மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-5)

முந்தைய பகுதிகளை வாசிக்க...

பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4

*********

வேலாயுதம் தன் கோபத்தை மாப்பிள்ளையிடம் காட்ட முடியாமல் சாப்பாட்டில் காட்டிவிட்டு எழுந்து சென்றதும், கணவன் ராமநாதனுக்கு கை துடைக்க துண்டு எடுத்துக் கொடுப்பது போல் அவனருகில் போய் ‘என்னங்க நீங்க அவருக்குத்தான் அவனைப் பற்றி பேசினால் கோபம் வரும்ன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு சொன்னீங்க… சாப்பிடாமப் பொயிட்டாரு பாருங்க…”

“சாதி வீம்பு தண்ணி ஊத்தாதுன்னு உங்கப்பாக்கிட்ட சொல்லு செல்வி…” சத்தமாகப் பேசினான்.

“எதுக்கு கத்துறீங்க..? மெதுவாப் பேசுங்க…”

“ஆமா… ஆ…ஊன்னா என்னைய அடக்கப்பாரு… இந்த வயசுல இந்தாளு சாதியைத் தூக்கி சுமந்துக்கிட்டு என்னத்தை அள்ளிக்கிட்டுப் போகப்போறாரு… ஆமா… அவனை மொத்தமாவே அறுத்துக் கழுவிறனுமின்னு நினைக்கிறாரா..? “

“அது எதுக்குங்க இப்ப… கொஞ்சம் சும்மா இருங்களேன்… இந்தாங்க வெத்தலை… வாய்க்குள்ள வச்சி அமுக்குங்க… அப்பத்தான் எதுவும் பேசமாட்டீங்க…” என வெத்தலையை நீட்ட, “ஆமாடி எதாச்சும் கொடுத்து என் வாயை அடைச்சிரு…” என்றபடி வாங்கிக் கொண்டு அங்கு கிடந்த கட்டிலில் அமர்ந்தான்.

‘கேட்டது மாப்பிள்ளையாப் போச்சு... இல்லேன்னா இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பேன்’ என்று மனசுக்குள் பொருமிக் கொண்டே கையில் எடுத்து வந்த வெற்றிலையை துண்டில் தேய்த்து... காம்பு கிள்ளி... நரம்பு எடுத்து... அதன் பின்புறத்தில் சுண்ணாம்பை நாலைந்து இடத்தில் தடவி... கொட்டப் பாக்கை வைத்து மெல்லச் சுருட்டி வாய்க்குள் அதக்கிக் கொண்ட வேலாயுதம்... அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்... நிலவைச் சுற்றி ஒரு வட்டம் தெரிந்தது... ‘கோட்டை கட்டியிருக்கு... இனி மழ பேஞ்சு என்னாகப் போகுது... கோடையா போடப் போறானுங்க....’ என்று நினைத்து சிரித்தபடி நட்சத்திரங்களை ரசிக்கலானார்.

மாடுகளிடம் கிடந்த வைக்கோலை ஓரிடத்தில் குவித்து... அவற்றை ‘இஞ்சே... ம்ம்ம்.. ‘ என்று வாலை முறுக்கி எழுப்பி விட, அவை முதுகை வளைத்து ஒரு நெளி நெளித்துவிட்டு ‘சர்...’ என மூத்தரத்தைப் பெய்ந்தன. ‘புது வக்க... உங்களுக்கு இறங்க மாட்டேங்குது...’ என்று திட்டிக் கொண்டே நகர்ந்த பஞ்சநாதன் வாசலில் தனியே அமர்ந்திருந்த வேலாயுதத்தைப் பார்த்ததும் அங்கு வந்தார்.

“என்ன வேலாயுதம்... பலமான யோசனையா இருக்கு?” என்று சிரித்தார்.

“ஆமா கோட்டை கட்டப் போறேன் பாரு... சாப்பிட்டு வெத்தல போட்டுக்கிட்டு இங்கிட்டு காத்தாட வந்து ஒக்காந்தேன்.... வானத்தைப் பாத்தேன்... கோட்டை கட்டியிருந்துச்சு... அப்படியே நச்சத்திரங்களை எண்ணிக்கிட்டு ஒக்காந்திருக்கேன்... ஒக்காரு... சாப்பிட்டியா...? கோழிக் கொழம்பு... கொஞ்சம் சாப்பிடு...”

“சாப்பிட்டேன்... படுக்கப் போனேன்... ஒண்ணுக்குப் பொயிட்டு படுக்கலாம்ன்னு வந்தேன்... மாடுக புது வக்கல்ல... அதான் திங்காம இழுத்துப் போட்டு படுத்திருந்துச்சுக... எழுப்பி விட்டு குமிச்சி வச்சிட்டு வாறேன்... ஆமா அறுப்பெல்லாம் முடிச்சிட்டே... இனி சின்னவன் வீட்டுக்கு அரிசி கொண்டுக்கிட்டு ஓடுவியே...?”

“ஆமா... செல்வி இருக்கும்போதே அவிச்சிரலாம்ன்னு பாத்தேன்... நாளக்கி காலயிலதான் அவிக்கணும்... சாதிச் சங்க போர்டு வேற வைக்க வர்றாக...”

“நானும் கேக்கணுமின்னு நினைச்சேன்... இந்தப் பயலுக வண்டியில் முன்னாடி பின்னாடியெல்லாம் சாதி பேரைப் போட்டு ஒரு மார்க்கமாத் திரியிறானுங்க... இதுல தலைவர் படம் வேற... அவரு சுதந்திரத்துக்கு போராடுன மனுசன்... அவரை சாதிக்குள்ள கொண்டு வர்றது நல்லாவா இருக்கு... இதுல சாதிப் போர்டு வேற... நல்லாயிருக்க ஊருக்குள்ள நாமளே எதுக்கு ஏழரையை இழுத்தாரணும்...”

“என்ன எழரையை இழுக்கிறோம்.... மத்த சாதிக்காரனுக தலைவரா வச்சிருக்கிற எல்லாருமே நாட்டுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடுனவுகதானே... நம்ம பயக வச்சா தப்பா.... நம்ம சாதிக்குன்னு சங்கப் போர்டு வைக்கிறதுல என்ன தப்பு இருக்குன்னேன்... இப்பத்தான் ஒருத்தரு எனக்கு பாடம் சொன்னாரு... அடுத்து நீயா...?” வேலாயுதம் கோபமாக் கேட்டார்.

“யாரு செல்வி வூட்டுக்காரரா...? அவருக்கிட்டயும்  சாதிக்காக சண்டை போட்டியா... ஏம்ப்பா.... அந்தாளு இங்க வந்து மாங்கு மாங்குன்னு வேல பாக்கணுமின்னு என்ன இருக்கு... சின்னவனுக்குத்தானே அரிசியெல்லாம் போவும்... அவன் வந்தானா... தேவையில்லாம உனக்கு ஓடியாந்து பாக்குற மனுசனுக்கிட்ட எதுக்கு சத்தம் போடுறே...?”

“அட நீ வேற... இதே வேற யாராச்சும் எங்கிட்ட பேசியிருந்தா வேற மாதிரி நடந்திருக்கும்.... மாப்ள பேசினாரு... பேசாம வந்துட்டேன்... ஆனா எனக்கு சாதியும் கௌரவமுந்தான் முக்கியம்... உனக்கு சாதி தேவையில்லை... எனக்கு அது தேவை...”

“சரி விடு... படுக்கப் போகயில எதுக்கு உங்கிட்ட தர்க்கம் பண்ணிக்கிட்டு... ஆமா பெரியாண்ணன் பொண்டாட்டி செத்துப் போச்சாமேப்பா... “

“ஆமா... கேள்விப்பட்டேன்... நாளைக்கி பத்து மணிக்கு மேல போயிட்டு வருவோமா...?”

“சரி போவோம்... எனக்கு ஒறக்கம் வருது... “ என்றபடி பஞ்சநாதன் கிளம்ப, திண்ணையில் சாய்ந்து கைகளை தலைக்கு வைத்தபடி வானம் பார்த்தார்.  விண்மீன்கள் சில மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மேகத்தோடு நிலவு கண்டொழிந்து விளையாடியது. ஒரு ஏரோப்பிளேன் சிவப்பு விளக்கு மினுங்க போய்க் கொண்டிருந்தது.


ப்பத்தாவின் கத்தலை பொருட்படுத்தாமல் உள்ளே சென்ற அபி, ‘கண்ணண்ணா... ‘ என்று அவனருகில் அமர்ந்து மற்றவர்களை ‘வாங்கண்ணா’ என்றாள்.

“வந்ததும் உன்னைத்தான் கேட்டேன் தெரியுமா..? நீ டியூசன் பொயிட்டேன்னு அம்மா சொன்னாங்க...”

“நான் எங்கே போனேன்... அம்மாதான் விரட்டி அடிச்சாங்க... ஆமா எங்க பாட்டி எதாச்சும் சொல்லியிருக்குமே...?” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ வேகமாகச் சொன்னான் அம்பேத்கார்.

“ஏய்... போய் காலம்பிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வாடி...” அவளை விரட்டினான் சாரதி.

“எங்கடா... அம்மு பொயிட்டாளா?” என சாரதியிடம் கேட்டாள் அபி.

“அவதான் போறா... இங்க உக்காந்து கதை அடிச்சிண்டிருந்டா... சும்மா வம்பிழுத்தேன்... முஞ்சியை தூக்கி வச்சிண்டு உள்ளாற பொயிட்டா... அம்மாவும் பின்னாலயே போயாச்சு...”

“எப்பப் பார்த்தாலும் அவ கூட சண்டை போட்டிண்டே இரு...” என்றபடி உள்ளே போனாள்.

“அதென்னடா... அம்மு..?” மெல்லக் கேட்டான் ஜாகீர்.

“எங்க வீட்ல எல்லாருக்கும் செல்லப் பேர் இருக்கு... அவளை எல்லாரும் அம்முதான் கூப்பிடுவாங்க...”

“அம்மு... கும்முன்னுல்ல இருக்கா...?” வேகமாகச் சொன்னார் பிரவீன்.

கண்ணன் முறைக்க, “சும்மா ஜாலிக்காகச் சொன்னேன்டா... அவங்க இனி அண்ணி... கேலியெல்லாம் பண்ணமாட்டேன்... ஆமா சாரதி... உனக்கென்னடா செல்லப் பேர்..?”

“நான் சொல்ல மாட்டேன்... அப்புறம் காலேசுல அதைச் சொல்லி கூப்பிடுவீங்க...”

“இல்ல சுபஸ்ரீ பார்த்தசாரதியை விட.... அம்முவோட உன்னோட செல்லப்பேரைச் சேர்த்தா நல்லா வருதான்னு பார்க்கத்தான் கேட்டேன்...”

“எம் பேரு பார்த்தாடா...? போதுமா..?”

“இதுல என்ன செல்லம் இருக்கு...? எம்பேரு அம்பேத்கார்... எங்க வீட்ல அம்பேத்துன்னு சுருக்கி கூப்பிடுவாங்க... நீங்க அம்பேத்.. அம்பேத்துன்னு சொல்லுவீங்க... பார்த்தசாரதி... பார்த்தா.... செல்லப் பேராம்...” எனச் சிரித்த அம்பேத்கார்.... “அம்மு பார்த்தா... ஆத்தி... சொன்னா வேற மாதிரியில்ல அர்த்தம் வருது...” என்று சிரிக்க எல்லாரும் சிரித்தனர்.

“ஏய் அபி... அங்க என்னடி பண்றே...? கோவில் பக்கம் போறோம்... வாறியா... இல்லையா..? வர்றதா இருந்தா அவளையும்  கூட்டிண்டு வேகமா வாடி...” சாரதி கத்த, எல்லாரும் எழுந்து வீதிக்கு வந்தனர்.

கொஞ்ச நேரத்தில் அபி வெளியில் வந்தாள். “எங்கடி அவ...? வரலையாமா...?” வருத்தத்தோடு கேட்டான் சாரதி.

“வரலைன்னு சொல்லிட்டா... நீ அவளை ரொம்பத்தான் படுத்துறே... பார்த்தா அங்கயும் போயி என்னைக் கேலி பண்ணிண்டு இருப்பான்... நான் எங்க ஆத்துக்கு போறேன்னுட்டா....” வருத்தமாய்ச் சொன்னாள் அபி.

“டேய்... ரொம்ப ஜாலியாப் பேசினாங்கடா... எதுக்குடா தேவையில்லாம கேலி பண்ணி அவங்களை கோபப்பட வச்சே.... போ... போய் நீ கூப்பிட்டா அவங்க வருவாங்க... போடா...” என்றான் கண்ணன்.
“அடப்போடா... ரொம்ப சீன் காட்டுறா... வாங்க நாம போவோம்...” என்று சாரதி நடக்க, மற்றவர்கள் அவன் பின்னே நடக்க... அபியும் கண்ணனும் சிரித்தபடி பேசிக்கொண்டு நடக்க....

சுபஸ்ரீ வேகமாக ஓடிவந்து அபியின் தோள் பிடித்துச் சிரித்து கண்ணனைப் பார்த்தாள்.

நன்றி : படத்தை வரைந்த ஓவியருக்கு... இணையம் கொடுத்தது.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.

7 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ஜாதீய நடைமுறை யதார்த்தம் தொடர்கிறேன்...

Menaga Sathia சொன்னது…

ஆஹா இன்னொரு காதல் கதையா,சூப்பர்ர்..தொடர்கிறேன் சகோ !!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தொடர்ந்து வாசித்து கருத்து இடுங்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

காதல் வருது போல!!! தொடர்கின்றோம் ....

நிஷா சொன்னது…

சூப்பராக போயிட்டிருக்கு குமார்,கடந்த காலமும் நிகழ் காலமுமாக கதையை நகர்த்திசெல்லும் முறை அருமையாக இருக்கின்றது. காதல் துளிர் விடுவதும் விட்டபின் வரும் கோபத்திலிருக்கும் மூர்க்கமும் அப்படியே கண் முன் நிகழ்வது போல் இருக்கின்றது!

நிஷா சொன்னது…

த.ம வாக்கிட முடியவில்லையே? ஏன்?