மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 29 ஜனவரி, 2013ஒற்றைச் சிறகு - தமிழருவிமணியனின் முதல் சிறுகதை!

(ஓவியம் : ம.செ.,)

லகம் அழிவதற்கான பிரளயம் பெருக்கெடுத்துவிட்டதுபோல் இரவு முழுவதும் பேரிரைச்சலுடன் மழையின் ஊழிக்கூத்து. பெரியவர் குமரேசன் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தார். மாடி அறையின் கூரை மீது மழை விழும் ஓசை, இரவின் அமைதியை அழித்தது. வெறிகொண்ட பேயின் கொடுங்கரங்களால் அறைபடுவதுபோல் சாளரங்கள் சடசடத்தன. தொலைவில் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் இடியின் முழக்கமாக எதிரொலித்தது. அடுத்த கணம் மின் விளக்கு அணைந்து அறையில் இருளின் ஆதிக்கம் பரவியது.

 குமரேசன் எழுந்து அமர்ந்தார். அவருடைய வாழ்வின் கடைசிப் பொழுது வாசற்படி கடந்து கண் முன் வந்து நிற்பதாக உள்ளுக்குள் உணர்ந்தார். மெள்ள எழுந்து மெழுகுத் திரியைத் தேடி எடுத்துத் தீக்குச்சியால் ஒளி வளர்த்தார். மேசையின் மீது இருந்த மகாத்மாவின் படம் அவர் கண்களில் மங்கலாகத் தெரிந்தது. மீண்டும் படுக்கையில் வந்து அமர்ந்தவர், விழிகளை மூடிக்கொண்டார். எண்பது வயது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகள் அவருடைய நினைவுத் திரையில் படம் படமாக விரிந்தன. படித்துவிட்டு வேலை தேடாமல், சமூக சேவை, சர்வோதயம் என்று சுற்றியபோது, தந்தை சொன்ன சுடுசொற்கள் அவர் நெஞ்சில் நிழலாடின. அன்று வளர்த்தெடுத்த வைராக்கியத்தை இந்த இரவு வரை காப்பாற்றிவிட்ட கம்பீரம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

மரணம் நெருங்கும் நேரம் மனிதர்களுக்குத் தெரிந்துவிடும் என்று அவருடைய நண்பர் ஆனந்தமூர்த்தி அடிக்கடி சொன்னது உண்மைதான் என்று குமரேசனுக்கு, இந்த இரவில் புரிந்தது. பரந்துகிடக்கும் பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் ஓர் அற்ப உயிர் விடைபெற்று யாரும் அறியா சூட்சும வெளியில் கலந்துவிடும் தருணத்தை வரவேற்கத் தயாராகிவிட்டவர்போல், வாய் திறந்து 'ஈஸ்வரா’ என்று முனகியபடி கையெடுத்துக் கும்பிட்டார் குமரேசன். அவருக்காகவே வாழ்ந்த மனைவியும் அவரால் வாழ்வு பெற்ற மகனும் மகளும் நினைவில் வந்து நின்றபோது, விழிகளில் நீர் வழிந்தது.

அவருடைய உடல் முழுவதும் சொல்லில் விளங்காத சோர்வு படர்ந்து பரவியது. கால்களை நீட்டியபடி படுக்க வேண்டும்போல் தோன்றியது. அதற்கு முன்பு எதையோ எண்ணியவராக எழுந்து, முயன்று நடந்து, அறைக் கதவின் தாளைத் திறந்துவிட்டுப் படுக்கையை நெருங்கினார். பாடையில் பிணம் கிடத்தப்படுவது போன்று கால்களை நீட்டிப் படுத்தார். மார்பின் மேல் இரண்டு கைகளையும் வைத்தபடி காந்தியின் படத்தை இறுதியாகத் தரிசித்து இமைகளை மூடிக்கொண்டார். ஓங்கி வீசிய காற்றில் அறைக் கதவு படீர் என்ற சத்தத் துடன் திறந்துகொண்டது. மழையின் பலத்த சிதறல் அறை முழுவதும் தெறித்தது. மெழுகுத் திரியின் வெளிச்சம் காற்றில் கரைந்தது. வானத்தில் பெரிய பொத்தல் விழுந்துவிட்டதுபோல் மழையோ நிற்காமல் பொழிந்துகொண்டு இருந்தது.

மயிலாப்பூர், சுந்தரம் ஐயர் தெருவில் இருந்த தன் வீட்டின் கீழ்த் தளத்தை, குமரேசன் தன் நண்பரான ஆனந்தமூர்த்தியின் குடும்பத்துக்கு மிகக் குறைந்த வாடகைக்கு விட்டிருந்தார். யாரும் எதையும் இலவசமாகப் பெற்று அனுபவிப்பதும், எதன் பொருட்டும் எவர் பொருட்டும் பிறர் உதவியில் வாழ்வதும் குமரேசனுக்குப் பிடிக்காது. அவருடைய மகன் தமிழினியன், திருச்சியில் காவல் துறை அதிகாரியாகவும்... மகள் பூங்குழலி, விழுப்புரம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றனர். மனைவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய நோயால் கண் மூடிய பின்பு தனி மரமாகிவிட்ட குமரேசன், அவ்வளவு பெரிய வீட்டில்இருக் கப் பிடிக்காமல் மேல் தளத்தில் ஒரு சிறிய படுக்கையறையும் குளியலறையும் கட்டி முடித்து அங்கு இடம் பெயர்ந்தார்.

தனக்கு வேண்டிய உணவைச் சமைத்துக்கொள்வதிலும், தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக்கொள்வதிலும் குமரேசனுக்கு ஒரு பெருமிதம் இருந்தது. தான் பிறருக்குப் பயன்பட வேண்டுமே தவிர, தனக்குப் பிறர் பயன்படக் கூடாது என்ற கொள்கையை குமரேசன் ஒரு வைராக்கியமாகவே பின்பற்றிவந்தார். ஆனந்தமூர்த்திக்கு இது ஓர் அர்த்தமற்ற அசட்டுப் பிடிவாதமாகவேபட்டது. வாய்ப்பு நேரும்போது எல்லாம் அவர் குமரேசனிடம் வாதம் செய்து பார்த்தார்.

''குமரேசா! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்குப் பெயர்தான் வாழ்க்கை. யாரும் தனியாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவிட முடியாது. நாம் கண்ணை மூடி இந்த மண்ணைவிட்டுப் போகும்போதும் நாலு பேர் உதவி தேவைப்படும். இந்த வயதில் எதற்குத் தனியாக இருந்து சிரமப்படணும்? நான் என் பிள்ளையோடு இல்லையா? உன் மகன் அவன் குடும்பத்தோடு வந்து இருக்கும்படி வருந்தி வருந்திக் கூப்பிட றானே. உன் மகள் வீட்டில் தங்கறதுக்கு நீ யோசிக்கலாம். மகனிடம் கௌரவம் பார்ப்பது நியாயமா?’ என்று ஆனந்தமூர்த்தி கேட்கும்போது எல்லாம் குமரேசனிடம் இருந்து ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைக்கும்.

கல்லூரிக் காலம் முதல் ஆனந்தமூர்த்தியிடம்தான் குமரேசன் நெஞ்சம் கலந்து நெருங்கிப் பழகினார். இளமையில் ஒருநாள் மெரினா கடற்கரையில் மாலை நேரம் இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது 'ஆனந்தம்! நேற்று என் அப்பா என்னிடம் கோபப்பட்டார். 'எம்.ஏ., படித்து ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடுவதில் நாட்டம் செலுத்தாமல், சமூக சேவை, சர்வோதயம் என்று சுற்றித் திரிவது நியாயமா? பிள்ளையை வளர்த்துப் படிக்கவைப்பது எதற்காக? வயதான காலத்தில் தாய், தந்தைக்குக் கஞ்சி ஊற்றுவான் என்பதற்குத்தானே?! இப்படிப் பொறுப்பு இல்லாமல் நீ சுற்றித் திரிவதற்கா உன்னைப் பெற்றோம்?’ என்று சத்தம் போட்டார். மனசு ரொம்ப வலிக்குது’ என்ற குமரேசனிடம், 'உன் அப்பா சொல்வதில் என்ன தவறு?’ என்றான் ஆனந்தமூர்த்தி.

குமரேசன் கடல் அலைகளைப் பார்த்தபடி சிறிது நேரம் பேசாமல் இருந்தான். 'கைம்மாறு கருதாத அன்பே, இந்த உலகத்தில் இல்லையா? வாழ்க்கை என்பது வெறும் கொடுக்கல் வாங்கல் வியாபாரமா? முதலில் கொடுத்துப் பிறகு திரும்பப் பெறுவதுதான் பெற்றோர் பாசமா? வயோதிகத்தில் வாழ்க்கை உத்தரவாதம்தான் பிள்ளை வளர்ப்பில் தாய், தந்தை எதிர்பார்ப்பா? அன்பு, பாசம் என்பவை உன்னதமான உணர்வுகள் இல்லையா? பிள்ளைகளிடம் காட்டும் அன்பிலேயே சுயநலம் இருந்தால், அடுத்தவரிடம் இவர் களால் மழையைப் போல் எதையும் எதிர் பாராமல் எப்படிப் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும்?’ என்று அவன் பொங்கிய போது, ஆனந்தமூர்த்தி எந்த மறுமொழியும் சொல்லாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

'ஆனந்தம்! நாளை முதல் தீவிரமாக வேலை தேடப்போகிறேன். இனி, என் பெற்றோர்க்கு நான் கொடுப்பவனாக மட்டுமே இருப்பேன். நாளை நான் மணம் முடித்து பிள்ளைகள் பெற்றாலும் அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் நான் கொடுப்பேன். சாகும் வரை அவர்களிடம் கை நீட்டி எதையும் பெற மாட்டேன். யாரிடத்தும் எதையும் எதிர்பாராத அன்பு ஒன்றுதான் இன்று முதல் என் தவமாக இருக்கும்’ என்று தீர்க்கமான குரலில் குமரேசன் அன்று சொன்னதை ஆனந்தமூர்த்தி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

காலம் அதன் கதியில் ஓயாமல் ஓடியது. ஒரு தனியார் பள்ளியில் குமரேசனுக்கு வேலை கிடைத்தது. கல்விப் பணியைப் பகலிலும், காந்தியக் கடமைகளை இரவிலும் பங்கிட்டுப் பணியாற்றியவன் வாழ்க்கைப் பாதையில், சுசீலா என்ற வசந்தம் வழி மறித்தது. இரண்டு பிள்ளைகள் ஒழுக்கம் தழுவிய கல்வியைக் கற்று முடித்தனர். பெற்றோர் ஒருவர் பின் ஒருவராகக் குறைவின்றிக் கண் மூடினர். இல்லற வாழ்வில் பிள்ளைகள் இடம் பெயர்ந்தனர். காரியம் யாவினும் கை கொடுத்த மனைவியைக் காலம் பறித்தது. ஆனந்தமூர்த்தி தந்த வாடகைப் பணம் அடையாறு அநாதை இல்லத்துக்குச் சென்றது. ஓய்வூதியத்தில் குறைந்த தேவையில் குமரேசன் வாழ்க்கை நிறைவாக நடந்தது.

மழை இன்னும் விட்டபாடு இல்லை. காரிருள் கலைந்து வானம் மங்கலாக வெளுத்து இருந்தது. சோடை இழந்திருந்த சூரியனை மேகங்கள் லேசாக மறைத்து இருந்தன. ஆனந்தமூர்த்தி வாசற் கதவைத் திறந்து பேப்பர் பையன் வீசி எறிந்திருந்த காலைப் பத்திரிகையைக் கையில் எடுத்தார். தாள்கள் தண்ணீரின் ஈரத்தில் நனைந்துஇருந்தன. ஒவ்வொரு நாள் காலையிலும் பத்திரிகையோடு மாடிப் படி ஏறி, ஆனந்தமூர்த்தி அறைக் கதவைத் தட்டுவார்.அற்புதமான சுவையுடன் குமரேசன் கலந்துகொடுக்கும் காபி அறை முழுவதும் மணக்கும். இருவரும் காபி குடித்தபடி பத்திரிகைச் செய்திகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கொஞ்ச நேரத்தில் இருவரும் சுந்தரம் ஐயர் தெருவில் தெற்கு நோக்கி நடந்து, சாய்பாபா கோயிலைக் கடந்து, தெப்பக் குளத்தைச் சுற்றிக்கொண்டு, கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டு 'ஈஸ்வரா’ என்று வாய்விட்டுக் குரல் கொடுத்து, சாந்தோம் சர்ச் வழியாகக் காலாற மெதுவாகச் சென்று, காந்தி சிலை அருகில் அரைமணி நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருப் பார்கள். மாலையிலும் இதே காரியம்தான் மாறாமல் நடக்கும்.

குமரேசன்தான் மாதம்தோறும் பேப்பர் காசு கொடுப்பார். ஆனந்தமூர்த்தி வீட்டில் இருந்து எதையும் அவர் ஏற்றது இல்லை. 'குமரேசா! சுயமரியாதை இழந்தவன்தான் உன்னுடன் நண்பனாக நீடிக்க முடியும்’ என்று ஆனந்தமூர்த்தி சொல்லும்போது, 'ஆனந்தம்! சரியோ, தவறோ கொடுப்பவனாகவே இறுதி வரை இருந்துவிட்டுப் போக எனக்கு நீ உதவியாக இருக்கக் கூடாதா?’ என்று அவர் சிரிப்பார்.

நண்பனின் வறட்டுப் பிடிவாதங்களை நெஞ்சில் அசைபோட்டபடி மாடிக்குச் சென்ற ஆனந்தமூர்த்தி, அச்சத்தில்உறைந்து போனார். அறைக் கதவு திறந்துகிடந்தது. மழைச் சாரலின் தெறிப்பில் தரையில் ஈரம் படர்ந்திருந்தது. சடலம்போல் படுக்கையில் அசைவற்று நீட்டிப் படுத்து இருந்த குமரேசன் முகத்தில் ஆழ்ந்த அமைதி படிந்திருந்தது. கலவரத்துடன் 'குமரேசா’ என்று குரல் கொடுத்த படி அவருடைய கைகளை ஆனந்தமூர்த்தி பற்றியபோது அவை தொய்ந்து விழுந்தன. பதற்றத்துடன் உடலை அசைத்துப் பார்த்தார். எந்த உணர்வும் இல்லை. மூக்கில் விரல்வைத்தார். சுவாசத்துக்கான சுவடே இல்லை. அறுபது ஆண்டு ஆழமான நட்பு அறுபட்டுவிட்டது. நெஞ்சில் உறைத்ததும் ஆனந்தமூர்த்தியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 'குமரேசா’ என்ற அவருடைய அழுகுரல் வீதி எங்கும் நிறைந்தது.

இறப்புச் செய்தி சேர்ந்ததும் மாலைக்குள் உறவுகள் கூடிவிட்டன. மகனும் மகளும் தந்தையின் மார்பில் முகம் புதைத்துக் கண்ணீர் சிந்தினர். 'ஆனாலும், இந்தப் பெரியவருக்கு இவ்வளவு வைராக்கியம் இருந்திருக்கக் கூடாது’ என்று விமர்சனங்கள் எழுந்தன. 'அமர வாகனம்’ வாசலில் வந்து நின்றது. தாங்க முடியாத சோகத்துடன் ஆனந்தமூர்த்தி நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி ஓர் மூலையில் அமர்ந்து இருந்தார். 'ஆனந்தம்! என் தந்தை என்னிடம் பிரதிபலன் எதிர்பார்த்து அன்பு செய்தார். நான் என் பிள்ளைகளிடம் இன்று வரை எதையும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் பையில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. பத்திரமாக எடுத்து வை. எப்படியும் உனக்கு முன்னால் நான்தான் போவேன். இந்தப் பணத்தில் பிணம் சுமக்கும் வாகனத்தை வரவழை. கொடுக்கும் காசுக்கு அவர்களே என் சடலம் சுமந்து மின் தகனம் செய்துவிடுவார்கள். போகும்போதும் நான் யாருக்கும் கடன்வைக்க விரும்பவில்லை’ என்று குமரேசன் சொல்லிவிட்டுப் பணம் கொடுத்த சம்பவம் அவர் நினைவில் நின்று நெஞ்சைக் கிழித்தது.

ஈமக் கடன்கள் நியதி மாறாமல் நடந்தேறின. சேகண்டியும் சங்கும் வீதியில் விட்டுவிட்டு அலறின. மாடி அறையில் இருந்து சடலம் அப்புறப்படுத்தப்பட்டது. மேசையின் மேல், படத்தில் இருந்த மகாத்மா மட்டும் குமரேசன் வாழ்வுக்கு மௌன சாட்சியாகத் தனித்துவிடப்பட்டார். அமர வாகனம் மயிலாப்பூர் மயான பூமியை அடைந்தது. குமரேசனின் பொய்யுடல் மின் தகன மேடையில் கிடத்தப் பட்டது. பிணத்தின் முகத்திலும் மார்பிலும் ஈக்கள் மொய்த்தன. அருகில் நின்ற ஆனந்த மூர்த்தியின் விழிகளில் இருந்து நீர் அருவியாக வழிந்துகொண்டு இருந்தது.

குமரேசனின் வறட்டுத்தனமான வாழ்க்கை வைராக்கியத்தை ஆனந்தமூர்த்தி அழுதபடி நெஞ்சில் அசைபோட்டார். 'எவ்வளவு பெரிய முட்டாள்தனம்’ என்று யோசித்தார். 'பெற்றவர்கள் வெறும் பணத்தையா பிள்ளைகளிடம் எதிர்பார்க்கின்றனர்? வயோதிகத்தில் வந்து தாங்குவார்கள் என்றா பிள்ளைகளிடம் பெற்றோர் பாசத்தைப் பொழிகின்றனர்? பாசத்தின் பகிர்தல் அல்லவா அன்பின் ஆதர்சம். மடியில் தலைவைத்துப் பிள்ளை படுத்தால் போதுமே ஒரு தாய்க்கு, ஒரு வேட்டியும் சட்டையும் அன்போடு மகன் வாங்கித் தந்தால் தந்தையின் மனம் ஆனந்தக் கூத்தாடுமே. காந்தியம்கற்ற இந்த முட்டாளுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை உண்மை சாகும் வரை விளங்காமல் போய்விட்டதே. என்னால் முடிந்ததை எல்லாம் என் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டேன். எதையும் அவர்களிடம் இருந்து எனக்குஎன்று எடுத்துக்கொள்ளவில்லை என்று பெருமை பேசுவானே. கொடுப்பதுஇன்பம் என்றால், அன்பை இன்னொரு உயிரிடம் இருந்து பெறுவதுதானே பேரின்பம். அன்பைத் தருவதும் பெறுவதும் அல்லவா வாழ்க்கை நதியின் இரு கரைகள். பெற்றோர் குழந்தைகளைப் பேணுவதும் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிப்பதும் நம் பண்பாடு செதுக்கிக்கொடுத்த பாரம் பரியச் சங்கிலி அல்லவா. ஒற்றைச் சிறகோடு ஒரு பறவை பறக்கக்கூடுமா? தவறான வாழ்க்கைப் புரிதலில் குமரேசன் ஒற்றைச் சிறகோடு ஒடுங்கிப் போய்விட்ட வனா?’ நினைக்க நினைக்க ஆனந்தமூர்த்திக்கு நெஞ்சம் அதிகமாக வலித்தது.

'எல்லோரும் கடைசியாக ஒரு முறை முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்’-வெட்டியானின் குரல் வேகமாக ஒலித்தது. மின் தகன மேடையில் சடலம் கிடத்தப் பட்டது. குமரேசனின் பிள்ளையும் ஆனந்த மூர்த்தியும் மின் கலத்தின் வாய்ப்புறத்தில் ஆற்ற முடியாமல் அழுதபடி சடலத்தைத் தள்ளியதும், 'அரை மணி நேரம் காத்திருந்து சாம்பலை வாங்கிச் செல்லுங்கள்’ என்ற அறிவிப்பு எழுந்தது. அவ்வளவு நேரம் அழுதுகொண்டு இருந்தவர்கள் விழிகளைத் துடைத்துக்கொண்டனர். ஆனால், வானம் மட்டும் விடாமல் இன்னும் அழுதுகொண்டு இருந்தது!

(இந்தக் கதை எந்தப் புத்தகத்தில் வந்தது என்பது தெரியவில்லை... எனக்கு நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார் - நன்றி - பிரசுரித்த பத்திரிக்கைக்கும்... அனுப்பிய நண்பருக்கும்.... எழுதிய திரு. தமிழருவி மணியனுக்கும்...)
-'பரிவை' சே.குமார்

4 கருத்துகள்:

 1. //அன்பை இன்னொரு உயிரிடம் இருந்து பெறுவதுதானே பேரின்பம். அன்பைத் தருவதும் பெறுவதும் அல்லவா வாழ்க்கை நதியின் இரு கரைகள்.//

  அன்பைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். மிக அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  இங்கே இணைத்தவுடன் எமது முகநூல் குழுவிலும் உங்கள் இடுகையின் தொடுப்பு தானியங்கியாக பதியப்படும்...

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில்
  உங்கள் இடுகை தோன்றும்.

  வலையகத்தில் உறுப்பினராக http://www.valaiyakam.com/page.php?page=votetools இங்கே அழுத்தவும்

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools


  http://www.facebook.com/groups/valaiyakam/

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  பதிலளிநீக்கு
 3. கொடுப்பதுஇன்பம் என்றால், அன்பை இன்னொரு உயிரிடம் இருந்து பெறுவதுதானே பேரின்பம். அன்பைத் தருவதும் பெறுவதும் அல்லவா வாழ்க்கை நதியின் இரு கரைகள்.//

  தமிழருவிமணியனின் பேச்சு போல் கதையும் நன்றாக இருக்கிறது.
  அன்பு அதை பெறுவதும், கொடுப்பதும் தான் வாழ்க்கை என்பதை அழகாய் சொல்லிவிட்டார்.
  ஒற்றைச்சிறகு தலைப்பே அற்புதம்.
  பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இது ஆனந்த விகடனிலும் வந்திருந்தது நண்பரே...

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...