மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 11 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...2

வன் அறைக்குள் நுழையும் போது காரசாரமான அரசியல் அரட்டை அரங்கேறிக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் அவர் ஹெட்செட்டை எடுத்து மாட்டப்போனார். புதியவர் ஒருவர் காலியான கட்டிலில் அமர்ந்திருந்தார். அறை நிர்வாகி, இவருதான் நம்ம அறைக்கு புதிதாக வந்திருக்கிறார் என்று அவனுக்கு புதியவனை அறிமுகம் செய்து வைத்தார். சம்பிரதாய 'ஹாய்'க்குப் பிறகு அவன் உடை மாற்றி, பாத்ரூம் போய் கைகால் முகம் கழுவி வந்து தனது கட்டிலில் அமர்ந்தான்.

"இப்ப பாத்தீங்கன்னா.. இந்த விஜயகாந்த் பேரம் படியிறதுக்கு முன்னாலயே அம்மாக்கிட்ட பெட்டியை வாங்கிக்கிட்டு தனியா நிக்கிறேன்னு சொல்லிட்டான்..." என்று அவர் புதியவனிடம் சொன்னார்.

"இருக்காதுங்க... அவர் பெட்டி வாங்குற ஆள் மாதிரி தெரியலைங்க... சும்மா அவரு இப்படிப்போனா அப்படின்னும் அப்படிப்போனா இப்படின்னும் கிளப்பிவிடுறாங்க... என்ன இருந்தாலும் அந்தாளுக்கு பின்னால இருந்து அவரை சரியாச் செயல்பட வைக்க யாரோ ஒரு ஆள் இருக்கான்..." புதியவன், பெரிய அரசியல் விரும்பி போல, இனி தேர்தல் வரைக்கும் இவனுங்க தந்தி, புதிய தலைமுறை, சத்தியம் தொலைக்காட்சிகள் மாதிரி விவாதம் நடத்தியே கொல்லப் போறானுங்களே என்று நினைத்தபடி நீட்டி நிமிர்ந்து படுத்தான் அவன்.

"என்னத்தங்க செயல்பட்டான்...  எல்லாம் பொண்டாட்டியும் மச்சினனும்தான்... பேசி முடிச்ச்சிட்டானுங்க....ஐநூறு கோடி தர்றேன்னு கலைஞர் சொன்னாரம்... அதுவும் ஒரே பேமெண்ட்டா... அதுக்குள்ள பிரேமலதா அம்மாக்கிட்ட அதுக்கும் மேல பேசி முடிச்சிட்டாளாம்... எல்லாப் பயலும் களவாணிப் பயலுகதான்...." என்றார் அவர்.

'இந்தாளு அடங்கமாட்டான் போலவே...' என்று நினைத்து 'ஏதோ பேச வாயெடுத்தவன், வேணான்டா வீணாவுல பிரச்சினையை இழுக்காதே'ன்னு பக்கத்தில் கிடந்த புத்தகத்தை பிரித்து படிக்கலானான்.

"எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துட்டானுங்க.. இந்த விஜயகாந்த் காசை வாங்கிக்கிட்டு தனியின்னு தொண்டர்களை ஏமாத்துறான்... இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி... கேவலமான அரசியல்வாதிங்க... எனக்கு முன்ன இவனை ரொம்ப பிடிக்கும்... இப்பல்லாம் சீமான்தான்..." என்றார் அறை நிர்வாகி.

"விஜயகாந்த் ஒரு கிறுக்கனுங்க... திமுக போனான்னா... அப்புறம் வைகோ நிலமைதான்... ஒண்ணுமில்லாமப் போக வேண்டியதுதான்... இப்ப தனியன்னு வேற சொல்லிட்டான்... ஆள் காணமப் போகப்போறான்... இவனுக்கு பேசவும் தெரியலை... கட்சி நடத்தவும் தெரியலை... இவனெல்லாம் ஒரு தலைவர்..." என்றார் அவர் அறை நிர்வாகி கொடுத்த லீடைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாய்.

"அவனுக்கு கட்சி நடத்தத் தெரியலைன்னா விவரமாப் பேசுற நீங்க ஒரு கட்சி ஆரம்பிக்கலாமே?" புத்தகத்தை வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான் அவன்.

"இவரு ஒருத்தரு சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு... அரசியல் தெரிஞ்சாப் பேசணும்..." சூடானார் அவர்.

"அது சரி... அப்ப நீங்க அரசியலைக் கரைச்சிக் குடிச்சிருக்கீங்க... சரி... சரி... பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்சிட்டுத்தான்... ஆபீஸ்ல கம்ப்யூட்டரையும் பிரிண்டரையும் கட்டிக்கிட்டு கெடக்கீங்களாக்கும்... பேசுங்க... நமக்கு அரசியல்ல அரிச்சுவடு தெரியாது.. நீங்க தெரிஞ்சவங்க பேசுங்க..." கடுப்பாகச் சொல்லி விட்டு மீண்டும் படுத்து புத்தகம் வாசித்தான்.

"ஏம்ப்பா... எப்பவும் அவரு கூட மோதிக்கிட்டு... நம்ம ரூமுக்குள்ள நாமெல்லாம் பேசிக்கிட்டு இருக்கதே அரிது. ஏதோ அரசியல் பேசுறதால எல்லாரும் பேசிக்கிறோம்... இல்லேன்னா ஊருக்குப் பேசவும்... கம்ப்யூட்டர்ல படம் பாக்கவுமாத்தானே நாங்க பொழுதை ஓட்டுவோம். நீ ஏதாவது புக்குப் படிச்சே ஓட்டிருவே... சத்த நேரம் சும்மா இருவே..." என்றார் அறை நிர்வாகி.

"சரிங்க... நீங்க பேசுங்க... நான் ஒண்ணும் பேசலைங்க.." என்றான் அவன்.

"இந்த விஜயகாந்த் திராவிடக் கட்சிகள் மேல மாறி மாறி சவாரி செஞ்சு வைகோ மாதிரி காணமப் போகப்போறான்னு பார்த்தேன்... ஆனா தனியா நிக்கிறேன்னு தனக்குத்தானே மண் அள்ளிப் போட்டுக்கிறான்" தனக்கு ஆதரவாக அறை நிர்வாகி பேசிய சந்தோஷத்தில் மீண்டும் விஜயகாந்தை இழுத்தார் அவர்.

"என்னங்க சொல்றீங்க... திராவிடக் கட்சிகள் மேல சவாரி செஞ்சி வைகோ மட்டும்தான் காணாமப் போனாரா?" புதியவன் கேட்டான்.

"இல்லைங்களா பின்னே... ரெண்டு பேருக்கும் இவர்தான் மாற்றுன்னு நினைக்கும் போது பெட்டிக்கு ஆசைப்பட்டு இங்கிட்டும் அங்கிட்டுமா மாறி மாறி சுத்தமா அழிஞ்சிட்டாரா இல்லையா?"

"என்னங்க சொல்றீங்க... வைகோ மட்டும்தான் மாறி மாறி அழிஞ்சாரா..? வேற யாருமே மாறி மாறி சவாரி பண்ணலையா..?" இது அறை நிர்வாகி.

"வேற யாருங்க... வைகோ மட்டுந்தான் பெட்டிக்கு மயங்கினாரு... இப்ப விஜயகாந்த்..."

"ஏங்க அப்ப பாமக, விசிக, காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் அப்புறம் லொட்டு லொசுக்கு கட்சிங்க... என எல்லாருமே திராவிடக் கட்சிகள் மேல சவாரி பண்ணி சாஞ்சி போயித்தானே கிடக்காக... வைகோவும் விஜயகாந்தும் மட்டுமா சவாரி பண்ணினாங்க..."

"காங்கிரஸ், பிஜேபியை விடுங்க... மத்தவங்க சவாரி பண்ணினாலும் தனக்குன்னு ஓட்டு வங்கி வச்சிருக்காங்க... கட்சியை வளர்த்திருக்காங்க... ஆனா வைகோ... இப்ப ஒன் மேன் ஆர்மி மாதிரி ஆயிட்டாரு..."

புதியவன் சிரித்தான்... 

"எதுக்கு சிரிக்கிறீங்க.. உண்மையைத்தானே சொல்றேன்..."

"பின்னே என்னங்க... யாருக்குங்க ஓட்டு வங்கி இருக்கு... ஒன்றை சதவீதமெல்லாம் ஒரு ஓட்டு வங்கியா...? அட ஏங்க ஜோக் அடிச்சிக்கிட்டு... உங்களுக்கு பிடிச்ச கட்சிங்க மாறி மாறி சவாரி பண்ணினாலும் தகுதியோட இருக்காங்கன்னு சொல்றீங்க... மத்தவங்க மாறி மாறி சவாரி பண்ணி தகுதியை இழந்துட்டாங்கன்னு சொல்றீங்க... நல்லாயிருக்கு உங்க நியாயம்..?"

"அதானே... என்னங்க நீங்க.. சீமான் அடுத்த முதல்வர் நாந்தான்... இதை இதை இப்படி இப்படி பண்றோம்... சிங்கள மீனவனைப் பிடிச்சி சிறையில போடுறோம்... அப்புறம் அவன் வந்து எங்கிட்ட எங்காளுங்களை விடுங்கன்னு கைகட்டி நிப்பானுல்லன்னு ஒரு பேட்டியியல் சொல்லிட்டு, திமுக - அதிமுகவை யாராலும் ஜெயிக்க முடியாது. நான் மக்கள் நலக் கூட்டணியை விட அதிக ஓட்டு வாங்குறேன்னு தந்தி டிவி விவாதத்துல சொன்னாரே அது மாதிரி பேசுறீங்க..." என்றார் அறை நிர்வாகி.
"உண்மைதானேங்க... இன்னைக்கு மாற்றம் முன்னேற்றமுன்னு சில பேர் கிளம்பியிருக்காங்கதானே... ஏன் ஒரு தடவை ஆட்சியைக் கொடுத்துப் பார்க்கக் கூடாது... வித்தியாசமானவங்க வரட்டுமே..." என்றார் அவர்

"யாருங்க வித்தியாசம்...? எல்லாருமே ஒரே குட்டையில ஊறின மட்டைதான்... சரி மாற்றம் முன்னேற்றம்... நாங்கதான் முதல்ல சொன்னோம்ன்னு சொல்றாங்க... அதை ஓபாமாதானே முதல்ல போட்டாரு... நாம காப்பிதானே பண்ணினோம்..." என்றான் புதியவன்.

புத்தகம் படிப்பது போல் மூவரின் விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தான் அவன். மனசுக்குள் '[லூசுப் பயலுக, இந்த ரங்கராஜ் பாண்டே இவனுகளை வச்சி ஒரு விவாதம் நடத்தலாம்... என்னமாப் பேசுறானுங்க... சீமான் மாதிரி...' என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.

"நீங்க வேற நம்ம சரத்குமார் 'மாற்றத்தை நோக்கி' அப்படின்னு போட்டதைப் பார்த்துத்தான் ஓபாமாவே போட்டாராம்... ஒரு பேட்டியில ஓபாமாவுக்கே நாந்தான் முன்னோடியின்னு சொன்னாரு..." என்றார் அறை நிர்வாகி.

"சரத்குமார், கார்த்திக் எல்லாம் கட்சி நடத்துறது நடிப்பு மாதிரியின்னு நினைச்சிட்டானுங்க... அப்ப அப்ப எதாவது பேசி சிரிக்க வைக்கிறதே வேலையாப் போச்சு... இப்ப இதுல வைகோவும் விஜயகாந்தும் சேர்ந்தாச்சு.." என்றார் அவர். அவரின் டார்க்கெட் விஜயகாந்தும் வைகோவும்தான் என்பது அவரின் பேச்சில் தெரிந்தது.

"உங்க எண்ணத்துல இருக்கிற கட்சி தவிர மத்தவங்க எல்லாமே சரியில்லைன்னு சொல்றீங்க.."

"பின்னே என்னங்க... உண்மையைத்தானே சொல்றேன்... மநகூ கூட அதிமுக பி அணிதான்... நீங்க வேணுன்னா பாருங்க... தேர்தலுக்குள்ள கூட்டணியைக் கழச்சிட்டு அம்மாக்கிட்ட போறாங்களா இல்லையான்னு... விஜயகாந்துக்கு பொட்டி போயாச்சு... அவன் தனியா நின்னு சரக்கடிச்சு சாவான்... இல்லாட்டி பொண்டாட்டியும் மச்சினனும் தூக்கிப் போட்டு மிதிச்சிக் கொல்லுவாங்க... சீமான் சும்மா தமிழன் தமிழன்னு கூவிட்டு குப்புறப்படுத்துருவான்... இன்னைக்கு திராவிடத்துக்கு மாற்று ஒரே கட்சிதாங்க... இந்த தேர்தல்ல இல்லாட்டியும் 2021 அவங்க ஆட்சிதாங்க.. அதுல மாற்றம் இல்லை... நீங்க எழுதி வச்சிக்கங்க...." வேகமாய்ப் பேசினார் அவர். புதியவன் இதற்கு மேல் இவரிடம் பேச முடியாது என துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். 

"அட ஏங்க நீங்க வேற... சுத்தி சுத்தி அங்கதான் வாறீங்க..." என அறை நிர்வாகி அலுத்துக் கொண்டார்.

புத்தகத்தை வைத்து விட்டு எழுந்த அவன் "சோ சாகக் கிடக்கிறாராம்... அரசியல் சாணக்கியன் இடம் காலியா இருக்காம்... இவ்வளவு விவரம் தெரிஞ்ச நீங்க, சும்மா இங்க ஒரு அறைக்குள்ள கிடந்து ஒண்ணுமில்லாம காலம் தள்ளக்கூடாது. போங்க... அங்க போயி சோ இடத்தைப் பிடிங்க... தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறலாம்... " என அவரிடம் சொல்லிவிட்டு, "என்னங்க அறையில இருக்கணுமா... இல்ல அறை மாறணுமா... என்னால முடியலை... மாற்றம்... முன்னேற்றம் எல்லாம் தமிழகத்துல வரட்டும்... இங்க இப்ப கண்டிஷன் ரொம்ப இறக்கத்துல இருக்காம்... நமக்கு ஏற்றம் வருதான்னு பார்ப்போம்... சும்மா அரசியல் பேசுறேன்னு வெறுப்பேத்தாதீங்க... அவனவன் சைட்டுல வெயில்ல கிடந்து செத்துப் போயி வர்றான்..." என அறை நிர்வாகியிடம் சொன்னான்.

நிர்வாகி சிரித்துக் கொண்டே "இருங்க சுலைமானி போட்டுக்கிட்டு வாறேன்..." எனக் கிளம்ப, அவரோ வாய்க்குள் முணுமுணுத்தபடி 'சூப்பர் சிங்கர்' பார்க்க ஆரம்பித்தார். 

"நான் யாரு...? நான் யாரு...? கொய்யால நான் யாரு....? நான் ராஜா... " என அவனின் மொபைல் அடிக்க, எடுத்து "என்ன மாப்ள..." என்றான். எதிர்முனை ஏதோ சொல்ல, "ஏலே... அங்கயும் இதானா... சைட்ல முசிறிகூட மல்லுக்கட்டிட்டு வந்தா... அரசியல் பேசியே கொல்றானுங்கடா... இவனுக ஒரு பய ஓட்டுப் போட போகமாட்டான்... பேச்சு மட்டும் சீமானைவிட வெறியாப் பேசுறானுங்கடா... முடியல... இவனுககிட்ட இருக்கதுக்கு பெங்காலி கூட இருக்கலாம்... கிரிக்கெட்டப்போ மட்டும்தான் நம்மளை எதிரியாப் பாப்பானுங்க..." என்றபடி அவரைப் பார்த்தான். அவர் 'நேத்து ராத்திரி... யம்ம்மா...' பாடும் ஆறு வயசுக் குழந்தையின் குரலில் லயித்து சிரித்துக் கொண்டிருந்தார். இனி இடியே விழுந்தாலும் எழ மாட்டார் என்பது தெரியும் என்பதால் புத்தகத்தை எடுக்க, அறை நிர்வாகி சுலைமானியோடு வந்தார்.

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முன்னேற்றம் எல்லாம் தமிழகத்துல வரட்டும்... ?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அலப்பறை நல்லாவே நடக்குதே! டீக்கடை பேச்சு வாதம் போல் நல்லாருக்கு

வைசாலி செல்வம் சொன்னது…

அருமை ஐயா.

துரை செல்வராஜூ சொன்னது…

நமக்கெல்லாம் அரசியல் வாதம்/ விவாதம் சரிப்படாதுங்கோ!..

KILLERGEE Devakottai சொன்னது…

அலப்பறை அமர்க்கலம் நண்பரே....சுலைமாணி அடிச்சா சரியாப்போயிடும்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் குமார்..
தங்களுடைய - நேசம் சுமந்த வானம்பாடி - சிறூகதை அருமை!..

மனம் கலங்கி விட்டது..
அதற்கான விமர்சனத்தை அங்கே காணவும்..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
எது எதுவாக இருந்தாலும் நமக்கு நல்லது நடந்தால் சரி..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-