சிறப்பாக எடுத்து முன் வைத்தார்.

குலசாமி பற்றிப் பேசிய சாருமதி, தனக்கு அந்தக் கதையில் உடன்பாடு இல்லை என்பதாய்ச் சொன்னார். ஆரம்பத்தில் பெண் குழந்தையைப் பற்றி ஆசிரியரே பேசியிருக்கிறார் என்பதாய் சொன்னார், அது கூட அந்தப் பெண்ணின் எண்ணமாய்த்தான் எழுதியிருப்பேன், அப்பா செய்தது தவறு என்றும் அதை மன்னித்தல் என்பது சுத்த அபத்தம் என்றும் குலசாமி என்று பெயர் வைத்துவிட்டு இப்படி ஒரு கதையா... பிள்ளைகளுக்கு நாப்கின் வாங்கிக் கொடுப்பது கடமைதானே என்றெல்லாம் சொன்னார். அவர் பார்த்து வளர்ந்த வாழ்க்கையில் அதெல்லாம் பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம் ஆனால் கிராமங்களில் இன்னும் அப்படியான வாழ்க்கைதான்... எனக்கு நாப்கின் வாங்கிட்டு வாங்கன்னு எத்தனை பிள்ளைகள் அப்பா, சகோதரர்களிடம் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தோமென்றால் மிஞ்சுவது ஏமாற்றமாகத்தான் இருக்கும். இந்தக் கதையைப் பொறுத்தவரை அவளின் நாற்பது வயதுக்குப் பின், நினைப்பதாய் வரும்போது கிட்டத்தட்ட முப்பது வருசத்துக்கு முன் நிகழ்ந்ததைத்தான் நினைத்துப் பார்க்கிறாள், அது போக அந்தக் கதை நடக்கும் களமும் அப்படியானது... அப்பாவின் தவறை விட, சித்தி செய்ததை அவளால் மன்னிக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. இறுதியில் உடைந்து அழுவது தான் மொத்தக்கதையினைச் சுமக்கும் இடம் என்பது என் பக்கப் பார்வை என்றாலும் சாருமதியின் பார்வையில் அவர் சொல்லிய கருத்து முழுக்க முழுக்க ஏற்புடையது. அவரின் கருத்து இனி வரும் கதைகளில் கவனமாய் இருக்க உதவும்.

சசி அண்ணா கதைமாந்தர்கள் குறித்துப் பேசினார். அவரைப் பொறுத்தவரை கதாபாத்திரங்கள் எல்லாருமே ரொம்பச் சாதுவாக இருக்கிறார்கள், வருகிறார்கள், போகிறார்கள், காதலியைத் தேடிப் போனாலும் கை கொடுக்க ரொம்பவே யோசிக்கிறான் என்பதையெல்லாம் கவிதை போல் சொன்னார். கிராமத்து மனிதர்கள் அப்படித்தான் என்பதே நான் பார்த்து வாழ்ந்த, வாழ்கின்ற வாழ்க்கை, மனதில் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்பதுடன் அந்த சங்கோசம் என்பது எல்லாரிடமும் இன்றும் இருக்கத்தான் செய்கிறது என்பதே உண்மை. 

தெரிசை சிவாவும் கதை மாந்தர்களையே பேசினார் என்றாலும் இவரின் பார்வை வேறாக இருந்தது. நானெல்லாம் கதை எழுத ரொம்ப மெனக்கெடுவேன் இவர் எந்த மெனக்கெடலும் இல்லாமல் எழுதியிருப்பதும் அது நம்மை ஈர்த்துக் கொள்வதும் ஆச்சர்யம் என்றார். மேலும் இவரின் கதைகளை எல்லாம் ஒரு புள்ளியில் இணைத்தால் ஒரு நாவலாக்கி விடலாம் என்றார். இதையே தசரதனும் சொன்னார். கிராமத்துக் கதைகள் என்னும் போது அவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். உண்மையை சொல்லப் போனால் என்னால் சிவாவைப் போல் எழுத முடியாது அவர் பாணி வேறு, நானெல்லாம் கிராமத்துக்குள் சுற்றுபவன் என்பதால் வாஞ்சையான மனிதர்களையே காட்சிப்படுத்துவேன் அது வாசிப்பவர்களுக்கு எளிமையாகவும், கொஞ்சம் சோர்வாகவும் தெரியலாம்.

ஹேமா அரிதாரம் பூசாத கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசினார். நினைவின் ஆணிவேர், தீபாவளிக் கனவு, வீராப்பு, அப்பாவின் நாற்காலி, மனத்தேடல் என எல்லாக் கதைகளின் முடிவும் அவருக்கு ஏன் பிடித்தது என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார். ஹேமாவிடம் விரிவான பார்வை எப்போதும் இருக்கும் என்பதால் பேசியவர்களில் எல்லாக் கதைகளையும் தொட்டுச் சென்ற விரிவான பார்வை எனக்கு இவரிடம் இருந்து கிடைத்தது. 

சிவசங்கரி கதாபாத்திரங்களின் அறம் குறித்துப் பேசினார். இவரும் ஹேமாவைப் போல் பல கதைகளைத் தொட்டுச் சென்றார். இதை இப்படிச் சொன்னதால்தான் அப்படி ஏன் சொல்லவில்லை என்று கேட்கிறோம். நமக்குத் தெரிந்த சில விஷயங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். அதைத்தான் இந்தக் கதைகள் செய்திருக்கின்றன என்று சொன்னார். நிகழ்வு முடிந்த பின்னும் ஆசிப் அண்ணனுடன் நீண்ட உரையாடல் நிகழ்த்தினார்.

சுரேஷ் அண்ணன் கதை சொல்லும் விதம் குறித்துப் பேசும்போது எழுத்துரு பிரச்சினை குறித்துச் சொன்னார். கதைகளைப் பட்டை தீட்ட நல்ல எடிட்டர் வேண்டும் என்றார். நினைவின் ஆணிவேர் கதையை இங்கிருந்து ஆரம்பித்திருக்கலாம் ஆரம்பக் காட்சிகள் தேவையில்லை என்றார். அந்த ஆரம்பக் காட்சிகளும் இறுதிக்காட்சிகளும்தான் அதை முதல் பரிசுக்குரிய கதையாக ஆக்கியது என்பது சிறுகதைப் போட்டியின் நடுவர்கள் சொன்னது, இந்த இடத்தில்தான் ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசப்படுகிறது. சுரேஷ் அண்ணனின் பார்வையில் சொன்ன கருத்துக்கள் எல்லாமே முயற்சித்துப் பார்க்க வேண்டியவை. எல்லாக் கூட்டங்களிலும் அடித்து ஆடுபவர் ஏனோ எதிர்சேவைக்கு கொஞ்சம் தடவிக் கொடுத்தார், ஒருவேளை பாவம் அடி தாங்கமாட்டான்னு விட்டுட்டாரோ என்னவோ.

சுபான் அண்ணா கதைகள் குறித்துப் பேசவில்லை, அபுதாபி வந்த போது நானும் அவரும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். அது குறித்து, விழாக்கள் குறித்து எழுதியதை மனதில் வைத்து டெல்லிகணேஷ் கூப்பிட்டுப் போட்டோ எடுத்துக் கொண்டது என எல்லாம் சொல்லி, நினைவின் ஆணிவேரில் முதல் பாரா வாசித்தேன் எனக்கு ஒட்டவில்லை என்பதுடன் நிறுத்திக் கொண்டார். நிகழ்வுக்குப் பின் தசரதன் வருத்திச் சொன்னதில் சுபான் அண்ணாவின் பேச்சும் ஒன்று என்பதை இங்கு நான் மறைக்க விரும்பவில்லை, நாலு வரியில் எப்படி அத்தனை கதையும் ஒட்டாது என்பதை முடிவு செய்தார், அப்படியே பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு கதைகள் ஒட்டவில்லை எனச் சொல்லியிருக்கலாம் அல்லது மற்ற கதைகள் எப்படி என்பது எனக்குத் தெரியாது எனச் சொல்லியிருக்கலாம், பொத்தாம் பொதுவாய் வாசிக்காமல் இப்படிச் சொல்லலாமா என வருத்தப்பட்டார். விமர்சனங்களில் எல்லாம் இருக்கும் நமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மற்றதை கூட்டத்தோடு விட்டுவிட்டு போய்விட வேண்டும் தசரதன் என்று சொன்னதும் எனக்கு மனசுக்கு நெருக்கமான கதைகள் அண்ணா எல்லாமே என்றார் ஒரு பதிப்பக உரிமையாளராய், நான் கொடுத்த கதைகளை வாசித்து அவர் தேர்ந்தெடுத்த கதைகள்தான் இவை என்பதால் அவருக்கு வருத்தம் ஏற்பட்டதில் தப்பில்லை என்பதே என் எண்ணம்.  சுபான் அண்ணா பேசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. விமர்சனம் என்பது வேறு நட்பு என்பது வேறு என்பதை அறிந்தவன் நான். தசரதனை என் கதைகள் கவர்ந்ததால்தான் அவர் வேரும் விழுதுகளும் நாவலை அவரின் கடினமான சூழலிலும் கொண்டு வந்தார் என்பதால் அவரின் ஆதங்கமும் எனக்குப் புரிந்தது.

மஜீத் அண்ணன் பேசும் போது அவன் என் தம்பிடா... எங்க பக்கத்துக்காரன், எங்க ஊரு எழுத்து எங்களை இழுத்துக் கொள்ளும்... உங்களை எல்லாம் ஒருவேளை வாசிக்கும் போது வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் 'கொல்'லும் என்பதாய் இருந்தது. நிகழ்வுக்குப் பின்னும் அவர் ஆசிப்பண்ணனுடன் பேசிய அந்த விரிவான பார்வையும் இறுதியில் சின்னதாய் குமார் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கலாம் என்று சொன்னதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மேகலா பேசும் போது குமார் எங்க வீட்டுப் பிள்ளை, அவரின் எழுத்து கிராமத்து மனிதர்களைப் பேசக்கூடியது என்பதால் அப்படித்தான் இருக்கும், அதில் இப்படியில்லை, அப்படியில்லை என்று சொல்வதெல்லாம் சரியில்லை என்று வாதித்தார். அவருக்கு நேற்று கலந்து கொள்ள முடியாத சூழலிலும் அப்பாவும் பேச முடியலை, நாமளும் கலந்துக்கலைன்னா நல்லாயிருக்காது என்பதாலேயே கலந்து கொண்டு பேசினார், அய்யா பேச வேண்டிய இடத்தில் அதே பரிவோடும் நேசத்தோடும் மேகலா பேசியது மகிழ்ச்சி. அந்த வீட்டில் இன்னும் செல்லப்பிள்ளையாக இருப்பதும் ஒரு கொடுப்பினைதான்... தொடர்கிறது... இறுதிவரை இப்படியே தொடரும்.

தசரதன் பேசும்போது கதைகளை எப்படித் தேர்ந்தெடுத்தேன் என்பதையும், எழுத்துரு பிரச்சினை எதனால் ஏற்பட்டது என்பதையும், எதிர்சேவை என்ற பேர் எப்படி வந்தது என்பதையும் சொன்னதுடன் புதியவர்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கிறேன் என்பதையும் சொன்னார். சில விஷயங்களைப் விரிவாகப் பேச நினைத்து சில காரணங்களுக்காகப் பேசவில்லை என்பதை நிகழ்வுக்குப் பின் சொன்னார். என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து இரண்டு புத்தகங்களை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொண்டு வந்த தசரதன் நிகழ்வில் பேசியதும், நிகழ்வுக்குப் பின் அவரின் மனதில் தோன்றிய வருத்தத்தைப் பதிவு செய்ததும் மகிழ்வாக இருந்தது, 'எப்போதும் எங்கூட இருண்ணே' என்ற அந்த வார்த்தை கொடுக்கும் நெருக்கம் எப்போதும் தொடரட்டும்.

இராஜாராமைத் திடீரென பேச அழைத்தபோது அவர் ஏற்றிவிட்ட பால்கரசு பேசாமல் போன அந்த சா, ஜெ, ராவையெல்லாம் வைத்து அடித்து ஆடுவார்ன்னு பார்த்தா, ஒண்ணுமில்லை அம்புட்டுத்தான்னு ஜகா வாங்கிட்டார் என்றாலும் நூற்றிப் பத்துக்கதைகளை பனிரெண்டு கதைகளாக்கியது வரை தான் மீண்டும் மீண்டும் வாசித்தேன் என்றார். இப்பவும் நான் எழுதும் எல்லாவற்றுக்கும் முதல் வாசகர் இவர்தான், நல்லாயிருக்கு - இல்லை என்பதை உடனே சொல்லிவிடுவார்.

எப்பவும் போல் ஆசிப் அண்ணன் மிகச் சிறப்பாகப் பேசினார்... கதை எப்படி இருக்க வேண்டும், எப்படி வாசகனை ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் சொன்னதுடன் கதையாசிரியனாய் என்ன செய்ய வேண்டும், இப்படிச் செய்திருந்தால் இந்தக் கதை இன்னும் சிறப்பானதாக எப்படி மாறியிருக்கும் என்பதையெல்லாம் மிகச் சிறப்பாக அவருக்கே உரிய பாணியில் சொன்னார். மிக அழகான ஒரு நிகழ்வாகத் தொகுத்துக் கொடுப்பதில் அவர் எப்பவும் கில்லாடி, நேற்றைய நிகழ்வும் அப்படித்தான் இருந்தது கூடுதலாய் மனநிறைவுடனும்.

நிகழ்வுக்குப் பின் மிக நீண்ட உரையாடல், அந்த உரையாடல் நிகழ்விலேயே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்  ஏனென்றால் ஆசிப் அண்ணன் - மஜீத் அண்ணன் - சிவசங்கரி பேசிய பேச்சு, அவர்களின் பார்வை, பால்கரசு சொன்ன வேப்பங்குச்சி உவமானம், சிவமணி பேசியது என எல்லாமே சிறப்பானதாக இருந்தது. 

நான்... நமக்குப் பக்கம் பக்கமா எழுத வரும், பேசணும் என்றால்தான் சிக்கல்.. ஆனாலும் நேற்று ஏதோ பேசினேன், என்ன பேசினேன்... எப்படிப் பேசினேன் என்பதெல்லாம் தெரியாது. நாம பேசும் போது கொஞ்சம் ஆடியோ பிரச்சினை ஆனது. அதற்குள் சுரேஷ் அண்ணனும் ஆசிப் அண்ணனும் பேச்சின் போது இருமியதற்கு நான் திட்டியதே காரணம் என்று இராஜாராம் தன் வேலையை செவ்வனே செய்தார். சுரேஷ் அண்ணன் அத்திபூத்தாற்போல் எழுத்தாளனை திட்டாமல் பேசியதும், சந்தி - ஒற்றுன்னு எதுவும் சொல்லாததும் மகிழ்வாக இருக்கும் போது எதுக்குத் திட்டணும்ன்னு கேக்குறேன்... எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்ப்பு கொடுத்திருப்பதால் அடிங்க... அடிங்க... வாங்கிக்கிறேன்னுதான் உக்காந்திருந்தேன். ஆனா எல்லாருமே பாவம்டா இவன்னு கொஞ்சம் மெதுவாகவே அடித்தார்கள் என்பதே உண்மை.

உண்மையான விமர்சனமே முன் வைக்கப்பட்டது, இவற்றையெல்லாம் இனி வரும் கதைகளில் களைந்து மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதில்லை ஆனாலும் முயற்சிக்கலாம். என்னைப் பொறுத்தவரை என் பாணி எழுத்து என்பது கல்லூரிக் காலத்தில் - சென்னை வாழ்க்கையில் - அமீரகத்தில் என மாற்றம் கண்டிருக்கிறது. இப்போது எழுதும் கிராமத்துடன் ஒட்டிய கதைகள் எல்லாம் அமீரகம் வரும்வரை எழுதவில்லை. கதைகளின் போக்கில் சின்னச் சின்ன மாற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்து கொண்டே வருவதை கவனிக்க முடிவதால் இனி இப்படி மாற்றலாம் , இப்படி எழுத வேண்டும் என்பதையெல்லாம் முயற்சிக்கலாம் ஆனால் ஒரேயடியான மாற்றம் நிகழுமா என்பது தெரியவில்லை.

நேற்றுப் பேசிய, பார்வையாளர்களாய் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இந்த நிகழ்ச்சியை நடத்தப் பெரும் முயற்சி மேற்கொண்ட பாலாஜி அண்ணன், ஜெஸிலா மேடத்துக்கு நன்றி. பாலாஜி அண்ணன் எல்லாக் கூட்டங்களிலும் பேசிவிட்டு இதில் பேசமுடியாமல் போனது ரொம்ப வருத்தமாக இருந்தது என்றாலும் அவரின் சூழலையும் புரிந்து கொள்ள வேண்டும்தானே.

இப்படியான விமர்சனங்களே எழுத்தை இன்னும் மெருகேற்றும் என்பதை நான் எப்போதும் உணர்ந்தே இருப்பதால் என்னைப் பொறுத்தவரை மிகச் சிறப்பான, மகிழ்வான கூட்டம் இது.

எனது மனைவி, மகனுக்கு இப்படியானதொரு கூட்டம் புதிதென்பதால் நிகழ்வுக்குப் பின் பேசும் போது இப்படி எழுதியிருக்கலாம் என்று பேசியதெல்லாம் எங்கே என்னைத் திட்டியதோ என நினைத்து தங்களின் மன வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அதேபோல் என்மீது அதீத நேசம் கொண்ட மேகலா, தசரதனுக்கும் இப்படி அடித்து ஆடும் கூட்டம் புதிதாகத் தெரிந்திருக்கலாம், அதனால்தான் நிகழ்வு முடிந்தபின் என்னிடம் பேசியபோது தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார்கள் என்றாலும் அது அவர்களின் எண்ணம், அதற்கு விளக்கம் கொடுத்தாகிவிட்டது.  என்னைப் பொறுத்தவரை இதற்கு முன் நிகழ்ந்த கூட்டங்களில் எழுத்தாளர்கள் வாங்கியதில் பாதி கூட நான் வாங்கவில்லை என்பதே உண்மை என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லி எங்கள் குழுமத்தின் பார்வையின் வீச்சு எப்பவும் நேராகவே இருக்கும் என்பதையும் சொன்னேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்களா தெரியாது ஆனால் நான் விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டேன்.

இப்படியான விமர்சனக் கூட்டங்கள் தொடரட்டும்.

நன்றி.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி...

வாழ்த்துகள் குமார்...

Yarlpavanan சொன்னது…

மிகச் சிறப்பு.
இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

//நான் விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டேன்.// இது போதும்.