மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 மார்ச், 2016நேசம் சுமந்த வானம்பாடி

“என்னங்க உங்கப்பாக்கிட்ட  இது வேணுமான்னு கேளுங்க... சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது...” மருமகள் சுந்தரி, உள்ளிருந்து குரல் கொடுக்க “என்னது... ரேடியோதானே... அட அவரு ஆசையா வச்சிருக்காரு... கிடந்துட்டுப் போகுது போ” என்றான் பேப்பரில் இருந்து கண்ணை எடுக்காமல் சுதாகர்.

“ஆமா... பழசு பட்டையெல்லாம் சேத்துச் சேத்து வச்சிருக்கிறாரு... அவரு மாதிரித்தான் நீங்களும் இருக்கீங்க... பேப்பர் பேப்பரா சேத்து வச்சிக்கிட்டு...” என்று முணங்கியபடி பரணைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுந்தரி.

இந்த உரையாடலைக் கேட்டபடி செடிகளுக்கு தண்ணி பிடித்துக் கொண்டிருந்தார் ராகவன்.  அவர்கள் பேச்சில் அடிபட்ட ரேடியோ... அவர் பள்ளியில் படிக்கும் போது அப்பா புதிதாக வாங்கி வந்த நேஷனல் ரேடியோ... நாலு கட்டை போடும் ரேடியோ... அது வீட்டுக்கு வந்த தினம் வீட்டில் இருந்த எல்லாருக்கும் அத்தனை சந்தோஷம். அதன் பின் அந்த ரேடியோ காலையில் தனது குரலை ஒலிக்க ஆரம்பித்தால் இரவு வரை இப்போது டிவியில் சேனல் மாற்றுவது போல் ஒவ்வொரு ஸ்டேசனாக மாற்றி மாற்றிக் கேட்பார்கள். அதுவும் ராகவன் ஒரு பாட்டுப் பைத்தியம்... இரவு ஒருபடப்பாடல் போடும் நேரத்தில் ரேடியோவைத் தூக்கிக் கொண்டு போய் தலைமாட்டில் வைத்துக் கொள்வார். அப்போது மட்டும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். சில நேரங்களில் அதற்காக அப்பாவிடம் அடி கூட வாங்கியிருக்கிறார். இருந்தாலும் தலைமாட்டில் வைப்பதை மட்டும் அவர் விடுவதில்லை.

இப்படியாக நகர்ந்த நாட்களில் கட்டை தேய்ந்து விட்டது என்பதை ரேடியோவின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை வைத்து அப்பாவிடம் கட்டை தீரப்போகிறது என்று சொல்லி வைப்பார்கள். அப்பா எப்பவும் எவரெடி பேட்டரிதான் வாங்கிப் போடுவார். மளிகைக் கடையை அடைத்துவிட்டு இரவு வரும் போது கையோடு நாலு பாட்டரி கொண்டு வந்துவிடுவார்.  காலையில் எழுந்ததும் ரேடியோவை எடுத்து சுத்தமாக துடைத்து, உள்பக்கமாக வாயல் காற்றை ‘பூத்... பூத்...’ என்று ஊதி தூசியை வெளியேற்றுவார். சின்ன வெள்ளைத் துணியில் தேங்காய் எண்ணெய் தொட்டு வரச் செய்து அதன் முன்பக்கம் எல்லாம் பளபளன்னு துடைத்து, இரண்டு இரண்டு கட்டைகளாக இணைத்துப் போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பேப்பரை கத்திரியால் வெட்டி எடுத்து... மேல் முனையில் வைத்திருக்கும் சின்ன குழிழை நீக்கி கட்டையை ரேடியோவில் போட்டு ‘கர்...கர்...’ என்று சத்தம் வர மெல்ல ஸ்டேசன் மாற்றி வருவார். விவதபாரதியின் வர்த்தக சேவை என்றதும் ‘பாட்டுப் போடுவானுங்க’ என இவர் மெல்லச் சொல்வார். ‘எப்ப பாரு பாட்டு... இருடா... நாட்டு நடப்பு என்னன்னு செய்தி கேட்கலாம்...’ என மெல்ல மாற்ற திருச்சி வானொலியில் காலை ஏழேகால் மணிச் செய்தியை தனது கணீர்க்குரலில் சரோஜ் நாராயணசாமி வாசித்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில் அப்பா பாட்டரி கொண்டு வர மறக்கும் நாட்களில் வெயிலில் காய வைத்து ரேடியோக் கேட்பார்கள். ராகவன் வெயிலில் வைத்தே பாட்டுக் கேட்டிருக்கிறார்.

செடிகளுக்கு சீராய் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே ரேடியோ நினைவில் மூழ்கியவர் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். அந்த ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்பதற்காகவே அவரோட அத்தை மக, கமலம் வீட்டுக்கு ஓடியாரும். இவருக்கு அது மேல ஒரு ஆசை... மத்தவங்களை ரேடியோக்கிட்ட உக்கார விடமாட்டாரு... ஆனா கமலம் மட்டும் அவருக்குப் பக்கத்துல உக்காரலாம். ஆளு கருப்பாத்தான் இருக்கும். ஆனா தலைமுடி ரொம்ப நீளமா ஆளு அவ்வளவு அழகாத் தெரியும்... காதுல போட்டிருக்க தொங்கட்டான் அவளுக்கு தனி அழகுதான்... யாராச்சும் கமலத்தை கருப்பின்னு சொல்லிட்டாப் போதும் ராகவனுக்கு அப்படிக் கோபம் வரும்... நீ கருப்பி... உங்கப்பன் கருப்பி... உங்காத்தா கருப்பின்னு கத்துவாரு.... இவருக்குப் பயந்தே கமலத்தை மத்த பிள்ளைங்க எதுவும் சொல்லாதுக. டேய் வேணான்டா இவளைக் கேலி பண்ணினா... அந்தக் கருவாயனுக்கு வலுவா வரும்டான்னு மத்த பசங்க பேசிக்குவாங்க. அந்த ரேடியோதான் இவருக்கும் கமலத்துக்குமான அன்பை அதிகமாக உள்வாங்கியது. விடுமுறை தினங்களில் கமலமும் இவரும் ஒற்றைத் தலகாணியில் அங்கிட்டும் இங்கிட்டுமாக படுத்திருப்பார். இடையில் ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும்.  கமலத்தை நினைத்தவருக்கு ஏனோ மனசு வலித்தது. ‘ம்ம்ம்ம்ம்... ஆஹ்...’ என மூச்சை விட்டபடி தண்ணீரை நிறுத்தி விட்டு கை கால் கழுவி விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்பாவின் மறைவுக்குப் பின்னர், ஆளாளுக்கு தனித்தனியாக குடும்பங்களுடன் விலகிப் போக, பழைய வீடு ராகவனுக்கு கொடுக்கப்பட, அவரின் அம்மாவும் இவர்களுடன் இருந்தாள். சொத்தைப் பிரிக்கும் போது இந்த ரேடியோ அப்பா ஞாபகமா எங்கிட்டே இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டார். ஆங்காங்கே உடைந்து ஒட்டி வைத்திருப்பார். முன்னைப் போல் அவ்வளவு சுத்தமாக ரேடியோ இயங்கவில்லை. கரகரன்னு சத்தம் வர ஆரம்பித்தது. அதன் ஓலியும் முன்னைப் போல இல்லை... அதனால் அதன் மீது இறுக்கமாக சணலைச் சுற்றி வைத்திருந்தார்.  இப்பத்தான் டிவி வந்திருச்சுல்ல இன்னும் ஏன்டா இந்த ரேடியோவை வச்சிக்கிட்டு இருக்கே என்று ஒரு முறை அம்மா சொன்னதுக்கு ஆமா அதுல பாக்குறதுக்கு... இதுல செய்தி கேட்கலாம்... வேளாண்மைச் செய்தி கேட்கலாம்... பழைய பாட்டுக் கேட்கலாம்.... என்று சொல்லிச் சிரிப்பார். அந்த ரேடியோ அவரின் அப்பா நினைவுக்காக மட்டுமின்றி அது அருகில் இருக்கும் போது தன் காதலைச் சொல்லாமலே சுந்தரத்தைக் கட்டிக்கிட்டுப் போய், பார்க்கும் போதெல்லாம் நீ கமலத்தை நான் கட்டிக்கிறேன்னு சொல்லியிருந்தா இன்னைக்கு வசந்தா இடத்துல நானிருந்திருப்பேன். சொல்லமாட்டேன்னு சொல்லிட்டியேன்னு புலம்புவா. அவளை நினைச்சாலே அவருக்கு மனசு வலிக்கும்.  அவளும் போய்ச் சேர்ந்து புல் முளைச்சிருச்சு. கமலம் நினைவு அவரை இம்சிக்க , வசந்தாவும் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தாள். கண் மூடி அமர்ந்திருந்தவரை ‘தாத்தா... இந்தாங்க தண்ணி...’ என்று பேரனின் குரல் எழுப்ப, அவன் கையிலிருந்த சொம்பை வாங்கி மடக்... மடக்கெனக் குடித்தார். கமலம் நினைவு கொஞ்சம் அடங்கியிருந்தது.

கால ஓட்டத்தில் வீட்டுக்குள் பிளாக் அண்ட் ஓயிட் டிவி போய் கலர் டிவி வர, இவரின் ரேடியோவும் தன்னோட மூச்சை நிறுத்திக் கொண்டது. இரண்டு பேரின் நினைவுகளைச் சுமக்கும் ரேடியோவை தூக்கிப்போட மனசின்றி ஒரு சாக்குப் பையில் கட்டி பரணில் தூக்கிப் போட்டு வைத்தார். இப்போ வீட்டுக்குள் பிளாட் டிவியும், ஆளாளுக்கு கம்ப்யூட்டரும், மொபைல் போனுமாக ஆகிவிட, பெரும்பாலான நேரத்தை வடிவேலோ அல்லது பாடல்களோதான் ஆக்கிரமித்திருக்கின்றன. மதிய நேரங்களிலும் இரவு கொஞ்ச நேரமும் மருமகள் பார்க்கும் நாடகங்கள்... அந்த நேரத்தில் யாரும் எதுவும் மாற்றமுடியாது. செய்திகள் பார்ப்பதே இல்லை. அதனால் இவர் டிவிப் பக்கம் போவதேயில்லை. மெல்ல எழுந்து உள்ளே போனார்.... பிள்ளைகள் எல்லாம் அவரவர் வேலையில் கவனமாக இருக்க... பாவம் சுந்தரி, மேலெல்லாம் தூசியோடு சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தாள். அந்த சாக்குப்பையைத் தேடினார். அது மீண்டும் அதன் இடத்தில் அமர்ந்திருந்தது. அவர் பார்க்க அதனுள் கமலமும் அப்பாவும் சிரிப்பதாகத் தெரிந்தது. அந்த ரேடியோவை அவரின் காதலியைப் போல் பார்த்தபடி, ‘நா வேணுமின்னா சுத்தம் பண்ணவாத்தா... ஒராளா கிடந்து கஷ்டப்படுறே’ என்றார். ‘இல்ல மாமா முடிச்சிட்டேன்... நீங்க போங்க... தூசிக்குள்ள வராம...’ என்றாள். உண்மையிலே தங்கமான மருமகள் அவள்... அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள்... மாமனாரை இதுவரை சுமையாக கருதியவள் இல்லை.

“மாமா... எதுக்கு மாமா... அந்த ஓட்டை ரேடியோவைக் கட்டி தூக்கிப் போட்டு வச்சிருக்கீங்க...  எவனாவது பழைய சாமான்காரனுக்கிட்ட தூக்கிக் கொடுக்கலாம்ல்ல...” என்றாள்.

“அது என்னத்தா பண்ணுது... அது பாட்டுக்கு இருக்கட்டுமே... என்னோட உயிர் அது... அதெல்லாம் உங்களுக்குப் புரியாது... அதுக்குள்ள நான் வாழ நினைச்ச வாழ்க்கை இருக்கு... ம்... இருந்துட்டுப் போகட்டுத்தா...” என்றபடி வெளியேறினார்.

பொங்கல் முடிந்து அடுத்த தீபாவளி வர்றதுக்குள்ள செப்டெம்பர் மாத முன்னிரவில் அவரின் மூச்சு நின்று போனது. எல்லாம் முடிந்து எல்லாரும் பறந்து போக, பரணில் மூட்டைக்குள் சோகமாய்க் கிடந்தது அந்த ரேடியோ. அடுத்த பொங்கலுக்கு தூசி அடித்த சுந்தரி அந்த ரேடியோவுக்குள் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத காதலைப் பற்றி அறியாமல்... ராகவன் அதன் மீது கொண்டிருந்த நேசத்தை அறியாமல் அதைத் தூக்கி பழைய சாமான்காரனிடம் கொடுத்துவிட, சைக்கிளின் பின்னால் இருந்த இரும்புப்பெட்டியின் ஒரு பக்கமாக கட்டப்பட்ட ரேடியோ சில நினைவுகளைச் சுமந்து பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

(பிரதிலிபி போட்டிக்காக எழுதிய கதை இது. அங்கு வாசித்த நம் உறவுகள் அனைவரையும் கவர்ந்த கதை இது. அங்கு கருத்திட்ட, மதிப்பெண் வழங்கிய அனைவருக்கும் மீண்டும் என் நன்றி. )

-‘பரிவை’ சே.குமார்.

9 கருத்துகள்:

 1. அங்கு படித்தேன். இங்கும் படித்தேன். எத்தனை முறை படித்தாலும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் இவை போன்ற பதிவுகள் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கதை.
  நேசத்தை சொல்லும் கதை.
  ரேடியோ நினைவலைகள் எல்லோருக்கும் இருக்கும். இப்போதும் ரேடியோ கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அதை விடவே முடியாத அளவு ரேடியோவுடன் ஒரு நேசம், பாசம்.

  பதிலளிநீக்கு
 3. அங்கே ப்ரதிலிபியில் ஒரு வாக்கிட்டுப் படித்தேன். இங்கும் தம வாக்கிட்டேன்!

  :)))

  பதிலளிநீக்கு
 4. அருமையான கதை. பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு
 5. மறுபடியும் நெஞ்சம் நெகிழ்கின்றது..

  என்ன சொல்வதென்று தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
 6. நேசம் சுமந்த வானம் பாடி,கவிதையாய் ஒரு கதையின் தலைப்பும் அழகு,கதைக்கருத்தும் அருமை,கதை படித்து ஒட்டும் போட்டேன், கருத்து போடவில்லை என நினைக்கின்றேன்! நினைவலைகளோடு நினைவாய் தொடரும் வானலை குறித்த கதை, எனக்கும் இதே அனுபவம் உண்டு,தொலைக்காட்சி பிரபல்யமாகாத 80களில் சின்ன பெண்ணாய் வானொலி சிலோன் டேடியோ நிகழ்ச்சிகளை வைத்தே நேரத்தினை கணக்கிடுவதும்,ஞாயிறு வந்தால் எங்கும் போகாமல் அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டுக்காக காத்திருப்பதுமாய்,அருமையான காலங்கள் அவை, கடந்ததை அப்படியே நினைவில் கொண்டு வந்தீர்கள்]பாராட்டுகள் குமார்,

  பதிலளிநீக்கு
 7. ஏற்கனவே படித்தேன் நண்பரே அருமை
  த.ம + 1

  பதிலளிநீக்கு
 8. இந்தக் கதையை பிரதிலிபியில் படித்துக் கருத்தும் இட்டோம். இங்கும்..அருமையான கதை குமார். நல்ல பழைய நினைவுகளை மீட்டெடுத்த கதை...

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...