மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 1 செப்டம்பர், 2016

நல்ல எழுத்தை விதைப்போம்...நண்பனுக்குப் பதில்

ண்பன் தமிழ்க்காதலனின் கடிதத்துக்கு முகநூலில் நான் கொடுத்த பதில் கடிதம் இங்கே...

ன்பின் நண்பா...  கவிஞர் தமிழ்க்காதலா... கவிதைகளை நேசித்து எழுதும் பண்பாளனிடமிருந்து எனக்கென ஒரு கடிதம்... அது எனக்கான கடிதம் மட்டுமல்ல... நானும் எழுத்தாளன் என்று என்னைப் போல் திரியும் எல்லாருக்குமான கடிதம்... கடிதத்தின் ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து வாசித்து உள்வாங்கிக் கொண்டேன்.
வரிக்கு வரி உண்மையை எடுத்துச் சொன்ன கடிதத்தை  நீ ஆரம்பித்திருப்பது என்னவோ எனக்கான கடிதமாகத்தான்... அதிலிருக்கும் கருத்துக்களை பொதுவில்தான் வைத்திருந்தாய்... எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு இணையத்தில் சுழலும் நாம் அனைவருமே ஏற்றுக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்... கதையோ கவிதையோ அல்லது கட்டுரையோ... அந்தச் சூழல்... அப்போதைய பரபரப்பு...  முதலியவையே அதில் முதன்மையாக நிற்கின்றன என்பதை நாம் அறியலாம். செய்திகளின் பரபரப்பே நம்மை எழுதத் தூண்டுகின்றது என்பதை நாம் அறிவோம். ஒரிசா நிகழ்வை கட்டுரையாகவோ, கவிதையாகவோ ஆக்கியோர் எத்தனை பேர் என்பதை நாம் அறிவோம்... இந்த நிகழ்வை மட்டுமல்ல... ஒவ்வொரு நிகழ்வின் போதும் நாம் வார்த்தைகளை வசமாக்கி அள்ளித் தெளிக்கிறோம். இவை காலங்கடந்து நிற்கப்போவதில்லை என்றாலும் அன்றைய தினத்தில் இவைதானே முன்னணியில் நிற்கின்றன.
'வரலாறுகளை கதைகளில் கொண்டு வா' என நம் எழுத்து சம்பந்தமான விவாதங்களில் எல்லாம் கடந்த சில வருடங்களாக நீயும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாய்...  எதார்த்தங்களை எழுத்தில் கொண்டு வர முடிந்த என்னால் ஏனோ வரலாறுகளை எழுத்தில் கொண்டு வரமுடியவில்லை... சில சமயங்களில் அதை முயற்சித்துப் பார்த்து தோற்றும் போயிருக்கிறேன். ஒருவேளை வரலாறுகளை கரைத்துக் குடிக்க வேண்டுமோ..? அப்படி என்றால் என்னால் முடியும் என்ற  நம்பிக்கையில்லை... வரலாறுகளின் வாசிப்பு எனக்கு வேப்பெண்ணெய்யாக கசக்கிறது என்றாலும் சில நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் வாசித்தேன்... அது ஒரு அருமையான அனுபவம்... அந்த வாசிப்பின் ஈர்ப்பில் உடையார் ஆரம்பித்தேன்... ஏனோ ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறேன்.
படிக்கும் காலத்தில் வாசிப்பு என்பது மனம் நிறைந்த சுவாசிப்பாக இருந்தது... வாசிப்பது ஏகாந்த அனுபவத்தைக் கொடுத்தது. லெனின், மார்க்ஸ் என ஐயாவின் வீட்டில் இருந்து எடுத்து வாசித்த புத்தகங்கள் எத்தனை... எத்தனை... எடுப்பதும் வாசிப்பதும் அங்கு எனக்கு கிடைத்த வரம்... எதையும் எடுத்து வாசிக்கலாம்... இன்று வரை தடையில்லை எனினும் வாசிப்பு கல்லூரிப் படிப்போடு காணாமல் போனதுதான் ஆச்சர்யம். அன்று அது தவிர வேறு வேலை இல்லை... அதனால் வாசிப்பின் மீது ஒரு காதல் இருந்தது ஆனால் இன்றோ வேலைப்பளுவும் குடும்ப பிரச்சினைகளும் வாசிப்பை எட்டிக்காயாக ஆக்கிவிட்டிருக்கிறது. வாசிப்பின் மீதான காதல் வசமிழந்து விட்டது. அப்படியிருந்தும் இப்போதும் சில நல்ல கதைகளை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து உண்டு. என்னதான் இருந்தாலும் புத்தக வாசனையுடன் வாசிப்பதில் இருக்கும் சுகமும் மணமும் செல்போனில் தள்ளித்தள்ளி வாசிப்பதில் இல்லைதானே...
உனக்கொன்று தெரியுமா..? நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து எழுதவில்லை... கல்லூரியில் படிக்கும் போது எழுத்தில் ஆர்வம் உண்டாகி கதைகள், கவிதைகள் எழுத ஆரம்பித்து எங்கள் ஐயாவின் ஆசியுடன் தாமரையில் முதல் கவிதை வெளிவந்து பொன்னீலன் ஐயாவின் பாராட்டுக் கடிதமும், கலை இலக்கியப் பெருமன்ற விழாவிற்கு வந்த போது நேரடி வாழ்த்தும் என்னைத் தொடந்து எழுதத் தூண்டியது என்பதே உண்மை. அதன்பின் ஒருசில பத்திரிக்கைகளில் வரவும் என்னவோ சாதித்து விட்டதைப் போல நிறைய கிறுக்கித்தள்ள ஆரம்பித்து வீட்டில் திட்டு வாங்கியது தனிக்கதை.
கல்லூரி முடித்த பின்னர் எழுதுவதை விட்டு விட்டு வாழ்க்கைத் தேடலுக்கான ஓட்டம்... அந்த ஓட்டத்தில் எழுத்து எங்கே போனதென்றே தெரியவில்லை... திருமணமாகி, மகள் பிறந்த பின்னர்தான் மீண்டும் விட்ட எழுத்தை விரட்டிப் பிடித்தேன். அதுவும் சென்னையில் எழுத்துத்துறையில் பணி கிடைத்த காரணத்தால்தான் இல்லையேல் எழுத்துப் போனது போனதுதான்... வாழ்க்கை நகர்த்தலில் வரவுக்கும் செலவுக்கும் சண்டை வர, ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வரவு-செலவு சண்டையை சீர் செய்யும் என சிந்தையில் அள்ளித் தெளித்த உறவுகளால் மனமேயின்றி விமானம் ஏறினேன். குடும்பத்தை விட்டு வந்த போது எழுத்தை இறக்கி வைத்து விட்டுத்தான் வந்தேன். வெளிநாடு சில சந்தோஷங்களையும் பல இன்னல்களையுமே கொடுத்தது... கொடுத்துக் கொண்டிருக்கிறது... உள்ளம் பாதிக்கப்பட்ட நிலையில் உடலளவிலும் பாதிப்புக்களை கொடுத்த வாழ்க்கை இது என்பதை நீ அறிவாய்தானே...
பல நாள் வலிகளைச் சுமந்த மனசுக்கு எழுத்து இதமாக இருக்குமென பத்திரிக்கை நண்பனின் வழி காட்டலின் பேரில் வலைப்பூ ஆரம்பித்து இரண்டாம் முறையாக விட்டொழித்த எழுத்தை மீண்டும் பிடித்தேன்... நிறைய எழுத நேரமும் கிடைத்தது... களமும் கிடைத்தது. பிறந்த மண்ணின் மனிதர்களை கதை மாந்தர்களாக்கி வாழ்க்கைக் கதைகளைப் பேசினேன்... பலருக்கும் பிடிக்கும் எழுத்தாய் ஆகிப்போனதில் மீண்டும் தாமரைக் கவிதையால் குஷியானது போல் மனசு சந்தோஷமாகி எழுத்தை சுவாசிக்க ஆரம்பித்து இப்போதும் அதன் பின்னே தொடந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லைதான்.... காரணம் என்னவென்றால் இன்று எதார்த்தத்தை கதைகளாக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட அன்று எப்படி எழுதினாலும் பத்திரிக்கையில் வருதே என்ற நினைப்பு கொடுத்த சந்தோஷம்தான் அதிகம். நம்ம ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு பத்திரிக்கையில் எழுத வாய்ப்புத் தேடி வருகிறது ஆனால் இங்கிருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதுவதென்பது கடினமான காரியம்தான் என்பதால் இப்போது அது குறித்து யோசிப்பதில்லை. உனக்கொன்று தெரியுமா...? எனது இன்றைய கதைகளோடு அன்றைய கதைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்கே சிரிப்பு வருவதுண்டு... எத்தனை அபத்தமாய் எழுதியிருக்கிறேன் தெரியுமா...? இருப்பினும் அவற்றில் நல்ல கதைகளும் சில உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.  இன்றைய வாழ்வியல் எதார்த்தங்கள் அன்றைய கதைகளில் இல்லை... காதலும் சோகமுமே சொக்கி நின்றன என்பதை உணர முடிகிறது. அப்போது அப்படியான கதைகளில்தான் நாட்டம் இருந்திருக்கிறது. பத்திரிக்கைகளும் அப்படிக் கதைகளுக்கே கதவு திறந்தன என்பதுதானே உண்மை.
நீ சொல்வது எவ்வளவு உண்மை பார்... எத்தனையோ விஷயங்களை நாம் கடந்து செல்கிறோம்...  ஒரு செடியை அழித்து விட்டு நகர்கிறோம் என்றால் ஒரு மூலிகையை இழந்து விட்டோம் என்று அர்த்தம் என்று சொல்லியிருக்கிறாய்... ஆம் அது எத்தனை உண்மை... நமக்குத் தெரிந்து எவ்வளவு விஷயங்களை இழந்தோம்... விவசாயத்தைக் கூட இழந்து தவிக்கிறது எங்கள் பூமி. ஆடு, மாடு, கோழி, நாய் என கட்டிப் புரண்டு வாழ்ந்த வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோமே... அவ்வளவு ஏன்... இன்று உறவுகளைக் கூட இழந்துவிட்டுத்தான் நிற்கிறோம் என்பது எவ்வளவு வேதனையான விஷயம். இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கமுடியும் சொல்லு.
நம் தலைமுறையேனும் சிலவற்றையாவது அனுபவித்து மகிழ்ந்தோம் என்பதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதுதானே... கோழிக்குண்டு... கில்லி... மரக்குரங்கு... கண்டுபிடிச்சு... கோகோ... கபடி.. சில்லுநொண்டி... பம்பரம்... ஓடிப்பிடித்து என இன்னும் இன்னுமாய் நிறையக் கூடி விளையாண்டோம். அப்போது நம் சக உறவுகளுடனும் தோழர்களுடனும் நமக்கு ஒட்டுதல் இருந்தது... நேசம் இருந்தது... அதில்  ஒரு உயிர்ப்பு இருந்தது ஆனால் இன்றைய தலைமுறை... நம் வாரிசுகள்... எல்லாவற்றையும் தொலைத்து விட்டுத்தானே நிற்கிறார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பற்றிக்கூட அறியாமல்தானே வளர்கிறார்கள். இன்றைய தலைமுறை இணையத்தின் இறுக்கத்துக்குள் சிக்கி எல்லாம் இழந்து விட்டார்கள் பார்த்தாயா...அன்று நாம் மரப்பாச்சிகளை வைத்து விளையாண்டோம்... இன்றோ நம் அடுத்த தலைமுறையை மரப்பாச்சி ஆக்கி வைத்திருக்கிறோம். வேறென்ன சொல்ல...? இழந்தவற்றைப் பற்றித்தான் என் தளத்தில் கிராமத்து நினைவுகளாய் வார்த்து வைத்திருந்தேன் என்பது உனக்குத் தெரியும்.
நிறைய விஷயங்களை எழுத வேண்டியிருக்கிறது... நிறைவாய் எழுத வேண்டும்... நிச்சயமாய் எழுதுவேன்... ஆனால் அதற்கும் கால அவகாசம் வேண்டுமல்லவா... கை சூப்பும் குழந்தையை திடீரென கையைப் பிடித்து நிப்பாட்டினால் அது நிறுத்திவிடுமா என்ன... மெல்ல மெல்ல அதன் கை சூப்பும் எண்ணத்தைத் தகர்த்த பின்தானே முழு வெற்றி கிடைக்கும். அதேபோல் பால் குடிக்கும் குழந்தை எப்பவும் தன் மார்பில் வாயை வைத்து இழுத்துக் கொண்டே இருக்கிறது என்பதற்காக அதிரடி முடிவையா அம்மா எடுக்கிறாள்..? இல்லையே... தன் மார்க்காம்பில் கசப்பான ஒன்றைத் தடவி வைத்து... அதில் வாய் வைத்தால் கசக்கும் என்ற எண்ணத்தை அந்தக் குழந்தைக்குள் விதைத்து மெல்ல மெல்ல அந்தக் குழந்தையை தன் மார்பின் மீது கவனம் செலுத்துவதை தவிர்க்க வைக்கிறாள்... அதேபோல்தான் வரலாறுகளையும் இழந்தவைகளையும் மெல்ல மெல்ல நாம் எழுதும் நிதர்சனங்களோடு இணைத்து எழுதப் பழகி... வரலாறுகளையும் நம் வாழ்க்கையையும் நிறைவாய் எழுதுவோம்... நம் எழுத்து இப்போது போல் பயணிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்... அது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் மெருகேற்றி காலங்கள் கடந்து நிலைத்து நிற்கும் என்பது உண்மை நண்பா.
உன் எழுத்தை நாலைந்து முறை வாசித்தேன்... வாசித்தது முடித்ததும்  நாம் எழுதும் எதார்த்தங்கள் மட்டுமே நம்மை எழுத்தாளனாய் முன்னிறுத்துமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்... கண்டிப்பாக நிறுத்தாது என்பதை உணர்ந்து சிரித்துக் கொண்டேன்.  இந்த எழுத்து இன்னும் எத்தனை காலத்துக்கு தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறாய்...? ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் இது மீண்டும் தன்னை நிறுத்திக்கொள்ளும் என்பதே உண்மை.
நீ நிறைய விசயங்களைப் பேசியிருந்தாய்... அதுவும் நிறைவாய்... நீ அதிகம் வாசிப்பவன்... எழுத்தைச் சுவாசிப்பவன்... தமிழுக்கு உன் வாழ்வை அர்ப்பணித்து அதன் பின்னே நடப்பவன். உன் அளவுக்கு என்னால் பேசவோ எழுதவோ முடியாது... என் பாதை வேறு... அதிக வாசிப்பனுபவமெல்லாம் இல்லாதவன். வாழ்ந்த மண்ணில் பார்த்தவைகளையும் அனுபவித்தவைகளையும் எழுதும் ஒரு சாதாரணமானவன். உன் அளவுக்கு எழுத எழுத்துத் திறமை மட்டுமின்றி எடுத்துக்காட்டுக்களைச் சொல்லும் புத்தியும் வேண்டுமல்லவா...? நீ எழுதியதில் பத்து சதவிகிதம் கூட என் எழுத்தில் இருக்காதுதான்... இருந்து உன் கடிதத்துக்கு பதில் கடிதம் எழுத வேண்டிய நாகரீகத்தின் பேரில்தான் இதைக் கிறுக்கியிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொள்வாய் என்று தெரியும்.
கல்கியும் சாண்டில்யனும் பாலகுமாரனும் சுஜாதாவும் கி.ராவும் ஜெயகாந்தனும் தாங்கள் எழுதிய எதார்த்தாக் கதைகளால் பேசப்படவில்லையே... அதையும் தாண்டி காலத்தால் அழியாத எழுத்துக்களைக் கொடுத்ததாலேயே எப்பவும் பேசப்படுபவர்களாக இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் எதார்த்தங்களைப் பேசி இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறார்கள்.. அவர்களின் எதார்த்தங்கள் எளிமையையும் வாழ்க்கையையும் கண் முன்னே நிறுத்தின என்றாலும் ஒரு சிலரைப் போல புகழ் என்னும் இடத்தை நோக்கி நகராமல் குடத்தில் இட்ட விளக்காய்த்தான் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்று இணையம் விரிக்கும் கடையில் புற்றீசலாய் எழுத்தாளர்கள் வந்து கொண்டிருப்பது சந்தோஷமே என்றாலும் நீ சொல்வது போல் எழுதும் எழுத்தாளர்களை அதில் தேடித்தானே கண்டு பிடிக்க முடியும். உன் எண்ணப்படி எல்லாரும் எழுதுவார்கள் என்று சொல்ல முடியாது... ஆனாலும் சிலர் எழுதுவார்கள் அந்தச் சிலரில் நாமும் இருப்போம் நண்பா... அப்படியான எழுத்தால் நாம் சாதிக்கும் காலம் விரைவில் வரும் நண்பா... நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்ல அல்லது விட்டுச் செல்ல என்று சிந்திக்காமல் நமக்கு சரஸ்வதி கொடுத்த எழுத்துத் திறமையால் நல்ல எழுத்தை விதைத்துச் செல்வோம்...
 நன்றி.
-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

//எழுத்தால் நாம் சாதிக்கும் காலம் விரைவில் வரும் நண்பா...//

ஏற்கனவே நன்றாக எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்.


நல்ல எழுத்தால் சாதிக்க வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…

OK

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் நன்றாகத்தான் எழுதுகின்றீர்கள்! ஆனால் உங்கள் நண்பர் சொல்லுவதிலும் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நாம் எவ்வளவு செதுக்கினாலும் நமக்கு திருப்தி வராதுதான். அதுவே வளர்ச்சிக்கு வித்துதானே! இன்னும் இன்னும் மெருகேற்றிட வேண்டும் என்பது... எனவே மேலும் செதுக்கிட...மெருகேற்றிட, நிலைத்து நின்றிட, பலரும் அறிந்திட சாதிக்க வாழ்த்துகள் குமார்!!

சிவகுமாரன் சொன்னது…

எழுத்தில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
தங்கள் அனுபவங்கள் பெரும்பான்மை எனதோடு ஒத்து வருகின்றன.
\ஒருசில பத்திரிக்கைகளில் வரவும் என்னவோ சாதித்து விட்டதைப் போல நிறைய கிறுக்கித்தள்ள ஆரம்பித்து வீட்டில் திட்டு வாங்கியது தனிக்கதை.//?
Same blood.:)

Yarlpavanan சொன்னது…

அருமையான பதில் பதிவு
எழுத நினைத்தால்
எத்தனையோ எழுதிவிடலாம்
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பதில்.

தொடர்ந்து எழுதுங்கள்.....

Unknown சொன்னது…

நம் எழுத்து ஆக்கத்தை ,ஆன்மீக மார்க்கத்தில் உள்ளவர்களிடம் கொடுத்து ,கருத்தைக் கேட்டால் படிக்கக் கூட மாட்டார்கள்.இதெல்லாம் வேஸ்ட் படிப்பதை ,பார்ப்பதை விடுங்கள் ,உங்களை உணர முயற்சி செய்யுங்கள் என்பார்கள் !
முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்போரிடம் கொடுத்து கருத்தைக் கேட்டால் ..அதை இப்படி எழுதி இருக்கலாம் ,இதை அப்படி எழுதி இருக்கலாமென்று நார் நாராகக் கிழித்து தொங்க விட்டு விடுவார்கள் !அவர்களிடமும் பெரிதாக படைப்புத் திறன் இருக்காது ,ஜனரஞ்சகமான எழுத்தையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது !
மேற்சொன்ன இரண்டு தரப்புக்களின் விமர்சனத்தை புறம் தள்ளிவிட்டு ,நீங்களே சொன்னது போல் உங்கள் மனத் திருப்திக்காக எழுதுங்கள் ,அது காலத்தை வென்று நிற்குமா என்பதை காலம்தான் சொல்லும் !

சிவகுமாரன் சொன்னது…

மிகச் சரியாய் சொன்னீர்கள் பகவான்ஜி

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நம் எழுத்து நம் உரிமை! நம் மனத் திருப்திக்கு எழுதிக்கொள்கிறோம்! உண்மைதான்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உண்மைதான்... என் போக்கில்தான் நான் எழுதுவதுண்டு.... எதற்கும் சமரசம் செய்து கொள்வதில்லை... நண்பனின் ஆசை நல்ல ஆசையே....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.