மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

எனக்குள் பாரதி



செப்டெம்பர் 11 மகாகவி பாரதியின் நினைவு தினம். நேற்று நண்பர்களின் பகிர்வில் எல்லாம் எட்டையபுரத்துக் கவி பாரதிதான் நிறைந்திருந்தார். நானும் பாரதி நினைவு நாளில் பகிர எண்ணிய கட்டுரைதான் இது. பதினோரு மணி நேரம் வேலை செய்து வீட்டுக்கு வந்ததும் கட்டுரை ஆரம்பிக்கும் போதே நித்திரை அழைத்து விட்டது. அதனால் இன்று பகிர்கிறேன். நாள் மாறினாலும் நானும் பாரதியை மறக்கவில்லை அல்லவா?

பாரதி... பள்ளிப் பருவத்தில் இந்த மூன்றெழுத்தின் மீது காதல் எல்லாம் இல்லை. பாடத்தில் இருக்கும் பாரதியின் வரிகளை மட்டுமே பரிட்சைக்காக மனப்பாடம் செய்வதோடு சரி. பாரதி குறித்து அறிந்தது போதுமென தமிழய்யாக்களுடனும் அதிக தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

கல்லூரிக்கு வந்தும் பெரிதாக தமிழ் மீதான ஆர்வம் வரவில்லை. பழனி ஐயாவிடம் பழகும் முன்னர் என் நண்பன் முருகனின் மூலமாக தமிழார்வம் கொஞ்சம் தழைக்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஐயாவிடம் நெருக்கம் ஏற்பட்டு அவரோடு நிறைய விவாதிக்கும் மாலை நேரங்கள் அமைந்தன.

ஐயா வீட்டில் நாங்கள் அனைவரும் கூட்டமாக மாலை நேரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் பாரதி என்னும் மீசைக் கவிஞன் என் நட்புக்கள் மற்றும் ஐயா மூலமாக என்னுள் புக ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில்தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் முருகன் உறுப்பினரானான். அவன் உறுப்பினரானதும் என்னையும் உறுப்பினராக்கினான். அப்போதெல்லாம் எனக்கு அந்தளவுக்கு ஈடுபாடு இல்லை. எதோ அவனுக்காகவும் ஐயாவுக்காகவும் அவர்களோடு பேசியபடி மாதக் கூட்டங்களுக்குச் செல்வேன்.

பாரதி கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களில் முருகன் கதை, கவிதை என எல்லாம் வாசிப்பான். அவனுக்கு பேசிக் கொண்டே இருப்பது பிடிக்கும்... எனக்கு பேசாமல் இருப்பது பிடிக்கும் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அதனால் அவன் மேடையில் வாசிப்பான்... நான் பார்வையாளனாய் ரசிப்பேன் இரண்டாவது முறையாக... அதென்ன இரண்டாவது முறையாக என்று யோசிக்கிறீர்களா? முதல் முறைதான் வீட்டில் என்னை உட்கார வைத்து ஏற்ற இறக்கத்தோடு பேசிக் காட்டிவிடுவானே. அதான் இரண்டாவது முறை ரசித்தேன் என்று சொல்கிறேன். பாரதி குறித்து பக்கம் பக்கமாகப் பேசுவான்.. அரங்கம் அதிரும் கைதட்டல்களை அள்ளுவான். பாரதியை பருக இவனும் முக்கியக் காரணிதான் எனக்கு.

சவரிமுத்து ஐயா என்னிடம் நீங்களும் ஏதாவது வாசியுங்கள் என்று சொல்வார். ஆனால் வாசிப்பதில்லை... பாரதி விழா வருடம் ஒருமுறை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்... ஊர்வலம் கவியரங்கம் என எல்லாம் நடத்தப்படும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வோம். திரு. பொன்னீலன், கவிஞர் மீரா, அப்துல்ரஹ்மான் என இன்னும் நிறைய அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள்.  எல்லோருடனும் பழகும் வாய்ப்பு பாரதி என்னும் மீசைக் கவிஞனை நேசிக்க ஆரம்பித்த போதுதான் கிடைத்தது.

கதை, கவிதை எல்லாம் எழுதி வந்தாலும் மேடை ஏறுவது என்பது ஒவ்வாத காரியமாகவே இருந்த வேளையில் ஒரு பாரதி நினைவு நாள் அன்று ஆர்ச் பூங்கா அருகில் பொதுவெளியில் சவரிமுத்து ஐயா தலைமையில் சிறிய கவியரங்கம். முருகன், பாலண்ணா என பெரிய ஆட்கள் வாசிக்க இருக்கும் கவியரங்கம். இந்த முறை சவரிமுத்தய்யா என்னை அழைத்து 'தம்பி நீங்க கண்டிப்பாக கவிதை வாசிக்கிறீங்க' என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். பாரதி விழா நடக்கும் இராம ஏகம்மை மண்டபத்துக்குள்ளயே வாசிக்கப் பயப்படுவோம்... வெட்டவெளியிலா என்று யோசித்தாலும் ஐயாக்களின் விடாப்பிடி சரி வாசித்துப் பார்ப்போம் என ஜாம்பவான்களுடன் களத்தில் இறங்க வைத்தது.  

அவர்கள் எனக்குக் கொடுத்த தலைப்பு மறந்துவிட்டது... அந்தத் தலைப்பை ஒட்டி கவிதை என்று ஒன்றை எழுதி முருகனிடம் வாசித்துக் காட்டி இது எனக்குத் தேவையா... விழாவுக்கு வராமல் இருந்திடவா என அவனிடம் கேட்டு திட்டு வாங்கி அவன் கையால் திருத்தங்கள் செய்து அதை மீண்டும் ஐயாவிடம் கொடுத்து திருத்தம் செய்து விழா நாளில் மாலை வெட்டவெளியில் வாசித்தாயிற்று.

வாசிக்கும் போதே கை காலெல்லாம் ஆட்டம் எடுத்துவிட்டது. இருந்தும் பயத்தோடு முடித்து அமர்ந்ததும் கைதட்டல் கேட்க சந்தோஷமாக இருந்தது. விழா முடிந்து எல்லோரும் கிளம்பியதும் ஐயா அருகே வந்து தோளை அணைத்து 'நல்லாத்தானே வாசிச்சீங்க... கொஞ்சம் சத்தமாக வாசித்திருக்கலாமே... பயத்துல சத்தம் வரலையா?' என்றார். 

பாரதி... கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது எனக்குள் நுழைந்து இன்றும் என்னுள்ளே கவிதை ஆளுமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். நேற்று நிறையக் கட்டுரைகள் படித்தேன்... அதில் தேவா அண்ணனின் கட்டுரையும் ஜெயக்குமார் ஐயாவின் கட்டுரையும் என்னை மிகவும் கவர்ந்தன. அருமையான கட்டுரைகள்.... அந்தளவுக்கு என்னால் பாரதி குறித்து எழுத முடியாது. இருந்தும் எனக்குள் பாரதியை என்னால் சொல்ல முடிந்தளவு சொல்லியிருக்கிறேன்...

சொல்ல மறந்துட்டேனே... இன்று கதைகள் கவிதைகள் எழுதினாலும் பாரதிக்காக பாரதி விழாவில் நான் வாசித்த கவிதையே மேடையில் நான் வாசித்த முதலும் கடைசியுமான கவிதை. பின்னர் வந்த நாட்களில் எனது கதைகளை பாரதி மன்றத்தில் அறிஞர்கள் முன்னர் வாசித்து விமர்சனங்களையும் கேட்டிருக்கிறேன்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி...
எட்டையபுரத்துக் கவி பாரதி...
கண்ணம்மாவைக் காதலித்த பாரதி...
செல்லம்மாவின் கணவன் பாரதி...
பெண் விடுதலை பேசிய பாரதி...
காணி நிலம் கேட்ட பாரதி...
விடுதலை வேள்வி பாரதி...
மீசைக் கவிஞன் பாரதி...
முண்டாசுக் கவிஞன் பாரதி...
எங்கள் நேசக் கவிஞன் பாரதி...

பாரதியை நினைவு நாட்களிலோ பிறந்த நாட்களிலோ நினைக்காமல் எல்லா நாளிலும் நினைவில் நிறுத்துவோம்...

வாழ்க நீ எம்மான்...

-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.
பாரதி பற்றி மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் அவர் மறைந்தாலும் அவரின் தடயங்கள் வாழ்த்து கொண்டுதான் இருக்கு பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com சொன்னது…

சிறப்புப்பதிவு வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் நினைவஞ்சலி.....

J.Jeyaseelan சொன்னது…

லேட்டாப் போட்டாலும் உங்க அனுபவங்களோட லேட்டஸ்டாத் தான் போட்ருகீங்க சார், கவிதை நன்றாகத்தான் இருக்கிறது, அப்புறமென்ன பயம்... கடைசி ரெண்டு வரி செம பஞ்ச் சார்... வாழ்க பாரதியின் புகழ்..

துரை செல்வராஜூ சொன்னது…

//மகாகவி பாரதியை எல்லா நாளிலும் நினைவில் நிறுத்துவோம்!...//

நல்லதொரு பதிவு. மகிழ்ச்சி..

Menaga Sathia சொன்னது…

மிகச் சிறப்பான பதிவு !!

KILLERGEE Devakottai சொன்னது…


சிறந்த பதிவு நண்பரே....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாரதி... கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது எனக்குள் நுழைந்து இன்றும் என்னுள்ளே கவிதை ஆளுமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார்

அழ்கான ஆக்கம் .பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…


முதல் கவிதையானாலும் . முத்தாக. சத்தாகவே உள்ளது!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பாரதியைப்பற்றி பல செய்திகள் படித்து இருந்தாலும் இன்னும் முழுமையாக அவரது கவிதைகளை வாசித்தது இல்லை! பாரதி படம் அவர்பால் ஓர் ஈர்ப்பை உருவாக்கியது! நல்லதொருபதிவு நன்றி!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ரமணி ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. ஜெயசீலன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செல்வராஜூ ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோதரி மேனகா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. கில்லர்ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இராமானுசம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. சுரேஷ்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ezhil சொன்னது…

நீங்கள் சொன்ன மாதிரி பாரதி பாடல்களை பள்ளியில் படித்ததும், கூடவே போட்டிகளில் மேடையில் ஒப்புவித்ததும்தான் ஞாபகத்தில் இருக்கிறது... ஆனால் அவையே எனக்குப் போதுமானதாய் இருந்திருக்கிறது அவரைக் கொண்டாட... நினைவஞ்சலிக்கு வாழ்த்துக்கள்

கோமதி அரசு சொன்னது…

பாரதியை நினைவு நாட்களிலோ பிறந்த நாட்களிலோ நினைக்காமல் எல்லா நாளிலும் நினைவில் நிறுத்துவோம்..//

நன்றாக சொன்னீர்கள்..