மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 17 ஏப்ரல், 2021

மனசு பேசுகிறது : விவேக் முதல் விஷால் வரை

னங்களின் கலைஞன் விவேக்கின் மரணம் தமிழகத்தையே அழ வைத்திருக்கிறது. எதிர்பாராத மரணம் என்பது எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதை உணர முடிகிறது.  சமீபத்திய மரணங்கள் நாளைய விடியல் நமக்கு இருக்குமா..? என்ற பயத்தையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சில மரணங்கள் சட்டென நிகழ்ந்து விடும்... இப்பத்தானே பேசிக் கொண்டிருந்தார்... எப்படி ஆனது என்ற கேள்வியே நமக்குள் எழும்... அப்படித்தான் இன்றைய விடியல் இருந்தது. 


காமெடி என்ற பெயரில் கடித்து வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் வடிவேலுவின் வரவால் தான் இன்னும் வளர முடியாத நிலையிலும் கூட சமுதாயக் கருத்துக்களை போகிற போக்கில் காமெடியுடன் கலந்து கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்து, அதனோடு குணச்சித்திர நடிகனாகவும் கலக்கிக் கொண்டிருந்தவர் விவேக்... இன்று வடிவேலு மற்றும் விவேக்கின் இடத்தை நிரப்ப நல்லதொரு நகைச்சுவை நடிகர் இல்லை என்பதே உண்மை. விவேக்கின் இழப்பு தமிழ்ச்சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே மிகப்பெரிய இழப்பு.

நண்பர்கள் படம் பார்த்தபோதும் புதுப்புது அர்த்தங்கள் பார்த்த போதும் வித்தியாசமான மனிதராய் தெரிந்த விவேக், சாமி படத்தில் பண்ணிய காமெடியெல்லாம்... இது எல்லாமே சமூகக் கருத்துக்கள்தான்... மறக்க முடியாத நடிகர்... அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

***


ஹத் பாசில் நடித்த படம் என்றால் அது குப்பை என்றாலும் உட்கார்ந்து பார்த்து விடுவேன்... அவரின் நடிப்பின் மீது அத்தனை வெறி எனக்கு... சமீபத்தில் வந்த 'ஜோஜி'யை நண்பர்கள் எல்லாரும் புகழ்ந்து தள்ளினார்கள். ஷேக்ஸ்பியரின் மேக்பெத்  நாடகத்தின் கருவை கொஞ்சமாய் எடுத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்... பண்ணப் போகும் இரண்டு கொலைகளுமே நடக்கக் கூடும் என்பதை படம் பார்ப்பவர்கள் முன்னதாகவே உணர முடியும். உடம்பைக் குறைத்த பஹத்தின் நடிப்பில் குறை சொல்ல முடியாது என்றாலும் நண்பர்கள் ஆஹா... ஓஹோ... மலையாள சினிமாடா என்று புகழ்ந்த அளவுக்கு எல்லாம் ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றியது. முதல் முறை பஹத்தின் படத்தைத் தொடர்ந்து பார்ப்போமா வேண்டாமா என்ற எண்ணத்துடனேயே நாலு நாள் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்திருக்கிறேன். ஜோஜி ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே பஹத்தின் இருள்... ஒரு மழை இரவு... தனி பங்களா... அதில் தனியே இருக்கும் ஒருவன்... அங்கு வந்து சேரும் நகரில் நடந்த தொடர்கொலையை மையப்படுத்தி நாவல் எழுதிய எழுத்தாளன் மற்றும் அவனது காதலியான வக்கீல்... என மூன்று பேர்தான் கதைக்குள்... விறுவிறுப்பாக நகரும் கதைக்குள்... மின்சாரம் போன பின்னான கதை நகர்வு... விறுவிறுப்புக்குப் பதில் சலிப்பையே கொடுக்கிறது என்றாலும் ஜோஜிக்கு இது ஓகே ரகம்தான்... விருப்பம் இருந்தால் பார்க்கலாம்.

***


தீதும் நன்றும் என்றொரு படம்... புது முகங்கள்.... கொள்ளை அடிக்கும் நண்பர்கள்... அவர்களை வைத்து தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் மூன்றாமவன் என நகரும் வடசென்னைக் கதைக்களம்... அறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் ஒரு நாயகனாகவும் ஈசன் மற்றொரு நாயகனாகவும் நடிக்க, அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் இருவரும் நாயகிகள்... அபர்ணாவுக்கு அழுது வடியும் கதாபாத்திரம்... லிஜோமோல் அடித்து ஆடும் கதாபாத்திரம் என்பதால் அபர்ணாவைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார் நடிப்பில். படமும் நன்றாகவே இருக்கிறது.

***

ழுத்தாளர் பெ.கருணாகரன் அண்ணா கவிதைக்கு அடி கொடுங்கள் இவர் அதற்கு கவிதை எழுதுவார் என எழுபதுக்கும் மேற்பட்டவர்களைக் கோர்த்து விட்டு, அதை நூலாக்கும் எண்ணத்தில் இருக்கிறார். அதில் என்னையும் கோர்த்து விட்டார்... சில நண்பர்கள் எனக்கும் 'அடி' கொடுத்தார்கள். அதில் திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் என்பவர் கொடுத்த வரிகள்... மண்ணோடும் மனிதர்களோடும் ஒத்துப் போக, அதற்கு எனக்குத் தெரிந்த வரையில் முகநூலில் கவிதை எழுதியிருக்கிறேன். முடிந்தவர்கள் வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

***

நேற்றுக் காலை விஷாலுக்குப் போன் செய்த போது எக்ஸாம் எழுதிக்கிட்டு இருக்கேன்... அப்புறம் கூப்பிடுங்க எனச் சொன்னான். அதன் பின் கூப்பிட நேரமில்லை என்பதால் இரவுதான் கூப்பிட்டேன். என்னடா ரொம்ப பிஸி போல, அதுவும் ஆன்லைன் கிளாஸே அட்டன் பண்ணாம எக்ஸாம் எழுதுறேன்னு சொன்னியா நான் ஆடிப் பொயிட்டேன் என்றதும், அதென்ன மாத்ஸ் எக்ஸாம்தானே போன்ல கால்குலேட்டர் எதுக்கு இருக்கு... அதை யூஸ் பண்ணி எழுதியாச்சு என்றான். அப்ப அடுத்த பரிட்சைக்கு என நான் கேட்டதும் சோசியல் சயின்ஸ்தானே... எதுக்கு கூகிள் இருக்கு... அதெல்லாம் எழுதிடலாம் என்றான் சர்வ சாதாரணமாக.

அதன் பின் காலையில போனை வையிங்க என நீ சொன்னதால்தான் இதுவரை நான் கூப்பிடலை என்றேன். ஆமா மணி ஐயா முதல்ல போன் பண்ணினாங்க... அப்புறம் சேகர் ஐயா பேசுனாங்க... அப்புறம் நீங்க... நான் எக்ஸாம் எழுதணுமா வேண்டாமா... அதான் சொன்னேன் என்றான். அதை மணி ஐயாக்கிட்ட சொன்னியா என்றதும் ம்... அவரு பேசும்போது அவுக அக்கா (அவனோட ஆயா) பக்கத்துல இருந்தாக... அப்புறம் அக்காவோட பிள்ளைங்க ரெண்டு பேரும் (அம்மாவும், சித்தியும்) இருந்தாங்க... அவருக்கிட்ட சொல்லியிருந்தா என்னைய வச்சிக் குமுறி இருப்பானுங்க என்றான். அப்ப என்னைய மட்டும் திட்டியிருக்க... என்னையத் திட்டும் போது யாரும் கேக்கலையா என்றதும் உங்களைக் கேக்க யார் இருக்கா... சரி சரி... அதை விடுங்க என்றான். என்னத்தைச் சொல்ல... நம்மளை வச்சிச் செய்யவே வந்து பிறந்திருக்கிறான் போல.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

விஷால் - புன்னகை!

ஜோஜி பார்த்து நானும் நொந்து போனேன்.  உண்மையில் ACT என்றொரு படம் சொன்னார்கள், அதுவோ, டெனெட்டோ பார்க்க வேண்டும் என்று அமர்ந்தது!

விவேக் கலங்க வைத்த நிகழ்வு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மகனின் குறும்பு - ரசிக்க வைத்தது! நம்மை வைத்து காமெடி செய்ய நம் மகன்/மகளே போதும்! :) அம்மாவின் கூட்டணி வேறு! ஹாஹா.

விவேக் - வேதனை.

ஜோஜி - பார்க்க வேண்டாம் என்றே தோன்றுகிறது - நீங்களும் சொல்லி விட்டீர்கள், ஸ்ரீராமும் சொல்லி விட்டார். சென்ற வாரத்தில் உங்கள் பக்கத்தில் படித்த பிறகு “மண்டேலா” பார்த்தேன் - யூவில்! நன்றாகவே எடுத்திருந்தாலும் கடைசியில் சினிமாத் தனமாகவே இருந்தது - பல விஷயங்கள் நடக்க முடியாதவை!

கவிதை நன்று. பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விவேக் ஏற்படுத்திய தாக்கம் நல்விளைவுகளை ஏற்படுத்தும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பகுத்தறிவாளர் இழப்பு...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விஷால் சேட்டையை ரசித்தேன்... (!)

Anuprem சொன்னது…

தம்பியின் குறும்பு அழகு ...

விவேக் ...மனதை வருத்தும் நிகழ்வு

ezhil சொன்னது…

பகத் படங்கள் வித்தியாசமாய் இருக்கும் என எப்போதும் பார்ப்பேன். ஜோஜி,இருள் இரண்டுக்குமே நட்புகள் வெவ்வேறு விமர்சனங்கள் சொன்னதால் ஜோஜி மட்டும் பார்த்தேன். பெரிதாய் ஈர்க்கவில்லை. இருள் அதைவிட பெட்டர்னு சொன்னதால் பார்க்கப் போகிறேன் நன்றி