மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 14 ஏப்ரல், 2021

சினிமா : மண்டேலா

 மண்டேலா

ஓரு ஓட்டுத்தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இருந்தால்... அந்த ஓட்டு இவருடையதுதான் என்பதும் தெரிந்திருந்தால்... ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இன்றைய தமிழகத்தில் என்னவெல்லாம் நிகழும் என்பதுதான் படத்தின் கதை.



தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை புதிய இயக்குநர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் ரசனைக்கு ஏற்றவாறு மனதுக்குள் எழுதிப் பொத்திப் பொத்தி அடைகாக்கும் கதையோடு வந்து அதைத் தங்களின் முதல் படமாகக் கொடுத்து மக்கள் மத்தியில் தங்கள் பெயரை நிலை நிறுத்துவதுடன் சரி, அடுத்த படமே மாஸ் என்னும் மண்ணாங்கட்டியின் பின்னால் போய், அவருக்காகவே கதையைக் குத்திக் குதறிக் காணாமல் போய்விடுகிறார்கள்... அந்த வரிசையில் இயக்குநர் மடோன் அஷ்வின் சேராமல் இருக்கட்டும் என்பதே மனதின் எண்ணமாய்...

யோகிபாபு என்றாலே எனக்கு சந்தானத்தைப் பார்ப்பது போல்தான்... காமெடி என நம்மைச் சிரிக்க வைக்காமல் செய்யும் காமெடி நடிகர்கள் வடிவேலு காணாமல் போன பின் தமிழ்த் திரையில் அதிகம்... அதில் இவரும் ஒருவரே... அதனால் இவர் நடித்த படங்களைப் பார்ப்பதற்கு ரொம்பவே யோசிப்பேன் ... ஆனால் இந்தப் படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக, தன் ஓட்டுக்காக பணம் வாங்கும் மனிதனாக அடித்து ஆடியிருக்கிறார்... உண்மையில் காமெடி செய்கிறேன் எனக் கொல்லாமல் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிக்க வைத்தார்.

வடக்கூர், தெக்கூர் என இரண்டு ஊர்களுக்கு இடையேயான தீர்க்க முடியாத பிரச்சினைகளுடன் இரு ஊருக்கும் பிரசிடெண்டான அப்பா வாதத்தில் விழுந்துவிட,  அவர் தேர்தலில் நிக்க முடியாத சூழலில் அவரின் மகன்கள் இருவரும் எதிர் எதிராய் போட்டிக் களத்தில்...

இருவருக்கும் ஒரே ஒரு ஓட்டுத்தான் வித்தியாசம் என்ற நிலையில் இன்னைக்கோ நாளைக்கோ என இழுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கூடுதல் ஒற்றை ஓட்டுக் கிழவியும் 'என்னாது எம்ஜியாரு செத்துட்டாரா..?' என்ற கேள்வியோடு முடிந்து போகிறது. 

இப்போது இருவருக்கும் சமபலம்... இங்குதான் தமிழகத்தின் பண அரசியல் விளையாட ஆரம்பிக்கிறது... ஒற்றை வாக்குக்காக கொட்டிக் கொடுத்து வாக்காளர்களை இழுக்கும் செயல் திட்டத்தை தீவிரமாகச் செய்ய ஆரம்பிக்க, இரண்டு தரப்பிற்குள்ளும் பிரச்சினைகள் வலுக்கிறது.

இரண்டு ஊருக்கும் பொதுவானவனாக இருக்கிறான் முடிதிருத்தும் ஸ்மைல்... இளிச்சவாயன்தான் ஆங்கிலத்தில் ஸ்மைல் ஆகியிருக்கிறான்... பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டுவிட்டு அவர்கள் ஐந்து வருடங்கள் சம்பாரித்துக் கொழுப்பதைப் பார்த்து வருத்தப்பட்டு, மீண்டும் அடுத்த தேர்தலில் ஐநூறுக்குப் பதில் ஆயிரம் என்றதும் வாயைப் பிளந்து வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் நாம்தான் இந்த 'இளிச்சவாயன்' கதாபாத்திரம்... ஆம் நாமே இளிச்சவாயர்கள். லட்சக்கணக்கில் பொதுக்கூட்டங்களுக்கு மாஸ்க் இல்லாமல் கூடும் போது கொரோனா தமிழகத்தில் இல்லை என்றார்கள்... நாமும் ஆமாம் என்றோம். இப்போ அதிகமிருக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் தண்டம் கட்டு என்கிறார்கள்... கட்டிக் கொண்டிருக்கிறோம்... அப்போ இளிச்சவாயன்... அதாங்க ஸ்மைல் யாரு... நாமதானே.

உன் பேர் என்னன்னு தெரியாதுடா என்பதே எல்லாருடைய பதிலாகவும் இருக்கும் போது மண்டேலா எனப் பெயர் வைக்கும் தபால்காரியாய் வரும் ஷீலா, நாஞ்சில் வட்டார வழக்கை மிகச் சிறப்பாக பேசுவதுடன் அருமையாக நடித்தும் இருக்கிறார். தமிழ்ச்சினிமா கவனிக்க வேண்டிய நடிகைகளில் ஒருவர்... கவனிக்கப்படுவாரா..?

மண்டேலாவாகி வாக்காளர் அடையாள அட்டை வந்தபின்தான் மண்டேலா வாழ்வில் தேர்தலால் வசந்தம் வருகிறது. தனக்கானதை தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தடுத்தும் கேட்காமல் வாங்கிக் கொள்கிறான். இருட்டில் ஒரு பெண் சொல்லும் வார்த்தைக்குப் பின் அதை ஊருக்காகச் செய்ய ஆரம்பிக்கிறான். அதனால் அவன் அனுபவிக்கும் துன்பம் என்ன என்பதும்... தேர்தல் என்ன ஆனது... சினிமாவிலாவது வாக்குக்குப் பணம் வாங்கும் மக்கள் திருந்தினார்களா என்பதே மீதிக்கதை.

யோகிபாபு தன் மீது அனுதாபத்தை வரவைக்கும் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போகிறார். புறவாசல் வழியாக வீடுகளுக்குள் செல்லும் மண்டேலா, அதே போன்ற வாசலை தபால் நிலையத்திலும் தேடுவது எதார்த்தம்... முடிவெட்டிக் கொண்டு கஞ்சி கொடுப்பதும், கையில் இருப்பதைக் கொடுத்துப் போகச் சொல்வதும் சலவை மற்றும் முடிதிருத்துபவர்களை தங்களுக்கு பணி செய்யச் சொல்லி, நல்லநாள் பெரியநாட்களின் போது அவர்களுக்கு உணவு உடை கொடுப்பதும் அறுவடை முடிந்தபின் அவர்களுக்கு இத்தனை கட்டுக் கதிர் எனக் கொடுப்பதையும் பார்த்து வளர்ந்திருக்கிறேன்... அப்போதெல்லாம் இந்த வாக்குக்குப் பணம் வரவில்லை... மக்கள் மக்களாகவே இருந்தார்கள்.  இப்போது இந்தக் குடி பணிகளும் இல்லை... கிராமங்களில் அதிகமான குடும்பங்களும் இல்லை...  விவசாயமும் இல்லை.

ஊர்ப் பெரியவராக, வடக்கூருக்கு ஒண்ணு தெக்கூருக்கு ஒண்ணு என இரண்டு பொண்டாட்டிகளுடன் பிரசிடெண்டாக சங்கிலி முருகன்... மகன்களாக ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி, தான் கொடுக்க வேண்டிய இடத்தில் வேண்டாம் எனச் சொல்லிச் செல்லும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கல்கி, சண்டையின்னு வந்துட்டா முதலில் செருப்பைக் கழற்றி வைக்கும் குமாரமூர்த்தி, யோகிபாபுடன் இருக்கும் அந்தப் பையன் என எல்லாருமே நிறைவான நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள்.

பரத் சங்கரின் இசை படத்துக்கு கூடுதல் பலம்.

'கர்ணன்'களைக் கொண்டாடும் நாம் 'மண்டேலா'க்களையும் கொண்டாடினால் இன்னும் சிறப்பான படங்களை அறிமுக இயக்குநர்கள் கொடுப்பார்கள் என்று நம்பலாம்.  இயக்குநர் மடோன் நாளைய இயக்குநர்களில் கலந்து கொண்டு நம்பிக்கை அளித்தவர் என்பதால் மண்டேலாவில் நிறையவே பேசியிருக்கிறார். குறிப்பாக படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலான புதியவர்களை அவர்கள் போக்கில் பயணிக்க விட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தென் மாவட்டம் என்றால் ஒரே மாதிரியான பேச்சு வழக்கு, அடிதடி எனச் சொல்லிச் செல்லும் தமிழ்ச் சினிமாவில் நாஞ்சில் வட்டார வழக்கை ஏறத்தாழ எல்லாருமே மிகச் சிறப்பாகப் பேசி நடித்திருக்கிறார்கள்... அதுவும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணிதான். 

படத்தில் சரியில்லை எனச் சொல்ல ஒன்றுமே இல்லையா என்றால் சினிமாத்தனம் இருக்கத்தான் செய்கிறது. வடக்கூர், தெக்கூர் என இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெரியவரின் மகன்கள் மட்டும் அம்மா பிறந்த ஊரிலேயே வசிக்கிறார்கள் என்பது... ஒரு ஓட்டுக்காக இப்படியெல்லாம் இறங்கி வேலை செய்வார்களா என்று  யோசிக்க வைப்பது... இறுதிக் காட்சியில் அக்மார்க் சினிமாத்தனம் எனச் சிலவும் உண்டென்றாலும் மண்டேலா பார்க்க வேண்டிய படம்... கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்... அடுத்த தேர்தலுக்காச்சும் காசு வாங்காம, இந்தக் கயவர்களை விரட்டுவோமென ஒரு சிலராவது முடிவெடித்தால் கூட இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான்.

மண்டேலா... மனதில் நிற்கும்.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

vic சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

vic சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மண்டேலா - உங்கள் தளம் வழியே இப்படி ஒரு படம் வந்திருப்பதை அறிந்தேன்.

யோகிபாபு - சமீப வருடங்களில் அதிகமான படம் நடித்த நடிகர் என்று ஒரு தகவல் படித்தேன்.

படம் குறித்த தகவல்களுக்கு நன்றி குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

நானும் படம் பார்த்து ரசித்தேன்.  யோகிபாபுவின் திறமை, கிருதா இசக்கி என்று எல்லோருமே நன்றாகச் செய்திருந்தார்கள்.  அவர்களின் உண்மையான பெயர்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தியேட்டர்களில் வந்திருக்க வேண்டும்... அருமையான படம்...

துரை செல்வராஜூ சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்...

ezhil சொன்னது…

ஆம் நிறைய பேர் இந்தத் திரைப்படம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள் உங்கள் விமர்சனம் அந்த ஆவலைத் தூண்டியுள்ளது. விரைவில் பார்க்கிறேன். நன்றி