மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 3 மே, 2021

17வது திருமண நாளில்...

திருமணத்துக்கு முன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் திருமணத்துக்குப் பின் அப்படியான ஏனோ தானோ வாழ்க்கையெல்லாம் வாழ்ந்து விடமுடியாது. அதுவரை தனி ஒருவனாய் சுற்றித் திரிந்து விட்டு நம்மை நம்பி வந்த ஒருவருக்கான, நம் குழந்தைகளுக்கான வாழ்க்கை என நம்மை முன்னிறுத்தி குடும்பத்தைச் சுமக்க வேண்டிய வாழ்க்கைக்குள் அடைபட்டுப் போகிறோம்.


திருமணத்துக்கு முன் ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள்தான் என்னை தேவகோட்டை வீதிகளில் சுமந்து திரிந்தது. பகல் இரவு பாராமல் எங்கள் ஊருக்கும் நாங்கள் வைத்திருந்த கணிப்பொறி மையத்துக்கும் வேலை பார்த்த கல்லூரிக்கும் மாறிமாறிச் சுமந்து பயணித்தது. அது கூட அப்பா வாங்கியதுதான்... கணிப்பொறி மையம், கல்லூரி வேலை எல்லாம் ஒரு சைக்கிள் வாங்கும் அளவுக்குக் கூட கையிருப்பைக் காட்டவில்லை என்பதுதான் உண்மை. அவை இரண்டும் நிறைய மாணவர்களையும் நல்ல உள்ளம் கொண்ட பெரியவர்களையும் நண்பர்களாக்கித் தந்தது என்பது மட்டும் உண்மை... இப்பவும் உறவுகளைவிட நட்புக்களே எனக்கு அதிகம். அந்த வகையில் நான் பாக்கியசாலிதான்.

திருமணம் முடிந்த உடன் தனிக்குடித்தனம்... மதுரையில் செல்வத்துடன் செல்லமாய் வாழ்ந்துவிட்டு என்னுடன் ஒரு சிறிய வாடகை வீட்டில்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார் என் மனைவி... இன்றுவரை தொடரும் புரிதலும்... எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அப்போதிருந்தே அவரிடம் இருந்தது, இதுவரை எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணமும் அவரிடமே அதிகம்... உண்மையில் கொடுத்து வைத்தவன் நான்தான்.

கல்லூரி வேலையோ, அதிக வருமானமில்லாத கணிப்பொறி மையமோ உனக்குச் சோறு போடாது என்பதை அவர்கள் உணரும்முன் நான் உணர்ந்துதான் இருந்தேன் என்றாலும் அந்தச் சொற்பச் சம்பளத்தில் தேவகோட்டையிலும் அதன்பின் அதைவிடச் சற்றே கூடுதலாய் சென்னை தினமணியிலும் சம்பளம் வாங்கி வாழ்க்கையை நகர்த்திய போது குடும்பத்துடன் இருக்க முடிந்த அந்த ஒரு சந்தோஷம் கொடுத்த நிம்மதியை, இன்றைய வாழ்க்கை கொடுக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளாய் வனவாசம் என்றுதான் சொல்ல வேண்டும்... வருடத்தில் ஒரு மாதம் குடும்பத்துடன் என்பது என்ன நிம்மதியைக் கொடுத்து விடப் போகிறது..? சென்னையில் வாங்கிய சம்பளத்தில் பாதிக்கு மேல் வீட்டு வாடகையும், மின்சாரக் கட்டணமும் என்றான போதும் மனைவி, மகளுடன் கழிந்த அந்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானவை... அதுவும் தினமணியில் ஆறு மணி நேர வேலை போக மீத நேரம் எல்லாம் குடும்பத்துடன் மட்டுமே...  பகல், மதியம், இரவென வாரச் சுழற்சியில் வேலை பார்த்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை... அந்த வாழ்க்கை திரும்பி வரப்போவதில்லை... இங்கு கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாம் என்றாலும் பொருளாதாரம் வழி விடுவதாய் இல்லை.

தேவகோட்டையில் வீடு கட்டியவுடன் கிராமத்தில் வீடில்லா நிலைக்குத் தள்ளப்பட்டு அதற்காக சின்னதாய் ஒரு வீடென இரண்டும் அடுத்தடுத்து அமைந்தது மகிழ்ச்சி என்றாலும் அது கொடுத்த அழுத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாத சூழலில்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் பொருட்டே சுற்றிச் சுழலும் பிரச்சினைகளுக்குள் வாழ்க்கை மீளாமல் கிடக்கிறது. இத்தனை சுழற்சியிலும் என்னைத் தாங்கிக் கொண்டிருப்பது மனைவி மட்டுமே. எத்தனை இடர் என்றாலும் நானிருக்கிறேன் என்று நிற்பாதாலேயே என் வாழ்க்கை இன்னும் நின்று விடாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை .

திருமணத்தின் போது அவர்கள் பெரிய இடம்... நாம் சாதாரணக் குடும்பம் என்ற சொற்கள் என்னை நோக்கி வரத்தான் செய்தன... ஓட்டு வீட்டுக்கும் மாடி வீட்டுக்கும் ஒத்துவருமா என்ற கேள்விகள் எல்லாம் எழுத்தான்  செய்தன... இப்படியா அப்படியா என்றெல்லாம் யோசிக்கச் சொன்னார்கள் பலர்... நல்லாயிருப்பே என்றார்கள் சிலர்... அந்தச் சிலரின் வாக்குப்படி நல்லாயிருக்கிறோம்... பிரச்சினைகள், வருத்தங்கள், பிரிவுகள், சின்னச் சின்ன சண்டைகள் என எல்லாம் இருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் 'நல்லா'த்தான் இருக்கிறோம்... 'நல்லா'வே இருப்போம் என்ற நம்பிக்கையும் எங்களுக்குள் 'நல்லா'வே இருக்கு.

சின்னச் சின்ன சண்டைகள் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை...? எங்களுக்குள் சண்டையே இல்லை... ஆதர்ஷ தம்பதிகள் என்று மார் தட்டிச் சொல்லும் பலரைப் பார்த்திருக்கிறேன்... அதெல்லாம் உண்மையா என்பது எனக்குத் தெரியாது... ஆனால் எங்களுக்குள் அப்பப்ப சின்னச் சண்டைகள் இந்தப் பதினேழு வருடத்தில் ரொம்பச் சொற்பமாய் நடந்திருக்கின்றன என்றாலும் விட்டுக் கொடுத்தலும் தட்டிக் கொடுத்தலுமே எங்கள் வாழ்க்கையை இனிமையாக நகர்த்திக் கொண்டிருக்கிறது.

நான் அப்படி ஒன்றும் விபரமானவன் அல்ல... அறிவானவனும் அல்ல... குடும்பத்தைக் கட்டி இழுத்துச் செல்லத் தெரிந்தவனும் அல்ல... வாழ்க்கையை இப்படி நடத்தலாம் எனத் தேர்ந்தவனும் அல்ல... ஏதோ எழுதுவேன்... அது கூட தம்பி இப்ப என்ன எழுதுது என என் பெற்றோர் சொன்னது போல் இதுவரை சொல்லாமல் எழுதுங்க என என்னைத் தட்டிக் கொடுக்கும் எங்கள் ஐயாவோடு என் மனைவியும் நிற்பதால் மட்டுமே இன்னும் என் எழுத்து தொடர்கிறது. 

எல்லாவிதத்திலும் எனக்கு மேலானவர் என் மனைவியே... தனியொருத்தியாய் இரண்டு வீடு கட்டியவர்... திருமணமான போது மதுரை வாழ்க்கையோடு தேவகோட்டை வாழ்க்கையை ஒத்துக்கொண்டு போக முடியாமல் திணறியவர்தான் காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கும் ஸ்கூட்டியில் தினமும் பயணித்து வீடு கட்டி முடித்தார். அதுவும் விஷால் எல்.கே.ஜி. படிக்கும் போதுதான் வீடு கட்ட ஆரம்பித்தோம்... அவனைப் பள்ளியில் விட்டுவிட்டு தேவகோட்டை வந்து மதியம் ரெண்டு மணிக்கு பள்ளி விடுவதற்குள் காரைக்குடி திரும்பி... உண்மையில் கிரேட்.

இப்பவும் எல்லாவற்றும் அவர்தான் அலைகிறார்... விஷால் பார்த்துக் கொடுக்கும் வீட்டு வேலையில் ஒரு சதவிகிதம் கூட ஸ்ருதி பார்ப்பதில்லை... கத்திக் கொண்டிருந்தாலும் என் மனைவிதான் வெளியில் ஓடவும் வீட்டுக்குள் வேலை பார்க்கவும் வேண்டும்... எங்க வீட்டு வேலை மட்டுமின்றி அவங்க அம்மா வீட்டுக்கான, தேவகோட்டை சார்ந்த எல்லா வேலைகளையும் அவர் ஒருவர்தான் பார்க்க வேண்டும்.. ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என் மனைவிதான் எனக்கான எஞ்சின் ஆயில்... அவரின் துணையின்றி என் பக்கம் அணுவும் அசையாது.

இந்த வாழ்க்கை பிரிவில்லாத வாழ்க்கையாக, குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையாக விரைவில் மாற வேண்டும் எனத் தினமும் சாமியிடம் வேண்டிக் கொள்கிறேன்... விரைவில் மாறட்டும்... 

மே 04 - 2003-ல் பெரியவர்களின் ஆசியுடன் கரம் கோர்த்து பயணிக்க ஆரம்பித்து 17 வருடங்களைக் கடந்திருக்கிறோம்... இதுவரை வாழ்வில் வந்த கசப்புக்களை மறந்து இனிமையான நினைவுகளோட இன்னும் சிறப்பான வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கிறோம் உங்கள் ஆசியுடன்.

எங்கள் மண வாழ்வு இப்போது போல் இனி வரும் காலங்களிலும் மகிழ்வோடு நேசத்தோடு நகர உங்களின் அன்பையும் ஆசியையும் எங்களுக்குத் தாருங்கள்.

நன்றி.

-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

Bhanumathy Venkateswaran சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கையில் அன்பும் நேசமும் என்றும் நிலைத்திருக்கவும், இந்த இனிய நாளை மீண்டும் மீண்டும் கொண்டாடவும் இறைவனை வேண்டுகிறேன். 

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai சொன்னது…

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் தொடரட்டும் பந்தம் ஏழேழு ஜென்மங்களும்...

ஸ்ரீராம். சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துகள் குமார்.  வாழ்க வளமுடன்.

சூரியா இராஜப்பா சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோ

கோமதி அரசு சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் குமார்.
நல்ல மனைவி கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்.
அவளை புரிந்து கொண்ட கணவன் அவளுக்கு கிடைத்த வரம்.

இருவரும் பல்லாண்டு வாழ்க!

குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ காலத்தை இறைவன் அருள்வார் விரைவில்.
வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துகள் குமார்! கொஞ்சம் தாமதமாகிவிட்டது வாழ்த்திற்கு

எப்போதும் மகிழ்வுடனும், நீங்களும் விரைவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இணைந்து வாழவும் உங்களின் இஷ்ட தெய்வம் முருகன் அருள்வார்!

நல்லதே நடக்கும்

துளசிதரன்

கீதா